Search This Blog

Wednesday, July 10, 2013

பிரபாகரன் - ஒரு வாழ்க்கை

பிரபாகரனின் வாழ்வின் ஊடாக இலங்கையின் சரித்திரத்தையும் இலங்கைத் தமிழர்களின் சரித்திரத்தையும் ஒருங்கே முன்வைக்கிறது இந்நூல்.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

‘அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?’ இதுதான் பிரபாகரன் கேட்ட கேள்வி. மிகவும் சாதாரணமான கேள்வி. மிருகத்தனமாகத் தாக்கி உயிரோடு கொளுத்தியிருக்கிறார்கள். குறைந்த பட்சம் தற்காப்புக்காவது திருப்பி அடிக்கத்தானே வேண்டும்? அதுதானே மனித இயல்பு.

பிரபாகரனின் தந்தைக்கு இந்தக் கேள்வி அதிர்ச்சியைத் தந்தது.
தந்தை செல்வநாயகம் மகாத்மா காந்தியின் வழி வந்தவர். தந்தை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் வழியைப் பின்பற்றுபவர். தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர். ஈழத் தமிழ் மக்களை வாழ உய்விக்கப் பிறந்த செல்வநாயகம் போதிக்கும் அகிம்சைப் போராட்டம் மட்டுமே தமிழர்களுக்கு கண்ணியமான உரிமையைப் பெற்றுத் தரும் என்று அவர் நம்பினார். உயிரே போனாலும் திருப்பி அடிக்காதே. அமைதியாக ஏற்றுக்கொள். இதுதான் அவர் தத்துவம்.

பனதூரா என்னும் பகுதியைச் சேர்ந்த அந்த இந்து அர்ச்சகரும் அதைத்தான் செய்திருந்தார். திருப்பித் தாக்குவதற்குத் தெம்பில்லை. வேலை சுலபமாக முடிந்துவிட்டது. கெரஸின் ஊற்றி தீக்குச்சியைப் பற்றவைத்துக் கொளுத்திவிட்டார்கள். இதில் அர்ச்சகரின் தவறு எதுவும் இல்லையே? பலியானது இவர் மட்டுமா? 1958ல் நடந்த இனக்கலவரத்தில் பலியான எண்ணிக்கையற்ற தமிழர்களில் அவரும் ஒருவர். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக சிங்களர்கள் ஓடிவரும்போது என்னதான் செய்யமுடியும் தமிழர்களால்?

0

வல்வெட்டித் துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதியினருக்கு யாழ்ப்பாண மருத்துவமனையில் 1954 நவம்பர் 26ஆம் தேதி நான்காவதாக பிறந்த குழந்தை பிரபாகரன். பிரபாகரனுக்கு மனோகரன் என்ற அண்ணனும், ஜெகதீஸ்வரி - வினோதினி என்னும் இரு மூத்த சகோதரிகளும் இருந்தனர். கடைக்குட்டி என்பதால் வீட்டில் எல்லோருக்கும் பிரபாகரன் செல்லம்.

துரை என்று ஆசையாகக் கூப்பிடுவார்கள். அப்பாவின் மடியில் துரைக்கு எப்போதுமே ஓர் இடம் உண்டு. உள்ளத்திலும். வேலுப்பிள்ளையும் அவரது நண்பர்களும் சிங்கள அரசியல்வாதிகளின் அடாவடித் தனத்தைப் பற்றியும், தமிழர்களுக்கு எதிராக நடந்தேறும் வெறித் தாக்குதல் பற்றியும் மாலை நேரங்களில் பேசுவதை பிரபாகரன் ஆவலுடன் கேட்பது வழக்கம்.

0

தந்தை செல்வாவும், டட்லியும் 1965 மார்ச் 25ஆம் தேதி உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தில் இரு முக்கியமான விஷயங்களை தந்தை செல்வா அடிக்கோடிட்டார்.

1. வடகிழக்குப் பிராந்தியங்களில் அரசு நிர்வாகம் தமிழ் மொழியிலே நடக்கும். அந்தப் பகுதிகளில் நீதி விசாரணைகளும் தமிழிலேயே நடைபெறும்.

2. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடக்கும் அரசின் குடியமர்வுத் திட்டங்களில் நிலங்களை விநியோகிக்கும் போது முதலில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த நிலமில்லாத நபர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். இரண்டாவதாக மற்ற மாவட்டங்களில் உள்ள தமிழர்களுக்குத் தர வேண்டும். அதற்குப் பிறகுதான் சிலோனின் பிற பகுதி மக்களுக்கு நிலம் கொடுத்துக் குடியமர்த்த வேண்டும்.

டட்லி-செல்வா உடன்பாட்டை நடைமுறைப்படுத்துதற்காக அது நாடாளுமன்றத்தின் முன் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. அரசியல் நாடகத்தில் காட்சிகள் மாறுவதும் நடிகர்கள் மாறுவதும் இயல்புதானே? 1956 பண்டாரநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்து ஜெயவர்த்தனாவும், டட்லி சேனநாயகாவும் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றனர். ஆனால் இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்ட காரணத்தினால், இப்போது அந்தப் பாத்திரத்தில் நடிக்க வேண்டியது சிறீலங்கா சுதந்தரக் கட்சியின் முறை.

0

புலிகளால் தமிழீழக் கனவை நனவாக்க முடியுமா? அல்லது பரவலான அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை அரசு இறங்கி வருமா? அல்லது இலங்கைத் தீவில் உள்ள ஒட்டு மொத்தத் தமிழர்களின் அழிவில்தான் எல்லாமே ஓயுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

==

பிரபாகரன் : ஒரு வாழ்க்கை
செல்லமுத்து குப்புசாமி
264 பக்கம், விலை ரூ. 190

No comments:

Post a Comment