Search This Blog

Wednesday, January 11, 2012

பன்முக அறிவு


குழந்தைகளை ‘படி படி’ என்று நசுக்கும் காலம் இது. அவர்கள் முதுகில் ஐந்து கிலோ, பத்து கிலோ என்று பொதி சுமக்க வைக்கிறோம். வீட்டுப் பாடம் எக்கச்சக்கம். பள்ளியில் ஆசிரியர்கள் கடனே என்று எதையோ சொல்லிவைக்க, புரிகிறதோ, புரியவில்லையோ, குழந்தைகள் அரைத் தூக்கத்துடனும் ஆர்வமின்றியும் அதனைப் பின்பற்றவேண்டிய கட்டாயம்.

பிறகு தேர்வு, அதில் மதிப்பெண்கள், அடுத்து மேற்கொண்டு எஞ்சினியரிங் என்று குழந்தைகளை ஆரம்பத்திலேயே பொசுக்கிவிடுகிறோம்.

ஆனால், குழந்தைகளின் ஆர்வம் என்னவென்று நாம் கேட்பதே இல்லை. அவர்களின் திறன் எதில் உள்ளது என்பதையும் நாம் கவனிப்பதில்லை. ஹாவர்ட் கார்ட்னெர் முன்வைத்த Multiple Intelligence என்ற கருத்தாக்கத்தின்படி, எட்டுவிதமான அறிவுகள் உள்ளன. அதில் சிலதான் அல்லது ஒன்றுதான் ஒரு மனிதருக்கு அதிகமாக இருக்கும். அவை எவை என்று கண்டுபிடித்தால், அதில், அந்தத் துறையில் அந்த மனிதரால் உச்சங்களை அடையமுடியும்.

இன்று எல்லாத் துறைகளிலுமே வாய்ப்புகள் இருக்கும்போது ஒரு குழந்தையை எதை நோக்கிச் செலுத்துவது? முரட்டுத்தனமாக, படி, படி என்று சொல்லிக்கொண்டே இருப்பதா, அல்லது எதில் ஆர்வமும் திறனும் உள்ளதோ அதை நோக்கி ஒரு குழந்தையைச் செலுத்துவதா?

எந்த அடிப்படையில் நம் குழந்தையிடம் இந்தத் திறன் உள்ளது என்று கண்டறியமுடியும்?

*

கிழக்கு வெளியீடாக வரும் ‘பன்முக அறிவு: உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்’, இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தை உங்களுக்குத் தருகிறது. புத்தக ஆசிரியரான ஜி. ராஜேந்திரன், சில பத்தாண்டுகளாக பள்ளிக்கூட ஆசிரியராக இருப்பவர். பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசகராக இருப்பவர். குழந்தைகளோடு நெருங்கிப் பழகுபவர். நம் கல்விமுறைமீது கடுமையான விமரிசனங்களை வைப்பவர். அவர் நேரடியாக நடைமுறைப்படித்தியுள்ள அனுபவங்களிலிருந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

சிறிய புத்தகம்தான். ஆனால் உங்கள் குழந்தையின் வாழ்க்கையையே நல்ல வழிக்குக் கொண்டுசெல்லக்கூடிய புத்தகமாக இது அமையலாம்.

Tuesday, January 10, 2012

+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?


பள்ளி ஆண்டிறுதிப் பரீட்சைகள் நெருங்கிவிட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் எப்போது என்று அறிவித்துவிட்டார்கள். +2 தேர்வுகள் பற்றி விரைவில் அறிவித்துவிடுவார்கள்.

+2 படிக்கும்போது முதல் நோக்கம் நல்ல மதிப்பெண் பெறுவது. அடுத்து, பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு என்ன செய்யலாம் என்பது பெரும் கேள்வி ஆகிவிடுகிறது. பெரும்பாலானோர் பொறியியல் அல்லது மருத்துவம் படிக்க விரும்புகிறார்கள். மருத்துவ இடங்கள் குறைவாக இருப்பதால், மிக அதிகமானோர் செல்வது பொறியியல் படிப்புக்குத்தான்.

முன்புபோல் இல்லாது இப்போது மிகச் சிலரே அறிவியலை ஆர்வத்துடன் படிக்கிறார்கள்.

மேற்படிப்பில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதே பலருக்கத் தெரிவதில்லை. என்னென்ன படிப்புகள், எங்கெல்லாம் அவற்றைப் படிக்கலாம் என்று பெற்றோர்களும் மாணவர்களும் குழம்பாமல் இருக்க, இந்தப் புத்தகம் உதவும்.

கே.சத்யநாராயண், என்னைப் போன்றே ஐஐடி சென்னை, கார்னல் பல்கலைக்கழகங்களில் படித்தவர். கிரிக்கின்ஃபோவில் என்னுடன் இருந்தார். நாங்கள் சேர்ந்துதான் கிழக்கு பதிப்பகத்தை ஆரம்பித்தோம்.

கல்வித்துறைமீது மிகுந்த நாட்டம் கொண்டவர். அவருடைய வலைப்பதிவில் கல்வி பற்றிய பல கட்டுரைகளை நீங்கள் காணமுடியும்.

அவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் முதல் பாகம்தான். இதில் பொறியியல், மருத்துவம், அறிவியல்/கணிதம், சட்டம் ஆகிய துறைகளில் மேல்படிப்புக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி உள்ளது. இரண்டாவது பாகத்தில் காமர்ஸ், கலை, மொழி, பொருளாதாரம், மற்றும் பிற துறைகள் பற்றி வரும். விரைவில் அந்தப் புத்தகமும் வெளியாகும்.

டேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்டேவிட் ஒகில்வி, உலகில் நன்கு அறியப்பட்ட விளம்பரத்துறை மேதை. அவருடைய விளம்பரங்கள் பல இன்றும் கவனமாகப் படிக்கப்படவேண்டியவை. சென்ற ஆண்டு (2011), அவர் பிறந்து நூறு ஆண்டுகள் முடிந்ததைக் கொண்டாடும் விழா ஆண்டாக இருந்தது. அப்போதுதான் அவர் உருவாக்கிய விளம்பர ஏஜென்சியான ஒ அண்ட் எம்மின் சென்னை நிர்வாகிகள், அவர் எழுதிய புத்தகமான ‘கன்ஃபெஷன்ஸ் ஆஃப் அன் அட்வெர்டைசிங் மேன்’ என்ற புத்தகத்தைத் தமிழ்ப்படுத்தி ஏன் வெளியிடக்கூடாது என்று யோசித்தனர்.

அதையடுத்து அவர்கள் எங்களைத் தொடர்புகொள்ள, நாங்கள் ஒ அண்ட் எம் நியூ யார்க்குடன் பேசி, தமிழாக்க உரிமம் பெற்று, இப்போது அதனைப் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம்.

விளம்பரத் துறையில் இருப்போர், விஸ்காம் படிப்போர், மார்க்கெட்டிங் துறையில் இருப்போர் ஆகியோருக்கு இந்தப் புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.

உடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்
ஜடாயுவின் வரவேற்புரை


பத்ரி சேஷாத்ரியின் புத்தக அறிமுகம் 

சாமி தியாகராஜன்எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ்கிருஷ்ண பறையனார்
கல்வெட்டியலாளர் ராமச்சந்திரன்


தொல்லியலாளர் சத்தியமூர்த்தி
தமிழக பாரதிய ஜனதா கட்சி துணைத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்


இந்த புத்தக்கத்தை வாங்க இதை சொடுக்கவும்


நீங்கள் வேறு எந்த புத்தகத்தையும் தொலைபேசி மூலமாக வாங்கஉடையும் இந்தியா? புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ

3 ஜனவரி 2012 அன்று தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்ற ‘உடையும் இந்தியா?’ புத்தக அறிமுக நிகழ்வில் பேசியவர்களின் ஒளிப்பதிவு இங்கே.இந்த புத்தக்கத்தை வாங்க இதை சொடுக்கவும்


நீங்கள் வேறு எந்த புத்தகத்தையும் தொலைபேசி மூலமாக வாங்க

Friday, January 6, 2012

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை

கம்யூனிஸம் மீதான இரு விமரிசனப் புத்தகங்களை இந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

ஒன்று 1945-ல் எழுதப்பட்டது. எழுதியவர் ஜார்ஜ் ஆர்வெல் என்ற புனைப்பெயர் கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகமான அனிமல் ஃபார்ம் என்பது, ஸ்டாலினிய ரஷ்யாவை நையாண்டி செய்த புத்தகம். கம்யூனிஸ ஆதரவாளர்களே ஸ்டாலினின் செயல்பாட்டால், அடக்குமுறையால் அதிர்ந்துபோயினர். ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணையில், விலங்குகள் மனித அடக்குமுறைக்கு எதிராகப் போராடும். ஒரு குறிப்பிட்ட பண்ணையில், விலங்குகள் மனிதரைத் துரத்திவிட்டு ‘ஆட்சி’யைப் பிடிக்கவும் செய்யும். ஆனால் பின்னர் அந்த விலங்குகளில் பன்றிகள் மட்டும் பிறவற்றை அழுத்திக் கீழே தள்ளிவிட்டு தாம் மட்டும் சுகபோகத்தில் வாழும். மாற்றுக்குரல் எடுபடாமல் இருக்க, துரோகிப் பட்டம் கொடுத்துத் துரத்தும். படுகொலைகள் செய்யும். பஞ்சம் ஏற்படாவிட்டாலும் பசித் துயரம் ஏற்படும். சுரண்டல் அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் பன்றிகள், தாம் எதிர்த்துப் போராடிய மனிதர்களுடனேயே கூட்டணி அமைத்துக்கொள்ளும். பிற விலங்குகளுக்கு, பன்றிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போய்விடும் என்பதாகக் கதையை முடித்திருப்பார் ஆர்வெல்.

இது ஏற்கெனவே தமிழில் பிறரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் பி.வி.ராமஸ்வாமி. இதுதான் இவரது முதல் மொழிபெயர்ப்பு. படித்துப் பாருங்கள். ஆச்சரியம் அடைவீர்கள். அடுத்த பதிவில் இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன்.

*

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன், கம்யூனிஸம் அதன் அடிப்படையிலேயே அழிவைக் கொண்டிருக்கிறது என்று வாதிடுகிறார். மார்க்ஸிலிருந்து தொடங்கி, எங்கெல்ஸ் வழியாக, இன்றுவரை கம்யூனிஸம் எங்கெல்லாம் பேசப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் செயல்முறையில் இருந்துள்ளதோ, அங்கெல்லாம் அது திரிந்து, அங்குள்ள மக்களுக்குப் பேரழிவைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

பின்னர் ஒரு கேள்வி எழலாம். ஆனாலும் ஏன் பல நல்ல உள்ளங்களை கம்யூனிஸம் வசீகரிக்கிறது. சக மனிதனின் துன்பத்தையும் அவன் சுரண்டப்படுவதையும் எதிர்ப்பவர்கள்தானே கம்யூனிஸச் சித்தாந்தத்தால் வசீகரிக்கப்படுகிறார்கள்? ஆனால் அதன்பின் என்ன ஆகிறது? இதற்கான பதிலையும் அரவிந்தன் விளக்குகிறார்.

இந்தப் புத்தகமும் சர்ச்சையை எழுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த புத்தகத்தை இணையத்தில் வாங்க இதை சொடுக்கவும்.

எக்ஸைல்டிசம்பர் மாதத்தில் சாரு நிவேதிதா ரசிகர்களின் கோலாகல ஆதரவுடன் வெளியான புத்தகம் எக்ஸைல்.

ஒரே மாதத்துக்குள், முதல் பதிப்பான 2,000 பிரதிகள் விற்றுமுடியும் நிலையில், அடுத்த அச்சுக்குச் சென்றுள்ளது இந்தப் புத்தகம்.

இந்த புத்தகத்தை இணையத்தில் வாங்க இதை சொடுக்கவும்.

ஜெயமோகனின் புத்தகங்கள்


இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு ஜெயமோகனின் சில புத்தகங்களை மறு அச்சு செய்கிறோம்.


1. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்
2. ஜெயமோகன் குறுநாவல்கள்
3. ஜெயமோகன் சிறுகதைகள்
4. பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் (ஏற்கெனவே ‘நிழல்வெளிக் கதைகள்’ என்று வெளியானவை)
இவைதவிர அண்ணா ஹசாரே பற்றி ஜெயமோகன் எழுதியிருந்த ‘அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்’ என்ற புத்தகம் ஸ்பெஷல் எடிஷனாக புத்தகக் காட்சிக்கு என ரூ. 20/-க்குக் கொண்டுவருகிறோம். அதே தாள், அதே அட்டை, அதே வடிவமைப்பு.

உடனே, ஆகா... இத்தனை நாளும் நம்மை ஏமாற்றி ரூ. 80/-க்குத் தந்தானே என்று சொல்லிவிடாதீர்கள். இப்போது 10,000 பிரதிகள் அச்சடித்துள்ளோம். இதன் தாள், அச்சு, பைண்டிங் விலையே ரூ. 20 ஆகிறது. அதே விலைக்கு, யாருக்கும் லாபம் இன்றித் தருகிறோம். எழுத்தாளருக்கும் இதில் ராயல்டி போகப்போவதில்லை; பதிப்பகத்துக்கும் இதில் பணம் ஏதும் கிடையாது. இதற்கு டிஸ்கவுண்டும் கிடையாது. இந்தப் புத்தகக் கண்காட்சியிலேயே 10,000 பிரதிகளும் விற்றுவிடும் என்று நம்புகிறோம்.


அதன்பின், இந்தப் புத்தகம் அதன் நார்மல் விலையான ரூ. 80/-க்குக் கிடைக்கும்.

கிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு
எப்படி ஒரு வணிக நிறுவனம் இந்தியா என்ற மாபெரும் நாட்டைப் பிடித்தது என்பது. என்னதான் வலிமை குறைந்துபோனது என்றாலும் முகலாய அரசர்களின்கீழ் பெரும் படைகள் இருந்தன. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்த பல அரசர்களின்கீழும் பெரும் படைகள் இருந்தன. முகலாய அரசர்களிடமே பீரங்கிகள் இருந்தன. திப்பு உள்பட, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசர்களிடமும் துப்பாக்கிப் படைகளும் பீரங்கிகளும் இருந்தன.

ஆனாலும் கிழக்கிந்தியக் கம்பெனியால் இந்தியாவின் பெரும் பகுதியை எளிதில் சுருட்டிச் சாப்பிட முடிந்தது.

இது ஒரு குழப்பம்.

மற்றொன்று, கம்பெனி இந்தியாவுக்கு வந்தது வியாபாரம் செய்யத்தானே? அதை கிட்டத்தட்ட நூறாண்டுகளாக ஒழுங்காகச் செய்துவந்தவர்கள் ஏன் திடீரென நாடு பிடிக்க ஆரம்பித்தார்கள்? நாடு பிடிக்கத் தொடங்கியதும் வியாபாரத்துக்கு என்ன ஆனது? வியாபாரம் இன்னும் நன்றாக நடந்ததா? (என்றால் இல்லை என்பதுதான் பதில்!)

எந்த நிமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி நாட்டைக் கைப்பற்ற ஆரம்பித்ததோ அந்த நிமிடத்திலிருந்தே அதன் அழிவு ஆரம்பித்தது. அதே நேரம் இந்தியா சந்தித்த அழிவோ பேரழிவாக இருந்தது.

இது இரண்டாவது குழப்பம்.

அடுத்து, பிரிட்டனில் என்னதான் நடந்துகொண்டிருந்தது? எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நாட்டைக் கைப்பற்றவேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றமோ அரசியோ/அரசரோ திட்டமிடவில்லை. ஆனால் அது நடக்க ஆரம்பித்ததும், அவர்கள் எப்படி ரியாக்ட் செய்தார்கள்? பிரிட்டிஷ் அறிவுஜீவிகள் இதனை எதிர்த்தார்களா? பொதுமக்கள் இதனை ஆதரித்தார்களா அல்லது எதிர்த்தார்களா? ஏதேனும் விவாதம் நடந்ததா? பத்திரிகைகள் என்ன சொன்னார்கள்?

இந்தியாவிலிருந்து செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு பிரிட்டனுக்கு வந்தது என்றால் யாருக்குப் போனது? பிரிட்டன் முடியாட்சிக்கா, நாடாளுமன்றத்துக்கா, மக்களுக்கா, அல்லது கம்பெனியின் பங்குதாரர்களுக்கா?

நிச்சயமாக பிரிட்டிஷ் மக்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் பயன் அடைந்திருக்கின்றனர். அதில் இந்தியர்களின் ரத்தம் தோய்ந்துள்ளது. ஆரம்பகட்டத்தில் கம்பெனியின் செயல்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து எதிர்ப்பு இருந்தாலும், அதிலிருந்து அரசுக்கு நேரடியாகக் கிடைக்கும் பணம் முக்கியத் தேவையாக இருந்ததால், அறவுணர்வுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதுபற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளன.

கார்ப்பரேட் ஊழல் என்பதன் அடிப்படையை கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்பாடுகளில் காணலாம். ஆனாலும், பெரும்பாலான பிரிட்டிஷ் அறிவுஜீவிகள், ஊழல் என்பதே இந்தியாவில்தான் உருவானது என்பதுபோலவும் இந்தியர்கள் அனைவருமே வெறுக்கத்தக்க ஊழல்வாதிகள் என்பதுபோலவும் பேசியுள்ளனர்.

நிக் ராபின்ஸ் ஆங்கிலத்தில் எழுதியிருந்த இந்தப் புத்தகத்தை சென்ற புத்தகக் கண்காட்சியில் ஒரியண்ட் பிளாக்ஸ்வானில் வாங்கிப் படித்தேன். அதன்பின் எழுத்தாளரையும் பதிப்பாளரையும் தேடிப் பிடித்து இந்தப் புத்தகத்தை மொழிமாற்றும் உரிமையைப் பெற்றோம். ராமன் ராஜா மொழிமாற்றம் செய்துள்ளார். (சீனா விலகும் திரை, திருப்புமுனை, பாகிஸ்தான் போகும் ரயில் ஆகியவற்றுக்கு அடுத்து...)

கொஞ்சம் கனமான புத்தகம். பிரிட்டிஷ் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. பொருளாதாரம் சார்ந்து எழுதப்பட்டது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களைச் சொல்வதால் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமாகிறது.

Thursday, January 5, 2012

கிழக்கிலிருந்தும் பொன்னியின் செல்வன்

சென்ற ஆண்டு நாங்கள் கொண்டுவந்திருந்த சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய இரண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இம்முறை அவற்றுடன் சேர்த்து, பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் கொண்டுவந்துள்ளோம். இவை நல்ல தாளில் அச்சானவை. ஐந்து பாகங்களும் சேர்த்து மொத்தமாக வாங்கினால் ரூ. 899/- தனித்தனியாகவும் வேண்டிய பாகங்களை வாங்கிக்கொள்ளலாம். அப்படி வாங்கிச் சேர்த்தால், மொத்தம் ரூ. 1,100/- ஆகும்.
Tuesday, January 3, 2012

சென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்

ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை புத்தகக் கண்காட்சி, புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது.  பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் உள்ளது இந்தப் பள்ளி.

இந்த ஆண்டு, கிழக்கு பதிப்பகம் இரண்டு ‘4-ஸ்டால்’களைக் கொண்டுள்ளது. F-7, F-20 ஆகிய இரண்டும் ஸ்டால் எண்கள். இரண்டிலுமே கிழக்கு பதிப்பகத்தின் அனைத்துப் புத்தகங்களையும் (கிழக்கு, வரம், நலம், ப்ராடிஜி, மினிமேக்ஸ், தவம்) வாங்கலாம். கூடவே நாங்கள் விநியோகிக்கும் புத்தகங்களான கீழ்க்கண்டவையும் கிழக்கு ஸ்டால்களில் கிடைக்கும்:

1. வைரமுத்து புத்தகங்கள்
2. லிஃப்கோ அகராதிகள், சில பக்திப் புத்தகங்கள்
3. மீனாட்சி அம்மாள் சமையல் புத்தகங்கள்
4. சுகாவின் தாயார் சந்நதி
5. மங்களம் ராமமூர்த்தி எழுதியுள்ள வரலாற்றுப் புதினமான நந்தி நாயகன்
6. கபிலன்வைரமுத்துவின் புத்தகங்கள்

உடையும் இந்தியா? - நூல் வெளியீட்டு விழா
முதலாவது, ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ‘உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்’ என்ற புத்தகத்துக்கான அறிமுக விழா, ஜனவரி 3, 2012 அன்று தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. இதனை நடத்துபவர்கள் தமிழ் ஹிந்து அமைப்பினர். புத்தகத்தை பத்ரி சேஷாத்ரி அறிமுகம் செய்கிறார். பின்னர் பேரா. சாமி தியாகராஜன், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கிருஷ்ண பறையனார், இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றிய தியாக. சத்தியமூர்த்தி, கல்வெட்டாளர் எஸ். இராமச்சந்திரன், பாஜகவின் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் பேசுகிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்.