Search This Blog

Loading...

Tuesday, June 18, 2013


நீயா நானா? (இந்திய - சீன வல்லரசுப் போட்டி)

ஆசிரியர் : ராகவ் பஹல்மொழிபெயர்ப்பு : சரவணன், மகாதேவன்


பக் : 384; விலை: 200/-


21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்கு இந்தியாவும் சீனாவும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. இந்த இரண்டு தேசங்களின் வரலாறை ஆதியில் இருந்து இன்றைய காலகட்டம்வரை மிக விரிவாக, துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் ராகவ் பஹல்.சீனாவின் பலங்கள் என்னென்ன... பலவீனங்கள் என்னென்ன? இந்தியாவின் பலங்கள் என்னென்ன... பலங்கள் என்னென்ன? கல்வி, மருத்துவம், அரசியல், மின்சாரம், ரயில்வே, சமூகக் கட்டமைப்பு என ஒவ்வொரு துறையாக அக்குவேறு ஆணி வேறாக அலசியிருக்கிறார். 
புத்தகத்திலிருந்து...
 நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் ஜிம் ஓ நீல் 2001-ல் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் பிரிக் நாடுகள் (BRIC countries) என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தினார். அதாவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா இந்த நான்கு நாடுகளை ஓர் அணியாக அவர் குறிப்பிட்டிருந்தார். ...


·          இந்த நான்கு நாடுகளின் கூட்டணி 2025 வாக்கில் ஜி-6 நாடுகளின் பொருளாதாரத்தில் பாதியை எட்டிவிடும்.

·          இன்னும் 40 வருடங்களில் ஜி-6 நாடுகளை மிஞ்சிவிடும்...

·          வெறும் சாதாரண கொள்கைகள் மூலமே இதைச் சாதித்துவிடும். அதிரடியாக எதுவும் செய்யத் தேவையே இல்லை.

·          அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய கார் சந்தையாக அமெரிக்காவின் இடத்தை சீனா பிடித்துவிடும்.

·          பிரிக் நாடுகளில் இந்தியாவுக்குப் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. 2025 வாக்கில் இந்தியாவின் தற்போதைய ஜி.டி.பி. 50 மடங்கு அதிகரித்து 25 டிரில்லியன் டாலர் அளவைத் தொட்டுவிடும்.

 பிரிக் நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி சுவாரசியமாக இருப்பதற்கு காரணங்கள் உண்டு. 17,18ம் நூற்றாண்டுகளில் சீனாவும் இந்தியாவும் வல்லரசுகளாக இருந்தன. பொருளாதார வரலாற்று நிபுணர் ஆங்கஸ் மேடிசனின் ஆய்வின்படி, 1600-ல் சீனா, இந்தியாவின் ஜி.டி.பி. உலக ஜி.டி.பி.யில் பாதி அளவுக்கு இருந்தது. (சீனா 28%, இந்தியா23%). ஆனால், அடுத்த 200 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளின் குடியேற்ற ஆட்சியால் இரு நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது. கடந்த சில பத்தாண்டுகளாக இரு நாடுகளும் திமிறி எழ ஆரம்பித்துள்ளன. 1770-ல் பள்ளத்தில் இறங்கிய அந்த அலை மேல் நோக்கி உயர ஆரம்பித்துள்ளது.


 இந்தப் புத்தகத்தைவாங்க

Monday, June 17, 2013

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

ஆசிரியர்: கமலா வி முகுந்தா
தமிழில் : ராஜேந்திரன் 
பக் : 328; விலை: 250
ஆசிரியர் தொழிலில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவமும் உளவியல் துறையில் நிபுணத்துவமும் பெற்ற கமலா வி முகுந்தா, குழந்தைகள் கற்றுக் கொள்வதில் இருக்கும் பல்வேறு நுட்பங்களை எளிய நடையில் விவரித்திருக்கிறார். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல ஆசிரியராக விரும்பினால், உங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை நரகமாகக் கருதாமல் சொர்க்கமாக மதித்து உற்சாகமாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்பினால் இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் நல்ல வழி காட்டும்.
முன்னுரையில் இருந்து
இந்தப் புத்தகம் உண்மையில் ஆசிரியர்களுக்கானதுதான். ஆனால், குழந்தைகளின் கல்வி தொடர்பாக இயங்கும் அனைவருக்கும் இது நிச்சயம் பயன்படும். ஒரு ஆசிரியர் என்றவகையில் என் மாணவர்களின் கற்றுக்கொள்ளும் திறன், உணர்வு நிலை இவைபற்றி நிறைய அறிந்துகொள்ள விரும்புவேன்.
ஒரு மாணவருக்கு ஒரு குறிப்பிட்ட பாடம் மிகவும் சிக்கலாக இருக்கும். இன்னொருவருக்கு ஒரு பாடத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். இன்னொருவர் தனது திறமைக்கு ஏற்ப செயல்படாமல் இருப்பார். வேறொருவரோ  எதிலும் கவனத்தைக் குவிக்க முடியாமல் தவிப்பார். சில நேரங்களில் நாம் இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு வழியைக் கண்டுபிடித்து மேற்கொண்டு நம் பணிகளில் ஈடுபட ஆரம்பிப்போம். ஆனால், பெரும்பாலும் அந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயேதான் இருக்கும்.
அன்றாடப் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு உருவாகும் கேள்விகள் மிகவும் ஆழமானவையாகவும் அடிப்படையானவையாகவும் இருக்கும். இவற்றுக்கான பதில் பெரும்பாலும் தெரிந்திருக்காது.  ஆனால், எல்லாரையும் போலவே ஆசிரியர்களும் தங்களுக்கு சரியான பதில் கிடைத்தாக வேண்டும் என்று விரும்புவார்கள். நாம் வாசித்தவை, நம் அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் கற்றுக் கொடுப்பது, குழந்தை வளர்ப்பு, உற்சாகமூட்டுதல், புத்திக்கூர்மை, ஒழுங்கு, உணர்ச்சி நிலை தொடர்பான நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறோம்;தீர்மானங்களை எடுக்கிறோம். அவற்றின் அடிப்படையில் செயல்பட ஆரம்பிக்கிறோம்.
ஆசிரியரின் நம்பிக்கைளும் தீர்மானங்களும் மிகவும் வலுவானவை. நாம் சொல்வதற்கு அப்படியே அனைவரும் கீழ்படியவேண்டும் என்பதையே எப்போதும் எதிர்பார்க்கிறோம். இது சரியல்ல. பல ஆசிரியர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை வார்த்தைகளாகச் சொல்லியிருக்கவே மாட்டார்கள். எனினும் அதை இறுகப் பற்றியபடியிருப்பார்கள். நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்கு எளிதில் புரியவரும். 
·                     அனைவரும் ஒரே மாதிரியான புத்திக்கூர்மையுடன் இருப்பதில்லை.
·                     கற்றல் என்பது வேடிக்கை நிறைந்ததாக இருக்கவேண்டும்.
·                     வகுப்பறையில் பன்முகத்தன்மை என்பது ஒரு பிரச்னையான விஷயம்.
·                     குழந்தைகளைத் தன்னிச்சையாக சிந்திக்கும் வகையில் வளர்த்தெடுக்கவேண்டும்.
·                     பெரியவர்களைப் போல் குழந்தைகள் சிந்திக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
·                     யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொண்டுவிட முடியும்.
·                     யதார்த்த உலகில் வாழ குழந்தைகள் கற்றுக்கொண்டாகவேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் தமக்கான வேகத்தில் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்லது.
மேலே தரப்பட்டிருக்கும் ஒவ்வொரு வாக்கியத்திலிருந்தும் பல்வேறு தீர்மானங்கள் முளைத்து எழுகின்றன. நம் நம்பிக்கைகள் உண்மையாக இருந்தால் நம் செயல் சரியாக இருக்கும் என்று ஒருவர் சொல்லலாம். ஆனால், கல்வி, கற்றல் தொடர்பாகப் பார்க்கும்போது, உண்மையான வாக்கியங்கள் என்று பெரிதாக எதையும் சொல்லிவிட முடியாது. எந்த ஒரு விஷயத்தையும் இறுகப் பிடித்துக் கொள்வது ஆசிரியர்களான நமக்கு நல்லதல்ல.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)

உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ராமச்சந்திர குஹாவின் India After Gandhi ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு.

இந்திய வரலாறு : காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)





இந்தியா ஒரே அமைப்பாக இருக்க முடியுமா? துண்டாடப்படுமா?
விசாலமான தேசம், 524 மில்லியன் மக்கள், பிரதானமாக வழக்கிலுள்ள பதினைந்து மொழிகள், மாறுபடும் மனங்கள், பல இனங்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது இப்படி ஒரு தேசம் உருவாகக் கூட முடியுமா என்ற மலைப்பே ஏற்படும்.
மாபெரும் இமய மலை, வெயிலால் சுட்டெரிக்கப்பட்டு, ஆக்ரோஷமான மழையால் அடித்து நொறுக்கப்பட்ட விரிந்து பரந்த இந்திய – கங்கைச் சமவெளி, வெள்ளம் புரளும் கிழக்கின் பசுமை நிறைந்த டெல்டா, மாபெரும் நகரங்களான கல்கத்தா, பம்மாய், சென்னை போன்றவற்றை உள்ளடக்கிய இந்த நாட்டை நினைத்துப் பார்ப்பதே கடினமாக உள்ளது. இருந்தபோதிலும் இந்த நாட்டில் நிலைக்கக்கூடிய ஏதோ ஒரு கட்டுமானம் காணப்படுகிறது. அதை இந்திய உணர்வு என்று மட்டுமே விளக்கமுடியும்.
ஆசியாவின் தலைவிதியே இதன் வாழ்வில்தான் இருக்கிறது என்று நாம் நம்புவது மிகையல்ல.


- பிரிட்டிஷ் பத்திரிகையாளர் டான் டெய்லர் (1969ல்)

நடுநிலையுடன் எழுதப்பட்ட விரிவான, சுவாரஸ்யமான புத்தகம்
- Spectator


புத்தகங்கள், தனிப்பட்ட கடிதங்கள், பத்திரிகைச் செய்திகள், பிரசுரங்கள், அரசாங்க ஆவணங்கள் என்று அலபாமா முதல் அலகாபாத் வரை கொல்கத்தா முதல் கலிஃபோர்னியா வரை பரவிப் படர்ந்திருக்கும் தகவல்களைத் தேடித் தேடிச் சேகரித்து இந்த சுவாரஸ்யமான புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் குஹா.
- Daily Telegraph


வரலாற்றுச் செய்திகள் நிறைந்த பெரும் படைப்பு என்றாலும் ஒரு துப்பறியும் நாவலைப் போல் வாசித்துவிட முடியும்.
Time out Mumbai

இந்தியாவைப் பற்றி பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால், இதைவிடச் சிறந்த புத்தகம் இருந்துவிட முடியாது.
- Sunday Telegraph.

இந்தியாவின் ஜனநாயக வெற்றியைக் கொண்டாடும் அதே நேரம் இந்தியாவின் தோல்விகளையும் சறுக்கல்களையும் சுட்டிக்காட்டவும் இந்தப் புத்தகம் தவறவில்லை.
 Sunday Times.

இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு.
ஆசிரியர் : ராமச்சந்திர குஹா
மொழிபெயர்ப்பு : ஆர்.பி. சாரதி.
பாகம் 1 : பக்கங்கள் 640
விலை: 350
பாகம் 2 :
பக்கங்கள் : 640
விலை: 385


ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

Friday, June 14, 2013

பிரபல கொலை வழக்குகள் - துக்ளக் விமர்சனம்


19-6-2013 தேதியிட்ட துக்ளக்கில் வெளியான விமர்சனம்.

பிரபல கொலை வழக்குகள் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-787-9.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 | 9445 979797

பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை

உளவுத் துறையான ராவில் கால் நூற்றாண்டு காலம் உயர்பொறுப்பு வகித்து, ஓய்வுபெற்ற அதிகாரி பி. ராமனின் இந்தப் புத்தகம், பயங்கரவாதத்தின் வேர்களை தேடிச் செல்வதோடு பாதுகாப்பான இந்தியா உருவாவதற்கான வழிமுறைகளையும் சொல்லித்தருகிறது.

0

இன்றைய உலகில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரிய அச்சுறுத்தலாகப் பயங்கரவாதம் உள்ளது. கைகளால் பயன்படுத்தப்படக் கூடிய ஒற்றைப் பரிமாண அபாய ஆயுதங்களில் தொடங்கி, சட்ட விரோத வெடி பொருட்கள், மனித வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள், நாசத்தைத் தூண்டும் கருவிகளாக செல்போன்கள், விமானக் கடத்தல், இணையதளம் வாயிலான தாக்குதல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இன்று உருவெடுத்துள்ளது.

இன்றைய பயங்கரவாதம், நேற்றைய பயங்கரவாதத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்திலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இன்றைய நிலையில், ஒடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தோ பொருளாதார, சமூகரீதியில் நலிவடைந்த குடும்பங்களிலிருந்தோ பயங்கரவாதிகள் உருவாவதில்லை. சமூக அந்தஸ்து உள்ள, வசதியான குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலும் தோன்றுகின்றனர். அவர்கள் நல்ல கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய தலைவர்கள் இப்போது அவர்களைத் தமது விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கையாள முடியாது.

பயங்கரவாதிகளில் பலர் மருத்துவர்களாகவோ பொறியியல் வல்லுனர்களாகவோ தகவல் தொழில்நுட்ப நிபுணர்களாகவோ உள்ளனர். பெருவாரியான மக்களைப் படுகாயப்படுத்துவது சரியா தவறா என்று மூளையைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதேநேரம் தாக்குதல்களை நன்கு திட்டமிட்டு, கச்சிதமாக அரங்கேற்றுகின்றனர். நவீனத் தொழில்நுட்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். எனினும், அதற்கு அவர்கள் அடிமையாக இருப்பதில்லை. நாளுக்கு நாள் அவர்கள் செயல்படும் விதம் மாறிக்கொண்டே இருக்கிறது.

0

அவர்களுடைய மனப்பான்மை, சிந்தனை முறை, திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துவதற்கு அவர்களிடம் உள்ள வசதிகள் ஆகியவை குறித்து நாம் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். விழிப்பு உணர்வுடன் இருப்பது என்றால் தயாராக இருப்பது என்று பொருள். அவர்களைப் பற்றிய விழிப்பு உணர்வை எவ்வாறு உருவாக்குவது? அவர்களை மக்கள் முன்னாலும் ஆட்சியாளர்கள் முன்னாலும் கொண்டு போய் நிறுத்துவது எப்படி? முட்டாள்தனமாக அவர்களுடைய சமூகத்தைத் தீய சக்தியாகச் சித்திரிக்காமல் அவர்களைத் திறம்படக் கையாள்வது எப்படி? இவையே இன்று நம் முன்னால் உள்ள மிகப் பெரிய கேள்விகள்.

இன்று அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களின் சில முக்கிய பரிமாணங்கள் குறித்து ஆராய்வதும் அதன் மூலம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுமே இந்த நூலின் பிரதான நோக்கங்கள். இதற்காக, நான் எனது முந்தைய நூல்களிலிருந்தும் சர்வதேச மாநாடுகளில் நான் ஆற்றிய உரைகளிலிருந்தும் சில பகுதிகளை எடுத்து இங்கே தந்துள்ளேன். 

அவையனைத்தும் காலவாரியாகப் புதுப்பிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. சில புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் முழு விளக்கம் கொண்டதாக அமைக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன். எனவே, வாசகர்கள் சில விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள, நூலை முன்னும் பின்னும் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. 

0


ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

Thursday, June 13, 2013

காஷ்மிர் : முதல் யுத்தத்தின் கதை

சுதந்தரம் பெற்ற காலம் தொடங்கி இன்று வரை தீராத பிரச்னையாக காஷ்மிர் நீடித்துவவருவதற்கான காரணங்களை அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம் ஆண்ட்ரூ வைட்ஹெட் எழுதி பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்த்திருக்கும் காஷ்மிர்: முதல் யுத்தம்.

புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.

0

நான் அவரை முதன்முதலாகச் சந்தித்தபோது அவருக்கு 91 வயது ஆகியிருந்தது. அறுபது வருடங்களுக்குமுன் நடந்த சம்பவங்-களை நினைவுகூர்ந்தபோது சோகம் கலந்த புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்தது. பாரமுல்லாவில் கிறிஸ்தவ மடாலயத்-தின்மீது நடைபெற்ற தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்களில் எமிலியா மோண்ட்வானியும் ஒருவர். இன்று-வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்னை-யின் முதல் தீப்பொறி அவர் கண்முன்னால்தான் பற்றவைக்கப்-பட்டது. அரை நூற்றாண்டு ஆனபிறகும் அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில், இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோட்டுக்கு அருகில் இருக்கும் அந்த மடாலயத்திலேயே வசித்து வந்தார்.

இமயமலைச் சரிவில் வசித்த அவருடைய சோகக் கதை, உலகின் புவி-அரசியல் யுத்தங்களில் மிக மோசமான ஒன்றின் சரித்திரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. காஷ்மீரைப் பாகிஸ்தானுக்காக வென்றெடுக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்-பட்டனர்? யார் அவர்களுக்குத் தலைமை தாங்கியது? தங்கள் இலக்கில் அவர்கள் எதனால் தோல்வியுற்றனர்? இவைபற்றி இதுவரை யாரும் சொல்லியிராத தகவல்களை எமிலியா என்னுடன் பகிர்ந்துகொண்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கின்மீது உரிமை கொண்டாடுபவர்கள் சொல்லும் சரித்திரங்களை அது சந்திக்கு இழுக்கிறது. தேசியக் கதையாடல்கள், எல்லைக் கோடுகள் என்று பொதுவாகப் பேசப்படும் விஷயங்களுக்கு மாற்றாக இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு மனிதர்களின் நினைவுகள், எதிர்பார்ப்புகள், வேதனைகள் ஆகியவற்றை மையத்துக்குக் கொண்டுவருகிறது.

0

வன்புணர்ச்சி பற்றிய விவரங்களை அருட்சகோதரியிடம் கேட்கும் மன தைரியம் அன்று என்னிடம் இல்லை. வயது முதிர்ந்த இத்தாலிய அருட்சகோதரி எமிலியா, அன்று நடந்த சம்பவங்களை பெரும் உற்சாகத்துடன் சாகசக் கதை ஒன்றைச் சொல்லும் பாணியில் விவரித்தார். ஆனால், நினைவின் கண்ணி-கள் வயதின் முதிர்ச்சியினால் வலுவிழக்கத் தொடங்கியிருந்தன. இப்போதும் அந்தச் சம்பவங்கள் கொடுங்கனவுகளாக வந்து அவரது தூக்கத்தைக் கலைத்துக்கொண்டிருப்பதாக இன்னொரு கன்யாஸ்திரீ சொன்னார். 1947-ல் பாரமுல்லா கிறிஸ்தவ மடாலயத்தில் இருந்த கன்யாஸ்திரீகளில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற எல்லாருமே ஐரோப்பியர்களாக இருந்தனர். இப்போது, ஐம்பது வருடங்கள் கழித்து அந்த மடாலய மருத்துவமனையில் இருந்த ஒரே ஓர் ஐரோப்பியர் எமிலியா மோண்ட்வானி மட்டுமே. 1930-ல் அவர் இந்தியா வந்தார். செயிண்ட் ஜோசப் மருத்துவமனைக்கு 1933-ல் வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 28. அறுபது வருடங்களுக்கும் மேலாக அதுவே அவருடைய வீடாக இருந்து வந்திருக்கிறது.

தாடியுடன், கறுப்புத் தலைப்பாகை அணிந்து, ஆயுதங்களைத் தாங்கியபடி அருட்சகோதரியின் கொடுங்கனவுகளில் வந்து மிரட்டிக்கொண்டிருப்பவர்கள் பதான் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆஃப்கனிஸ்தானுக்கு அருகில் இருக்கும் பாகிஸ்-தானின் வட மேற்கு எல்லைப் பகுதியில் இருந்து புறப்பட்டு வந்த லஷ்கர் கொள்ளைக்கூட்டத்தினர். இஸ்லாத்தின் பெய-ராலும் பாகிஸ்தானின் பெயராலும் அந்த வன்முறைகளில் ஈடு-பட்டனர். இந்த மலைவாழ் மக்கள் அன்றும் இன்றும் பழங்-குடியினர் என்றே அறியப்படுகின்றனர். பழங்குடி இன, குல அடையாளங்கள், பழக்க வழக்கங்கள், விதிமுறைகள், மத அடையாளம், பெருமிதம் ஆகியவையே அவர்களுடைய இன்றைய வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன.

0

காஷ்மீரில் அமைதி திரும்பவேண்டும் என்று செயிண்ட் ஜோசப் மடாலயத்தில் தினமும் பிரார்த்தனை செய்வதாகக் கன்யாஸ்திரீ ஒருவர் சொன்னார். ‘ஆனால், உண்மையான அமைதி திரும்ப இன்னும் வெகு தூரம் போகவேண்டும். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது’ என்றார் அவர்.

0

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க.

ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

Wednesday, June 12, 2013

தலாய் லாமா : ஆன்மிகமும் அரசியலும்

தலாய் லாமா தேர்வு செய்யப்படுவதில்லை, கண்டுபிடிக்கப்படுகிறார்.
இந்தத் தேடல் தியானத்தில் தொடங்குகிறது. திபெத்தில் உள்ள ஒரு புனித ஏரியின் பெயர் லாமோ லாட்சோ. இந்த ஏரியை பால்டன் லாமோ என்னும் தேவதை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. தலாய் லாமாவைத் கண்டெடுக்கும் முன்பு, இந்த ஆற்றங்கரையில் அமர்ந்து ரீஜெண்ட்கள் தியானம் செய்வது வழக்கம். தியானம் செய்பவரின் கனவில், தேவதை தோன்றுவார். அடுத்த தலாய் லாமாவை அடையாளம் காட்டுவார்.

இன்ன இடத்தில் அவர் வசிக்கிறார் என்று தேவதை கை காட்டுவதில்லை. மாறாக, சில குறிப்புகளைத் தேவதை அளிப்பார். சங்கேத வடிவில் அவை அமைந்திருக்கும். உதாரணத்துக்கு, ஏரிக்கு அருகில் ஒரு பள்ளம் தோன்றி அதற்கு மேலே மேகங்கள் பல வடிவங்களில் தோன்றும். இந்த வடிவங்கள் அனைத்தும் குறிப்புகள். அடுத்த தலாய் லாமா யார் என்பதற்கான விடை இதில் அடங்கியிருக்கும். இந்தக் குறிப்புகளைச் சரியான முறையில் உள்வாங்கிக்கொண்டால், விளக்கங்கள் கிடைக்கத் தொடங்கும்.

ஒவ்வொரு தலாய் லாமாவும் ஒவ்வொரு விதமாக அடையாளம் காட்டப்படுவார். பீடத்தில் இருக்கும் தலாய் லாமா இறந்துவிட்டால்,  அவரை எரிக்கும் புகை எந்தத் திசையில் செல்கிறது என்பதை குறித்து வைத்துக்கொள்வார்கள். குறிப்பிட்ட திசையில்  உள்ள பகுதிகளை ஆராய்வார்கள். அங்கே உள்ள குழந்தைகளை உன்னிப்பாகப் பார்வையிடுவார்கள். சோதனைகள் செய்வார்கள். பிறகு, முடிவெடுப்பார்கள்.

முன்னரே பார்த்தபடி, டென்சின் கியாட்சோ பிறந்தபோதே, சில அடையாளங்கள் பளிச்சென்று வெளியில் தெரிந்துவிட்டன. தந்தை குணமானது, மழை பொழிந்தது ஆகிய இரு சம்பவங்கள் போக மூன்றாவதாக இன்னொரு அதிசயமும் நடந்தது. மறைந்த பதின்மூன்றாம் தலாய் லாமாவின் பூத உடல் தங்க சிம்மாசனத்தில் உடகாரும் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இரவு நேரம் திடீரென்று அவர் தலை தெற்கில் இருந்து கிழக்கே திரும்பியது. சரி செய்தனர். மீண்டும், தலை கிழக்கில் திரும்பியபோது புரிந்துவிட்டது.  கிழக்கு திசையை நாம் கவனிக்கவேண்டும்.

டென்சிங் கியாட்சோவின் ஊர் இருந்தது மிகச் சரியாக, கிழக்கில்.  பதினான்காம் தலாய் லாமாவைத் தேர்வு செய்ய திபெத் தேசிய பாராளுமன்றம் ரீஜெண்ட் ஒருவரை நியமித்து பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தது. அவர்தான் புதிய தலாய் லாமாவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். சரி, யார் இந்த ரீஜெண்ட்கள்?

0

டென்சிங் கியாட்சோ லாமா பயன்படுத்திய பொருள்களை மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்திருந்தான். போலியான பொருள்கள் மேஜை மீதே கிடந்தன. சிறிது நேரத்தில், டென்சிங் மேஜையை நெருங்கினான்.

‘இவை எனக்கு வேண்டாம்!’

போலியான பொருள்களை மேஜையில் இருந்து கீழே தள்ளிவிட்டான்.

ரின்போசேவுக்கு நம்பிக்கை பிறந்தது.  இவன்தான். இல்லை, இல்லை, இவர்தான்.

அப்போது, டென்சிங் கியாட்சோ, ‘சேரா லாமா, சேரா லாமா’ என்று தன்னை மறந்து உச்சரிக்க ஆரம்பித்தான்.

இது, உள்ளூர் மடத்தில் இருந்து வந்து குழுவில் இணைந்துகொண்டவரின் பெயர். ரின்போசே இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இன்னும் ஓரே ஒரு சோதனைதான் பாக்கி. சிறுவனின் உடலில் உள்ள அங்கத் தழும்புகளையும், மச்சங்களையும் உறுதி செய்து விட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

பரிசோதனை செய்தார். எதிர்பார்த்தபடி, கியாட்சோவுக்கு இரு பெரிய காதுகள், தோள்பட்டையில் இரண்டு சிறிய வீக்கங்கள் இருந்தன. புருவங்கள் இறுதியில் வளைந்திருந்தன, கால்களில் புலிக்கு இருப்பது போன்ற வரிகள் காணப்பட்டன. உள்ளங்கைகளில் சங்கு போன்ற வரிகள் இருந்தன.

ரெட்டிங் ரின்போசே முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

‘வந்த காரியம் நிறைவேறி விட்டது. இந்தச் சிறுவன் எல்லாப் பரிசோதனைகளிலும் வென்று விட்டான். இவன்தான் அடுத்த தலாய் லாமா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’

0

ஜனனி ரமேஷ் எழுதிய தலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும் என்னும் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் மேலே உள்ளன.  திபெத் தன்னாட்சி உரிமைப் போராட்டத்தின் வரலாறும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 

ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

Monday, June 10, 2013

தமிழக அரசியல் வரலாறு - இரு பாகங்கள்

ஆர். முத்துக்குமார் எழுதிய தமிழக அரசியல் வரலாறு நூலில் இருந்து ஒரு பகுதி கீழே. முதல் பாகம், சுதந்தரம் தொடங்கி எமர்ஜென்ஸி வரையிலும், இரண்டாவது பாகம் எம்ஜிஆர் ஆட்சிக்காலம் தொடங்கி 2000 வரையிலுமான காலகட்டத்தையும் ஆராய்கிறது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க :

பாகம் ஒன்று
பாகம் இரண்டு

ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

0

இந்தியாவில் இந்திக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படும் பிராந்திய மொழி தெலுங்கு. அதில் தெலுங்கர்களுக்கு பெருமை, பெருமிதம். அந்த அடிப்படையில் தங்களுக்கென்று தனி மாநிலம் வேண்டும் என்று நீண்டகாலமாகப் போராடிக் கொண்டிருந்தனர். மொழிவாரி மாகாணப் பிரிப்புக்கு ஆந்திரர்கள் வைத்ததுதான் ஆரம்பப்புள்ளி.

சென்னை மாகாண முதல்வராக இருந்த டி. பிரகாசத்துக்கு ஆந்திரப் பிரிவினையில் அதிகபட்ச ஆர்வம். முதல்வராக இருந்தபோதே ஆந்திரர்களுக்கு ஆதரவாகப் பாரபட்சத்துடன் நடந்துகொண்டார் என்ற விமரிசனம் அவர்மீது இருந்தது. ஆனாலும் ஆந்திரப் பிரிவினையில் அவர் எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ளவில்லை. ஆந்திரக் கேசரி என்று அவரைக் கொண்டாடியதற்கும் அதுதான் காரணம்.

விண்ணப்பம். மனு. கோரிக்கை. எதுவும் பலன் கொடுக்காததைத் தொடர்ந்து ஆந்திரப் பிரிவினையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்தார் ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த சீதாராம். இவர் அரசியல்வாதியாக இருந்து சாமியாராக அவதாரம் எடுத்தவர். ஐந்து வார காலத்துக்கு நீடித்தது சீதாராமின் உண்ணாவிரதம். பிறகு வினோபா பாவேயின் தலையீட்டால் உண்ணாவிரதம் முடிவுக்கு
வந்தது. எந்தப் போராட்டத்துக்கும் பிரதமர் நேரு அசைந்துகொடுக்கவில்லை.

ஆந்திரர்களின் கோபம் வெடித்தது. அது 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் தெறித்தது. ஆந்திரப் பகுதிகளில் பிரிவினை கோஷமே தேர்தல் பிரச்னையாக முன்வைக்கப்பட்டது. ஆந்திர கோரிக்கையைக் கண்டுகொள்ளாத நேரு பிரசாரத்துக்கு வந்தபோது கறுப்புக் கொடிகளை எதிர்கொண்டார். தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி. ஆந்திரப் பிரிவினையை வலியுறுத்திய கட்சிகளின் கழுத்தில் வெற்றிமாலைகள். சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

தேர்தலுக்குப் பிறகு ஆந்திர கோரிக்கை மேலும் வலுவடைந்தது. மீண்டும் சுவாமி சீதாராமே களமிறங்கினார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இளைஞர்களே, ஆந்திராவுக்காக உயிரைக்கொடுக்கத் தயாராகுங்கள் என்றார். சென்னை மாகாண சட்டமன்றத்தில் இருக்கும் தெலுங்கு பேசும் உறுப்பினர்கள் சபையைப் புறக்கணியுங்கள். சாலைக்கு வந்து போராடுங்கள் என்றார். கட்சி என்ன சொல்கிறது, நேரு என்ன சொல்கிறார் என்பது பற்றித் துளியும் கவலைப்படாமல் ஆந்திரப் பகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிவினை கோஷம் எழுப்பினர். தெலுங்கானா விஷயத்தில் இன்று நடப்பதுதான் அன்றும் நடந்தது.

சிக்கல் என்னவென்றால் ஆந்திரப் பிரிவினையில் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த நேரு, ராஜாஜி இருவருமே ஆந்திரப் பிரிவினைக்கு எதிரானவர்கள். ஆகவே, ஆந்திரர்களுக்கும் எதிரிகளானார்கள். உச்சக்கட்டமாக, ஆந்திரப் பகுதிக்குச் சுற்றுப்பயணம் சென்ற ராஜாஜி மீது தார் வீசப்பட்டது. அதற்கு ராஜாஜியின் எதிர்வினை சுவாரஸ்யமானது. தாரைக் கொண்டு ஆந்திராவை உருவாக்கமுடியும் என்று நம்பினால் அய்யோ பாவம்!

பிரிவினைப் போராட்டங்கள் நாளுக்கு நாள் சூடுபிடித்தன. உச்சக்கட்டமாக உண்ணாவிரதம் தொடங்கினார். சுவாமி சீதாராம் அல்ல; இன்னொருவர். பெயர், பொட்டி ஸ்ரீராமுலு. ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த இவருக்கு ஆந்திரப் பிரிவினையில் அதிக நாட்டம். சுவாமி சீதாராமின் ஆசியுடன் 19 அக்டோபர் 1952 அன்று சென்னையில் உண்ணாவிரதம் தொடங்கினார். செய்திகள் கசியத் தொடங்கவே ஆந்திரப் பகுதிகளில் எழுச்சி ஏற்பட்டது. ஏராளமான ஆந்திரர்கள் ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவு கொடுத்தனர். மணி, நாள், வாரம் என்று எந்தவித இலக்குகளையும் ஸ்ரீராமுலு நிர்ணயித்துக் கொள்ளவில்லை. ஒரே இலக்கு, ஆந்திர தேசம் அல்லது மரணம். ஆறு வாரங்களைக் கடந்தும் உண்ணாவிரதம் நீடித்தது. ஸ்ரீராமுலுவின் உடல்நிலை மோசமடைந்தது.

விஷயம் பிரதமர் நேருவுக்கும் சென்றது. உண்மைகளால் மட்டுமே பிரச்னைகளைத் தீர்க்கமுடியும், உண்ணாவிரதங்களால் அல்ல என்பது நேருவின் வாதம். ஆகவே உண்ணாவிரதத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆந்திராவுக்காக ஏதோ ஒரு உண்ணாவிரதம் நடக்கிறதாம். தந்திகள் வருகின்றன. அந்தப் பிரச்னையை நான் முற்றிலுமாகக் கவனிக்கப் போவதில்லை என்று ராஜாஜிக்குக் கடிதம் எழுதினார் நேரு.

உடல்நிலை பலவீனமடைந்த நிலையிலும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. போராட்டத்துக்கான ஆதரவு பெருகியது. ஆந்திர இளைஞர்கள் சாலைக்கு வந்தனர். மாணவர்களும் வந்துசேர்ந்தனர். எந்நேரமும் வன்றை வெடிக்கலாம். ஏதோ ஒரு உண்ணாவிரதம் என்று நினைத்த நேருவின் மனத்துக்குள் முதன்முறையாக பயம் எட்டிப்பார்த்தது. வன்முறைகளைத் தவிர்க்கவேண்டும், என்ன விலை கொடுத்தாவது. எனில், அது ஏன் ஆந்திரப் பிரிவினையாக இருக்கக்கூடாது?

நேருவின் மனம் பிரிவினைக்குத் தயாராகியிருந்தது. உடனடியாக ராஜாஜிக்குக் கடிதம் எழுதினார் நேரு. ஆந்திரப் பிரிவினைக்கு அவசியம் வந்துவிட்டது என்பதுதான் கடிதத்தின் சாரம். தூக்கிவாரிப்போட்டது ராஜாஜிக்கு. ஆந்திரப் பிரிவினையின் தீவிர எதிர்ப்பாளர் அவர். ஆம். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானைப் பிரித்துக்கொடுப்பதுதான் நியாயம் என்று போராடிய ராஜாஜிதான்; பிரிவினைக்கான காரியங்களை முன்னின்று செய்து காங்கிரஸ்காரர்கள் சிலரின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்ட
அதே ராஜாஜிதான். காலம் மாறியிருந்தது; ராஜாஜியும் மாறியிருந்தார். பாகிஸ்தானுக்கு வாசல் திறந்துவிட்ட ராஜாஜி, ஆந்திரப் பிரிவினைக்குத் தடுப்புச்சுவராக நின்றுகொண்டிருந்தார்.

பிரிவினைக்குத் தயாராகியிருந்த பிரதமர் நேருவை அமைதிப்படுத்தும் வகையில் கடிதம் ஒன்றை எழுதினார் ராஜாஜி. அவசரம் வேண்டாம். முதலில் பேச்சுவார்த்தை நடத்தலாம். பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்தைப் பின்னால் நின்று இயக்குபவர் சுவாமி சீதாராம். அவரை உடனடியாக டெல்லிக்கு அழைத்துப் பேசுங்கள். நிச்சயம் சூழ்நிலை மாறும். ஆந்திர இளைஞர்கள் எளிதில்  உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். கவனம். இதுதான் நேருவுக்கு ராஜாஜி கொடுத்த யோசனை.

கடிதத்தைப் படித்துவிட்டுக் காரியத்தில் இறங்குவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. ஆந்திராவுக்காக அன்னம் தொடாமல் ஐம்பத்தெட்டு நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பொட்டி ஸ்ரீராமுலு 15 டிசம்பர் 1952 அன்று கனவுகளைக் கண்களில் ஏந்தியபடியே மரணம் அடைந்தார். ஒட்டுமொத்த ஆந்திராவையும் உலுக்கிப் போட்டது அந்த மரணச் செய்தி. அடுத்தது என்ன நடக்குமோ என்று எல்லோருமே நடுங்கினர், நேரு உள்பட.

மரணத்துக்கான எதிர்வினைகள் பலமாகக் கேட்டன. நேரு பயந்தது நடந்தது. ராஜாஜி எச்சரித்ததும் நடந்தது. ஆந்திரா கொந்தளித்தது. பயங்கர வன்முறை. ஆந்திரப் பகுதி பற்றி எரிந்த 19 டிசம்பர் 1952 அன்று இந்திய நாடாளுமன்றம் கூடியது. பிரதமர் நேரு பேசினார். அந்தப் பேச்சில் இரண்டு விஷயங்கள் இருந்தன. ஆந்திர மாநிலம் விரைவில் உருவாகும். ஆந்திராவின் தலைநகர் எது, உயர்நீதிமன்றத்தை எங்கே அமைப்பது என்பது பற்றி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி வாஞ்சு ஆய்வு செய்து முடிவெடுப்பார். வருத்தம் தோய்ந்த முகத்துடன் அறிவிப்பை வெளியிட்டார் நேரு. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் முக்கியமானவை. குளவிக் கூட்டைக் குலைத்து விட்டோம்; இனி நம்மில் பலர் கடுமையாகக் கொட்டப்படுவோம். அதுதான் நடந்தது.

தனி ஆந்திராவை மட்டும் அவர்கள் கோரவில்லை. புதிய மாநிலத்தின் தலைநகராக சென்னைதான் இருக்கவேண்டும் என்று அடம் பிடித்தனர். மதராஸ் மனதே! என்ற கோஷத்தையும் சேர்த்து எழுப்பினர்.
சென்னை நகரை முற்றிலுமாக ஆந்திராவுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் கூவம் நதியை மையமாகக் கொண்டு சென்னையை வடசென்னை, தென் சென்னை என்று பிரிக்கவேண்டும். வட சென்னையை ஆந்திராவுக்குக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் முடியாது என்றால் சென்னை நகரை இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக அறிவிக்கவேண்டும். மேற்கண்ட எதற்குமே வாய்ப்பு இல்லாத பட்சத்தில் சென்னை எங்களுக்கும் வேண்டாம், அவர்களுக்கும் வேண்டாம். தன்னாட்சி பெற்ற பகுதியாக அறிவித்துவிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார் டி. பிரகாசம்.

ஆந்திர கேசரி வெளியிட்ட அந்த அறிக்கை குழப்பத்தின் உச்சம். ஆந்திர கோரிக்கையில் இருந்த நியாயம் சென்னை கோரிக்கையில் இல்லை என்பது அறிக்கையில் அப்பட்டமாகத் தெரிந்தது. முழுதும் வேண்டும் அல்லது பாதியாவது வேண்டும் என்றெல்லாம் கூறி வீம்புக்கு கோரிக்கை வைத்தனர். வீம்புக்குப் பதிலடி கொடுக்க புதிய கோஷம் ஒன்று ஒலித்தது. தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்! உபயம்: மயிலாப்பூர் பொன்னுச்சாமி சிவஞானம் என்கிற ம.பொ. சிவஞானம்.

சென்னை கோரிக்கையை ஆந்திரர்கள் எழுப்பியதால் தமிழர்கள் திருப்பதி வேண்டும் என்று கோஷத்தை உரக்க எழுப்பிப் போராடத் தொடங்கினர். திருப்பதி மட்டுமல்ல, திருவாலங்காடு, கனகம்மா சத்திரம், திருத்தணி, புத்தூர் நகரி, ஏகாம்பரக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளும் ஆந்திரப் பகுதிக்குச் சென்றுவிட்டன. அவை அனைத்தையும் மீட்டெடுக்கும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார் ம.பொ.சி.

சென்னை நகரை எந்தக் காரணத்தை முன்னிட்டும் விட்டுத்தர முடியாது என்று சொன்ன ம.பொ.சி, தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தினார். அவற்றுக்குப் பலத்த ஆதரவு கிடைத்தது. முக்கியமாக, முதல்வர் ராஜாஜியிடம் இருந்து. எனினும், நேரு இறங்கிவந்துவிட்டதால் ராஜாஜியும் இறங்கி வரவேண்டிய சூழல். எனினும், சென்னை நகரை ஆந்திரர்கள் கோரியது முதல்வர் ராஜாஜியை ஆத்திரப்படுத்தியது. ஆனாலும் அமைதியாக ஆலோசனை ஒன்றைக் கொடுத்தார்.

ஒரு அறையில் இருந்து வெளியேற முடிவுசெய்து விட்டபிறகு அங்குள்ள தூணைப் பிடித்துக் கொண்டால் ஒருகாலத்திலும் அங்கிருந்து வெளியேற முடியாது!

ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்று அறிவித்தபிறகும் தலைநகர் பிரச்னை உருவானதை நேரு ரசிக்கவில்லை. 25 மார்ச் 1953 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய நேரு, 1 அக்டோபர் 1953 அன்று புதிய ஆந்திர மாநிலம் அமையும்; அதன் தலைநகர் ஆந்திர நாட்டின் எல்லைக்கு உள்ளேயே இருக்கும் என்றார். இதன் அர்த்தம், சென்னை நகரம் தமிழ்நாட்டுக்கே சொந்தம், ஆந்திராவுக்கு அல்ல!

1 அக்டோபர் 1953 அன்று தாற்காலிகத் தலைநகரான கர்நூலில் புதிய ஆந்திர மாநிலத் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் இருவருமே ஆந்திரர்களின் ஆகப்பெரிய எதிரிகள். நேரு மற்றும் ராஜாஜி. விண்ணப்பத்தில் தொடங்கி உண்ணாவிரதத்தில் வளர்ந்து வன்முறையில் உதித்துவிட்டது புதிய ஆந்திர மாநிலம்!

0

தமிழக அரசியல் வரலாறு
ஆர். முத்துக்குமார்
தொலைப்பேசி வழியாக வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

Friday, June 7, 2013

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும் - குருமூர்த்தி

எஸ்.குருமூர்த்தி, அரசியல், பொருளாதாரச் சிந்தனையாளர். மார்க்சியம், மார்க்கெட் பொருளாதாரம் ஆகியவை பற்றிய அவருடைய சமீபத்திய புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கு செல்லவும். ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234.

***

மார்க்ஸியச் சிந்தனையின் ஊற்றுக்கண் என்று ஹெகலைக் கருதலாம். ஆனால் மார்க்ஸுக்கும் ஹெகலுக்கும் இடையே உள்ள தொடர்பு இத்தோடு நின்றுவிடுகிறது. மார்க்ஸ் தன் கருத்தியலின் மிச்சப் பகுதியான புரட்சிக்கு வேறு மூலங்களைத் தேடவேண்டியிருந்தது. சோஷலிசம், வளங்களின் பொதுவுடைமை, கம்யூனிசப் புரட்சிக்கான மாதிரி என அனைத்தையும் மார்க்ஸ், கிறிஸ்தவ உலகின் இடைநிலைக் காலப் புரட்சியிலிருந்து தனக்குப் பொருத்தமாக எடுத்தாண்டார். அவற்றை, ஜெர்மனியின் அனாபாப்டிஸ்டுகளின் அனுபவத்திலிருந்து அவர் எடுத்துக்கொண்டார்.

மார்க்ஸ் பிற்காலத்தில் தொகுத்த கட்டமைப்பு இல்லாமலேயே 1534-ம் வருடம் ஜெர்மனி நாட்டின் வெஸ்ட்ஃபாலியாவின் மன்ஸ்டர் நகரில் ஒரு கம்யூனிசப் புரட்சி நடந்தேறியது.

தொடக்க காலக் கம்யூனிசப் புரட்சியை கொண்டுவந்த சமயப் புரட்சியாளர்கள் ‘அனாபாப்டிஸ்டுகள்’ என்று அழைக்கப்பட்டனர். அனாபாப்டிஸ்டு என்றால் மீண்டும் ஞானஸ்நானம் செய்யப்பட்டவர் (மீண்டும் கிறிஸ்தவராகப் பிறந்தவர்) என்று பொருள். மார்க்ஸியத் தத்துவத்தின் உருவாக்கமும் புரட்சிக்கான கருத்தியலும், ஒரு கிறிஸ்தவ சமயத் தோன்றல் என்பதைப் புரிந்துகொள்ள அனாபாப்டிஸ்டுகள் எப்படி உருவானார்கள் என்று அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அனாபாப்டிஸ்டுகளின் வருகையை உள்வாங்கிக்கொள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான ‘எஸ்கட்டாலஜி’ எனும் இறுதித் தீர்ப்பு அல்லது காலத்தின் முடிவு பற்றி நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பூமியில் ஆண்டவனின் ஆட்சி நிறுவப்பட்டு உலகம் அழியப்பெறும் என்பதையே இந்த நம்பிக்கை முன் நிறுத்துகிறது. ஆண்டவனின் ஆட்சி எப்போது பூமியில் நிறுவப்படும்? உலகம் முழுவதும் கிறிஸ்தவமயமாக்கப்பட்ட பின்பு, வேறு எந்தச் சமயமும் பூமியில் இல்லாதபோது இது நடக்கும். இந்த முழுமை பெற்ற ஆட்சியும் சமுதாயமும்தான் ஹெகலுக்கு ஊக்கம் அளித்ததா? உலகின் முடிவுக்கான கிறிஸ்தவ சமயவியல் அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், அனாபாப்டிஸ்ட் புரட்சியின் பின்னணியை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

ஐரோப்பிய வரலாற்றுப் பாதை முழுவதிலும், ஓர் ஒற்றைச் சிந்தனை பல நூற்றாண்டுகளாக அரசியல், சமய அமைப்புகளை இயக்கிக்கொண்டிருக்கிறது. அது விவிலிய நம்பிக்கையான உலகத்தின் முடிவு எனப்படும் எஸ்கட்டாலஜி. கிறிஸ்தவ உலகின் பல சிந்தனையாளர்கள் பல்வேறு சமயங்களில், உலகின் முடிவு நெருங்கிவிட்டது என்று நம்பினார்கள். ஆனால் அது நடக்குமுன், சரியாகச் சொல்வதானால் அது நடக்கவேண்டுமானால், ஏசு கிறிஸ்து திரும்பவும் வந்து பூமியில் ஆண்டவனின் ஆட்சியை நிறுவி இந்த உலகை ஆயிரம் ஆயிரம் காலம் ஆட்சி செய்வார் என்று நம்பப்பட்டது. ஆனால் ஏசு நாதரின் திருவருகை மற்றும் ஆண்டவனின் ஆட்சி நிறுவப்படுதல் எல்லாம் தானாகவே இறைவனின் அருளாலே நடக்கப் பெறாது. கிறிஸ்தவர்கள் முயன்று உலகைத் தயார்ப்படுத்தவேண்டும். அதாவது பொய்யான மதங்களையெல்லாம் களைந்து ஒரே ஓர் உண்மையான மதமான கிறிஸ்தவத்தைக் கொண்டு உலகைத் தூய்மைப்படுத்தவேண்டும். ஏசு நாதரின் மறுவருகைக்கு உலகைத் தகுதியானதாக வேண்டும்.

அனாபாப்டிஸ்டுகள் என்போர் புராட்டெஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். அவர்கள் மிகவும் கட்டுப்பாடு உடையவர்கள், எளிமையானவர்கள், முழுமையான சமயப்பற்று உடையவர்கள். இறையுணர்வு, சமயப்பற்று ஆகியவை காரணமாக அனாபாப்டிஸ்டுகள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் நடந்துகொண்டிருந்த பல தவறான விஷயங்கள் அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தன. கிறிஸ்தவர்கள் ஒழுக்க நெறி இன்றி, இறைப்பற்று இல்லாமல், விவிலிய நூல்களைச் சரிவரப் பின்பற்றாமல் இருக்கிறார்கள் என்று அனாபாப்டிஸ்டுகள் நினைத்தனர். இந்தக் காரணத்தால்தான் ஏசு கிறிஸ்து தன் இறையாட்சியை நிறுவ பூமிக்கு மறுவருகை தரவில்லை என்று அவர்கள் முழுமையாக நம்பினார்கள்.

ஆகவே சூழ்நிலையைச் சரிக்கட்ட ஒரு புரட்சிகரமான அணுகுமுறை தேவை என்று அவர்கள் நினைத்தனர். கிறிஸ்துவின் வருகை விரைவில் நடக்கப்போகும் நிகழ்வு; ஆனால் அது நடவாததற்குக் காரணம் கிறிஸ்தவர்கள் ஏசுவின் மறு வருகைக்குத் தகுதியாகும் அளவுக்கு நல்லொழுக்கத்தோடு இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அரசாட்சியைப் பிடிக்க அவர்கள் முடிவு செய்தனர். 1534-ம் ஆண்டு வெஸ்ட்ஃபாலியாவில் உள்ள மன்ஸ்டர் நகரின் ஆட்சியை அனாபாப்டிஸ்டுகள் கைப்பற்றினர்.

அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் கம்யூனிஸ்டுகள் என்னவெல்லாம் செய்தார்களோ அவற்றை மிகத் துல்லியமாக அனாபாப்டிஸ்டுகள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே செய்தனர். விவிலிய நூல்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் எரித்தனர். எல்லாச் சொத்துகளும், நம்பினால் நம்புங்கள் பெண்கள் உட்பட, சமூகத்தின் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. பலதார மணம் சட்டமாக்கப்பட்டது. தன்னுடையது மட்டுமே (பெண்கள் உட்பட) என்று ஒருவர் உடைமை பாராட்டினால் அது ஏசு கிறிஸ்துவின் வருகையைத் தாமதப்படுத்தும் என்பது அனாபாப்டிஸ்டுகளின் உறுதியான நம்பிக்கையாகும். (பொருள் மற்றும் மனிதர்கள்) உடைமை பற்றிய உணர்வு இல்லாத உலகமே முழுமையான உலகம். இப்படிப்பட்ட உலகுக்குத்தான் ஏசு கிறிஸ்து திரும்பி வருவார் என்பது அவர்கள் நம்பிக்கை. எல்லாம் பொதுவுக்குச் சொந்தமாக இருக்கவேண்டும். இதனால் தனிப்பட்ட உடைமை என்று ஏதும் இருக்கக்கூடாது.

எல்லாமே எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் அனாபாப்டிஸ்டுகள் ஓராண்டு காலம் ஆட்சி செலுத்தினர். அதன்பின்னர் ராணுவத்தின் உதவியோடு லுத்தரன் சர்ச்சினால் முறியடிக்கப்பட்டனர்.

முந்தைய அனாபாப்டிஸ்டுகள், பிந்தைய கம்யூனிசம் இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. முற்றிலும் சமயமார்க்கமான அனாபாப்டிஸ்டுகள் அடைய விழைந்ததையும் அதை எந்த வகையில் செய்யவேண்டும் என்று முனைந்தார்களோ அதே குறிக்கோளையும் பொருள்முதல்வாத மார்க்சியமும் தனதாகக் கொண்டிருந்தது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அனாபாப்டிஸ்டுகளின் முன்மாதிரிகளையே மார்க்சியமும் பின்பற்றியது. கம்யூனிசக் கட்டமைப்பு, சித்தாந்தம் (கம்யூனிச ஊழியர்களுக்கான பயிற்சி உட்பட) மற்றும் கம்யூனிசத்தில் புரட்சிகரமான உட்பொருள் என எல்லாமே அனாபாப்டிஸ்டுகளிடமிருந்து தருவிக்கப்பட்டது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மனத்தில் கொள்ளவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், பொது யுகத்தின் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பா எங்கும் பெரும் குழப்பம், வன்முறை, போர்கள் என நிறைந்து இருந்தன. அங்கு கடந்த 2,000 வருடங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் இவற்றின் காரணமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 90 சதவீதக் கொலைகளுக்கு கிறிஸ்தவ உலகின் கருத்துகள், சித்தாந்தங்கள், கோட்பாடுகள் ஆகியவையும் அவற்றின் அடிப்படையில் செயல்பட்ட ஆதரவாளர்களுமே மூல காரணம். ஆக உள்ளுறை இறுக்கங்களையும் வலியையும் வெளிப்படுத்தும் சமுதாயமாக இருந்தது ஐரோப்பா. இப்படிப்பட்ட வன்முறை நிறைந்த கடந்த காலத்திலிருந்து விடுபடும் வலுக்கட்டாய முயற்சிதான் மார்க்சிய சித்தாந்தத்தை உருவாக்கியது.

மார்க்சிய சித்தாந்தம், தான் உருவான சூழலில் நிலைகொண்டிருந்த வன்முறை இழையைத் தொடர்ந்து நிகழ்த்தியது. ஆக, எப்போதும் குழப்பமும் இறுக்கமும் நிறைந்த சமுதாயத்தின் விளைபொருள்தான் கம்யூனிசம்.

கம்யூனிசத்தையும் அதன் வீழ்ச்சியையும் புரிந்துகொள்வதற்கு இந்த அறிதல் மிக முக்கியமானது.

***

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்
எஸ். குருமூர்த்தி
தமிழில்: வானமாமலை
இணையத்தில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-957-6.html
தொலைப்பேசி வழியாக வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

Thursday, June 6, 2013

வஞ்சக உளவாளி - பர்மியப் போராளிகளை இந்தியா வஞ்சித்த கதை

பர்மாவின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பலர் போராடிவந்தனர். அதில் சிலருக்கு இந்திய ராணுவம் ஆயுதங்கள் வழங்கியும் பிறவகைகளில் உதவியும் வந்தது. திடீரென ஒரு நாள் இந்திய ராணுவம், பர்மியப் போராளிகள் சிலரைச் சுட்டுக் கொன்றது. 36 பேரைக் கைது செய்து அந்தமான் சிறையில் அடைத்தது.

அந்தக் கைதிகளை விடுவிக்கும் பணியில்,  புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியும் வழக்கறிஞருமான நந்திதா ஹக்சர் இறங்கினார். அந்தப் போராட்டத்தின்போது, பர்மா பிரச்னையைப் பற்றியும் இந்திய ராணுவத்தின் சில அசிங்கமான பகுதிகளையும் அவர் அறிந்துகொண்டார். அது தொடர்பாக அவர் எழுதிய புத்தகமே Rogue Agent என்பது. அதன் தமிழாக்கம் கிழக்கு பதிப்பகம் வாயிலாக ‘வஞ்சக உளவாளி’ என்று வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்தவர் அ. குமரேசன். அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கே செல்லவும். தொலைப்பேசியில் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234.

***

ஜெனரல் ஆங் சான் 1947 ஜூலை 19 காலை 10.37 மணிக்கு ஒரு கொலையாளியின் தோட்டாவுக்கு இரையானார். ரங்கூனில் தலைமைச் செயலகம் இருந்த செங்கல் கட்டடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டிருந்தபோது இது நடந்தது. அப்போது அவருக்கு வயது 32 மட்டுமே. அவருக்கு மனைவி கின் கி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூன்று சிறு குழந்தைகள் இருந்தார்கள். அந்த ஒரே மகள்தான் ஆங் சான் சூச்சீ. அந்த தினத்தன்று, முஸ்லிம் அரசியல் தலைவரான யு ரஜாக், ஜெனரலை ஆதரித்த கரேனியத் தலைவர்களில் ஒருவரான மான் பா கய்ங், ஷான் இளவரசர் சாவோ சாம் ஹ்துன் ஆகியோர் உள்ளிட்ட 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

யு நூ பர்மாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார். 1948 முதல் 1962 வரையில் முறையானதொரு நாடாளுமன்ற ஜனநாயகம் பர்மாவில் இருந்து வந்தது. எனினும், உண்மையில் உள்நாட்டுப் போர்தான் நடந்துகொண்டிருந்தது. யு நூ தலைமையை நிராகரித்த பர்மா கம்யூனிஸ்ட் கட்சி, ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டது. 1950-களில் சீனாவின் கோமின்டாங் படையினர் மாவோவின் செம்படைத் தாக்குதலிலிருந்து தப்பி ஓடிவந்து ஷான் பகுதியில் தஞ்சம் புகுந்தனர். அது அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கியது. சிறுபான்மை இனங்களோடு நடந்துவந்த பேச்சுவார்த்தைகள் நின்றுபோயின. கரேன், மோன், கச்சின் இனத்தவர்கள் தங்களுக்குத் தனி நாடு தேவை என்ற கோரிக்கையை மறுபடியும் எழுப்பினார்கள்.

யு நூ, 1956-ல் புத்த மதத்தை பர்மாவின் அரச மதமாக அறிவித்தார். பசு மாடுகள் கொல்லப்படுவதற்குத் தடை விதித்தார். ஈத் பண்டிகையின்போது மாடு வாங்க முஸ்லிம்கள் சிறப்பு அனுமதி பெறவேண்டியதாயிற்று. பாசிச எதிர்ப்பு மக்கள் சுதந்தரக் கட்சியிலிருந்து (ஏ.எப்.பி.எப்.பி.) பர்மா கம்யூனிஸ்ட் கட்சியும் பர்மா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் விலக்கப்பட்டதற்கு அவர்தான் காரணம். அந்தக் கட்சி தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் உருவானதுதான் பர்மா முஸ்லிம் காங்கிரஸ். அதன் தலைவர் யு ரஜாக். அவர் ஒரு அறிஞர். பாலி மொழியை நன்கு அறிந்தவர். புத்த மறைநூல்களைப் படித்தறிந்தவர். 1948-ல் பர்மாவின் ஆட்சி அதிகாரத்தை பிரிட்டன் கைவிட்டதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க இருந்த ஆங் சான் அமைச்சரவையில் யு ரஜாக் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்க இருந்தார். பர்மாவின் முஸ்லிம் சமூகத்தினருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு உறுதிமொழிகள் தரப்படுவதை அவர் எதிர்த்தார். முஸ்லிம் மக்கள் தங்கள் நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் தங்களது சமூக உரிமையைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக அறிவித்தார். முஸ்லிம் - பௌத்த மக்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார்.

சில ஆண்டுகள் கடந்தபின் முஸ்லிம்கள், பர்மிய முஸ்லிம் லீக் கட்சியை உருவாக்கினர். இதர சிறுபான்மையினருக்கான தனி அமைச்சகங்கள் போல முஸ்லிம்களின் நலன்களுக்காக ஒரு சிறப்பு அரசுத் துறை வேண்டும் என்று கோரினர். 1948 அக்டோபரில் யு நூ, மண்டல தன்னாட்சி விசாரணை ஆணையத்தை 6 கரேனியர்கள், 6 மோனியர்கள், 5 ஆரக்கானியர்கள், 7 பர்மன்கள், மேலும் 4 பேர்களைக் கொண்டு அமைத்தார். எனினும், பர்மா ஒரு புத்த மத நாடு என்ற அறிவிப்பு, பல தொடர்ச்சியான கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டது. கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க கச்சின், கரேன் படைகளை யு நூ பயன்படுத்தினார். ஒன்றிணைப்புக் கொள்கையை எதிர்த்து கச்சின், மோன், கரேன் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரிந்து செல்லும் உரிமையைப் பயன்படுத்தலாம் என்று 1947-ன் அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை சோதித்துப் பார்க்க ஷான் மக்கள் விரும்பினார்கள்.

ஜெனரல் நே வின், இந்த நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். ஜெனரல் ஆங் சானின் முப்பது தோழர்களில் ஒருவரான நே வின், 1962-ல் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி ஒன்றை அரங்கேற்றினார். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் சங்கக் கட்டடம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது. புரட்சி மன்றத் தலைவராகத் தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட நே வின், இரண்டாண்டுகளுக்குப் பிறகு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தடைவிதித்தார். அரசாங்கத்தைக் கைப்பற்றி, கூட்டாட்சி அமைப்பை ஒழித்துக் கட்டினார். 1974-ல் ஜெனரல் நே வின் ஆட்சியதிகாரத்தை மக்கள் சபை அமைப்புக்கு மாற்றினார். அவர் அறிவித்த அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டுக்கு, ‘பர்மா சோசலிசக் குடியரசு ஒன்றியம்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. நே வின், பர்மாவைத் தமது பர்மா சோசலிச திட்டக் கட்சியின் (பி.எஸ்.பி.பி) ஆளுகையில், ஒரு கட்சி சர்வாதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தார். இப்படியாக சோசலிசத்துக்கான பர்மிய வழியைத் தொடங்கிவைத்தார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆரக்கானின் ரோஹிங்கா முஸ்லிம்களுக்குக் குடியுரிமைகள் மறுக்கப்பட்டன. அரசுப் பணிகளிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டார்கள். அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது என்ற பெயரால் ஜெனரல் நே வின் தனது செயல்களை நியாயப்படுத்தினார். பர்மிய மக்களில் சிலர் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தார்கள். குறிப்பாக அவர் வரலாற்றுப் புகழ் பெற்ற முப்பது தோழர்களில் ஒருவர் என்பதால், அவரது நாட்டுப் பற்றை அவர்கள் சந்தேகிக்கவில்லை.

‘ஒரே ரத்தம், ஒரே குரல், ஒரே அதிகாரம்’ என்ற முழக்கத்தின்கீழ் ஒற்றை ஆதிக்க அரசை ஜெனரல் நே வின் ஏற்படுத்த முயன்றார். அவரது ஆட்சியில் ராணுவம் தனிப்பட்ட முறையில் ஜெனரலுக்கு விசுவாசமானதாகவும் சொந்த மக்களுக்கு எதிரானதாகவும் மாற்றப்பட்டது. சுய நிர்ணய உரிமைக்கான அனைத்து இயக்கங்களையும் ஒடுக்குவதே அதன் முக்கியப் பணியானது.

ராணுவ அதிகாரிகள் தங்களது சீருடைகளைக் களைந்துவிட்டு பி.எஸ்.பி.பி-யின் படைத்துறை சாராத தலைவர்கள் ஆனார்கள். அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட திட்டமிட்ட பொருளாதார அமைப்பில், பொருளாதாரத்தை நிர்வகிக்கிற வேலையையும் ராணுவமே எடுத்துக்கொண்டது. தனக்கென சொந்தத் தொழில் நிறுவனங்கள், வங்கி, கப்பல் போக்குவரத்து, வர்த்தகக் குழுமங்கள், சேவைத்துறை ஒப்பந்ததாரர்கள், பதிப்பகம், செய்திப் பத்திரிகை ஆகியவற்றை ராணுவம் தொடங்கியது. 1962 முதல் 1988 வரையில் நே வின் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சியில் நாடு மேலும் மேலும் ஏழைமை ஆனது. 1987-ல் பர்மாவை ஒரு வளர்ச்சியடையாத நாடு என ஐ.நா. அறிவித்தது.

1987 செப்டம்பர் 5 அன்று, ஜெனரல் நே வின் பர்மாவின் பணமான 25, 35, 75 கியாட் நோட்டுகள் செல்லாது என்று எவ்வித இழப்பீடும் இன்றி அறிவித்தார். அதனால் நாட்டில் புழக்கத்தில் இருந்த 75 சதவிகிதப் பணத்துக்கு மதிப்பில்லாமல் போனது. அந்த ஒரு நடவடிக்கை, கோடிக்கணக்கான மக்களின் சேமிப்பை மொத்தமாகத் துடைத்தழித்தது. அந்த நிகழ்வுதான் ரங்கூன் மாணவர்களின் போராட்டத்தை முடுக்கிவிட்டது. அந்தப் போராட்டம் மற்ற நகரங்களுக்கும் பரவியது.

ரங்கூன் தெருக்களில் அணிவகுத்த மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். 1988 மார்ச் 13 அன்று கலவரத் தடுப்புக் காவல்துறையினர் மாணவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் மாங் போன் மாவ் என்ற மாணவர் கொல்லப்பட்டார்.

அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் கியாண்டா மயானத்தில் கூடினார்கள். ஆனால், அவரது உடல் ஏற்கெனவே எரியூட்டப்பட்டுவிட்டது தெரியவந்தது. அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இன்செய்ன் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். கடும் ஒடுக்குமுறைகளையும் மீறி போராட்டங்கள் முடிவின்றித் தொடர்ந்தன.

1988 ஆகஸ்ட் 1 அன்று அனைத்து பர்மா மாணவர் ஜனநாயக லீக் ஒரு வேண்டுகோள் விடுத்தது. அதில் 1988 ஆகஸ்ட் 8 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. 8.8.88 என்ற அந்த நாள், நாடு தழுவிய எழுச்சியின் அடையாள நாளானது. அந்த நாளில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்த அடக்குமுறையையும் அநீதியையும் எதிர்த்து நாடே கொந்தளித்து எழுந்தது. இப்போது ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் வலியுறுத்தியவர்கள் மாணவர்கள் மட்டுமல்ல; துறவிகள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட நடிகர்கள், பாடகர்கள் என அனைவரும் ரங்கூன் தெருக்களுக்கு வந்து போராடினார்கள். ஆயிரக்கணக்கான பி.எஸ்.பி.பி உறுப்பினர்களும் கட்சியிலிருந்து வெளியேறினார்கள்.

1988 செப்டம்பர் 18-ல் பர்மிய ராணுவத்தின் ஜெனரல் சா மாங் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் எடுத்துக்கொண்டதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து எஸ்.எல்.ஓ.ஆர்.சி (அரசு சட்டம் ஒழுங்கு மீட்புக் குழு) ஏற்படுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றோர்மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாணவர்கள் தடுப்பு அரண்களை அமைத்தார்கள். ஆயினும் ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள், விடுதலை அடைந்த கரேன் பகுதிகளில் அடைக்கலம் புகுந்தார்கள். மற்றவர்கள் தாய்லாந்து எல்லைக்கு ஓடினார்கள். சிலர் இந்தியாவுக்குச் சென்றார்கள். தாற்காலிகமாகத்தான் இப்படித் தஞ்சம் புகுந்து வாழவேண்டியிருக்கும் என்று பலரும் நினைத்தார்கள். தாங்கள் அரசியல் அகதிகளாக வாழப்போவதன் தொடக்கம்தான் அது என்பதை அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

ஜெனரல் ஆங் சான் தலைமைக்குத் தானே வாரிசு என்று ஜெனரல் நே வின்னால் தொடர்ந்து சொல்லிக்கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாகக் கவனத்துடன் பின்னப்பட்ட அந்த மாயத்தோற்றம், முப்பது தோழர்களில் எஞ்சியிருந்த 11 பேர்களில் 9 பேர் அவருக்குக் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து கலைந்துபோனது.

ராணுவக் கும்பலின் தலைவர் ஜெனரல் சா மாங், கட்சியின் பெயரை தேசிய ஒற்றுமைக் கட்சி (என்.யு.பி) என்று மாற்றினார். யு நூ வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

***

வஞ்சக உளவாளி: பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம்
நந்திதா ஹக்சர்
தமிழில்: அ. குமரேசன்
இணையத்தில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-534-9.html
தொலைப்பேசி வழியாக வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459-01234