Search This Blog

Monday, June 17, 2013

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

ஆசிரியர்: கமலா வி முகுந்தா
தமிழில் : ராஜேந்திரன் 
பக் : 328; விலை: 250
ஆசிரியர் தொழிலில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவமும் உளவியல் துறையில் நிபுணத்துவமும் பெற்ற கமலா வி முகுந்தா, குழந்தைகள் கற்றுக் கொள்வதில் இருக்கும் பல்வேறு நுட்பங்களை எளிய நடையில் விவரித்திருக்கிறார். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல ஆசிரியராக விரும்பினால், உங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை நரகமாகக் கருதாமல் சொர்க்கமாக மதித்து உற்சாகமாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்பினால் இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் நல்ல வழி காட்டும்.
முன்னுரையில் இருந்து
இந்தப் புத்தகம் உண்மையில் ஆசிரியர்களுக்கானதுதான். ஆனால், குழந்தைகளின் கல்வி தொடர்பாக இயங்கும் அனைவருக்கும் இது நிச்சயம் பயன்படும். ஒரு ஆசிரியர் என்றவகையில் என் மாணவர்களின் கற்றுக்கொள்ளும் திறன், உணர்வு நிலை இவைபற்றி நிறைய அறிந்துகொள்ள விரும்புவேன்.
ஒரு மாணவருக்கு ஒரு குறிப்பிட்ட பாடம் மிகவும் சிக்கலாக இருக்கும். இன்னொருவருக்கு ஒரு பாடத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். இன்னொருவர் தனது திறமைக்கு ஏற்ப செயல்படாமல் இருப்பார். வேறொருவரோ  எதிலும் கவனத்தைக் குவிக்க முடியாமல் தவிப்பார். சில நேரங்களில் நாம் இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு வழியைக் கண்டுபிடித்து மேற்கொண்டு நம் பணிகளில் ஈடுபட ஆரம்பிப்போம். ஆனால், பெரும்பாலும் அந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயேதான் இருக்கும்.
அன்றாடப் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு உருவாகும் கேள்விகள் மிகவும் ஆழமானவையாகவும் அடிப்படையானவையாகவும் இருக்கும். இவற்றுக்கான பதில் பெரும்பாலும் தெரிந்திருக்காது.  ஆனால், எல்லாரையும் போலவே ஆசிரியர்களும் தங்களுக்கு சரியான பதில் கிடைத்தாக வேண்டும் என்று விரும்புவார்கள். நாம் வாசித்தவை, நம் அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் கற்றுக் கொடுப்பது, குழந்தை வளர்ப்பு, உற்சாகமூட்டுதல், புத்திக்கூர்மை, ஒழுங்கு, உணர்ச்சி நிலை தொடர்பான நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறோம்;தீர்மானங்களை எடுக்கிறோம். அவற்றின் அடிப்படையில் செயல்பட ஆரம்பிக்கிறோம்.
ஆசிரியரின் நம்பிக்கைளும் தீர்மானங்களும் மிகவும் வலுவானவை. நாம் சொல்வதற்கு அப்படியே அனைவரும் கீழ்படியவேண்டும் என்பதையே எப்போதும் எதிர்பார்க்கிறோம். இது சரியல்ல. பல ஆசிரியர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை வார்த்தைகளாகச் சொல்லியிருக்கவே மாட்டார்கள். எனினும் அதை இறுகப் பற்றியபடியிருப்பார்கள். நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்கு எளிதில் புரியவரும். 
·                     அனைவரும் ஒரே மாதிரியான புத்திக்கூர்மையுடன் இருப்பதில்லை.
·                     கற்றல் என்பது வேடிக்கை நிறைந்ததாக இருக்கவேண்டும்.
·                     வகுப்பறையில் பன்முகத்தன்மை என்பது ஒரு பிரச்னையான விஷயம்.
·                     குழந்தைகளைத் தன்னிச்சையாக சிந்திக்கும் வகையில் வளர்த்தெடுக்கவேண்டும்.
·                     பெரியவர்களைப் போல் குழந்தைகள் சிந்திக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
·                     யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொண்டுவிட முடியும்.
·                     யதார்த்த உலகில் வாழ குழந்தைகள் கற்றுக்கொண்டாகவேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் தமக்கான வேகத்தில் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்லது.
மேலே தரப்பட்டிருக்கும் ஒவ்வொரு வாக்கியத்திலிருந்தும் பல்வேறு தீர்மானங்கள் முளைத்து எழுகின்றன. நம் நம்பிக்கைகள் உண்மையாக இருந்தால் நம் செயல் சரியாக இருக்கும் என்று ஒருவர் சொல்லலாம். ஆனால், கல்வி, கற்றல் தொடர்பாகப் பார்க்கும்போது, உண்மையான வாக்கியங்கள் என்று பெரிதாக எதையும் சொல்லிவிட முடியாது. எந்த ஒரு விஷயத்தையும் இறுகப் பிடித்துக் கொள்வது ஆசிரியர்களான நமக்கு நல்லதல்ல.

1 comment: