Search This Blog

Wednesday, June 26, 2013

ஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு

ஒரு  நாடு எப்படி இருக்க வேண்டும்?  நமக்குத் தெரிந்த நாடு இந்தியாதான். எனவே, நம்மைப் பொறுத்தவரை, நாடு என்றால், இந்தியாமாதிரி இருக்க வேண்டும்.

காஷ்மிர் முதல் கன்னியாகுமரிவரை விரிந்த நிலப் பரப்பு. அதில் இமாலயம் முதல் பரங்கி மலை  வரை வகை வகையாய் மலைகள்:  கங்கை, தக்காண சமவெளிகள்; கங்கை, காவேரி, மகாநதி, பி
ரம்மபுத்ரா, கோதாவரி, கிருஷ்ணா, வைகை  நதிகள்: கேரளம், கோவா, பாண்டிச்சேரி போல் கடற்கரைப் பிரதேசங்கள்.

இந்த இலக்கணப்படி பார்த்தால்  ஜப்பான் ஒரு நாடே இல்லை .6852 தீவுகள் சேர்ந்த ஒரு இணைப்பு.

0

ஜப்பான் ஆசியக் கண்டத்தில் பசிபிக் பெருங்கடலில் இருக்கிறது. சீனா, தென் கொரியா, வட கொரியா, ரஷ்யா ஆகியவை அண்டை நாடுகள். சீனாவிடமிருந்து சீனக் கடலும், தென் கொரியா, வட கொரியா, ரஷ்ய நாடுகளிடமிருந்து ஜப்பான் கடலும் ஜப்பானைப் பிரிக்கின்றன.

இயற்கை ஜப்பானைப் படைக்கும்போது நெஞ்சில் ஈரமே இல்லாமல் உருவாக்கியிருக்கிறது. உலகின் பத்து சதவிகித எரிமலைகள் ஜப்பானில்தான் இருக்கின்றன - 107 எரிமலைகள்.  அக்னி தன் சக்தியை இப்படிக் காட்டினால், இன்னொரு பஞ்சபூதமான பூமி தரும் பரிசாக ஒவ்வொரு வருடமும்   1500 நில நடுக்கங்கள். உலகத்தின் பூகம்பத் தொழிற்சாலை என்று ஜப்பானைப் பலர் அழைப்பது இதனால்தான். கடல் சும்மா இருக்குமா? தன் பங்குக்குத் தாராளமாகச் சூறாவளிக் காற்று, ராட்சச  அலைகள், பனிப் புயல்கள் ஆகியவற்றை அழையா விருந்தாளிகளாக அனுப்பி வைக்கிறது.

இயற்கையின் ஓர வஞ்சனை இத்தோடு முடியவில்லை. தொழில் உற்பத்திக்குத் தேவையான இயற்கை வளங்கள் ஜப்பானில் கிடையாது.  இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம். இறக்குமதிதான் நாட்டின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிர் மூச்சு.

0

இரண்டாம் உலகப் போர். 1939 முதல் 1945 வரை நடந்த  இந்த உலக மகா யுத்தம் பல நாடுகளின் எல்லைக் கோடுகளையும் சில நாடுகளின் தலைவிதியையும் மாற்றி எழுதியது. நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட  பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ் ஓர் அணியில். எதிர் அணியில் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்.    

இந்தப் போரை உலக மகா யுத்தமாக மாற்றியதில் ஜப்பானுக்குப் பெரும் பங்கு உண்டு. ஜெர்மனியும்  இத்தாலியும் ஃப்ரான்ஸ், பிரிட்டனோடு நடத்திக் கொண்டிருந்த போரை அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. 1941. ஜப்பான் அமெரிக்காவின் ஹவாயிலிருக்கும் பேர்ள் துறைமுகம், அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த பிலிப்பைன்ஸ் நாடு ஆகியவைமீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா ஜப்பான்மீது போர் அறிவித்தது. பிற நேச  நாடுகளும் ஜப்பான்மீது போர் அறிவித்தன.

ஆகஸ்ட் 1945. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய  நகரங்கள்மீது  அமெரிக்கா அணுகுண்டுகள் வீசியது. 1,11, 000 பேர் பலியானார்கள், ஒரு லட்சம் பேருக்கு மேல் படுகாயம் அடைந்தார்கள்.  அமெரிக்காவுக்கு எதிராகப் போர் நடத்துவது முடியாத காரியம் என்று புரிந்துகொண்ட ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

போருக்கு ஜப்பான் கொடுத்த விலை மிக அதிகம். மூன்று கோடிக்கும் அதிகமான மக்களின் மரணம். நாட்டில் இருந்த அத்தனை ராணுவத் தடவாளத் தொழிற்சாலைகளையும் அமெரிக்கா தரை மட்டமாக்கியது. சுமார் 40 சதவிகிதத் தொழிற்சாலைகளும்  முக்கிய நகரங்களும் சிதிலமாயின. ஜப்பான் நாடும் பொருளாதாரமும்  அதல பாதாளத்தில் விழுந்தன. இந்தப் படுகுழியிலிருந்து ஜப்பான் எழுந்து வந்தது. 1960 முதல் 1990 வரை உலகப் பொருளாதார வரிசையில் முன்னணியில் நின்றது. இந்த முப்பது வருட அமோக வளர்ச்சி ஜப்பான் அதிசயம்  (Japan Miracle) என்று அழைக்கப்படுகிறது.  

0

ஜப்பான்
எஸ்.எல்.வி. மூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
196 பக்கம்
விலை ரூ 130


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

No comments:

Post a Comment