Search This Blog

Thursday, June 6, 2013

வஞ்சக உளவாளி - பர்மியப் போராளிகளை இந்தியா வஞ்சித்த கதை

பர்மாவின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பலர் போராடிவந்தனர். அதில் சிலருக்கு இந்திய ராணுவம் ஆயுதங்கள் வழங்கியும் பிறவகைகளில் உதவியும் வந்தது. திடீரென ஒரு நாள் இந்திய ராணுவம், பர்மியப் போராளிகள் சிலரைச் சுட்டுக் கொன்றது. 36 பேரைக் கைது செய்து அந்தமான் சிறையில் அடைத்தது.

அந்தக் கைதிகளை விடுவிக்கும் பணியில்,  புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியும் வழக்கறிஞருமான நந்திதா ஹக்சர் இறங்கினார். அந்தப் போராட்டத்தின்போது, பர்மா பிரச்னையைப் பற்றியும் இந்திய ராணுவத்தின் சில அசிங்கமான பகுதிகளையும் அவர் அறிந்துகொண்டார். அது தொடர்பாக அவர் எழுதிய புத்தகமே Rogue Agent என்பது. அதன் தமிழாக்கம் கிழக்கு பதிப்பகம் வாயிலாக ‘வஞ்சக உளவாளி’ என்று வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்தவர் அ. குமரேசன். அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கே செல்லவும். தொலைப்பேசியில் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234.

***

ஜெனரல் ஆங் சான் 1947 ஜூலை 19 காலை 10.37 மணிக்கு ஒரு கொலையாளியின் தோட்டாவுக்கு இரையானார். ரங்கூனில் தலைமைச் செயலகம் இருந்த செங்கல் கட்டடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டிருந்தபோது இது நடந்தது. அப்போது அவருக்கு வயது 32 மட்டுமே. அவருக்கு மனைவி கின் கி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூன்று சிறு குழந்தைகள் இருந்தார்கள். அந்த ஒரே மகள்தான் ஆங் சான் சூச்சீ. அந்த தினத்தன்று, முஸ்லிம் அரசியல் தலைவரான யு ரஜாக், ஜெனரலை ஆதரித்த கரேனியத் தலைவர்களில் ஒருவரான மான் பா கய்ங், ஷான் இளவரசர் சாவோ சாம் ஹ்துன் ஆகியோர் உள்ளிட்ட 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

யு நூ பர்மாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார். 1948 முதல் 1962 வரையில் முறையானதொரு நாடாளுமன்ற ஜனநாயகம் பர்மாவில் இருந்து வந்தது. எனினும், உண்மையில் உள்நாட்டுப் போர்தான் நடந்துகொண்டிருந்தது. யு நூ தலைமையை நிராகரித்த பர்மா கம்யூனிஸ்ட் கட்சி, ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டது. 1950-களில் சீனாவின் கோமின்டாங் படையினர் மாவோவின் செம்படைத் தாக்குதலிலிருந்து தப்பி ஓடிவந்து ஷான் பகுதியில் தஞ்சம் புகுந்தனர். அது அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கியது. சிறுபான்மை இனங்களோடு நடந்துவந்த பேச்சுவார்த்தைகள் நின்றுபோயின. கரேன், மோன், கச்சின் இனத்தவர்கள் தங்களுக்குத் தனி நாடு தேவை என்ற கோரிக்கையை மறுபடியும் எழுப்பினார்கள்.

யு நூ, 1956-ல் புத்த மதத்தை பர்மாவின் அரச மதமாக அறிவித்தார். பசு மாடுகள் கொல்லப்படுவதற்குத் தடை விதித்தார். ஈத் பண்டிகையின்போது மாடு வாங்க முஸ்லிம்கள் சிறப்பு அனுமதி பெறவேண்டியதாயிற்று. பாசிச எதிர்ப்பு மக்கள் சுதந்தரக் கட்சியிலிருந்து (ஏ.எப்.பி.எப்.பி.) பர்மா கம்யூனிஸ்ட் கட்சியும் பர்மா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் விலக்கப்பட்டதற்கு அவர்தான் காரணம். அந்தக் கட்சி தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் உருவானதுதான் பர்மா முஸ்லிம் காங்கிரஸ். அதன் தலைவர் யு ரஜாக். அவர் ஒரு அறிஞர். பாலி மொழியை நன்கு அறிந்தவர். புத்த மறைநூல்களைப் படித்தறிந்தவர். 1948-ல் பர்மாவின் ஆட்சி அதிகாரத்தை பிரிட்டன் கைவிட்டதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க இருந்த ஆங் சான் அமைச்சரவையில் யு ரஜாக் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்க இருந்தார். பர்மாவின் முஸ்லிம் சமூகத்தினருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு உறுதிமொழிகள் தரப்படுவதை அவர் எதிர்த்தார். முஸ்லிம் மக்கள் தங்கள் நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் தங்களது சமூக உரிமையைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக அறிவித்தார். முஸ்லிம் - பௌத்த மக்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார்.

சில ஆண்டுகள் கடந்தபின் முஸ்லிம்கள், பர்மிய முஸ்லிம் லீக் கட்சியை உருவாக்கினர். இதர சிறுபான்மையினருக்கான தனி அமைச்சகங்கள் போல முஸ்லிம்களின் நலன்களுக்காக ஒரு சிறப்பு அரசுத் துறை வேண்டும் என்று கோரினர். 1948 அக்டோபரில் யு நூ, மண்டல தன்னாட்சி விசாரணை ஆணையத்தை 6 கரேனியர்கள், 6 மோனியர்கள், 5 ஆரக்கானியர்கள், 7 பர்மன்கள், மேலும் 4 பேர்களைக் கொண்டு அமைத்தார். எனினும், பர்மா ஒரு புத்த மத நாடு என்ற அறிவிப்பு, பல தொடர்ச்சியான கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டது. கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க கச்சின், கரேன் படைகளை யு நூ பயன்படுத்தினார். ஒன்றிணைப்புக் கொள்கையை எதிர்த்து கச்சின், மோன், கரேன் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரிந்து செல்லும் உரிமையைப் பயன்படுத்தலாம் என்று 1947-ன் அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை சோதித்துப் பார்க்க ஷான் மக்கள் விரும்பினார்கள்.

ஜெனரல் நே வின், இந்த நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். ஜெனரல் ஆங் சானின் முப்பது தோழர்களில் ஒருவரான நே வின், 1962-ல் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி ஒன்றை அரங்கேற்றினார். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் சங்கக் கட்டடம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது. புரட்சி மன்றத் தலைவராகத் தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட நே வின், இரண்டாண்டுகளுக்குப் பிறகு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தடைவிதித்தார். அரசாங்கத்தைக் கைப்பற்றி, கூட்டாட்சி அமைப்பை ஒழித்துக் கட்டினார். 1974-ல் ஜெனரல் நே வின் ஆட்சியதிகாரத்தை மக்கள் சபை அமைப்புக்கு மாற்றினார். அவர் அறிவித்த அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டுக்கு, ‘பர்மா சோசலிசக் குடியரசு ஒன்றியம்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. நே வின், பர்மாவைத் தமது பர்மா சோசலிச திட்டக் கட்சியின் (பி.எஸ்.பி.பி) ஆளுகையில், ஒரு கட்சி சர்வாதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தார். இப்படியாக சோசலிசத்துக்கான பர்மிய வழியைத் தொடங்கிவைத்தார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆரக்கானின் ரோஹிங்கா முஸ்லிம்களுக்குக் குடியுரிமைகள் மறுக்கப்பட்டன. அரசுப் பணிகளிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டார்கள். அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது என்ற பெயரால் ஜெனரல் நே வின் தனது செயல்களை நியாயப்படுத்தினார். பர்மிய மக்களில் சிலர் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தார்கள். குறிப்பாக அவர் வரலாற்றுப் புகழ் பெற்ற முப்பது தோழர்களில் ஒருவர் என்பதால், அவரது நாட்டுப் பற்றை அவர்கள் சந்தேகிக்கவில்லை.

‘ஒரே ரத்தம், ஒரே குரல், ஒரே அதிகாரம்’ என்ற முழக்கத்தின்கீழ் ஒற்றை ஆதிக்க அரசை ஜெனரல் நே வின் ஏற்படுத்த முயன்றார். அவரது ஆட்சியில் ராணுவம் தனிப்பட்ட முறையில் ஜெனரலுக்கு விசுவாசமானதாகவும் சொந்த மக்களுக்கு எதிரானதாகவும் மாற்றப்பட்டது. சுய நிர்ணய உரிமைக்கான அனைத்து இயக்கங்களையும் ஒடுக்குவதே அதன் முக்கியப் பணியானது.

ராணுவ அதிகாரிகள் தங்களது சீருடைகளைக் களைந்துவிட்டு பி.எஸ்.பி.பி-யின் படைத்துறை சாராத தலைவர்கள் ஆனார்கள். அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட திட்டமிட்ட பொருளாதார அமைப்பில், பொருளாதாரத்தை நிர்வகிக்கிற வேலையையும் ராணுவமே எடுத்துக்கொண்டது. தனக்கென சொந்தத் தொழில் நிறுவனங்கள், வங்கி, கப்பல் போக்குவரத்து, வர்த்தகக் குழுமங்கள், சேவைத்துறை ஒப்பந்ததாரர்கள், பதிப்பகம், செய்திப் பத்திரிகை ஆகியவற்றை ராணுவம் தொடங்கியது. 1962 முதல் 1988 வரையில் நே வின் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சியில் நாடு மேலும் மேலும் ஏழைமை ஆனது. 1987-ல் பர்மாவை ஒரு வளர்ச்சியடையாத நாடு என ஐ.நா. அறிவித்தது.

1987 செப்டம்பர் 5 அன்று, ஜெனரல் நே வின் பர்மாவின் பணமான 25, 35, 75 கியாட் நோட்டுகள் செல்லாது என்று எவ்வித இழப்பீடும் இன்றி அறிவித்தார். அதனால் நாட்டில் புழக்கத்தில் இருந்த 75 சதவிகிதப் பணத்துக்கு மதிப்பில்லாமல் போனது. அந்த ஒரு நடவடிக்கை, கோடிக்கணக்கான மக்களின் சேமிப்பை மொத்தமாகத் துடைத்தழித்தது. அந்த நிகழ்வுதான் ரங்கூன் மாணவர்களின் போராட்டத்தை முடுக்கிவிட்டது. அந்தப் போராட்டம் மற்ற நகரங்களுக்கும் பரவியது.

ரங்கூன் தெருக்களில் அணிவகுத்த மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். 1988 மார்ச் 13 அன்று கலவரத் தடுப்புக் காவல்துறையினர் மாணவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் மாங் போன் மாவ் என்ற மாணவர் கொல்லப்பட்டார்.

அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் கியாண்டா மயானத்தில் கூடினார்கள். ஆனால், அவரது உடல் ஏற்கெனவே எரியூட்டப்பட்டுவிட்டது தெரியவந்தது. அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இன்செய்ன் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். கடும் ஒடுக்குமுறைகளையும் மீறி போராட்டங்கள் முடிவின்றித் தொடர்ந்தன.

1988 ஆகஸ்ட் 1 அன்று அனைத்து பர்மா மாணவர் ஜனநாயக லீக் ஒரு வேண்டுகோள் விடுத்தது. அதில் 1988 ஆகஸ்ட் 8 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. 8.8.88 என்ற அந்த நாள், நாடு தழுவிய எழுச்சியின் அடையாள நாளானது. அந்த நாளில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்த அடக்குமுறையையும் அநீதியையும் எதிர்த்து நாடே கொந்தளித்து எழுந்தது. இப்போது ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் வலியுறுத்தியவர்கள் மாணவர்கள் மட்டுமல்ல; துறவிகள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட நடிகர்கள், பாடகர்கள் என அனைவரும் ரங்கூன் தெருக்களுக்கு வந்து போராடினார்கள். ஆயிரக்கணக்கான பி.எஸ்.பி.பி உறுப்பினர்களும் கட்சியிலிருந்து வெளியேறினார்கள்.

1988 செப்டம்பர் 18-ல் பர்மிய ராணுவத்தின் ஜெனரல் சா மாங் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் எடுத்துக்கொண்டதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து எஸ்.எல்.ஓ.ஆர்.சி (அரசு சட்டம் ஒழுங்கு மீட்புக் குழு) ஏற்படுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றோர்மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாணவர்கள் தடுப்பு அரண்களை அமைத்தார்கள். ஆயினும் ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள், விடுதலை அடைந்த கரேன் பகுதிகளில் அடைக்கலம் புகுந்தார்கள். மற்றவர்கள் தாய்லாந்து எல்லைக்கு ஓடினார்கள். சிலர் இந்தியாவுக்குச் சென்றார்கள். தாற்காலிகமாகத்தான் இப்படித் தஞ்சம் புகுந்து வாழவேண்டியிருக்கும் என்று பலரும் நினைத்தார்கள். தாங்கள் அரசியல் அகதிகளாக வாழப்போவதன் தொடக்கம்தான் அது என்பதை அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

ஜெனரல் ஆங் சான் தலைமைக்குத் தானே வாரிசு என்று ஜெனரல் நே வின்னால் தொடர்ந்து சொல்லிக்கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாகக் கவனத்துடன் பின்னப்பட்ட அந்த மாயத்தோற்றம், முப்பது தோழர்களில் எஞ்சியிருந்த 11 பேர்களில் 9 பேர் அவருக்குக் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து கலைந்துபோனது.

ராணுவக் கும்பலின் தலைவர் ஜெனரல் சா மாங், கட்சியின் பெயரை தேசிய ஒற்றுமைக் கட்சி (என்.யு.பி) என்று மாற்றினார். யு நூ வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

***

வஞ்சக உளவாளி: பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம்
நந்திதா ஹக்சர்
தமிழில்: அ. குமரேசன்
இணையத்தில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-534-9.html
தொலைப்பேசி வழியாக வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

1 comment:

  1. தமிழ்நாட்டில் இதை படிக்கவும் ஆளூண்டோ? கொஞ்சம் இலங்கை வரலாறும் கொஞ்சம் பாகிஸ்தான்/வங்கதேச வரலாறும் கலந்து படிப்பது போல் இருந்தது.

    ReplyDelete