Search This Blog

Wednesday, July 31, 2013

போபால் அழிவின் அரசியல்

போபால் அழிவின் அரசியல்
மருதன்
பக் : 200
விலை : 135/-


புத்தகத்தை இணையத்தில் வாங்க
போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

1984, டிசம்பர் 2-3ம் தேதி, நள்ளிரவு யூனியன் கார்பைட் ஆலையில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவால் இன்று வரை இருபத்து மூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நிரந்தரமாக மற்றும் பகுதியளவில் முடமாகிப் போனவர்களிள் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டுகிறது.
இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஜூன் 7, 2010 அன்று போபால் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. சில முக்கிய அம்சங்கள்.
  •  மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தால்தான் அமெரிக்கா யூனியன் கார்பைட் தொழிற்சாலையை இந்தியாவில் அமைத்தது.
  • அமெரிக்காவில் பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. எனவே, ஆபத்தான ரசாயனத் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்கா அமைத்து வருகிறது.
  • யூனியன் கார்பைட் நிறுவனம் போதுமான பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிக்கவில்லை. இதனை அமெரிக்க நிறுவனமோ உள்ளூர் நிர்வாகமோ பொருட்படுத்தவில்லை.
  • விஷவாயு கசிவு ஏற்படும் பட்சத்தில், அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை திட்டம் எதுவும் அந்த நிறுவனத்திடம் இல்லை.
  • விஷவாயு கசிந்தபோது உள்ளூர் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் ஏராளமான மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

மொத்தம் ஏழு பேரை நீதிபதி குற்றவாளி என்று அறிவித்தார்.
ஆனால், அந்த ஏழு பேரில், வாரன் ஆண்டர்சன் பெயர் இல்லை. அவரை அப்ஸ்காண்டர் என்று அழைத்தது நீதிமன்றம். அதாவது, வழக்கில் கலந்து கொள்ளாமல் நழுவியவர்.
ஆக, சட்டத்தின் நீண்ட கரம், வாரன் ஆண்டர்சனைத் தீண்டவில்லை. கேஷுப் மஹிந்திரா உள்ளிட்ட இந்தியக் குற்றவாளிகளைத் தீண்டவில்லை. யுசிசி அமெரிக்கா, யுசிஐஎல் இந்தியா இரண்டையும் தீண்டவில்லை.

*********************

நடு இரவில் வெளியில் இருந்து பல சத்தங்கள் கேட்டன. எழுந்திரு!’, ‘ஓடு!’ ‘ஓடு!என்று மக்கள் கத்திக்-கொண்டிருந்தார்கள். வாயு கசிந்துவிட்டது!என்று ஒரு குரல். நான் கண்களைத் திறந்து பார்த்தேன். எங்கள் அறை முழுவதும் புகை நிரம்பியிருந்தது. என் முகத்தில் போர்த்தப்பட்டிருந்த துணியை விலக்கினேன். கண்கள் எரிய ஆரம்பித்தன...
என் அப்பா வீட்டைவிட்டு வெளியேற மறுத்துவிட்டார். அம்மா அவருடனே ஒண்டிக்கொண்டுவிட்டார். எனவே, நாங்கள் ஆறு பேர் வெளியேறினோம். சுடு-காட்டை நோக்கி ஓடினோம். சிறிது நேரத்தில், என் இளைய தங்கை-யும் சகோதரனும் எங்களிடம் இருந்து பிரிந்து சென்று-விட்டார்கள். இப்போது நாங்கள் நால்வர்-தான் எஞ்சி-யிருந்தோம். புகை அடர்த்தியாக இருந்தது. எதுவுமே தெரியவில்லை. ஆனாலும், ஓடிக்கொண்டிருந்-தோம்.
- ஒன்பது வயது ரமேஷின் வாக்குமூலம்

புகை வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. எல்லோரும் எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தபோது, நான் தொழிற்-சாலையை நோக்கி விரைந்தேன். அவர்களிடம் கேட்டேன். வெளியேறிக்-கொண்டிருப்பது எப்படிப்-பட்ட வாயு? இதை சுவாசித்தவர்-களுக்கு என்ன சிகிச்சை அளிக்கவேண்டும்? அப்போது மணி இரவு 12 இருக்கும். ஆனால், அவர்கள் வாயைத் திறக்கவேயில்லை. விடி-காலை மூன்று மணிக்கு, தொழிற்சாலையில் இருந்து ஒருவர் வந்து விஷயத்தைச் சொன்னார். வெளியேறிய வாயுவின் பெயர், மெத்தில் ஐசோ சயனேட் என்று.
சுவரஜ் பூரி, மாவட்ட காவல்துறை ஆணையர், போபால். 

கிரீன்பீஸ் வெளியிட்ட அறிக்கையில் இருந்து
யூனியன் கார்பைட் பாதுகாப்பற்ற முறையில் இயங்கு-கிறது என்று எங்கிருந்து தகவல் வந்தாலும் சரி, அப்படிப்-பட்ட ஒரு தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டுவிடும்.
வாரன் ஆண்டர்சன், முன்னாள் சேர்மன்,

யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன். மார்ச் 1985ம் ஆண்டு
நடைபெற்ற பத்திரிகை-யாளர் சந்திப்பின்-போது


ஆடம்பரமான நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் இந்த அதிகாரிகள் யார்? எங்களில் யாருக்கு 400 ரூபாய் வழங்க-வேண்டும், யாருக்கு 200 ரூபாய் வழங்கவேண்டும், யாருக்கு 100 போதும் என்று எந்த அடிப்படையில் இவர்கள் முடிவெடுக்கிறார்கள்? எங்களை ஏன் இவர்கள் கழிவுகளைப் போல் நடத்துகிறார்கள்?’
ஜே.பி. நகரில் இருந்து சாவித்திரி. ராதிகா ராமசேஷன்,
எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, டிசம்பர் 22-29, 1984


Thursday, July 25, 2013

ஆகஸ்ட் மாத ஆழம் இதழ்

இன்னும் இரு தினங்களில் கடைகளில் கிடைக்கும். சந்தாதாரர்களுக்கு மாத இறுதிக்குள் அஞ்சலில் வந்துசேரும். (ஆன்லைனில் சந்தா செலுத்த | தொலைபேசியில் சந்தா செலுத்த 94459-01234)

கவர் ஸ்டோரி

சாதி, காதல், அரசியல் / வித்தகன்

இளவரசன்-திவ்யா விவகாரம் ஒரு காதலில் தொடங்கி, பெரும் மோதல்களில் வளர்ந்து, திவ்யாவின் தந்தையைப் பலிகொண்டு கடைசியில் இளவரசனின் மரணத்தில் முடிவடைந்திருக்கிறது. 

இதில் அரசியலின் பங்கு என்ன? சமூகத்தின் பங்கு என்ன? சாதியத்தின் பங்கு? மூன்று பேட்டிகள்மூலம் இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை தேட முயற்சி செய்கிறது ஆழம் கவர் ஸ்டோரி.

பேட்டி 1 : 

‘சாதியம் எல்லா மதங்களிலும் வளர்ந்து வருகிறது!'
- விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார்

பேட்டி 2 : 

'பா.ம.க.வும் வன்னியர் சங்கமும்தான் காரணம்!'
- மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் - மில்டன்

பேட்டி 3 : 

இளவசரன்-திவ்யா திருமணம் சட்டப்படி செல்லாது!
- வழக்கறிஞர் கே. பாலு

தமிழ்நாடு 

1) நெருக்கடியில் நெய்வேலி / எஸ். சம்பத்

நெய்வேலியில் ஏன் வேலைநிறுத்தப் போராட்டங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன? இந்த முறை பிரச்னை எப்படித் தீர்க்கப்பட்டுள்ளது?

2) நம்பர் 1 தற்கொலை நாடு / முல்லை

தற்கொலைகள் ஏன் பெருகுகின்றன? குறிப்பாக, தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பதன் சமூகக் காரணங்கள் என்னென்ன?

3) வாலி : நீங்காத நினைவுகள் / ஆர். முத்துக்குமார்

வாலியின் அரசியல், சினிமா பங்களிப்பை அசைபோடும் ஓர் அஞ்சலி.
4) அம்மா உணவகம் : குறைகளும் தீர்வுகளும் / கோவை ராஜா

அம்மா உணவகம் குறித்து இதுவரை வெளிவராத புதிய தகவல்களும் பார்வைகளும் கொண்ட விரிவான கட்டுரை. 
இந்தியா 

1)  ஒரு பேரழிவின் கதை / ஆதித்யா

உத்தரகண்ட் மாநிலத்தைப் பற்றியும், இமாலய சுனாமி நடைபெற்ற நிலப்பரப்பையும் விரிவாக ஆராயும் இந்தக் கட்டுரை, சீரழிவு ஏற்பட்டதன் காரணம் இயற்கை விளைவா அல்லது மனிதத் தவறுகளா என்று ஆராய்கிறது.

2)  இயற்கை எரிவாயு : விலையேற்றத்தால் யாருக்குப் பலன்? / ரமணன்

இயற்கை எரிவாயு விலை உயர்த்தப்பட்டது தனியாரின் நலன்களுக்காகவா? இதனால் பலனடையப்போகிறார்கள் யார், பாதிக்கப்படப்போகிறார்கள் யார்?

3) ராகவ்ஜி என்ன தவறு செய்துவிட்டார்? / விஜய்-கோபிகிருஷ்ணா

மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ராகவ்ஜியை மீடியாவும் அவரது கட்சியும் வெறுத்து ஒதுக்கி வைத்திருக்கிறது. இது சரியா? அவர்மீதான குற்றச்சாட்டு என்ன?

4) இந்திரா காந்தி பாதையில் மன்மோகன் சிங் / பா. சந்திரசேகரன்

NGEGA குறித்து ஒரு தெளிவான, தீர்மானமான அலசல். இத்திட்டம் யாருக்காக வகுக்கப்பட்டதோ அவர்கள் அதனால் பலன் பெறுகிறார்களா என்னும் ஆதாரக் கேள்வியை ஆராயும் கட்டுரையும்கூட.

கல்வி

கல்விக் கொள்கை, மாற்றுக் கல்வித் திட்டங்கள் ஆகியவை குறித்து பி.ஆர். மகாதேவன் எடுத்து வரும் நேர்காணல்கள் வரிசையில் இந்த முறை தியாகுவின் விரிவான பேட்டி இடம்பெறுகிறது.

'மெக்காலேயே ஓரங்கட்டிவிட்டு வள்ளுவருக்கு உயிர் கொடுத்துள்ளோம்!' 

தாய்த் தமிழ்ப் பள்ளியின் நடைமுறை மற்றும் பாடத் திட்டங்கள் குறித்து ஒரு விரிவான அறிமுகம்.

உலகம்

1) எகிப்தில் என்ன நடக்கிறது? / சத்யா

2) இந்தியர்களை வெளியேற்றும் சவுதி அரேபியா / ஆரோக்கியராஜ்

3) ஐ.நா. சபையில் மலாலா / ரஞ்சனி நாராயணன் 
4) டிஜிட்டல் கண்காணிப்பு / என். சொக்கன் 

இலக்கியம்

1) அசோகமித்திரன் : க.நா.சுவின் கடைசி இருபது ஆண்டுகள்
2) வண்ணநிலவன் : திராவிட இயக்கங்களும் இலக்கியமும்

சினிமா

சூப்பர்மேன் 75 / அரவிந்தன் சச்சிதானந்தம்

ரஷ்யப் புரட்சி

ரஷ்யப் புரட்சி எப்படி, யாரால் நடத்தப்பட்டது? சித்தாந்தத்தில் இருந்த கம்யூனிசத் தத்துவத்துக்கு உயிர் கொடுத்தது யார்? எப்படி? உணர்ச்சிபூர்வமான இந்த வரலாற்று நூலில் என். ராமகிருஷ்ணன் ரஷ்யப் புரட்சிக்கு உயிரூட்டி நம் கண்முன் நிறுத்துகிறார்.

0

தொழிலாளர்கள் தினமும் 14 மணி முதல் 15 மணி நேரம் வரை உழைக்க வேண்டியிருந்தது. இந்த நிலை ஆண்கள், பெண்களுக்கு மட்டுமல்ல. சிறுவர்களுக்கும் கூடத்தான். உடல்நலம் சரியில்லை என்று சொல்லி வேலைக்கு போகாமல் இருந்துவிட முடியாது. சரியாக தூங்காமல் ராட்ச இயந்திரங்களில் அகப்பட்டுக்கொண்டு கையையும், காலையும் இழந்தவர்களின் எண்ணிக்கையை இது வரை யாரும் கணக்கிடவில்லை.

உதாரணத்துக்கு இயந்திர பல்சக்கரத்தில் மாட்டிக்கொண்டு ஒரு தொழிலாளி தனது கையை இழந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதிகாரிகளும் மேற்பார்வையாளர்கள் என்ன செய்வார்கள்? உடனடியாக ஒரு குழுவை அவசர அவசரமாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைப்பார்கள். எதற்கு? தொழிலாளிக்கு அவசர சிகிச்சை அளிக்கவா? அல்ல. இயந்திரம் கோளாறாகி நின்றுவிட்டால் வேலை கெட்டு விடும். எவ்வளவு வேலை கெடுகிறதோ அந்த அளவுக்கு லாபம் குறைந்துவிடும். எனவே, இயந்திரத்தை பழுது பார்க்க வேண்டியது அவசியம். அப்படியானால் அடிப்பட்ட தொழிலாளியின் கதி? அவனை அகற்றி விட்டு வேறொருவனை நியமித்துவிடுவார்கள். இயந்திரத்துக்குத் தான் பஞ்சம். தொழிலாளர்கள் வேண்டிய நேரத்தில் வேண்டிய அளவுக்கு கிடைப்பார்கள்.

பணியகத்தில் உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கும் உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எந்தவிர நிவாரண உதவியும் கிடையாது. மருத்துவ செலவுகளுக்கான பணம் கூட கொடுக்கப்படுவதில்லை. தொழிலாளளுக்கு பாதுகாப்புச் சட்டங்கள், நல்வாழ்வுச் சட்டங்கள் என்று எதுவும் கிடையாது. எத்தனை மணிநேரம் உழைத்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் கூலி மிகமிகக் குறைவு. மிஞ்சி மிஞ்சிப் போனால் மாதத்துக்கு 7 அல்லது 8 ரூபிள்கள் மட்டுமே கிடைக்கும். உலோக மற்றும் வார்ப்புத் தொழிற்சாலைகளில் மட்டும் 35 ரூபிள் வரை கொடுக்கப்பட்டது. வேலை உத்தரவாதம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் கழட்டிவிடப்படலாம் என்ற நிலை. அவர்களுக்கு
பசியெடுத்தால்கூட அருகிலுள்ள கடைக்குச் சென்று தேவையானதை வாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் வேலை பார்க்கும் ஆலைகளுக்குச் சொந்தமான கடைகளுக்குச் சென்றுதான் வாங்க வேண்டும். ஆனால் அங்கு பொருள்களின் விலை வெளியில் இருப்பதைவிட அதிகமாகவே இருக்கும்.

இது போக தொழிலாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைவான ஊதியமும் அவர்களுக்கு முழுதாகக் கிடைக்கவில்லை. நிர்வாகங்கள் எதற்கெடுத்தாலும் தொழிலாளிகள் மீது அபராதங்கள் விதித்தன. அந்த அபராதத் தொகை அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது. மொத்தத்தில், ஒரு மனிதனை எந்த அளவுக்கு சுரண்டலாமோ அந்த அளவுக்கும் மேலாகவே சுரண்டினார்கள்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாது எனும் கட்டத்தில் தொழிலாளர்கள் திமிறி எழுந்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் துணிந்தனர். எதிர்ப்பு வன்முறையாகவும் வெடித்தது.  இயந்திரங்களை உடைத்துத் தூள் தூளாக்கினர். ஆலை நிர்வாகத்தின் அலுவலகங்களையும், அது நடத்தி வந்த கடைகளையும் நாசம் செய்தனர்.

(புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி)

0


ரஷ்யப் புரட்சி
என். ராமகிருஷ்ணன்
136 பக்கம், ரூ.95

போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

Tuesday, July 23, 2013

இலங்கை இறுதி யுத்தம்

இலங்கை இறுதி யுத்தம் நூலின் முன்னுரை :

இந்தோரிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்துகொண்டிருக்கும்போதுதான் இந்தப் புத்தகத்தை எழுதும் எண்ணம் எனக்குத் தோன்றியதுஉத்தராஞ்சல் மாநிலத்தின் மோ நகரில் உள்ள புகழ்வாய்ந்த ராணுவப் படைக் கல்லூரியில் ராணுவத்துக்கும் ஊடகங்களுக்கும் இடையேயான உறவுஎன்ற தலைப்பில் பேசிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். அந்தப் பேச்சின்போது, சமீபத்தில் இலங்கையில் நடந்துமுடிந்த போரைப் பற்றி என்னிடம் இந்திய ராணுவத்தினர் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தனர். நான் இலங்கைக்குச் சென்று, அங்கு நடந்த போரை, என்.டி.டி.வி தொலைக்காட்சிக்காகப் பின்பற்றி, செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தேன். போர் முடிந்த காரணத்தால், அப்போதுதான் இந்தியா திரும்பி வந்திருந்தேன்.

என் அனுபவங்களை இந்திய ராணுவ வீரர்களிடம் பகிர்ந்துகொண்டபோதுதான், இந்தப் போரைப் பற்றிய பல விஷயங்கள் வெளி உலகுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். இலங்கை ராணுவத்தின் வெற்றிக்கான சூத்திரம்என்ன என்று பலரும் கேட்டனர். இன்னும் பலர், விடுதலைப் புலிகள் தவறு செய்த இடம் எது என்று தெரிந்துகொள்ள விரும்பினர்.

எனவே, உலகின் மிகக் கொடூரமான ஒரு தீவிரவாதக் குழுவை எப்படி இலங்கை ராணுவம் ஒழித்துக் கட்டியது என்ற கதை எழுதப்பட்டே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

இந்தப் புத்தகம் இலங்கைப் பிரச்னையை ஆழமாக அலசும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. எப்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவும் அவரது படைத் தளபதிகளும் அரசியல்-ராணுவச் செயல்திட்டங்களை வகுத்து, இதுவரையில் வெல்லவே முடியாமல் இருந்த ஓர் அமைப்பை வெற்றிகண்டனர் என்பது பற்றியே என் கவனம் முழுவதும் இருக்கும்.

2006 முதலாகவே போரின் முன்னணியில் என்.டி.டி.வி தொலைக்காட்சி நிருபராக இருந்து வந்துள்ளேன். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பல நண்பர்கள் எனக்குப் பல தகவல்களை அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரது பெயரையும் வெளியில் சொல்ல அனுமதி தரவில்லை. எனவே இந்தப் புத்தகத்தில் பலரது பெயர்கள் வெளிவராது.

ஆனால் இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்தில் சிலரது பெயர்களை நிச்சயமாகச் சொல்லமுடியும். மூத்த பத்திரிகையாளர், இலங்கை விவகாரத்தைக் கூர்ந்து கவனிக்கும் நோக்கர் பி.கே.பாலச்சந்திரன், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோதபாய ராஜபக்ஷே, ஜெனரல் சரத் ஃபொன்சேகா, ஹை கமிஷனர் ரொமேஷ் ஜயசிங்கே, இலங்கை வெளியுறவுத் துறைச் செயலர் பலித கொஹோன, டெல்லி இலங்கைத் தூதரகத்தின் சஜ்ஜேஷ்வர குணரத்ன, தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் லக்ஷ்மண் ஹுலுகல்லே, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இலங்கை ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் துஷாரா, உபேந்திரா, தாஜ் சமுத்ராவின் ஆனந்த் பத்மனாபன், இந்தப் போரைத் தொலைக்காட்சிக்காகப் படம் பிடித்த என்னுடைய சக அலுவலர்கள் தனபால், சுகுமார் ஆகியோர்.

இந்தப் புத்தகத்தை எழுத அனுமதியும் விடுப்பும் கொடுத்த என்.டி.டி.வியின் ராதிகா ராய், பிரணாய் ராய், பர்க்கா தத், சோனியா சிங் ஆகியோருக்கு நன்றி. வீட்டில், என் மனைவி நேஹா, மகன்கள் ஹர்ஷ், உத்கர்ஷ் ஆகியோர் நான் அவ்வப்போது காணாமல் போவதையும் என் ஒழுங்கற்ற செயல்களையும் சந்தோஷமாகப் பொறுத்துக்கொண்டனர்.

இலங்கையின் பாதுகாப்புப் படையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்துக் கூறுவதில் பலர் எனக்கு உதவியளித்துள்ளனர். ஏதேனும் தவறுகள் இருந்தால் அவை முழுவதும் என் பொறுப்பே.


0

இலங்கை இறுதி யுத்தம்
நிதின் ஏகோகலே
பக்கம் 208, விலை ரூ.120

போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

Friday, July 19, 2013

பாகிஸ்தான் போகும் ரயில்

பாகிஸ்தான் போகும் ரயில்
குஷ்வந்த் சிங்
தமிழில் : ராமன் ராஜா
விலை : 220 /-
பக் : 272

இந்திய பிரிவினை பற்றி எழுதப்பட்ட படைப்புகளில் குறிப்பிடத் தகுந்த படைப்பு இது. 
பிரிவினை வன்முறை வெறியாட்டங்கள் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தலைவிரித்தாடத் தொடங்கிய காலம். பஞ்சாபில் ஒரு கிராமம் மட்டும் அமைதியாக இருக்கிறது. அப்படி அந்த கிராமத்து முஸ்லிம்களும் சீக்கியர்களும் மட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? அந்த அமைதியைக் குலைக்கிறது பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரயில். அதில் எண்ணற்ற இந்து, சீக்கியப் பிணங்கள். பழிக்குப் பழியா? பாகிஸ்தானுக்குப் புலம் பெயரும் முஸ்லிம்கள் அடங்கிய ரயிலுக்கு என்ன ஆகப் போகிறது? அதுதான் கதை.



புத்தகத்திலிருந்து...

மானோ மாஜரா கிராமத்தின் ரெகுலரான வாடிக்கையாளர்கள் என்றால் அது கூட்ஸ் வண்டிகள்தான். இந்த நிலையத்தில் யாரும் சரக்குகள் ஏற்றப்போவதோ, இறக்கப்போவதோ இல்லை. இருந்தாலும் அதன் உபரியான தண்டவாளங்களில் எப்போதும் வரிசை வரிசையாக சரக்கு ரயில் பெட்டிகள் நின்றுகொண்டு இருக்கும். இந்தப் பக்கம் கடந்து செல்லும் ஒவ்வொரு கூட்ஸ் வண்டியும் மணிக்கணக்காகப் பெட்டிகளை உதிர்த்துக்-கொண்டும் இணைத்துக்கொண்டும் இருக்கும். இருட்டியதும் கிராமமே ஆழ்ந்த நிசப்தத்தில் உறங்கும்போது, நிலையத்தில் மட்டும் எஞ்சின்களின் நீராவிப் பெருமூச்சுகளும் விசில் ஒலியும், தடார் தடார் என்று பெட்டிகள் மோதும் சத்தமும், இரும்பு கப்ளிங்குகளின் க்ளிங் க்ளாங் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும்.
ரயில் என்பது மானோ மாஜராவின் வாழ்க்கையில் ஒரு பகுதி. பொழுது விடிவதற்கு முன்பு லாகூர் மெயில் பதறிக்கொண்டு வரும். பாலத்தை நெருங்கும்போது எப்போதுமே டிரைவர் இரண்டு முறை நீளமாக விசில் ஊதுவார். அவ்வளவுதான்; அந்த ஒரே கணத்தில் மானோ மாஜராவே விழித்துக்கொண்டுவிடும்! கருவேல மரத்துக் காக்கைகள் கத்த ஆரம்பிக்கும். வௌவால்கள் வரிசையாகச் சத்தமில்லாமல் சுற்றிச் சுற்றிப் பறந்து, அரச மரத்தில் யார் எங்கே தொங்குவது என்று போட்டியிட ஆரம்பிக்கும்.
மசூதியின் முல்லாவுக்கு அதுதான் காலைப் பிரார்த்தனை ஆரம்பிக்கும் நேரம். சீக்கிரம் கைகால் கழுவிக்கொண்டு மேற்கு நோக்கி நின்று காதில் கை வைத்துக்கொண்டு அல்லாஹ்-ஓ-அக்பர்என்று நீளமாக, இனிமையாக இழுப்பார்.
முல்லா அல்லாவைக் கூப்பிட்டு முடிக்கட்டும் என்று சீக்கியக் கோவிலின் குரு, படுக்கையிலேயே படுத்துக் காத்திருப்பார். பிறகு அவரும் எழுந்து கோவில் முற்றத்தில் உள்ள கிணற்றி-லிருந்து ஒரு வாளி தண்ணீர் இறைத்துத் தலையில் கொட்டிக்-கொள்வார். தண்ணீர் அலப்பும் சத்தத்துடன் அவருடைய பிரார்த்தனையும் சன்னமாக ஒலிக்கத் தொடங்கும்.

***

விரலால் கண்களை அழுத்தி அந்தக் காட்சிகளை அப்படியே நசுக்கி எறிய முயன்றார் ஹுகம் சந்த். காட்சிகள் இருண்டு கறுத்தன, சிவந்தன; ஆனால் மறுபடி வந்து நின்றன.
ஒரு ஆள் தன் உருவின குடலைக் கையில் பிடித்துக்கொண்டு என்ன வெச்சிருக்கேன் பாரு!என்று கண்ணாலேயே சொன்னான். பெண்களும் குழந்தைகளும் ஒரு மூலையில் ஒடுங்கி நடுங்கிக்-கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்கள் பயத்தில் அகன்றிருந்தன. திறந்த வாய்களில் ஒலியற்றுப்போன கூக்குரல்கள் உறைந்-திருந்தன. சிலருடைய உடம்பில் ஒரு சிறு கீறல்கூட இல்லை.
கம்பார்ட்மெண்ட்டின் கடைசிக் கோடியில் நெருக்கித் திணிந்து-கொண்டு பல சடலங்கள். அவை காலியான ஜன்னல்களை நோக்கித் திகிலில் வெறித்த பார்வையுடன் கிடந்தன. அந்த ஜன்னல்கள் வழியாகத் தோட்டாக்களும் ஈட்டிகளும் வேல் கம்புகளும் சீறி வந்திருக்கவேண்டும். கழிவறைகளில் பல இளைஞர்களின் பிணங்கள் அடைத்துத் திணிந்துகொண்டு இருந்தன. அங்கே கொஞ்சம் பத்திரமாக இருக்கும் என்று நினைத்து முண்டி மோதிக்கொண்டு போயிருக்கிறார்கள்.
அழுகிக் கொண்டிருக்கும் சதை, மலம், மூத்திரம் எல்லாவற்றின் வாடையும் சேர்ந்து வயிற்றைப் புரட்டியது. அதை நினைத்துக்-கொண்டபோதே ஹுகம் சந்த்தின் வாய்வரை வாந்தி வந்து-விட்டது.
அன்றைக்கு அவர் பார்த்த காட்சிகளிலேயே மறக்க முடியாதது, வயதான விவசாயி ஒருவரின் முகம்தான். அவர் நீளமான வெள்ளைத் தாடி வைத்திருந்தார். பார்த்தால் இறந்துபோன மாதிரியே தெரியவில்லை. மேலே சாமான்கள் வைக்கும் பலகையில் இரண்டு பக்கமும் படுக்கைச் சுருள்கள் நெருக்கிக்-கொண்டிருக்க, நடுவே உட்கார்ந்திருந்தார். ஏதோ சிந்தனை வயப்பட்டவராகக் கீழே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்-கொண்டிருப்பவர்போலத்தான் காணப்பட்டார். அவருடைய காதிலிருந்து ஒரு மெல்லிய சிவப்புக் கோடு போல் ரத்தம் வழிந்து தாடிவரை வந்து உறைந்து போயிருந்தது...

 ***

இந்த ஏரியாவுலேருந்து எல்லா முஸ்லிம்களையும் வெளியே அனுப்பியே ஆகணும். அவங்களுக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ, சீக்கிரமாவே அனுப்பிட்டோம்னா அவங்களுக்கு நல்லது.
உரையாடலில் இப்போது ஒரு நீண்ட மௌனம். அதிகாரிகள் இருவரும் மழையை வெறித்துக்கொண்டு நின்றார்கள். பிறகு ஹுகம் சந்த் மறுபடி பேச்சைத் தொடர்ந்தார். புயல் அடிக்கும்போது நாம தலையைக் குனியத்தான் வேணும். பிரம்பைப் பாருங்க. காத்து வீசும்போது இலையெல்லாம் வளைஞ்சு நின்னுக்குது. தண்டு மட்டும், தனக்குத்தான் கொண்டை இருக்குதுன்னு விறைப்பா நிக்குது. புயல் கடக்கும்போது முறிச்சுப் போட்டு அதோட வெள்ளைக் கொண்டை எல்லாம் எருக்கம் பூ மாதிரி நாலா பக்கமும் சிதறிப் போகுதுஎன்றவர் கொஞ்சம் இடைவெளி விட்டு, ‘புத்தி உள்ளவனா இருந்தா ஆத்து ஓட்டத்தோடவே நீஞ்சி அக்கரை போய்ச் சேர்ந்துடுவான்என்றார்.


Thursday, July 18, 2013

குமரிக் கண்டமா சுமேரியமா? - தமிழரின் தோற்றமும் பரவலும்

குமரிக் கண்டமா சுமேரியமா? - தமிழரின் தோற்றமும் பரவலும்
பி.பிரபாகரன்
விலை : 125/- ; பக் : 176

2010 செம்மொழி மாநாட்டில், Traces of Mediterranean Origin of Tamils என்ற தலைப்பில் பிரபாகரன் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையின் தமிழ் விரிவாக்கமே இந்நூல்.






புத்தகத்திலிருந்து...

திராவிடர்கள் என்ற மக்கள் தென் இந்தியாவில் பல அரசுகளை நிறுவியவர்கள். அப்படியானால் திராவிடர்கள் என்பவர் யார்இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்இவர்கள் எப்போது தமிழர்-களாக மாறினார்கள்இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்ததுஏன் நிகழ்ந்தது?
வட இந்தியாவில் பஞ்சாபிகுஜராத்திபோஜ்புரிபிகாரிவங்காளம் என்று பல கிளை மொழிகள் இருக்கின்றன . இவை அனைத்துக்கும் சமஸ்கிருதம் என்ற மொழி தாய் மொழியாகப் போற்றப்படுகிறது.
இதே உதாரணத்தை தென் இந்தியாவுக்குக் கொண்டுவந்தால் திராவிடம் என்ற தாய் மொழியிலிருந்து தமிழ்தெலுங்குகன்னடம்மலையாளம் ஆகிய கிளை மொழிகள் தோன்றியதாக எடுத்துக்கொள்ளலாமாஅப்படி எடுத்துக்கொண்டால் திராவிடம் என்ற மொழி எங்கே போயிற்றுகல்தோன்றி மண்-தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி என்பது வெறும் கவிதை வரிகள்தானாஇல்லை,  தமிழ்தான் ஆதி மொழிஅதிலிருந்து பிரிந்தவைதான் மலையாளம்கன்னடம்தெலுங்கு என்று எடுத்துக்கொண்டால் திராவிடம் என்பது ஒரு மொழியைக் குறிக்கும் சொல்லாஅல்லது ஒரு பண்பாட்டைக் குறிக்கும் சொல்லாஅல்லது ஓர் இனத்தைக் குறிக்கக்கூடிய சொல்லா?


***

சாந்தி பாப்பு அத்திரம்பாக்கத்தில் நடத்திய அகழ்வில் தமிழ்நாட்டில் 15 லட்சம் வருடங்களுக்கு முன் கற்கருவிகளைப் பயன்படுத்திய மனிதன் வாழ்ந்தான் என்பது மட்டும்தான் உறுதியாகிறது. எப்போது இந்த மனிதன் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையும் பெறத் தொடங்குகிறானோ, அப்போதுதானே அவனைத் தமிழன் என்று கருத முடியும்? 
இந்தக் கற்கால மனிதன் படிப்படியாக வளர்ச்சி அடைந்து தமிழனாக நாகரிகம் பெற்றிருக்கக் கூடாதா? 
இதற்கும் வாய்ப்பில்லை.
கொற்கையும், பொருந்தலும், பூம்புகாரும் தமிழர்கள் நகர்ப்புற நாகரிகம் பெற்றிருந்ததைத்தான் ஆதாரமாகக் காட்டுகின்றன. தமிழர்கள் மகோன்னதமான பண்பாட்டின் சிகரத்தைத் தொட்டு வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமான மாமல்லபுரம் சிற்பங்களும் சோழர்காலக் கோவில்களும் செப்பேடுகளும் பொ.யு. ஆறாம் நூற்றாண்டிலிருந்துதான் காணப்படுகின்றன. பல்லவர் காலத்தை சிம்மவிஷ்ணுவில் தொடங்கி பொ.யு. 555 முதல் என்று எடுத்துக்கொள்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். 
அதாவது இந்தக் கற்கால மனிதன் 14,98,600 வருடங்களாக எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு திடீரென்று பல்லவர் காலத்தில் அதாவது பொ.யு. 600 முதல் (இன்றைக்கு 1400 ஆண்டு-களுக்கு முன்பாக) மகோன்னதமான வரலாற்றுச் சின்னங்களைக் கட்ட ஆரம்பித்தான் என்பது நெருடலாக இருக்கிறது. வேறு விதமாகப் பார்த்தால், 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழனின் எந்த வரலாற்றுச் சின்னமும் ஏன் கிடைக்கவில்லை? தஞ்சை பெரிய கோவிலின் கோபுர உச்சியில் 80 டன் கல்லை நிறுத்தும் அளவுக்குத் திறமை வாய்ந்த தமிழன், அதற்கு 1,000 அல்லது 2,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரன வரலாற்றுச் சின்னத்தைக் கூடக் கட்டவில்லை என்பது ஒரு முரண்பாடாகவே தெரிகிறது.
உலக வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் பொ.யு.மு. 3000 முதல் 5000 வரை அநேக நாகரிகங்களில் மாபெரும் வரலாற்றுச் சின்னங்கள் உருவாகியிருப்பதைக் காணலாம். 
உதாரணமாக பொ.யு.மு. 5400-ல் சுமேரியர்கள், எரிது (Eridu)என்ற நகரை உருவாக்கி அதனைச் சுற்றி சுற்றுச் சுவரையும் கட்டினர். சிகுராத்  (Ziggurat)  என்ற கூம்பு வடிவடு கோவில்-களையும் கட்டினர். அவற்றை இன்றும் காணலாம். பொ.யு.மு. 2000-ல் எகிப்தியர்கள் பிரமிடுகளைக் கட்டினார்கள். தென் அமெரிக்காவில் இன்கா (Inca) பழங்குடி மக்கள் பொ.யு.மு. 1500-ல் பிரமிடுகளைக் கட்டினார்கள். பொ.யு.மு. 2500-ல் சிந்து சமவெளி மக்கள் கட்டடக் கலையில் மிகச் சிறந்து விளங்கினர். சீனர்கள் பொ.யு.மு. 1000-ல் சீனப் பெருஞ்சுவரைக் கட்டினார்கள். குறைந்தபட்சம் பொ.யு.மு. 500-ல் கட்டப்பட்டது என்றுகூட தமிழகத்தில்  ஒன்றும் இல்லை.
படிப்படியாக வளர்ச்சி அடையும் ஒரு சமுதாயம், ஒவ்வொரு காலகட்டத்துக்கும் உரிய வரலாற்றுச் சின்னங்களை விட்டுச் சென்றிருக்கவேண்டாமா? கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் தமிழன் மாபெரும் கட்டடங்களைக் கட்டத் தவறிவிட்டானா? அல்லது கட்டியவற்றை விட்டுவிட்டு எங்கிருந்தோ கிளம்பி இங்கே வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதா?

Wednesday, July 17, 2013

மோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி

மோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
சரவணன் தங்கதுரை
பக் : 152
விலை : 100



இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க


குடி தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா?
எல்லோருக்கும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா?
விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா?
நதிகளை இணைக்க முடியுமா?
ஐ.ஏ.ஏஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், குக்கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதைப் பார்க்க முடியுமா?
ஏழைப்பாழைகளின் தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க முதலமைச்சர் வருவாரா?
கூவத்தின் நாற்றத்தைப் போக்க முடியுமா?
தொழில் முதலீடுகளைக் கவர முடியுமா?
திட்டங்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே முடிக்க முடியுமா?
உலகம் வெப்பமயமாதலைத் தடுக்க முடியுமா?
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியுமா?
அரசு அதிகாரிகளிடமிருந்து நமது மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்குமா? அதுவும் ஒரே நாளில் கிடைக்குமா?

மேற்குறிப்பிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாதகமான விடையை நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இந்தியர் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தை, இந்தியாவின் மாதிரி மாநிலமாக உலகத் தளத்தில் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும் 10 ஆண்டுகால ஆட்சியில்.

நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர்.

இந்த சாதனைகளை அவர் எப்படிச் செய்தார் என்பதை இந்தப் புத்தகம் விரிவான ஆதாரங்களுடன் அழுத்தமாக விவரிக்கிறது. 
நூலாசிரியர் இந்தப் புத்தகம் உருவான விதம் பற்றி கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்:

இந்தப் புத்தகம் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு அல்ல. அவருடைய கட்சியின் தேர்தல் அறிக்கையும் அல்ல. என் தேடலுக்குக் கிடைத்த பதில்.
இந்தியாவால் வளர்ச்சி அடைந்த நாடாக முடியுமா, ஏன் இத்தனை வளங்கள் இருந்தும் நாம் தேங்கிக் கிடக்கிறோம், ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறோம், ஏன் நம் மக்கள் ஏழைமையில் உழன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற வருத்தத்தில் நான் இருந்தபோது குஜராத் பற்றிக் கேள்விப்பட்டேன். சில விஷயங்களை நம்ப முடியவில்லை. எனவே நானே சென்று பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
சில முறை பயணம் செய்தேன். பலரிடம் பேசினேன். தகவல்களைத் திரட்டினேன். நான் கண்டது முதலில் எனக்கு நம்பிக்கை தந்தது. அந்த நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். நம்மாலும் நம் மாநிலத்தை மிகச் சிறந்த மாநிலமாக, வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இப்போது வந்துள்ளது. சரியான தலைவர், தொலைநோக்குள்ள திட்டங்கள், செயல்படுத்தியே தீரவேண்டும் என்கிற வெறி, இவை போதும். ஏனெனில் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டுதான் நரேந்திர மோடி என்ற சரியான தலைவர், குஜராத்தில் இவற்றைச் செய்துகாட்டியுள்ளார்.

Tuesday, July 16, 2013

பன்முக அறிவு : உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்

பன்முக அறிவு : உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்
ஜி.இராஜேந்திரன்
பக் : 96
விலை: 65 





ஒவ்வொரு மனிதனுக்கும் எட்டுவிதமான அறிவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன? ஒவ்வொரு குழந்தையிடமும் என்னவிதமான அறிவு அதிகமாக இருக்கிறது, அதை எப்படி வளர்த்தெடுக்கலாம் என்பதை ஆசிரியர் இந்த நூலில் நுட்பமாக விவரித்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையை சூப்பர்ஸ்டார் ஆக்குங்கள்.


புத்தகத்திலிருந்து

ஹோவார்டு கார்டனர் என்ற கல்வியியல் பேராசிரியர் ஏழு வகையான அறிவுகள் உண்டென்று குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் இந்தத் துறையில் ஆய்வு செய்த இவருடைய சீடர்கள் மேலும் சில அறிவுகளும் இருப்பதாக வரையறை செய்துள்ளனர். அவை:
மொழியறிவு (Linguistic)
கணித அறிவு (Logical-mathematical)
இடம் மற்றும் காட்சியறிவு (Spatial)
இசையறிவு (Musical)
உடலறிவு (Bodily-kinesthetic)
குழு அறிவு (Intrapersonal)
சுய அறிவு (Interpersonal)
இயற்கையறிவு (Naturalistic)
ஆன்மிக அறிவு (Spiritual)
இந்த அறிவுகள் தனிப்பட்ட தீவுகள் போலன்றி ஒன்றுடன் ஒன்று கலந்தே காணப்படுகின்றன. குழு அறிவுள்ள ஒருவருக்கு மொழியறிவு இயல்பாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். பிறருடன் அதிகம் கலக்க விரும்பாமல் தனிமையில் இனிமை காணும் சுய அறிவு பெற்ற பெரும்பான்மையோருக்கு ஆன்மிக அறிவு இருப்பதற்கு வாய்ப்புண்டு.
*********
என் நண்பன் இந்தியப் பாதுகாப்புப் படையில் வேலை செய்கிறான். பஞ்சாபில் இருக்கிறான். மனைவி ஆசிரியை. பையன் ஷியாம் இரண்டாம் வகுப்பில் படிக்கிறான். கோடை விடுமுறையில் குடும்பத்தை பஞ்சாபுக்கு அழைத்துச் சென்றான். இரண்டு மாதம் தங்கிவிட்டு வரும்போது குழந்தை அழகாக ஹிந்தி பேசக் கற்றுக்கொண்டிருந்தான்.
நண்பனிடம் பேசியதிலிருந்து புரிந்துகொண்டவை:
நண்பன் வேலைக்குச் செல்லும்போது மனைவியும் குழந்தையும் வீட்டுக்குள் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பார்கள். அதுவும் தமிழ்ச் சானல்களைத்தான் பார்ப்பார்கள். சனி ஞாயிறு அவர்களுடைய நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். பெரும்பான்மையானோர் தமிழர்கள். அவர்களுடன் தமிழில்தான் பேசுவார்கள்.
அப்படியானால் அந்தக் குழந்தை எப்படி ஹிந்தி பேசக் கற்றுக்கொண்டது? பூங்காவில் பிற குழந்தைகளுடன் விளையாடச் செல்லும்போது. அங்கும் விளையாடும் நேரம்தான் அதிகமாக இருக்கும். பேசும் நேரம் மிகவும் குறைவாகவே இருக்கும். அப்படியிருந்தும் ஒரு புதுமொழியைக் குழந்தை  விரைந்து கற்கிறது. ஒருபோதும் கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பச் சொல்லி மொழியைக் கற்றுக்கொள்ளவில்லை. பஞ்சாபிலுள்ள குழந்தை பேசும்போது அதைக் கேட்கும்  தமிழ்நாட்டுக் குழந்தையின் சிந்தனை அந்தப் பேச்சுக்குப் பொருத்தமாக இருப்பதால் உடனே புரிந்துகொள்ள முடிகிறது.
*********
பெரும்பான்மையான வீடுகளில் மாலை நேரத்தில் இந்தக் காட்சியைக் காணலாம்.
பெரியவர்கள்    தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகளோ ஓடியாடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். தொடரின் நடுவே விளம்பர இடைவேளை வந்துவிட்டால் இந்தக் காட்சி மாறும்.
பெரியவர்கள் சிறு சிறு வேலைகளைக் கவனிக்க எழுந்து செல்வார்கள். குழந்தைகள் விளையாட்டை நிறுத்திவிட்டு விளம்பரத்தைக் கவனிக்க வருவார்கள்.
விளம்பரங்களைக் குழந்தைகள் பெரிதும் விரும்புவது ஏன்?
சட்டென மாறும் காட்சிகள், துள்ளல் இசை, குறுகிய நேரத்துக்குள் சொல்லப்படும் புதுமையான கருத்து, அழகான காட்சியமைப்பு... இவை குழந்தைகளைக் கவருகின்றன. 
ஒரு காட்சி நீண்ட நேரம் ஓடினால் குழந்தைகளுக்குச் சலிப்பு வந்துவிடுகிறது. அப்படியானால் பாடம் என்பது எப்படி இருக்கவேண்டும்... எப்படிச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்பது புரிகிறதா?
*********
ஒரு சிறு குழந்தை முதன் முறையாக நாய் குரைப்பதைக் கவனிக்கிறது. அதற்கு ஒரே ஆச்சரியம். நேராக அம்மாவிடம் செல்கிறது.
அம்மா, பௌ பௌஎன்று தெருவை நோக்கிக் கையை நீட்டியபடி, அகல விரிந்த கண்களோடு சொல்கிறது. அதைக் கேட்ட அம்மாவோ ஆமாம், அந்த நாய் எப்போதுமே அப்படித்தான். யாரைப் பார்த்தாலும் குரைக்கும்என்றபடித் தன் வேலையில் மூழ்கிவிடுவார்.
குழந்தைக்குச் சற்று குழப்பம். நான் பௌ பௌஎன்று சொல்கிறேன். அம்மா ஏன் நாய் என்றொரு புது வார்த்தையைச் சொல்கிறாள்? என்று யோசித்தபடி அண்ணனிடம் சென்று அண்ணா, பௌ பௌஎன்று சொல்கிறது. அண்ணனும் நான் நேற்று வரும்போது அந்த நாய் என்னைப் பார்த்தும் பௌ பௌஎன்று குரைத்ததுஎன்கிறான்.
பௌ பௌஎன்பது அதன் பெயர் அல்ல. நாய் என்பதுதான் அதன் உண்மையான பெயர் என்று இப்போது குழந்தை உறுதிப்படுத்துகிறது. குழந்தையின் சொல்வளத்தில் ஒரு புதிய சொல் சேருகிறது.
இவ்விரு செயல்பாடுகளையும் நுணுக்கமாக அலசினால் கீழ்வரும் படிநிலைகள் மறைந்திருப்பதைக் காணலாம்.
ஃ    அனுபவம் ஏற்படுகிறது; ஆர்வம் பிறக்கிறது.
ஃ    புதிய சூழலில் பயன்படுத்திப் பார்க்க முயற்சிக்கிறது.
ஃ    சிக்கல்கள், சிரமங்கள் ஏற்படுகின்றன.
ஃ    பல்வேறு வழிகளை/தீர்வுகளை யோசித்து பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கிறது.
ஃ    அதை நடைமுறைப்படுத்திப் பார்க்கிறது.
ஃ    வெற்றி பெற்றால் மீண்டும் ஓரிரு புதிய சூழலில் நடைமுறைப்படுத்தி உறுதிப்படுத்துகிறது.
ஃ    தோற்றுப்போனால் வேறு வழியை/ தீர்வைத் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்திப் பார்க்கிறது.
ஃ    அது குழந்தையின் அறிவாக மாறுகிறது.

இந்தப் படிநிலைகள் வெளிப்படையாகத் தெரியாது. இருப்பினும் மனத்தளவில் ஏறக்குறைய இவை அனைத்தும் நடந்திருக்கும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களாகிய நாமும் இந்த முறையில்தான் அறிவு பெறுகிறோம்.

Thursday, July 11, 2013

அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அம்பேத்கர் நூலிலிருந்து ஒரு பகுதி. புத்தகத்தை எழுதியிருப்பவர் ஆர். முத்துக்குமார்.

0

அக்டோபர் 14, 1956. பௌத்த மதத்தில் சேர்வதற்காக அம்பேத்கர் குறித்து வைத்திருந்த தேதி. பௌத்த மதத் துறவிகளான நாகர்கள் வசித்த பகுதி நாகபுரி. ஆகவே, மதமாற்ற விழாவை அங்கே வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் அம்பேத்கர்.

அப்போது  அருகில் இருந்தவர்களிடம் பேசிய அவர், ‘மதமாற்றத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பல்வேறு கோணங்களில் சிந்தித்து வந்துள்ளேன். அதனால்தான் மதமாற்றத்தைத் தொடர்ந்து ஒத்திவைத்தேன். ஆனால் இனியும் தள்ளிப்போட விரும்பவில்லை. என்னுடைய உடல் மிகவும் பலவீனமடைந்துவிட்டது. ஆகவே, பௌத்தத்தைத் தழுவப் போகிறேன். என்னுடன் இணைந்து பௌத்தத்துக்கு வருபவர்கள் வரலாம். வராதவர்கள் இந்து மதத்திலேயே நீடிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது’ என்றார்.

அம்பேத்கரின் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதிலும் இருந்து தீண்டப்படாத சாதியினர் நாகபுரியை நோக்கி திரளத் தொடங்கினர். ரயில் மார்க்கமாக வர முடிந்தவர்கள் அதைப் பயன்படுத்தினர். பேருந்துகள் மக்களைத் திணித்துக்கொண்டு நாகபுரியை அடைந்தன. வசதி இல்லாதவர்கள் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி  என்ற கோஷத்தை உச்சரித்துக்கொண்டே நாகபுரியை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

பதினான்கு ஏக்கர் கொண்ட நிலப்பரப்பு மதமாற்ற விழாவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. வெள்ளை நிற மேடை உருவாக்கப்பட்டது. அதில் சாஞ்சி
ஸ்தூபியைப் போன்ற கம்பம் ஒன்று நடப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்கள்
தனித்தனியே கலந்துகொள்ள தனித்தனி பந்தல்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
மூவண்ணக் கொடிகள் அந்தப் பகுதிகளில் பறந்துகொண்டிருந்தன. நீலம்,
சிவப்பு, பச்சை என்ற மூன்று வண்ணங்களைக் கொண்ட பௌத்தக் கொடிகள்.

அப்போது செய்தியாளர் ஒருவர் அம்பேத்கரிடம் கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தார். வழக்கமான கேள்விதான். நீங்கள் ஏன் பௌத்தத்தைத் தழுவுகிறீர்கள்? அவ்வளவுதான். முகத்தில் கோபம் கொப்பளிக்கப் பதிலளிக்கத் தொடங்கினார்.

‘நான் இந்து மதத்தை விட்டுவிட்டு பௌத்தத்தை ஏன் தழுவுகிறேன் என்று நீங்களே உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். உங்களுடைய மூதாதையர்களிடம் இதைக் கேளுங்கள். என்னுடைய வகுப்பு மக்கள் தீண்டப்படாத சாதியினராக இருந்துகொண்டு இடஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெறுவதோடு நின்றுவிட வேண்டும் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அப்படியானால் இடஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டு தீண்டப்படாதவர்களாக இருப்பதற்கு பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா? நாங்கள் முழுமையான மனிதர்களாக ஆவதற்கு முயற்சி செய்கிறோம். இப்போது நான் பௌத்த மதத்தைத் தழுவுவதன்மூலம் இந்த நாட்டுக்கு பெரும் நன்மையை நல்குவதாகவே நினைக்கிறேன். ஏனெனில் பௌத்தம் பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருக்கிறது. என்னுடைய மதமாற்றத்தால் இந்த நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்பட நான் அனுமதிக்க மாட்டேன். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்’ என்று பதிலளித்தார்.

அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பௌத்த மதத்தைத் தழுவுவார்கள். இந்தியா ஒரு பௌத்த நாடாக மாறிவிடும்.
இறுதியாக பார்ப்பனர்கள் பௌத்தத்தில் இணைவார்கள். என்னைப் பின்பற்றுபவர்கள் அறியாமையில் உள்ளவர்கள் என்பது உண்மை. எனது  நூல்கள், மத போதனைகள் மூலம் பௌத்தக் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுப்பேன். எங்களுக்கு உணவைவிட மானமே முக்கியம். இருப்பினும் எங்கள் பொருளாதார நிலையை உயர்த்த தீவிரமாக முயற்சி செய்வோம் என்றார் அம்பேத்கர்.

==

அம்பேத்கர்
ஆர். முத்துக்குமார்
200 பக்கம், விலை ரூ.145

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க

போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

Wednesday, July 10, 2013

பிரபாகரன் - ஒரு வாழ்க்கை

பிரபாகரனின் வாழ்வின் ஊடாக இலங்கையின் சரித்திரத்தையும் இலங்கைத் தமிழர்களின் சரித்திரத்தையும் ஒருங்கே முன்வைக்கிறது இந்நூல்.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

‘அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?’ இதுதான் பிரபாகரன் கேட்ட கேள்வி. மிகவும் சாதாரணமான கேள்வி. மிருகத்தனமாகத் தாக்கி உயிரோடு கொளுத்தியிருக்கிறார்கள். குறைந்த பட்சம் தற்காப்புக்காவது திருப்பி அடிக்கத்தானே வேண்டும்? அதுதானே மனித இயல்பு.

பிரபாகரனின் தந்தைக்கு இந்தக் கேள்வி அதிர்ச்சியைத் தந்தது.
தந்தை செல்வநாயகம் மகாத்மா காந்தியின் வழி வந்தவர். தந்தை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் வழியைப் பின்பற்றுபவர். தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர். ஈழத் தமிழ் மக்களை வாழ உய்விக்கப் பிறந்த செல்வநாயகம் போதிக்கும் அகிம்சைப் போராட்டம் மட்டுமே தமிழர்களுக்கு கண்ணியமான உரிமையைப் பெற்றுத் தரும் என்று அவர் நம்பினார். உயிரே போனாலும் திருப்பி அடிக்காதே. அமைதியாக ஏற்றுக்கொள். இதுதான் அவர் தத்துவம்.

பனதூரா என்னும் பகுதியைச் சேர்ந்த அந்த இந்து அர்ச்சகரும் அதைத்தான் செய்திருந்தார். திருப்பித் தாக்குவதற்குத் தெம்பில்லை. வேலை சுலபமாக முடிந்துவிட்டது. கெரஸின் ஊற்றி தீக்குச்சியைப் பற்றவைத்துக் கொளுத்திவிட்டார்கள். இதில் அர்ச்சகரின் தவறு எதுவும் இல்லையே? பலியானது இவர் மட்டுமா? 1958ல் நடந்த இனக்கலவரத்தில் பலியான எண்ணிக்கையற்ற தமிழர்களில் அவரும் ஒருவர். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக சிங்களர்கள் ஓடிவரும்போது என்னதான் செய்யமுடியும் தமிழர்களால்?

0

வல்வெட்டித் துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதியினருக்கு யாழ்ப்பாண மருத்துவமனையில் 1954 நவம்பர் 26ஆம் தேதி நான்காவதாக பிறந்த குழந்தை பிரபாகரன். பிரபாகரனுக்கு மனோகரன் என்ற அண்ணனும், ஜெகதீஸ்வரி - வினோதினி என்னும் இரு மூத்த சகோதரிகளும் இருந்தனர். கடைக்குட்டி என்பதால் வீட்டில் எல்லோருக்கும் பிரபாகரன் செல்லம்.

துரை என்று ஆசையாகக் கூப்பிடுவார்கள். அப்பாவின் மடியில் துரைக்கு எப்போதுமே ஓர் இடம் உண்டு. உள்ளத்திலும். வேலுப்பிள்ளையும் அவரது நண்பர்களும் சிங்கள அரசியல்வாதிகளின் அடாவடித் தனத்தைப் பற்றியும், தமிழர்களுக்கு எதிராக நடந்தேறும் வெறித் தாக்குதல் பற்றியும் மாலை நேரங்களில் பேசுவதை பிரபாகரன் ஆவலுடன் கேட்பது வழக்கம்.

0

தந்தை செல்வாவும், டட்லியும் 1965 மார்ச் 25ஆம் தேதி உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தில் இரு முக்கியமான விஷயங்களை தந்தை செல்வா அடிக்கோடிட்டார்.

1. வடகிழக்குப் பிராந்தியங்களில் அரசு நிர்வாகம் தமிழ் மொழியிலே நடக்கும். அந்தப் பகுதிகளில் நீதி விசாரணைகளும் தமிழிலேயே நடைபெறும்.

2. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடக்கும் அரசின் குடியமர்வுத் திட்டங்களில் நிலங்களை விநியோகிக்கும் போது முதலில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த நிலமில்லாத நபர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். இரண்டாவதாக மற்ற மாவட்டங்களில் உள்ள தமிழர்களுக்குத் தர வேண்டும். அதற்குப் பிறகுதான் சிலோனின் பிற பகுதி மக்களுக்கு நிலம் கொடுத்துக் குடியமர்த்த வேண்டும்.

டட்லி-செல்வா உடன்பாட்டை நடைமுறைப்படுத்துதற்காக அது நாடாளுமன்றத்தின் முன் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. அரசியல் நாடகத்தில் காட்சிகள் மாறுவதும் நடிகர்கள் மாறுவதும் இயல்புதானே? 1956 பண்டாரநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்து ஜெயவர்த்தனாவும், டட்லி சேனநாயகாவும் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றனர். ஆனால் இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்ட காரணத்தினால், இப்போது அந்தப் பாத்திரத்தில் நடிக்க வேண்டியது சிறீலங்கா சுதந்தரக் கட்சியின் முறை.

0

புலிகளால் தமிழீழக் கனவை நனவாக்க முடியுமா? அல்லது பரவலான அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை அரசு இறங்கி வருமா? அல்லது இலங்கைத் தீவில் உள்ள ஒட்டு மொத்தத் தமிழர்களின் அழிவில்தான் எல்லாமே ஓயுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

==

பிரபாகரன் : ஒரு வாழ்க்கை
செல்லமுத்து குப்புசாமி
264 பக்கம், விலை ரூ. 190

Tuesday, July 9, 2013

1857 சிப்பாய் புரட்சி

1857ம் வருடம் மே மாதம் 5ம் தேதி. அம்பாலா பிரதேசத்தின் லெஃப்டினெண்ட் கர்னலான மார்ட்டினோ  ஹிந்துஸ்தானத்தின் அப்போதைய நிலையை அப்படியே விவரித்து தன் உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதினான். ஆங்கிலேயர்கள் யாருமே உணராத ஒரு நிழல் அபாயத்தை முன்கூட்டியே யூகித்தவன் அவன் மட்டும்தான்.

இதற்கு அஸ்திவாரமிட்ட சில சம்பவங்கள் 1857 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பாகவே நடந்திருந்தபோதும் ஒரு பெரும் புரட்சிக்கான அடிநாதம் அதிலிருப்பதை பிரிட்டிஷார் உணரத் தவறிவிட்டார்கள். எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தினார்கள். எதிர்பட்டபோது மிரண்டு போனார்கள்!
பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்தது அந்தப் புரட்சி!

0

வியாபாரத்துக்காக ஹிந்துஸ்தானில் காலடி எடுத்த வைத்த கிழக்கிந்தியக் கம்பெனி, 1757 - ல் நடந்த பிளாசிப் போரின் மூலம்தான் இந்தியாவில் திடமாகக் காலூன்றியது.  அதை சாதித்தவன் ராபர்ட் கிளைவ். இதோ இப்போது 1857 ம் வருடம் பிறந்துவிட்டது. எனவே வெள்ளைக்காரர்கள் இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கப்படுவது நிச்சயம்!

எங்கிருந்து புறப்பட்டது? யார் கிளப்பிவிட்டது? எதுவும் தெரியாது! காட்டுத் தீயை விட வேகமாகப் பரவியது இந்த வதந்தி. யாரோ ஒரு தெய்வீக முனிவர் சொன்ன தீர்க்க தரிசனம் என்றார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஓலைச் சுவடியில் எழுதப்பட்டுள்ளது என்றார்கள். இது, அடிமைப்பட்டு நசுங்கிக் கிடக்கும் மக்களின் மனத்தில் நம்பிக்கையை விதைப்பதற்காகத் திட்டமிட்டு மூட்டப்பட்டதா இல்லை ஏதாவது ஒரு கிளி ஜோசியக்காரனின் நெல்மணி வார்த்தைகளா என்று யாருக்கும் விளங்கவில்லை.

ஒன்றுமட்டும் நிஜம். இந்த வதந்தி உண்மையாகி விடவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தார்கள். ‘இது மட்டும் நடந்துவிட்டால்’ என்கிற நினைப்பே சுகமாக இருந்தது! சந்தோஷம் ததும்பியது! கூடவே, ‘இப்படி நடப்பது சாத்தியமா என்ன?’ என்கிற அவ நம்பிக்கையும் அவர்களுக்குள் ஊசலாடியது.

ஆனாலும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஏதோ சில மர்ம நடவடிக்கைகள் அங்கும் இங்குமாக நடைபெறுவது மட்டும் ஒரு சிலருக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியது.

0

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தேசமும் ஒரே சமயத்தில் ஒன்று திரண்டு எழவேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள்.

அதுவரை இந்தியா ஒன்றுபட்டு ஆங்கிலேயர்களை எதிர்த்ததேயில்லை. தனித் தனி சமஸ்தானங்கள், தனித்தனி பாளையங்கள், தனித் தனி ஆட்சியாளர்கள்தான் ஆங்காங்கே பொங்கியெழுந்து போரிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவோ, உதவிகளோ கிடைக்காத காரணத்தாலேயே வெகு சுலபமாக அடக்கப்பட்டிருந்தார்கள். இப்போது அப்படியில்லை! குறித்தபடி எல்லாம் நடந்தால் குமுறி வெடிக்கப்போகும் தீப்பிழம்பில் ஆங்கிலேய ஆட்சி பொசுங்கிப் போய்விடுவது நிச்சயம் என்றே புரட்சியாளர்கள் கருதினார்கள்.

ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே வங்காளத்தில் தன்னிச்சையாகப் புரட்சியைத் தொடங்கிவிட்டான் ஒரு சுதேசி வீரன். அவன், மங்கள் பாண்டே!

==

1857 : சிப்பாய் புரட்சி
உமா சம்பத்
240 பக்கம், விலை ரூ.125

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234