Search This Blog

Showing posts with label முகலாயர்கள். Show all posts
Showing posts with label முகலாயர்கள். Show all posts

Friday, June 28, 2013

முகலாயர்கள்

‘டெல்லி சென்ற எனது மகன் திரும்பவில்லை அரசரே.  இப்ராஹிம் லோடி அவனைச் சிறைப்படுத்திவிட்டான். அதுபோக லோடி வம்சத்தினருக்கு விசுவாசமாக இருந்த இருபத்து மூன்று முக்கிய மந்திரிகளை இப்ராஹிம் லோடி கொன்றுவிட்டான். ஆகவே தங்களது மேலான உதவியை நாடி வந்துள்ளேன். தாங்கள் இந்துஸ்தான் மீது படையெடுத்து வந்து, இப்ராஹிம் லோடிக்கு முடிவுகட்ட வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல, அவனால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினரின் விருப்பம்.’

பணிவோடு தௌலத் கான் லோடி சொன்ன வார்த்தைகள், பாபரின் கோபத்தைப் போக்கியிருந்தன. யோசிக்க ஆரம்பித்திருந்தார் அவர்.  அப்போதைக்கு ‘சரி. உதவுகிறேன்’ என்று தௌலத் கானிடம் சொல்லியனுப்பினார் பாபர்.

அடுத்த சில நாள்களிலேயே ரானா சங்காவின் தூதுவர் காபுலுக்கு வந்தார். கொண்டுவந்த செய்தி இதுதான். ‘தாங்கள் இந்துஸ்தான் மீது படையெடுக்க வேண்டும். அந்த இப்ராஹிம் லோடியை ஒழிக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். ராஜபுத்திரர்களின் சார்பாக நான் உங்களை அழைக்கிறேன்.’

0

‘உன் சகோதரர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காதே, அவர்கள் உனக்கு உண்மையாக இருக்கும்வரை.’ பாபர் சொல்லிவிட்டுச் சென்ற இந்தக் கடைசி வார்த்தைகள்தான் ஹுமாயூனுக்கு வினையாக அமைந்தன.

ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்த நல்ல நாளில் இருபத்து மூன்று வயது ஹுமாயூன் முகலாயப் பேரரசராக ஆக்ராவில் பதவியில் அமர்ந்தார் (டிசம்பர் 1530). பரந்து விரிந்த பேரரசு. பாபரது மரணம் ஆப்கன்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. டெல்லியைக் கைப்பற்ற காய்கள் நகர்த்த ஆரம்பித்திருந்தார்கள். இன்னொரு புறம் அவ்வளவு பெரிய பேரரசைக் கட்டியாளும் அளவுக்கு நிதி இல்லாத நிலை.

ஹுமாயூனுக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்னைகளே விஸ்வரூபமெடுத்து நின்றன. புதிய பகுதிகளைப் பிடித்து பேரரசை விரிவாக்குவதா? நிதி நெருக்கடியைச் சமாளித்து நிர்வாகத்தைச் சீரமைப்பதா? தலைதூக்கும் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டு இருப்பதைக் காப்பாற்றிக் கொள்வதா?

எல்லாவற்றையும் நானே என் தோளில் சுமப்பதால்தானே மூச்சு திணறுகிறது. எங்கே என் சகோதரர்கள்? வாருங்கள். இளையவன் கம்ரான். இங்கே வா. காபூலையும் காந்தஹாரையும் நீ கவனித்துக் கொள்.  சகோதரன் மிர்ஸா ஹிண்டால், அல்வாரையும் மேவாத்தையும் நீ நிர்வகி. சம்பலை நீ எடுத்துக் கொள் மிர்ஸா அஸ்காரி, யாரது? மிர்ஸா சுலைமானா? உடன்பிறக்காவிட்டாலும் நீயும் என்ற சகோதரன்தானே. பாதக்ஷனின் அரசாங்கத்தை நீ பார்த்துக் கொள். அனைவருக்கும் மகிழ்ச்சிதானே?

0

புத்தகங்களைவிட சிறுவன் அக்பருக்கு புறாக்களையும் பூக்களையும் பார்ப்பது பிடித்திருந்தது. ஹுமாயூன் புத்தகப் பிரியர். ஆனால் காபூலில் வளர்ந்த அக்பருக்குக் கல்வி கசக்கத்தான் செய்தது. கல்வி கற்றுக் கொடுப்பதற்கு என நியமிக்கப்பட்ட தனி ஆசிரியர், அக்பரை எழுத, படிக்க வைப்பதற்குள் திணறிப் போனார்.

குதிரையேறி வேகமாகச் செல்வது, காடு, மேடெல்லாம் சுற்றித் திரிந்து இயற்கையை ரசிப்பது, விதவிதமாக வேட்டையாடுவது, வாளெடுத்து நண்பர்களுடன் போர் புரிவது - இவை மட்டுமே அக்பருக்குப் பிடித்திருந்தன. எழுத்துகள் அல்ல. தன் பெயரை எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக் கொள்வதில்கூட அக்பர் ஆர்வம் காட்டவில்லை.

ஹுமாயூனின் இறப்புக்குப் பிறகு கலகம் எதுவும் ஏற்படாதபடி கவனித்துக் கொண்டார் தளபதி பைரம் கான். அடுத்து அக்பரை அரியணையில் அமர்த்த வேண்டும். சிறுவன்தான். வேறு வழியில்லை. அக்பர் அரியணையில் இருக்கட்டும், ஆட்சிப் பொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். முடிவெடுத்திருந்தார் பைரம் கான்.

டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தார் அக்பர். பஞ்சாபில் கலானௌர் என்ற இடத்தில் அவரைச் சந்தித்தார் பைரம் கான். தந்தை இறப்புக்கு முறைப்படி துக்கம் அனுஷ்டித்த அக்பர், பின்பு அரியணை ஏறத் தயாரானார்.

0

முகலாயர்கள்
முகில்
கிழக்கு பதிப்பகம்
496 பக்கம், விலை ரூ 325


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797