Search This Blog

Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Thursday, July 25, 2013

ரஷ்யப் புரட்சி

ரஷ்யப் புரட்சி எப்படி, யாரால் நடத்தப்பட்டது? சித்தாந்தத்தில் இருந்த கம்யூனிசத் தத்துவத்துக்கு உயிர் கொடுத்தது யார்? எப்படி? உணர்ச்சிபூர்வமான இந்த வரலாற்று நூலில் என். ராமகிருஷ்ணன் ரஷ்யப் புரட்சிக்கு உயிரூட்டி நம் கண்முன் நிறுத்துகிறார்.

0

தொழிலாளர்கள் தினமும் 14 மணி முதல் 15 மணி நேரம் வரை உழைக்க வேண்டியிருந்தது. இந்த நிலை ஆண்கள், பெண்களுக்கு மட்டுமல்ல. சிறுவர்களுக்கும் கூடத்தான். உடல்நலம் சரியில்லை என்று சொல்லி வேலைக்கு போகாமல் இருந்துவிட முடியாது. சரியாக தூங்காமல் ராட்ச இயந்திரங்களில் அகப்பட்டுக்கொண்டு கையையும், காலையும் இழந்தவர்களின் எண்ணிக்கையை இது வரை யாரும் கணக்கிடவில்லை.

உதாரணத்துக்கு இயந்திர பல்சக்கரத்தில் மாட்டிக்கொண்டு ஒரு தொழிலாளி தனது கையை இழந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதிகாரிகளும் மேற்பார்வையாளர்கள் என்ன செய்வார்கள்? உடனடியாக ஒரு குழுவை அவசர அவசரமாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைப்பார்கள். எதற்கு? தொழிலாளிக்கு அவசர சிகிச்சை அளிக்கவா? அல்ல. இயந்திரம் கோளாறாகி நின்றுவிட்டால் வேலை கெட்டு விடும். எவ்வளவு வேலை கெடுகிறதோ அந்த அளவுக்கு லாபம் குறைந்துவிடும். எனவே, இயந்திரத்தை பழுது பார்க்க வேண்டியது அவசியம். அப்படியானால் அடிப்பட்ட தொழிலாளியின் கதி? அவனை அகற்றி விட்டு வேறொருவனை நியமித்துவிடுவார்கள். இயந்திரத்துக்குத் தான் பஞ்சம். தொழிலாளர்கள் வேண்டிய நேரத்தில் வேண்டிய அளவுக்கு கிடைப்பார்கள்.

பணியகத்தில் உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கும் உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எந்தவிர நிவாரண உதவியும் கிடையாது. மருத்துவ செலவுகளுக்கான பணம் கூட கொடுக்கப்படுவதில்லை. தொழிலாளளுக்கு பாதுகாப்புச் சட்டங்கள், நல்வாழ்வுச் சட்டங்கள் என்று எதுவும் கிடையாது. எத்தனை மணிநேரம் உழைத்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் கூலி மிகமிகக் குறைவு. மிஞ்சி மிஞ்சிப் போனால் மாதத்துக்கு 7 அல்லது 8 ரூபிள்கள் மட்டுமே கிடைக்கும். உலோக மற்றும் வார்ப்புத் தொழிற்சாலைகளில் மட்டும் 35 ரூபிள் வரை கொடுக்கப்பட்டது. வேலை உத்தரவாதம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் கழட்டிவிடப்படலாம் என்ற நிலை. அவர்களுக்கு
பசியெடுத்தால்கூட அருகிலுள்ள கடைக்குச் சென்று தேவையானதை வாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் வேலை பார்க்கும் ஆலைகளுக்குச் சொந்தமான கடைகளுக்குச் சென்றுதான் வாங்க வேண்டும். ஆனால் அங்கு பொருள்களின் விலை வெளியில் இருப்பதைவிட அதிகமாகவே இருக்கும்.

இது போக தொழிலாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைவான ஊதியமும் அவர்களுக்கு முழுதாகக் கிடைக்கவில்லை. நிர்வாகங்கள் எதற்கெடுத்தாலும் தொழிலாளிகள் மீது அபராதங்கள் விதித்தன. அந்த அபராதத் தொகை அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது. மொத்தத்தில், ஒரு மனிதனை எந்த அளவுக்கு சுரண்டலாமோ அந்த அளவுக்கும் மேலாகவே சுரண்டினார்கள்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாது எனும் கட்டத்தில் தொழிலாளர்கள் திமிறி எழுந்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் துணிந்தனர். எதிர்ப்பு வன்முறையாகவும் வெடித்தது.  இயந்திரங்களை உடைத்துத் தூள் தூளாக்கினர். ஆலை நிர்வாகத்தின் அலுவலகங்களையும், அது நடத்தி வந்த கடைகளையும் நாசம் செய்தனர்.

(புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி)

0


ரஷ்யப் புரட்சி
என். ராமகிருஷ்ணன்
136 பக்கம், ரூ.95

போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

Tuesday, July 23, 2013

இலங்கை இறுதி யுத்தம்

இலங்கை இறுதி யுத்தம் நூலின் முன்னுரை :

இந்தோரிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்துகொண்டிருக்கும்போதுதான் இந்தப் புத்தகத்தை எழுதும் எண்ணம் எனக்குத் தோன்றியதுஉத்தராஞ்சல் மாநிலத்தின் மோ நகரில் உள்ள புகழ்வாய்ந்த ராணுவப் படைக் கல்லூரியில் ராணுவத்துக்கும் ஊடகங்களுக்கும் இடையேயான உறவுஎன்ற தலைப்பில் பேசிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். அந்தப் பேச்சின்போது, சமீபத்தில் இலங்கையில் நடந்துமுடிந்த போரைப் பற்றி என்னிடம் இந்திய ராணுவத்தினர் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தனர். நான் இலங்கைக்குச் சென்று, அங்கு நடந்த போரை, என்.டி.டி.வி தொலைக்காட்சிக்காகப் பின்பற்றி, செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தேன். போர் முடிந்த காரணத்தால், அப்போதுதான் இந்தியா திரும்பி வந்திருந்தேன்.

என் அனுபவங்களை இந்திய ராணுவ வீரர்களிடம் பகிர்ந்துகொண்டபோதுதான், இந்தப் போரைப் பற்றிய பல விஷயங்கள் வெளி உலகுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். இலங்கை ராணுவத்தின் வெற்றிக்கான சூத்திரம்என்ன என்று பலரும் கேட்டனர். இன்னும் பலர், விடுதலைப் புலிகள் தவறு செய்த இடம் எது என்று தெரிந்துகொள்ள விரும்பினர்.

எனவே, உலகின் மிகக் கொடூரமான ஒரு தீவிரவாதக் குழுவை எப்படி இலங்கை ராணுவம் ஒழித்துக் கட்டியது என்ற கதை எழுதப்பட்டே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

இந்தப் புத்தகம் இலங்கைப் பிரச்னையை ஆழமாக அலசும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. எப்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவும் அவரது படைத் தளபதிகளும் அரசியல்-ராணுவச் செயல்திட்டங்களை வகுத்து, இதுவரையில் வெல்லவே முடியாமல் இருந்த ஓர் அமைப்பை வெற்றிகண்டனர் என்பது பற்றியே என் கவனம் முழுவதும் இருக்கும்.

2006 முதலாகவே போரின் முன்னணியில் என்.டி.டி.வி தொலைக்காட்சி நிருபராக இருந்து வந்துள்ளேன். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பல நண்பர்கள் எனக்குப் பல தகவல்களை அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரது பெயரையும் வெளியில் சொல்ல அனுமதி தரவில்லை. எனவே இந்தப் புத்தகத்தில் பலரது பெயர்கள் வெளிவராது.

ஆனால் இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்தில் சிலரது பெயர்களை நிச்சயமாகச் சொல்லமுடியும். மூத்த பத்திரிகையாளர், இலங்கை விவகாரத்தைக் கூர்ந்து கவனிக்கும் நோக்கர் பி.கே.பாலச்சந்திரன், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோதபாய ராஜபக்ஷே, ஜெனரல் சரத் ஃபொன்சேகா, ஹை கமிஷனர் ரொமேஷ் ஜயசிங்கே, இலங்கை வெளியுறவுத் துறைச் செயலர் பலித கொஹோன, டெல்லி இலங்கைத் தூதரகத்தின் சஜ்ஜேஷ்வர குணரத்ன, தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் லக்ஷ்மண் ஹுலுகல்லே, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இலங்கை ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் துஷாரா, உபேந்திரா, தாஜ் சமுத்ராவின் ஆனந்த் பத்மனாபன், இந்தப் போரைத் தொலைக்காட்சிக்காகப் படம் பிடித்த என்னுடைய சக அலுவலர்கள் தனபால், சுகுமார் ஆகியோர்.

இந்தப் புத்தகத்தை எழுத அனுமதியும் விடுப்பும் கொடுத்த என்.டி.டி.வியின் ராதிகா ராய், பிரணாய் ராய், பர்க்கா தத், சோனியா சிங் ஆகியோருக்கு நன்றி. வீட்டில், என் மனைவி நேஹா, மகன்கள் ஹர்ஷ், உத்கர்ஷ் ஆகியோர் நான் அவ்வப்போது காணாமல் போவதையும் என் ஒழுங்கற்ற செயல்களையும் சந்தோஷமாகப் பொறுத்துக்கொண்டனர்.

இலங்கையின் பாதுகாப்புப் படையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்துக் கூறுவதில் பலர் எனக்கு உதவியளித்துள்ளனர். ஏதேனும் தவறுகள் இருந்தால் அவை முழுவதும் என் பொறுப்பே.


0

இலங்கை இறுதி யுத்தம்
நிதின் ஏகோகலே
பக்கம் 208, விலை ரூ.120

போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

Thursday, July 11, 2013

அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அம்பேத்கர் நூலிலிருந்து ஒரு பகுதி. புத்தகத்தை எழுதியிருப்பவர் ஆர். முத்துக்குமார்.

0

அக்டோபர் 14, 1956. பௌத்த மதத்தில் சேர்வதற்காக அம்பேத்கர் குறித்து வைத்திருந்த தேதி. பௌத்த மதத் துறவிகளான நாகர்கள் வசித்த பகுதி நாகபுரி. ஆகவே, மதமாற்ற விழாவை அங்கே வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் அம்பேத்கர்.

அப்போது  அருகில் இருந்தவர்களிடம் பேசிய அவர், ‘மதமாற்றத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பல்வேறு கோணங்களில் சிந்தித்து வந்துள்ளேன். அதனால்தான் மதமாற்றத்தைத் தொடர்ந்து ஒத்திவைத்தேன். ஆனால் இனியும் தள்ளிப்போட விரும்பவில்லை. என்னுடைய உடல் மிகவும் பலவீனமடைந்துவிட்டது. ஆகவே, பௌத்தத்தைத் தழுவப் போகிறேன். என்னுடன் இணைந்து பௌத்தத்துக்கு வருபவர்கள் வரலாம். வராதவர்கள் இந்து மதத்திலேயே நீடிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது’ என்றார்.

அம்பேத்கரின் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதிலும் இருந்து தீண்டப்படாத சாதியினர் நாகபுரியை நோக்கி திரளத் தொடங்கினர். ரயில் மார்க்கமாக வர முடிந்தவர்கள் அதைப் பயன்படுத்தினர். பேருந்துகள் மக்களைத் திணித்துக்கொண்டு நாகபுரியை அடைந்தன. வசதி இல்லாதவர்கள் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி  என்ற கோஷத்தை உச்சரித்துக்கொண்டே நாகபுரியை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

பதினான்கு ஏக்கர் கொண்ட நிலப்பரப்பு மதமாற்ற விழாவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. வெள்ளை நிற மேடை உருவாக்கப்பட்டது. அதில் சாஞ்சி
ஸ்தூபியைப் போன்ற கம்பம் ஒன்று நடப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்கள்
தனித்தனியே கலந்துகொள்ள தனித்தனி பந்தல்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
மூவண்ணக் கொடிகள் அந்தப் பகுதிகளில் பறந்துகொண்டிருந்தன. நீலம்,
சிவப்பு, பச்சை என்ற மூன்று வண்ணங்களைக் கொண்ட பௌத்தக் கொடிகள்.

அப்போது செய்தியாளர் ஒருவர் அம்பேத்கரிடம் கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தார். வழக்கமான கேள்விதான். நீங்கள் ஏன் பௌத்தத்தைத் தழுவுகிறீர்கள்? அவ்வளவுதான். முகத்தில் கோபம் கொப்பளிக்கப் பதிலளிக்கத் தொடங்கினார்.

‘நான் இந்து மதத்தை விட்டுவிட்டு பௌத்தத்தை ஏன் தழுவுகிறேன் என்று நீங்களே உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். உங்களுடைய மூதாதையர்களிடம் இதைக் கேளுங்கள். என்னுடைய வகுப்பு மக்கள் தீண்டப்படாத சாதியினராக இருந்துகொண்டு இடஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெறுவதோடு நின்றுவிட வேண்டும் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அப்படியானால் இடஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டு தீண்டப்படாதவர்களாக இருப்பதற்கு பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா? நாங்கள் முழுமையான மனிதர்களாக ஆவதற்கு முயற்சி செய்கிறோம். இப்போது நான் பௌத்த மதத்தைத் தழுவுவதன்மூலம் இந்த நாட்டுக்கு பெரும் நன்மையை நல்குவதாகவே நினைக்கிறேன். ஏனெனில் பௌத்தம் பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருக்கிறது. என்னுடைய மதமாற்றத்தால் இந்த நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்பட நான் அனுமதிக்க மாட்டேன். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்’ என்று பதிலளித்தார்.

அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பௌத்த மதத்தைத் தழுவுவார்கள். இந்தியா ஒரு பௌத்த நாடாக மாறிவிடும்.
இறுதியாக பார்ப்பனர்கள் பௌத்தத்தில் இணைவார்கள். என்னைப் பின்பற்றுபவர்கள் அறியாமையில் உள்ளவர்கள் என்பது உண்மை. எனது  நூல்கள், மத போதனைகள் மூலம் பௌத்தக் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுப்பேன். எங்களுக்கு உணவைவிட மானமே முக்கியம். இருப்பினும் எங்கள் பொருளாதார நிலையை உயர்த்த தீவிரமாக முயற்சி செய்வோம் என்றார் அம்பேத்கர்.

==

அம்பேத்கர்
ஆர். முத்துக்குமார்
200 பக்கம், விலை ரூ.145

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க

போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

Wednesday, July 10, 2013

பிரபாகரன் - ஒரு வாழ்க்கை

பிரபாகரனின் வாழ்வின் ஊடாக இலங்கையின் சரித்திரத்தையும் இலங்கைத் தமிழர்களின் சரித்திரத்தையும் ஒருங்கே முன்வைக்கிறது இந்நூல்.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

‘அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?’ இதுதான் பிரபாகரன் கேட்ட கேள்வி. மிகவும் சாதாரணமான கேள்வி. மிருகத்தனமாகத் தாக்கி உயிரோடு கொளுத்தியிருக்கிறார்கள். குறைந்த பட்சம் தற்காப்புக்காவது திருப்பி அடிக்கத்தானே வேண்டும்? அதுதானே மனித இயல்பு.

பிரபாகரனின் தந்தைக்கு இந்தக் கேள்வி அதிர்ச்சியைத் தந்தது.
தந்தை செல்வநாயகம் மகாத்மா காந்தியின் வழி வந்தவர். தந்தை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் வழியைப் பின்பற்றுபவர். தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர். ஈழத் தமிழ் மக்களை வாழ உய்விக்கப் பிறந்த செல்வநாயகம் போதிக்கும் அகிம்சைப் போராட்டம் மட்டுமே தமிழர்களுக்கு கண்ணியமான உரிமையைப் பெற்றுத் தரும் என்று அவர் நம்பினார். உயிரே போனாலும் திருப்பி அடிக்காதே. அமைதியாக ஏற்றுக்கொள். இதுதான் அவர் தத்துவம்.

பனதூரா என்னும் பகுதியைச் சேர்ந்த அந்த இந்து அர்ச்சகரும் அதைத்தான் செய்திருந்தார். திருப்பித் தாக்குவதற்குத் தெம்பில்லை. வேலை சுலபமாக முடிந்துவிட்டது. கெரஸின் ஊற்றி தீக்குச்சியைப் பற்றவைத்துக் கொளுத்திவிட்டார்கள். இதில் அர்ச்சகரின் தவறு எதுவும் இல்லையே? பலியானது இவர் மட்டுமா? 1958ல் நடந்த இனக்கலவரத்தில் பலியான எண்ணிக்கையற்ற தமிழர்களில் அவரும் ஒருவர். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக சிங்களர்கள் ஓடிவரும்போது என்னதான் செய்யமுடியும் தமிழர்களால்?

0

வல்வெட்டித் துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதியினருக்கு யாழ்ப்பாண மருத்துவமனையில் 1954 நவம்பர் 26ஆம் தேதி நான்காவதாக பிறந்த குழந்தை பிரபாகரன். பிரபாகரனுக்கு மனோகரன் என்ற அண்ணனும், ஜெகதீஸ்வரி - வினோதினி என்னும் இரு மூத்த சகோதரிகளும் இருந்தனர். கடைக்குட்டி என்பதால் வீட்டில் எல்லோருக்கும் பிரபாகரன் செல்லம்.

துரை என்று ஆசையாகக் கூப்பிடுவார்கள். அப்பாவின் மடியில் துரைக்கு எப்போதுமே ஓர் இடம் உண்டு. உள்ளத்திலும். வேலுப்பிள்ளையும் அவரது நண்பர்களும் சிங்கள அரசியல்வாதிகளின் அடாவடித் தனத்தைப் பற்றியும், தமிழர்களுக்கு எதிராக நடந்தேறும் வெறித் தாக்குதல் பற்றியும் மாலை நேரங்களில் பேசுவதை பிரபாகரன் ஆவலுடன் கேட்பது வழக்கம்.

0

தந்தை செல்வாவும், டட்லியும் 1965 மார்ச் 25ஆம் தேதி உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தில் இரு முக்கியமான விஷயங்களை தந்தை செல்வா அடிக்கோடிட்டார்.

1. வடகிழக்குப் பிராந்தியங்களில் அரசு நிர்வாகம் தமிழ் மொழியிலே நடக்கும். அந்தப் பகுதிகளில் நீதி விசாரணைகளும் தமிழிலேயே நடைபெறும்.

2. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடக்கும் அரசின் குடியமர்வுத் திட்டங்களில் நிலங்களை விநியோகிக்கும் போது முதலில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த நிலமில்லாத நபர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். இரண்டாவதாக மற்ற மாவட்டங்களில் உள்ள தமிழர்களுக்குத் தர வேண்டும். அதற்குப் பிறகுதான் சிலோனின் பிற பகுதி மக்களுக்கு நிலம் கொடுத்துக் குடியமர்த்த வேண்டும்.

டட்லி-செல்வா உடன்பாட்டை நடைமுறைப்படுத்துதற்காக அது நாடாளுமன்றத்தின் முன் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. அரசியல் நாடகத்தில் காட்சிகள் மாறுவதும் நடிகர்கள் மாறுவதும் இயல்புதானே? 1956 பண்டாரநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்து ஜெயவர்த்தனாவும், டட்லி சேனநாயகாவும் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றனர். ஆனால் இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்ட காரணத்தினால், இப்போது அந்தப் பாத்திரத்தில் நடிக்க வேண்டியது சிறீலங்கா சுதந்தரக் கட்சியின் முறை.

0

புலிகளால் தமிழீழக் கனவை நனவாக்க முடியுமா? அல்லது பரவலான அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை அரசு இறங்கி வருமா? அல்லது இலங்கைத் தீவில் உள்ள ஒட்டு மொத்தத் தமிழர்களின் அழிவில்தான் எல்லாமே ஓயுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

==

பிரபாகரன் : ஒரு வாழ்க்கை
செல்லமுத்து குப்புசாமி
264 பக்கம், விலை ரூ. 190

Tuesday, July 9, 2013

1857 சிப்பாய் புரட்சி

1857ம் வருடம் மே மாதம் 5ம் தேதி. அம்பாலா பிரதேசத்தின் லெஃப்டினெண்ட் கர்னலான மார்ட்டினோ  ஹிந்துஸ்தானத்தின் அப்போதைய நிலையை அப்படியே விவரித்து தன் உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதினான். ஆங்கிலேயர்கள் யாருமே உணராத ஒரு நிழல் அபாயத்தை முன்கூட்டியே யூகித்தவன் அவன் மட்டும்தான்.

இதற்கு அஸ்திவாரமிட்ட சில சம்பவங்கள் 1857 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பாகவே நடந்திருந்தபோதும் ஒரு பெரும் புரட்சிக்கான அடிநாதம் அதிலிருப்பதை பிரிட்டிஷார் உணரத் தவறிவிட்டார்கள். எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தினார்கள். எதிர்பட்டபோது மிரண்டு போனார்கள்!
பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்தது அந்தப் புரட்சி!

0

வியாபாரத்துக்காக ஹிந்துஸ்தானில் காலடி எடுத்த வைத்த கிழக்கிந்தியக் கம்பெனி, 1757 - ல் நடந்த பிளாசிப் போரின் மூலம்தான் இந்தியாவில் திடமாகக் காலூன்றியது.  அதை சாதித்தவன் ராபர்ட் கிளைவ். இதோ இப்போது 1857 ம் வருடம் பிறந்துவிட்டது. எனவே வெள்ளைக்காரர்கள் இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கப்படுவது நிச்சயம்!

எங்கிருந்து புறப்பட்டது? யார் கிளப்பிவிட்டது? எதுவும் தெரியாது! காட்டுத் தீயை விட வேகமாகப் பரவியது இந்த வதந்தி. யாரோ ஒரு தெய்வீக முனிவர் சொன்ன தீர்க்க தரிசனம் என்றார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஓலைச் சுவடியில் எழுதப்பட்டுள்ளது என்றார்கள். இது, அடிமைப்பட்டு நசுங்கிக் கிடக்கும் மக்களின் மனத்தில் நம்பிக்கையை விதைப்பதற்காகத் திட்டமிட்டு மூட்டப்பட்டதா இல்லை ஏதாவது ஒரு கிளி ஜோசியக்காரனின் நெல்மணி வார்த்தைகளா என்று யாருக்கும் விளங்கவில்லை.

ஒன்றுமட்டும் நிஜம். இந்த வதந்தி உண்மையாகி விடவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தார்கள். ‘இது மட்டும் நடந்துவிட்டால்’ என்கிற நினைப்பே சுகமாக இருந்தது! சந்தோஷம் ததும்பியது! கூடவே, ‘இப்படி நடப்பது சாத்தியமா என்ன?’ என்கிற அவ நம்பிக்கையும் அவர்களுக்குள் ஊசலாடியது.

ஆனாலும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஏதோ சில மர்ம நடவடிக்கைகள் அங்கும் இங்குமாக நடைபெறுவது மட்டும் ஒரு சிலருக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியது.

0

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தேசமும் ஒரே சமயத்தில் ஒன்று திரண்டு எழவேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள்.

அதுவரை இந்தியா ஒன்றுபட்டு ஆங்கிலேயர்களை எதிர்த்ததேயில்லை. தனித் தனி சமஸ்தானங்கள், தனித்தனி பாளையங்கள், தனித் தனி ஆட்சியாளர்கள்தான் ஆங்காங்கே பொங்கியெழுந்து போரிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவோ, உதவிகளோ கிடைக்காத காரணத்தாலேயே வெகு சுலபமாக அடக்கப்பட்டிருந்தார்கள். இப்போது அப்படியில்லை! குறித்தபடி எல்லாம் நடந்தால் குமுறி வெடிக்கப்போகும் தீப்பிழம்பில் ஆங்கிலேய ஆட்சி பொசுங்கிப் போய்விடுவது நிச்சயம் என்றே புரட்சியாளர்கள் கருதினார்கள்.

ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே வங்காளத்தில் தன்னிச்சையாகப் புரட்சியைத் தொடங்கிவிட்டான் ஒரு சுதேசி வீரன். அவன், மங்கள் பாண்டே!

==

1857 : சிப்பாய் புரட்சி
உமா சம்பத்
240 பக்கம், விலை ரூ.125

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

Monday, July 8, 2013

அணையாத ஜோதி பாசு

ஜோதிபாசு ராஜதானிக் கல்லூரியில் படிக்கும்போது முதன்முறையாக சுதந்திரப் போராட்டத்தின் புரட்சிகர தாக்கம் அவர்மீது படரத் தொடங்கியது. முதலாவது சம்பவம், 1930 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தது. அது அவர் உள்ளத்தில் பெரும் வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. காந்தி போன்ற ஒரு பிரபலமான தலைவர், நாட்டு விடுதலைக்காக உண்ணாவிரதம் இருப்பது, அவர் மனதை வருத்தியது. அந்த பாதிப்பை அவரே கூறுகிறார்.

‘எனது இதயம் கனத்துவிட்டது. நான் பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை. அப்பாவும் அதை ஆட்சேபிக்கவில்லை. நான் அவருடன் அவருடைய மருத்துவமனைக்குச் சென்றேன்.’

இதே ஆண்டில் அவர் முதன் முறையாக ஆங்கிலேய காவல் துறையின் தாக்குதலுக்கும் ஆளாகநேரிட்டது. பிரபல காங்கிரஸ் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நினைவுச் சின்னம் இருக்கும் இடத்தில் (இன்று அதன் பெயர் ஷகித் மினார்) உரையாற்றப்போவதாக தகவல் வந்தது. எனவே ஜோதிபாசுவும் அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவரும் கதராடை உடுத்தி, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்தது. ஆங்கிலேய ஆயுதப்படையினர், சாதாரண காவலர்கள் மற்றும் சார்ஜெண்டுகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மக்களை, விரட்டிவிரட்டி அடித்தனர். ஜோதிபாசுவையும் அவரது உறவினரையும் சார்ஜெண்டுகள் விரட்ட வந்தபோது அவர்கள் ஓட மறுத்து மெதுவாக நடக்க ஆரம்பித்தனர். ஆத்திரம் அடைந்த சார்ஜெண்டுகள் தங்கள் கையில் கொண்டிருந்த பிரம்புகளைக் கொண்டு இவ்விருவரையும் மாறிமாறி அடித்தனர்.

0

பதவிக்காக பலர் ஏங்கித் திரியும் காலத்தில், பதவி வேண்டாம், போதும் என்று கூறிய ஜோதிபாசுவிடம், ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியாளர் மாளவிகா பட்டாச்சார்யா கேட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் அவரின் மேன்மையைப் பறைசாற்றும்:

கேள்வி: இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகள் தாங்களாகவே பதவி விலகிவிட்டதாக தெரியவில்லை?

பதில்: நான் ஒருபோதும் பதவிக்காக அலைந்ததில்லை. எனது கட்சி, நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவேண்டுமென்று கூறியதால்தான் நான் அதை ஏற்றேன். என்னால் இயன்றளவு அதைத் திறமையாகச் செய்ய பாடுபட்டேன். நாம் பலவற்றை சாதித்திருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். சில எதிர்மறையான அம்சங்களும் உள்ளன. நாம் அவற்றைச் சரி செய்யவேண்டும்.
கேள்வி: பதவி விலக வேண்டுமென்ற உங்கள் முடிவு மிக சரிதானதா?
பதில்: அது என்னுடைய நோயினால் ஆகும். ஒரு வருடத்திற்கு முன்பே என் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவிக்கும்படி கட்சியிடம் நான் கூறியிருந்தேன். ஆனால் நான் தொடர வேண்டுமென்று அவர்கள் கருதினார்கள். நான் என் சக தோழர்களின் விருப்பத்தை மதித்து என் பொறுப்பில் தொடர்ந்தேன்.

கேள்வி: ஆனால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோதும் நீங்கள் தொடர முடிந்ததே.

பதில்: இல்லை. இனியும் அதைச் செய்ய முடியாதென நான் உணர்கிறேன். நான் அலுவலகத்திற்கு சிறிது நேரமே செல்கிறேன். 8 கோடி மக்கள் வாழும் மாநிலத்தின் முதலமைச்சர், அலுவலகத்திற்கு சிறிது நேரம் மட்டுமே செல்வது சரியாகாது. மக்களுக்கு நான் நியாயம் செய்யவில்லை என உணர்கிறேன்.

கேள்வி: உங்களுக்கு அரசியல் என்பதன் பொருள் என்ன?

பதில்: அரசியல் என்பது எனக்கு மக்கள். மக்களுக்குச் சேவை செய்வது என்பதைத் தவிர வேறு நலன் எங்களுக்கில்லை என கம்யூனிஸ்ட்களாக நாங்கள் கூறுவோம். என் மரணம் வரை என்னால் முடிந்தளவு பாடுபடுவேன். மக்களுக்காக அதைத் தொடர்ந்து செய்வேன். எனது மூளை செயல்படும் வரை அதைச் செய்து கொண்டிருக்க முடியும்.

==

அணையாத ஜோதிபாசு
என். ராமகிருஷ்ணன்
136 பக்கம், விலை ரூ.70

Friday, June 28, 2013

முகலாயர்கள்

‘டெல்லி சென்ற எனது மகன் திரும்பவில்லை அரசரே.  இப்ராஹிம் லோடி அவனைச் சிறைப்படுத்திவிட்டான். அதுபோக லோடி வம்சத்தினருக்கு விசுவாசமாக இருந்த இருபத்து மூன்று முக்கிய மந்திரிகளை இப்ராஹிம் லோடி கொன்றுவிட்டான். ஆகவே தங்களது மேலான உதவியை நாடி வந்துள்ளேன். தாங்கள் இந்துஸ்தான் மீது படையெடுத்து வந்து, இப்ராஹிம் லோடிக்கு முடிவுகட்ட வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல, அவனால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினரின் விருப்பம்.’

பணிவோடு தௌலத் கான் லோடி சொன்ன வார்த்தைகள், பாபரின் கோபத்தைப் போக்கியிருந்தன. யோசிக்க ஆரம்பித்திருந்தார் அவர்.  அப்போதைக்கு ‘சரி. உதவுகிறேன்’ என்று தௌலத் கானிடம் சொல்லியனுப்பினார் பாபர்.

அடுத்த சில நாள்களிலேயே ரானா சங்காவின் தூதுவர் காபுலுக்கு வந்தார். கொண்டுவந்த செய்தி இதுதான். ‘தாங்கள் இந்துஸ்தான் மீது படையெடுக்க வேண்டும். அந்த இப்ராஹிம் லோடியை ஒழிக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். ராஜபுத்திரர்களின் சார்பாக நான் உங்களை அழைக்கிறேன்.’

0

‘உன் சகோதரர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காதே, அவர்கள் உனக்கு உண்மையாக இருக்கும்வரை.’ பாபர் சொல்லிவிட்டுச் சென்ற இந்தக் கடைசி வார்த்தைகள்தான் ஹுமாயூனுக்கு வினையாக அமைந்தன.

ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்த நல்ல நாளில் இருபத்து மூன்று வயது ஹுமாயூன் முகலாயப் பேரரசராக ஆக்ராவில் பதவியில் அமர்ந்தார் (டிசம்பர் 1530). பரந்து விரிந்த பேரரசு. பாபரது மரணம் ஆப்கன்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. டெல்லியைக் கைப்பற்ற காய்கள் நகர்த்த ஆரம்பித்திருந்தார்கள். இன்னொரு புறம் அவ்வளவு பெரிய பேரரசைக் கட்டியாளும் அளவுக்கு நிதி இல்லாத நிலை.

ஹுமாயூனுக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்னைகளே விஸ்வரூபமெடுத்து நின்றன. புதிய பகுதிகளைப் பிடித்து பேரரசை விரிவாக்குவதா? நிதி நெருக்கடியைச் சமாளித்து நிர்வாகத்தைச் சீரமைப்பதா? தலைதூக்கும் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டு இருப்பதைக் காப்பாற்றிக் கொள்வதா?

எல்லாவற்றையும் நானே என் தோளில் சுமப்பதால்தானே மூச்சு திணறுகிறது. எங்கே என் சகோதரர்கள்? வாருங்கள். இளையவன் கம்ரான். இங்கே வா. காபூலையும் காந்தஹாரையும் நீ கவனித்துக் கொள்.  சகோதரன் மிர்ஸா ஹிண்டால், அல்வாரையும் மேவாத்தையும் நீ நிர்வகி. சம்பலை நீ எடுத்துக் கொள் மிர்ஸா அஸ்காரி, யாரது? மிர்ஸா சுலைமானா? உடன்பிறக்காவிட்டாலும் நீயும் என்ற சகோதரன்தானே. பாதக்ஷனின் அரசாங்கத்தை நீ பார்த்துக் கொள். அனைவருக்கும் மகிழ்ச்சிதானே?

0

புத்தகங்களைவிட சிறுவன் அக்பருக்கு புறாக்களையும் பூக்களையும் பார்ப்பது பிடித்திருந்தது. ஹுமாயூன் புத்தகப் பிரியர். ஆனால் காபூலில் வளர்ந்த அக்பருக்குக் கல்வி கசக்கத்தான் செய்தது. கல்வி கற்றுக் கொடுப்பதற்கு என நியமிக்கப்பட்ட தனி ஆசிரியர், அக்பரை எழுத, படிக்க வைப்பதற்குள் திணறிப் போனார்.

குதிரையேறி வேகமாகச் செல்வது, காடு, மேடெல்லாம் சுற்றித் திரிந்து இயற்கையை ரசிப்பது, விதவிதமாக வேட்டையாடுவது, வாளெடுத்து நண்பர்களுடன் போர் புரிவது - இவை மட்டுமே அக்பருக்குப் பிடித்திருந்தன. எழுத்துகள் அல்ல. தன் பெயரை எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக் கொள்வதில்கூட அக்பர் ஆர்வம் காட்டவில்லை.

ஹுமாயூனின் இறப்புக்குப் பிறகு கலகம் எதுவும் ஏற்படாதபடி கவனித்துக் கொண்டார் தளபதி பைரம் கான். அடுத்து அக்பரை அரியணையில் அமர்த்த வேண்டும். சிறுவன்தான். வேறு வழியில்லை. அக்பர் அரியணையில் இருக்கட்டும், ஆட்சிப் பொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். முடிவெடுத்திருந்தார் பைரம் கான்.

டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தார் அக்பர். பஞ்சாபில் கலானௌர் என்ற இடத்தில் அவரைச் சந்தித்தார் பைரம் கான். தந்தை இறப்புக்கு முறைப்படி துக்கம் அனுஷ்டித்த அக்பர், பின்பு அரியணை ஏறத் தயாரானார்.

0

முகலாயர்கள்
முகில்
கிழக்கு பதிப்பகம்
496 பக்கம், விலை ரூ 325


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

Thursday, June 27, 2013

சீனா : ஒரு நேரடி ரிப்போர்ட்

குலுங்கித் தள்ளாடித் தவித்தது விமானம். சாப்பாடு கொண்டு வந்த தள்ளுவண்டியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சமாளித்தார்கள் விமானப் பணிப்பெண்கள். எல்லோர் முகத்திலும் களைப்பு அப்பியிருந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் - 2002 மார்ச்சில் - கிழக்கு சீனா விமானப் போக்குவரத்துக் கழகம், டெல்லி-பெய்ஜிங் வழியில் விமானச் சேவையை ஆரம்பித்திருந்தது. அதற்கு முன்னால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நேரடியாக விமானம் கிடையாது. எதியோப்பியாவிலிருந்து பெய்ஜிங் செல்லும் ஒரே ஒரு விமானம் மட்டும், போனால் போகிறது என்று டெல்லியில் கொஞ்ச நேரம் நிற்கும். இல்லாவிட்டால் சிங்கப்பூர் அல்லது தாய்லாந்து வழியாகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடவேண்டியதுதான்.

அதற்காக, இந்த இரு நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கு அப்படியொன்றும் மக்கள் வரிசையில் நின்றார்கள் என்றும் சொல்ல முடியாது. டெல்லி சாந்திபத் சாலையில் உள்ள சீனத் தூதரகத்தில் நான் விசா வாங்கப் போனபோது அங்கே ஈ, காக்காய் கிடையாது. மயான அமைதி. அக்கம்பக்கத்தில் இருக்கும் எல்லாத் தூதரகங்களிலும் திருப்பதி வரிசை போல் விசாவுக்காகக் காத்திருந்து வெயிலில் வேர்த்திருந்தது கூட்டம். சீனத்து விசாவைத்தான் சீந்துவாரில்லை.

பெய்ஜிங் ஒளிபரப்புக் கழகத்திலிருந்து எனக்கு வந்திருந்த பணி நியமனத்தைக் காட்டினேன். அடுத்த ஒரு வருடத்துக்காவது நான் அங்கேதான் வேலை செய்யப் போகிறேன். அந்தப் பணி உத்தரவே பூச்சி பூச்சியாக சீன மொழியில் எழுதப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் சிவப்பு ரப்பர் ஸ்டாம்ப் வேறு அடித்து வைத்திருந்தது. தூதரகப் பெண்மணி அதில் தன் பங்குக்கு சாப் சாப்பென்று இன்னும் நாலு சிவப்பு சீல் குத்தினாள். என்ன வேகமாக மெஷின் மாதிரி ஸ்டாம்ப் அடிக்கிறாள்!

ஒரு வாரத்தில் விசா கிடைத்துவிட்டது. சீக்கிரமே ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கு விமானம் ஏறினேன். உணவுத் தட்டு ஏந்தி வந்த பணிப்பெண்ணின் மெனுவில் இரண்டே இரண்டு ஐட்டம்தான் இருந்தன: பன்றிக்கறி-சோறு அல்லது பன்றிக்கறி-நூடுல்ஸ். அவளது சீனத்து உச்சரிப்புக்கு ‘றனா’ வேறு வரவில்லை. ‘நூடுல்ஸ் மட்டும் போதும்’ என்றேன். எனக்குப் பசியே இருக்கவில்லை.

0

நான் சீனாவில் தங்கியிருந்த வருடங்களில்தான் அவர்கள் உலகிலேயே மிகப் பெரிய அணையையும் உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாதையையும் கட்டப்போகிறார்கள். உலகத்தின் பிரம்மாண்டமான விமான நிலையமும் மியூசியமும் வரப்போகின்றன. அதிவேக ரயில். கொள்ளை கொள்ளையாக அந்நியச் செலாவணி. நாலு கால் பாய்ச்சலில் ஓடும் சீனாவின் வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டு, பக்கத்து நாடான இந்தியாவில் பல பேருக்கு வயிறு எரியப்போகிறது!

ஆனால் பிரச்னைகளும் வராமல் இருக்காது. சர்வாதிகார அரசியல் ஒரு பக்கம், தாராளமான பொருளாதாரம் மறு பக்கம். இரண்டுக்கும் நடுவில் கீழே விழுந்துவிடாமல் கயிற்றின்மேல் நடப்பதைச் செய்துகாட்டவேண்டும் சீனா. எத்தனை நாளைக்குத்தான் விழாமல் நடக்கமுடியுமோ, தெரியவில்லை. இங்கே புதிய சுதந்தரங்களும் பழைய அடக்குமுறைகளும் பக்கத்துப் பக்கத்து வீட்டில் வசிக்கின்றன. குழப்பம் ஒருபுறம், கட்டுப்பாடு மறுபுறம். நவீனமும் பழைமையும் சந்திக்கும் இந்த மாபெரும் முரணைச் சமாளிப்பதற்கு எந்தத் தெளிவான வழிமுறையும் யாரிடமும் கிடையாது.

0

விமானம் கீழே இறங்கும்போது எனக்கு எப்போதுமே ஒரு மாதிரி படபடப்பாக இருக்கும். அன்றும், விமானத்தைத் தூக்கிப்போட்டுக் குதித்தபடி தரை இறங்கினார் பைலட். ஒலிபெருக்கியில் ‘விமானம் முழுவதுமாக நிற்கும்வரை யாரும் இருக்கையைவிட்டு எழுந்திருக்க வேண்டாம்’ என்று அவசர வேண்டுகோள் வந்தது. அப்போதுதான், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எவ்வளவு கலாசார ஒற்றுமை என்று பார்க்க முதல் வாய்ப்பு கிடைத்தது.

எழுந்திருக்காதீர்கள் என்று அறிவிப்பு வந்த அடுத்த கணமே அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றவர்கள் இந்தியர்களும் சீனர்களும் மட்டும்தான். வெள்ளைக்காரப் பயணிகள் அமைதியாக இருக்கையில் அமர்ந்துகொண்டு எங்களை அற்பப் புழுக்கள் போல் பார்த்துக் கொண்டிருந்தனர். விமானப் பணிப்பெண்கள் செய்வதறியாது கையைப் பிசைய, செல்போன்கள் பீப் பீப் என்று இயக்கப்பட, மேலிருந்து விஷ் விஷ் என்று இறக்கப்படும் சூட்கேஸ்கள் தலையில் இடிக்காமல் ஒவ்வொருவரும் குனிந்து குனிந்து தப்பிக்க, ஒலிபெருக்கியில், பதிவு செய்யப்பட்ட ஒரு குரல் அறிவித்தது:

‘பெய்ஜிங் சர்வதேச விமான நிலையம் உங்களை வரவேற்கிறது!’

0

சீனா - விலகும் திரை

பல்லவி அய்யர் / தமிழில் ராமன்ராஜா
கிழக்கு பதிப்பகம்
360 பக்கம் / விலை ரூ 300


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

Wednesday, June 26, 2013

ஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு

ஒரு  நாடு எப்படி இருக்க வேண்டும்?  நமக்குத் தெரிந்த நாடு இந்தியாதான். எனவே, நம்மைப் பொறுத்தவரை, நாடு என்றால், இந்தியாமாதிரி இருக்க வேண்டும்.

காஷ்மிர் முதல் கன்னியாகுமரிவரை விரிந்த நிலப் பரப்பு. அதில் இமாலயம் முதல் பரங்கி மலை  வரை வகை வகையாய் மலைகள்:  கங்கை, தக்காண சமவெளிகள்; கங்கை, காவேரி, மகாநதி, பி
ரம்மபுத்ரா, கோதாவரி, கிருஷ்ணா, வைகை  நதிகள்: கேரளம், கோவா, பாண்டிச்சேரி போல் கடற்கரைப் பிரதேசங்கள்.

இந்த இலக்கணப்படி பார்த்தால்  ஜப்பான் ஒரு நாடே இல்லை .6852 தீவுகள் சேர்ந்த ஒரு இணைப்பு.

0

ஜப்பான் ஆசியக் கண்டத்தில் பசிபிக் பெருங்கடலில் இருக்கிறது. சீனா, தென் கொரியா, வட கொரியா, ரஷ்யா ஆகியவை அண்டை நாடுகள். சீனாவிடமிருந்து சீனக் கடலும், தென் கொரியா, வட கொரியா, ரஷ்ய நாடுகளிடமிருந்து ஜப்பான் கடலும் ஜப்பானைப் பிரிக்கின்றன.

இயற்கை ஜப்பானைப் படைக்கும்போது நெஞ்சில் ஈரமே இல்லாமல் உருவாக்கியிருக்கிறது. உலகின் பத்து சதவிகித எரிமலைகள் ஜப்பானில்தான் இருக்கின்றன - 107 எரிமலைகள்.  அக்னி தன் சக்தியை இப்படிக் காட்டினால், இன்னொரு பஞ்சபூதமான பூமி தரும் பரிசாக ஒவ்வொரு வருடமும்   1500 நில நடுக்கங்கள். உலகத்தின் பூகம்பத் தொழிற்சாலை என்று ஜப்பானைப் பலர் அழைப்பது இதனால்தான். கடல் சும்மா இருக்குமா? தன் பங்குக்குத் தாராளமாகச் சூறாவளிக் காற்று, ராட்சச  அலைகள், பனிப் புயல்கள் ஆகியவற்றை அழையா விருந்தாளிகளாக அனுப்பி வைக்கிறது.

இயற்கையின் ஓர வஞ்சனை இத்தோடு முடியவில்லை. தொழில் உற்பத்திக்குத் தேவையான இயற்கை வளங்கள் ஜப்பானில் கிடையாது.  இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம். இறக்குமதிதான் நாட்டின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிர் மூச்சு.

0

இரண்டாம் உலகப் போர். 1939 முதல் 1945 வரை நடந்த  இந்த உலக மகா யுத்தம் பல நாடுகளின் எல்லைக் கோடுகளையும் சில நாடுகளின் தலைவிதியையும் மாற்றி எழுதியது. நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட  பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ் ஓர் அணியில். எதிர் அணியில் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்.    

இந்தப் போரை உலக மகா யுத்தமாக மாற்றியதில் ஜப்பானுக்குப் பெரும் பங்கு உண்டு. ஜெர்மனியும்  இத்தாலியும் ஃப்ரான்ஸ், பிரிட்டனோடு நடத்திக் கொண்டிருந்த போரை அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. 1941. ஜப்பான் அமெரிக்காவின் ஹவாயிலிருக்கும் பேர்ள் துறைமுகம், அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த பிலிப்பைன்ஸ் நாடு ஆகியவைமீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா ஜப்பான்மீது போர் அறிவித்தது. பிற நேச  நாடுகளும் ஜப்பான்மீது போர் அறிவித்தன.

ஆகஸ்ட் 1945. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய  நகரங்கள்மீது  அமெரிக்கா அணுகுண்டுகள் வீசியது. 1,11, 000 பேர் பலியானார்கள், ஒரு லட்சம் பேருக்கு மேல் படுகாயம் அடைந்தார்கள்.  அமெரிக்காவுக்கு எதிராகப் போர் நடத்துவது முடியாத காரியம் என்று புரிந்துகொண்ட ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

போருக்கு ஜப்பான் கொடுத்த விலை மிக அதிகம். மூன்று கோடிக்கும் அதிகமான மக்களின் மரணம். நாட்டில் இருந்த அத்தனை ராணுவத் தடவாளத் தொழிற்சாலைகளையும் அமெரிக்கா தரை மட்டமாக்கியது. சுமார் 40 சதவிகிதத் தொழிற்சாலைகளும்  முக்கிய நகரங்களும் சிதிலமாயின. ஜப்பான் நாடும் பொருளாதாரமும்  அதல பாதாளத்தில் விழுந்தன. இந்தப் படுகுழியிலிருந்து ஜப்பான் எழுந்து வந்தது. 1960 முதல் 1990 வரை உலகப் பொருளாதார வரிசையில் முன்னணியில் நின்றது. இந்த முப்பது வருட அமோக வளர்ச்சி ஜப்பான் அதிசயம்  (Japan Miracle) என்று அழைக்கப்படுகிறது.  

0

ஜப்பான்
எஸ்.எல்.வி. மூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
196 பக்கம்
விலை ரூ 130


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

Friday, June 14, 2013

பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை

உளவுத் துறையான ராவில் கால் நூற்றாண்டு காலம் உயர்பொறுப்பு வகித்து, ஓய்வுபெற்ற அதிகாரி பி. ராமனின் இந்தப் புத்தகம், பயங்கரவாதத்தின் வேர்களை தேடிச் செல்வதோடு பாதுகாப்பான இந்தியா உருவாவதற்கான வழிமுறைகளையும் சொல்லித்தருகிறது.

0

இன்றைய உலகில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரிய அச்சுறுத்தலாகப் பயங்கரவாதம் உள்ளது. கைகளால் பயன்படுத்தப்படக் கூடிய ஒற்றைப் பரிமாண அபாய ஆயுதங்களில் தொடங்கி, சட்ட விரோத வெடி பொருட்கள், மனித வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள், நாசத்தைத் தூண்டும் கருவிகளாக செல்போன்கள், விமானக் கடத்தல், இணையதளம் வாயிலான தாக்குதல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இன்று உருவெடுத்துள்ளது.

இன்றைய பயங்கரவாதம், நேற்றைய பயங்கரவாதத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்திலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இன்றைய நிலையில், ஒடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தோ பொருளாதார, சமூகரீதியில் நலிவடைந்த குடும்பங்களிலிருந்தோ பயங்கரவாதிகள் உருவாவதில்லை. சமூக அந்தஸ்து உள்ள, வசதியான குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலும் தோன்றுகின்றனர். அவர்கள் நல்ல கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய தலைவர்கள் இப்போது அவர்களைத் தமது விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கையாள முடியாது.

பயங்கரவாதிகளில் பலர் மருத்துவர்களாகவோ பொறியியல் வல்லுனர்களாகவோ தகவல் தொழில்நுட்ப நிபுணர்களாகவோ உள்ளனர். பெருவாரியான மக்களைப் படுகாயப்படுத்துவது சரியா தவறா என்று மூளையைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதேநேரம் தாக்குதல்களை நன்கு திட்டமிட்டு, கச்சிதமாக அரங்கேற்றுகின்றனர். நவீனத் தொழில்நுட்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். எனினும், அதற்கு அவர்கள் அடிமையாக இருப்பதில்லை. நாளுக்கு நாள் அவர்கள் செயல்படும் விதம் மாறிக்கொண்டே இருக்கிறது.

0

அவர்களுடைய மனப்பான்மை, சிந்தனை முறை, திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துவதற்கு அவர்களிடம் உள்ள வசதிகள் ஆகியவை குறித்து நாம் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். விழிப்பு உணர்வுடன் இருப்பது என்றால் தயாராக இருப்பது என்று பொருள். அவர்களைப் பற்றிய விழிப்பு உணர்வை எவ்வாறு உருவாக்குவது? அவர்களை மக்கள் முன்னாலும் ஆட்சியாளர்கள் முன்னாலும் கொண்டு போய் நிறுத்துவது எப்படி? முட்டாள்தனமாக அவர்களுடைய சமூகத்தைத் தீய சக்தியாகச் சித்திரிக்காமல் அவர்களைத் திறம்படக் கையாள்வது எப்படி? இவையே இன்று நம் முன்னால் உள்ள மிகப் பெரிய கேள்விகள்.

இன்று அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களின் சில முக்கிய பரிமாணங்கள் குறித்து ஆராய்வதும் அதன் மூலம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுமே இந்த நூலின் பிரதான நோக்கங்கள். இதற்காக, நான் எனது முந்தைய நூல்களிலிருந்தும் சர்வதேச மாநாடுகளில் நான் ஆற்றிய உரைகளிலிருந்தும் சில பகுதிகளை எடுத்து இங்கே தந்துள்ளேன். 

அவையனைத்தும் காலவாரியாகப் புதுப்பிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. சில புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் முழு விளக்கம் கொண்டதாக அமைக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன். எனவே, வாசகர்கள் சில விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள, நூலை முன்னும் பின்னும் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. 

0


ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234