Search This Blog

Friday, June 21, 2013

நாளைய இந்தியா



ஆசிரியர் : அத்தானு தே
தமிழில் : செ.கிருஷ்ணமூர்த்தி
பக் : 200
விலை : 150


இந்தியாவை முன்னேற்ற நம்மால் முடியும்
ஏழைமையிலிருந்து விடுபடுவதற்கும்,  பொருளாதார வளர்ச்சியைக் கடந்து முன்னேற்றம் அடைவதற்கும் இந்தியாவுக்குக்  குறைந்தது ஒரு தலைமுறை அதிவேகப் பொருளாதார வளர்ச்சி தேவை. இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம். ஆனால்  அதுமட்டுமே  முன்நிபந்தனையல்ல. 
பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமற்றதும் அல்ல;  தானாக அமைந்திடுவதும் அல்ல. இதை நாம் எப்போதும் மனத்தில் கொள்ளவேண்டும். முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் திட்டங்களின் பலனாக அமைபவை.  இந்தத் திட்டங்கள் எவ்வாறு அமைகின்றன என்பதைத் தீர்மானிப்பது மக்களாகிய நாம்தான். இதைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதன் மூலமே திட்டங்களை உருவாக்குபவர்களுக்கு நம்முடைய விருப்பத்தை உணர்த்த முடியும். அந்தத் திட்டங்களின் பலன்களும் விளைவுகளும் எப்படி அமையப் போகின்றன என்பதற்கும் நாமே பொறுப்பு. 
நாட்டின் முன்னேற்றத்துக்கான பொறுப்பு நம்வசமே உள்ளது என்ற அளவில் நாம் பாக்கியம் செய்தவர்கள். மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான திறனும், சாமர்த்தியமும், முனைப்பும் நம்மிடம்  உள்ளன. நாம் கல்வியறிவு பெற்றவர்கள். மாற்றத்தை உருவாக்குவதற்கான நேரத்தையும் உழைப்பையும் நம்மால் ஒதுக்க முடியும்.
ஒரு மாறுபட்ட எதிர்காலத்தைக் கற்பனைச் செய்யக்கூடிய ஆற்றல் நமக்கு உண்டு. அந்த மேன்மையுடைய எதிர்காலத்துக்காகத் திட்டம் தீட்டுவதற்கும், உழைப்பதற்குமான வசதியும் நமக்கு உண்டு. அத்துடன், இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றுவதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டிய தனிப்பொறுப்பும் நமக்கு உண்டு.
நீங்களோ, நானோ, பெரும்பாலான இந்தியர்களைப் போல் தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே போராடும் நிலையில் இல்லை. அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த அக்கறை? இந்தியா முன்னேறத் தவறியதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றியும் முன்னேற்றம்  பற்றியும் நாம் ஆழமான அக்கறையைச் செலுத்தவேண்டும். ஏனென்றால் அது பலகோடி சக மனிதர்களைத் துயரத்தில் இருந்து  மீட்பதற்கான முதல் படி. நாம் பிறருக்கென உழைக்கும் கோட்பாடு இல்லாதவர்களாக இருக்கலாம். இருப்பினும், சுயநலத்துக்காகவும், நடைமுறைக் காரணங்களுக்காகவும் நாம் செயல்பட்டாக வேண்டும். பொருளாதார கோபுரத்தின் உச்சியில் இருக்கும் நம்முடைய நிலை உறுதியற்றது. ஏனெனில் அந்தக் கோபுரத்தின் அடித்தளம் பலவீனமானது. நம்முடைய விதியும், நம்பிக்கையிழந்த ஏழை மக்களின் தலைவிதியும் பிரிக்க இயலாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே,  நாம் கட்டாயம் அக்கறை கொண்டாக வேண்டும்.
முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் அக்கறை கொள்ளாமல் போவது இந்தியா முழுமையாகச் சிதைந்து போகும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியா இந்தப் பூமிப்பரப்பில் இருந்து மறைந்துவிடக்கூடிய நிலையை நாம் அனுமதிக்கக் கூடாது. பல உன்னதமான விஷயங்களை உலகுக்குக் கொடுத்த நாடு இந்தியா. அதன் பொருட்டாவது இந்தியா நீடித்திருக்க வேண்டும். நம்முடைய நாடு செழுமையும் முன்னேற்றமும்  அடைவது நமக்கு மிக அவசியம்.
- அத்தானு தே முன்னுரையில்


No comments:

Post a Comment