Search This Blog

Showing posts with label வல்லரசு. Show all posts
Showing posts with label வல்லரசு. Show all posts

Wednesday, July 17, 2013

மோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி

மோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
சரவணன் தங்கதுரை
பக் : 152
விலை : 100



இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க


குடி தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா?
எல்லோருக்கும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா?
விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா?
நதிகளை இணைக்க முடியுமா?
ஐ.ஏ.ஏஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், குக்கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதைப் பார்க்க முடியுமா?
ஏழைப்பாழைகளின் தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க முதலமைச்சர் வருவாரா?
கூவத்தின் நாற்றத்தைப் போக்க முடியுமா?
தொழில் முதலீடுகளைக் கவர முடியுமா?
திட்டங்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே முடிக்க முடியுமா?
உலகம் வெப்பமயமாதலைத் தடுக்க முடியுமா?
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியுமா?
அரசு அதிகாரிகளிடமிருந்து நமது மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்குமா? அதுவும் ஒரே நாளில் கிடைக்குமா?

மேற்குறிப்பிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாதகமான விடையை நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இந்தியர் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தை, இந்தியாவின் மாதிரி மாநிலமாக உலகத் தளத்தில் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும் 10 ஆண்டுகால ஆட்சியில்.

நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர்.

இந்த சாதனைகளை அவர் எப்படிச் செய்தார் என்பதை இந்தப் புத்தகம் விரிவான ஆதாரங்களுடன் அழுத்தமாக விவரிக்கிறது. 
நூலாசிரியர் இந்தப் புத்தகம் உருவான விதம் பற்றி கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்:

இந்தப் புத்தகம் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு அல்ல. அவருடைய கட்சியின் தேர்தல் அறிக்கையும் அல்ல. என் தேடலுக்குக் கிடைத்த பதில்.
இந்தியாவால் வளர்ச்சி அடைந்த நாடாக முடியுமா, ஏன் இத்தனை வளங்கள் இருந்தும் நாம் தேங்கிக் கிடக்கிறோம், ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறோம், ஏன் நம் மக்கள் ஏழைமையில் உழன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற வருத்தத்தில் நான் இருந்தபோது குஜராத் பற்றிக் கேள்விப்பட்டேன். சில விஷயங்களை நம்ப முடியவில்லை. எனவே நானே சென்று பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
சில முறை பயணம் செய்தேன். பலரிடம் பேசினேன். தகவல்களைத் திரட்டினேன். நான் கண்டது முதலில் எனக்கு நம்பிக்கை தந்தது. அந்த நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். நம்மாலும் நம் மாநிலத்தை மிகச் சிறந்த மாநிலமாக, வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இப்போது வந்துள்ளது. சரியான தலைவர், தொலைநோக்குள்ள திட்டங்கள், செயல்படுத்தியே தீரவேண்டும் என்கிற வெறி, இவை போதும். ஏனெனில் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டுதான் நரேந்திர மோடி என்ற சரியான தலைவர், குஜராத்தில் இவற்றைச் செய்துகாட்டியுள்ளார்.

Friday, June 21, 2013

நாளைய இந்தியா



ஆசிரியர் : அத்தானு தே
தமிழில் : செ.கிருஷ்ணமூர்த்தி
பக் : 200
விலை : 150


இந்தியாவை முன்னேற்ற நம்மால் முடியும்
ஏழைமையிலிருந்து விடுபடுவதற்கும்,  பொருளாதார வளர்ச்சியைக் கடந்து முன்னேற்றம் அடைவதற்கும் இந்தியாவுக்குக்  குறைந்தது ஒரு தலைமுறை அதிவேகப் பொருளாதார வளர்ச்சி தேவை. இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம். ஆனால்  அதுமட்டுமே  முன்நிபந்தனையல்ல. 
பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமற்றதும் அல்ல;  தானாக அமைந்திடுவதும் அல்ல. இதை நாம் எப்போதும் மனத்தில் கொள்ளவேண்டும். முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் திட்டங்களின் பலனாக அமைபவை.  இந்தத் திட்டங்கள் எவ்வாறு அமைகின்றன என்பதைத் தீர்மானிப்பது மக்களாகிய நாம்தான். இதைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதன் மூலமே திட்டங்களை உருவாக்குபவர்களுக்கு நம்முடைய விருப்பத்தை உணர்த்த முடியும். அந்தத் திட்டங்களின் பலன்களும் விளைவுகளும் எப்படி அமையப் போகின்றன என்பதற்கும் நாமே பொறுப்பு. 
நாட்டின் முன்னேற்றத்துக்கான பொறுப்பு நம்வசமே உள்ளது என்ற அளவில் நாம் பாக்கியம் செய்தவர்கள். மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான திறனும், சாமர்த்தியமும், முனைப்பும் நம்மிடம்  உள்ளன. நாம் கல்வியறிவு பெற்றவர்கள். மாற்றத்தை உருவாக்குவதற்கான நேரத்தையும் உழைப்பையும் நம்மால் ஒதுக்க முடியும்.
ஒரு மாறுபட்ட எதிர்காலத்தைக் கற்பனைச் செய்யக்கூடிய ஆற்றல் நமக்கு உண்டு. அந்த மேன்மையுடைய எதிர்காலத்துக்காகத் திட்டம் தீட்டுவதற்கும், உழைப்பதற்குமான வசதியும் நமக்கு உண்டு. அத்துடன், இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றுவதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டிய தனிப்பொறுப்பும் நமக்கு உண்டு.
நீங்களோ, நானோ, பெரும்பாலான இந்தியர்களைப் போல் தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே போராடும் நிலையில் இல்லை. அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த அக்கறை? இந்தியா முன்னேறத் தவறியதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றியும் முன்னேற்றம்  பற்றியும் நாம் ஆழமான அக்கறையைச் செலுத்தவேண்டும். ஏனென்றால் அது பலகோடி சக மனிதர்களைத் துயரத்தில் இருந்து  மீட்பதற்கான முதல் படி. நாம் பிறருக்கென உழைக்கும் கோட்பாடு இல்லாதவர்களாக இருக்கலாம். இருப்பினும், சுயநலத்துக்காகவும், நடைமுறைக் காரணங்களுக்காகவும் நாம் செயல்பட்டாக வேண்டும். பொருளாதார கோபுரத்தின் உச்சியில் இருக்கும் நம்முடைய நிலை உறுதியற்றது. ஏனெனில் அந்தக் கோபுரத்தின் அடித்தளம் பலவீனமானது. நம்முடைய விதியும், நம்பிக்கையிழந்த ஏழை மக்களின் தலைவிதியும் பிரிக்க இயலாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே,  நாம் கட்டாயம் அக்கறை கொண்டாக வேண்டும்.
முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் அக்கறை கொள்ளாமல் போவது இந்தியா முழுமையாகச் சிதைந்து போகும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியா இந்தப் பூமிப்பரப்பில் இருந்து மறைந்துவிடக்கூடிய நிலையை நாம் அனுமதிக்கக் கூடாது. பல உன்னதமான விஷயங்களை உலகுக்குக் கொடுத்த நாடு இந்தியா. அதன் பொருட்டாவது இந்தியா நீடித்திருக்க வேண்டும். நம்முடைய நாடு செழுமையும் முன்னேற்றமும்  அடைவது நமக்கு மிக அவசியம்.
- அத்தானு தே முன்னுரையில்


Tuesday, June 18, 2013


நீயா நானா? (இந்திய - சீன வல்லரசுப் போட்டி)

ஆசிரியர் : ராகவ் பஹல்மொழிபெயர்ப்பு : சரவணன், மகாதேவன்


பக் : 384; விலை: 200/-


21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்கு இந்தியாவும் சீனாவும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. இந்த இரண்டு தேசங்களின் வரலாறை ஆதியில் இருந்து இன்றைய காலகட்டம்வரை மிக விரிவாக, துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் ராகவ் பஹல்.சீனாவின் பலங்கள் என்னென்ன... பலவீனங்கள் என்னென்ன? இந்தியாவின் பலங்கள் என்னென்ன... பலங்கள் என்னென்ன? கல்வி, மருத்துவம், அரசியல், மின்சாரம், ரயில்வே, சமூகக் கட்டமைப்பு என ஒவ்வொரு துறையாக அக்குவேறு ஆணி வேறாக அலசியிருக்கிறார். 
புத்தகத்திலிருந்து...
 நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் ஜிம் ஓ நீல் 2001-ல் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் பிரிக் நாடுகள் (BRIC countries) என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தினார். அதாவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா இந்த நான்கு நாடுகளை ஓர் அணியாக அவர் குறிப்பிட்டிருந்தார். ...


·          இந்த நான்கு நாடுகளின் கூட்டணி 2025 வாக்கில் ஜி-6 நாடுகளின் பொருளாதாரத்தில் பாதியை எட்டிவிடும்.

·          இன்னும் 40 வருடங்களில் ஜி-6 நாடுகளை மிஞ்சிவிடும்...

·          வெறும் சாதாரண கொள்கைகள் மூலமே இதைச் சாதித்துவிடும். அதிரடியாக எதுவும் செய்யத் தேவையே இல்லை.

·          அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய கார் சந்தையாக அமெரிக்காவின் இடத்தை சீனா பிடித்துவிடும்.

·          பிரிக் நாடுகளில் இந்தியாவுக்குப் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. 2025 வாக்கில் இந்தியாவின் தற்போதைய ஜி.டி.பி. 50 மடங்கு அதிகரித்து 25 டிரில்லியன் டாலர் அளவைத் தொட்டுவிடும்.

 பிரிக் நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி சுவாரசியமாக இருப்பதற்கு காரணங்கள் உண்டு. 17,18ம் நூற்றாண்டுகளில் சீனாவும் இந்தியாவும் வல்லரசுகளாக இருந்தன. பொருளாதார வரலாற்று நிபுணர் ஆங்கஸ் மேடிசனின் ஆய்வின்படி, 1600-ல் சீனா, இந்தியாவின் ஜி.டி.பி. உலக ஜி.டி.பி.யில் பாதி அளவுக்கு இருந்தது. (சீனா 28%, இந்தியா23%). ஆனால், அடுத்த 200 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளின் குடியேற்ற ஆட்சியால் இரு நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது. கடந்த சில பத்தாண்டுகளாக இரு நாடுகளும் திமிறி எழ ஆரம்பித்துள்ளன. 1770-ல் பள்ளத்தில் இறங்கிய அந்த அலை மேல் நோக்கி உயர ஆரம்பித்துள்ளது.


 இந்தப் புத்தகத்தைவாங்க