Search This Blog

Friday, July 19, 2013

பாகிஸ்தான் போகும் ரயில்

பாகிஸ்தான் போகும் ரயில்
குஷ்வந்த் சிங்
தமிழில் : ராமன் ராஜா
விலை : 220 /-
பக் : 272

இந்திய பிரிவினை பற்றி எழுதப்பட்ட படைப்புகளில் குறிப்பிடத் தகுந்த படைப்பு இது. 
பிரிவினை வன்முறை வெறியாட்டங்கள் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தலைவிரித்தாடத் தொடங்கிய காலம். பஞ்சாபில் ஒரு கிராமம் மட்டும் அமைதியாக இருக்கிறது. அப்படி அந்த கிராமத்து முஸ்லிம்களும் சீக்கியர்களும் மட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? அந்த அமைதியைக் குலைக்கிறது பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரயில். அதில் எண்ணற்ற இந்து, சீக்கியப் பிணங்கள். பழிக்குப் பழியா? பாகிஸ்தானுக்குப் புலம் பெயரும் முஸ்லிம்கள் அடங்கிய ரயிலுக்கு என்ன ஆகப் போகிறது? அதுதான் கதை.



புத்தகத்திலிருந்து...

மானோ மாஜரா கிராமத்தின் ரெகுலரான வாடிக்கையாளர்கள் என்றால் அது கூட்ஸ் வண்டிகள்தான். இந்த நிலையத்தில் யாரும் சரக்குகள் ஏற்றப்போவதோ, இறக்கப்போவதோ இல்லை. இருந்தாலும் அதன் உபரியான தண்டவாளங்களில் எப்போதும் வரிசை வரிசையாக சரக்கு ரயில் பெட்டிகள் நின்றுகொண்டு இருக்கும். இந்தப் பக்கம் கடந்து செல்லும் ஒவ்வொரு கூட்ஸ் வண்டியும் மணிக்கணக்காகப் பெட்டிகளை உதிர்த்துக்-கொண்டும் இணைத்துக்கொண்டும் இருக்கும். இருட்டியதும் கிராமமே ஆழ்ந்த நிசப்தத்தில் உறங்கும்போது, நிலையத்தில் மட்டும் எஞ்சின்களின் நீராவிப் பெருமூச்சுகளும் விசில் ஒலியும், தடார் தடார் என்று பெட்டிகள் மோதும் சத்தமும், இரும்பு கப்ளிங்குகளின் க்ளிங் க்ளாங் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும்.
ரயில் என்பது மானோ மாஜராவின் வாழ்க்கையில் ஒரு பகுதி. பொழுது விடிவதற்கு முன்பு லாகூர் மெயில் பதறிக்கொண்டு வரும். பாலத்தை நெருங்கும்போது எப்போதுமே டிரைவர் இரண்டு முறை நீளமாக விசில் ஊதுவார். அவ்வளவுதான்; அந்த ஒரே கணத்தில் மானோ மாஜராவே விழித்துக்கொண்டுவிடும்! கருவேல மரத்துக் காக்கைகள் கத்த ஆரம்பிக்கும். வௌவால்கள் வரிசையாகச் சத்தமில்லாமல் சுற்றிச் சுற்றிப் பறந்து, அரச மரத்தில் யார் எங்கே தொங்குவது என்று போட்டியிட ஆரம்பிக்கும்.
மசூதியின் முல்லாவுக்கு அதுதான் காலைப் பிரார்த்தனை ஆரம்பிக்கும் நேரம். சீக்கிரம் கைகால் கழுவிக்கொண்டு மேற்கு நோக்கி நின்று காதில் கை வைத்துக்கொண்டு அல்லாஹ்-ஓ-அக்பர்என்று நீளமாக, இனிமையாக இழுப்பார்.
முல்லா அல்லாவைக் கூப்பிட்டு முடிக்கட்டும் என்று சீக்கியக் கோவிலின் குரு, படுக்கையிலேயே படுத்துக் காத்திருப்பார். பிறகு அவரும் எழுந்து கோவில் முற்றத்தில் உள்ள கிணற்றி-லிருந்து ஒரு வாளி தண்ணீர் இறைத்துத் தலையில் கொட்டிக்-கொள்வார். தண்ணீர் அலப்பும் சத்தத்துடன் அவருடைய பிரார்த்தனையும் சன்னமாக ஒலிக்கத் தொடங்கும்.

***

விரலால் கண்களை அழுத்தி அந்தக் காட்சிகளை அப்படியே நசுக்கி எறிய முயன்றார் ஹுகம் சந்த். காட்சிகள் இருண்டு கறுத்தன, சிவந்தன; ஆனால் மறுபடி வந்து நின்றன.
ஒரு ஆள் தன் உருவின குடலைக் கையில் பிடித்துக்கொண்டு என்ன வெச்சிருக்கேன் பாரு!என்று கண்ணாலேயே சொன்னான். பெண்களும் குழந்தைகளும் ஒரு மூலையில் ஒடுங்கி நடுங்கிக்-கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்கள் பயத்தில் அகன்றிருந்தன. திறந்த வாய்களில் ஒலியற்றுப்போன கூக்குரல்கள் உறைந்-திருந்தன. சிலருடைய உடம்பில் ஒரு சிறு கீறல்கூட இல்லை.
கம்பார்ட்மெண்ட்டின் கடைசிக் கோடியில் நெருக்கித் திணிந்து-கொண்டு பல சடலங்கள். அவை காலியான ஜன்னல்களை நோக்கித் திகிலில் வெறித்த பார்வையுடன் கிடந்தன. அந்த ஜன்னல்கள் வழியாகத் தோட்டாக்களும் ஈட்டிகளும் வேல் கம்புகளும் சீறி வந்திருக்கவேண்டும். கழிவறைகளில் பல இளைஞர்களின் பிணங்கள் அடைத்துத் திணிந்துகொண்டு இருந்தன. அங்கே கொஞ்சம் பத்திரமாக இருக்கும் என்று நினைத்து முண்டி மோதிக்கொண்டு போயிருக்கிறார்கள்.
அழுகிக் கொண்டிருக்கும் சதை, மலம், மூத்திரம் எல்லாவற்றின் வாடையும் சேர்ந்து வயிற்றைப் புரட்டியது. அதை நினைத்துக்-கொண்டபோதே ஹுகம் சந்த்தின் வாய்வரை வாந்தி வந்து-விட்டது.
அன்றைக்கு அவர் பார்த்த காட்சிகளிலேயே மறக்க முடியாதது, வயதான விவசாயி ஒருவரின் முகம்தான். அவர் நீளமான வெள்ளைத் தாடி வைத்திருந்தார். பார்த்தால் இறந்துபோன மாதிரியே தெரியவில்லை. மேலே சாமான்கள் வைக்கும் பலகையில் இரண்டு பக்கமும் படுக்கைச் சுருள்கள் நெருக்கிக்-கொண்டிருக்க, நடுவே உட்கார்ந்திருந்தார். ஏதோ சிந்தனை வயப்பட்டவராகக் கீழே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்-கொண்டிருப்பவர்போலத்தான் காணப்பட்டார். அவருடைய காதிலிருந்து ஒரு மெல்லிய சிவப்புக் கோடு போல் ரத்தம் வழிந்து தாடிவரை வந்து உறைந்து போயிருந்தது...

 ***

இந்த ஏரியாவுலேருந்து எல்லா முஸ்லிம்களையும் வெளியே அனுப்பியே ஆகணும். அவங்களுக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ, சீக்கிரமாவே அனுப்பிட்டோம்னா அவங்களுக்கு நல்லது.
உரையாடலில் இப்போது ஒரு நீண்ட மௌனம். அதிகாரிகள் இருவரும் மழையை வெறித்துக்கொண்டு நின்றார்கள். பிறகு ஹுகம் சந்த் மறுபடி பேச்சைத் தொடர்ந்தார். புயல் அடிக்கும்போது நாம தலையைக் குனியத்தான் வேணும். பிரம்பைப் பாருங்க. காத்து வீசும்போது இலையெல்லாம் வளைஞ்சு நின்னுக்குது. தண்டு மட்டும், தனக்குத்தான் கொண்டை இருக்குதுன்னு விறைப்பா நிக்குது. புயல் கடக்கும்போது முறிச்சுப் போட்டு அதோட வெள்ளைக் கொண்டை எல்லாம் எருக்கம் பூ மாதிரி நாலா பக்கமும் சிதறிப் போகுதுஎன்றவர் கொஞ்சம் இடைவெளி விட்டு, ‘புத்தி உள்ளவனா இருந்தா ஆத்து ஓட்டத்தோடவே நீஞ்சி அக்கரை போய்ச் சேர்ந்துடுவான்என்றார்.


No comments:

Post a Comment