கிளியோபாட்ரா
முகில்
விலை : 125/-
பக் : 160
இந்தப்புத்தகத்தைஇணையத்தில் வாங்க
போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234
முகில்
விலை : 125/-
பக் : 160
இந்தப்புத்தகத்தைஇணையத்தில் வாங்க
போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234
புத்தகத்திலிருந்து...
‘தங்களைச் சந்திக்க
விரும்புகிறேன். சொந்த விஷயம். அனுமதி தேவை.’
சீஸருக்கு ரகசியமாக
கிளியோபாட்ராவிடமிருந்து தகவல் வந்து சேர்ந்தது. ‘எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்’ என்று சீஸர் பதில்
அனுப்பினார். கிளியோபாட்ரா,
பெரும்பாடுபட்டு
ஒரே ஒரு சிறிய படகை ஏற்பாடு செய்திருந்தாள். படகில் ஏறினாள். உடன், நம்பகமான சில
பணியாளர்கள் மட்டும். அதில் ஒருவன், அப்போலோடோரஸ் (Apollodorus). கிளியோபாட்ராவின் குறிப்பறிந்து பணி
செய்யும் நம்பகமான ஆள். ஆஜானுபாகுவான வீரன்.
சூரியன் மறைவதற்கு
முன்பாகவே அலெக்ஸாண்ட்ரியாவை நெருங்கி விட்டார்கள். கடலிலேயே காத்திருந்து, இரவானதும் கரையை அடைந்தார்கள்.
கொஞ்ச தூரம் நடை. அரண்மனை வளாகத்தை நெருங்கியதும், அப்போலோடோரஸ் தன் தோளில்
சுமந்துகொண்டிருந்த பெரிய கம்பளத்தைத் தரையில் விரித்தான்.
சீஸர் தங்கியிருந்த
மாளிகையை அப்போலோடோரஸ் அடைந்தான். வெளியில் ரோம் வீரர்கள்தான்
காவலுக்கிருந்தார்கள். எனவே பிரச்னையில்லை. இரு கைகளால் கம்பளத்தை ஏந்தியபடி, மாளிகையின்
நுழைவாயிலை நெருங்கினாள்.
‘என்னது இது?’ காவலர்கள் வழிமறித்துக் கேட்டார்கள்.
‘எகிப்தின் அரசி
அனுப்பியுள்ள பரிசுப் பொருள். சீஸரிடம் ஒப்படைக்க வேண்டும்.’
காவலர்கள் கொஞ்சம்
யோசித்தார்கள். பின் அனுமதி கொடுத்தார்கள். சீஸர் இருந்த அறையில் கம்பளத்துடன்
போய் நின்ற அப்போலோடோரஸ், ‘எகிப்தின் அரசி கிளியோபாட்ரா தங்களிடம் இதைத் தனியே
ஒப்படைக்கச் சொன்னார்’ என்றான்
ஏற்கெனவே
கிளியோபாட்ராவிடம் இருந்து செய்தி வந்திருந்ததால், அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று
புரிந்துகொண்ட சீஸர், தன் அறையில்
இருந்த பிறரை வெளியே போகச் சொன்னார். அவர்கள் கொஞ்சம் தயக்கத்துடன்
வெளியேறினார்கள். சீஸருக்கு எதுவும் ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்ற பயம். கதவு
சாத்தப்பட்டது. பின் அப்போலோடோரஸிடம், ‘இறக்கி வைத்துவிட்டுப் போகலாம்’ என்றார்.
கம்பளத்தைக் கவனமாகத்
தரையில் இறக்கிய அப்போலோடோரஸ், ‘தங்களிடம் இதைப் பிரித்துக் காண்பிக்கும்படி எனக்கு உத்தரவு’ என்றான்.
‘நானே பார்த்துக்
கொள்கிறேன்’ என்ற சீஸர், தன் உடைவாளை
உருவினார், கம்பளத்தின்
கட்டைப் பிரிக்க. அப்போலோடோரஸ் பதறினார், ‘பார்த்துப் பத்திரமாக. விலைமதிப்பில்லாத இந்தக்
கம்பளத்துக்கு எந்தவிதச் சேதாரமும் வந்துவிடக் கூடாது.’
‘கம்பளத்துக்கா அல்லது
அதனுள்ளிருக்கும் பொருளுக்கா?’ என்றபடி கட்டியிருந்த கயிறை வாளால் வெட்டி, கம்பளத்தின்
ஒருமுனையைப் பிடித்து மேல்நோக்கி இழுத்தார். உருண்டு விரிந்த கம்பளத்துக்குள்
இருந்து வெளிப்பட்டாள் கிளியோபாட்ரா.
‘எல்லாப் புகழும்
பெருமையும் கிளியோபாட்ராவுக்கே! சர்வ வல்லமை கொண்ட கடவுள் ஐஸிஸின் மகளுக்கு
வணக்கங்கள்! ஹோரஸ், ரா* கடவுள்களின்
வழிவந்த, எகிப்து
ராஜ்ஜியத்தின் தன்னிகரற்ற அரசி வாழ்க!’
அப்போலோடோரஸ்
கிளியோபாட்ராவை வாழ்த்தி,
பணிந்து
நின்றான். சீஸரின் விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன. குப்புறக் கிடந்த
கிளியோபாட்ரா, மெள்ளப்
புரண்டு படுத்தாள். மென்மையாகத் தன் கைகளைத் தரையில் ஊன்றி, மெதுவாக எழுந்து
உட்கார்ந்தாள். இடுப்பில் சின்னதாக வலி. சின்னதாக முகம் சுருக்கி கையால் நீவிக்
கொண்டாள்.
நீள்வட்ட முகம். நீள, நீலக் கண்கள். வளமான
புருவம். வளைவில் மிளிரும் நாசி. வில்வடிவ மேலுதடு. விளைந்த கனியாகக் கன்னங்கள். இளமை
மிதக்கும் பார்வை. செதுக்கிய கரங்கள். சிற்றிடை வளைவுகள். செழுமை கொண்ட அங்கங்கள்.
மினுமினுக்கும் சருமம். மிதமிஞ்சிய அழகு.
இவ்வளவு அழகானவளா
இவள்!
பல காலமாகப் போர், அரசியல், சூழ்ச்சி, வஞ்சகம், வன்முறை என்றே
தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த ஜூலியஸ் சீஸரின் ஐம்பத்தியிரண்டு வயது மனம், அந்த நொடியில்
இளமைக்குத் திரும்பியது.
‘கைகொடுக்க மாட்டீர்களா?’ அந்த இருபத்தியொரு வயது இனிமையான குரல்
கேட்டு சீஸர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். கிளியோபாட்ரா தன் கரம் ஒன்றை
நீட்டிக் கொண்டிருந்தாள். சட்டெனத் தன் கைகொடுத்துத் தூக்கி நிறுத்தினார். அந்த
முதல் ஸ்பரிசத்தில் அவருக்குள் பதிய ஆரம்பித்திருந்த முதுமையின் சுவடுகள் காணாமல்
போயிருந்தன. காதலனாகியிருந்தார்.
No comments:
Post a Comment