Search This Blog

Showing posts with label ஜே.ஆர்.டி.. Show all posts
Showing posts with label ஜே.ஆர்.டி.. Show all posts

Thursday, July 4, 2013

டாடா : நிலையான செல்வம்

டாடா : நிலையான செல்வம்
ஆர்.எம்.லாலா
தமிழில் :  B.R.மகாதேவன்
பக் : 368
விலை : ரூ 210




ஜம்சேட்ஜியாலும் அவருடைய வாரிசுகளாலும் இந்தியத் தொழில்மயமாதலின் அடித்தளம் எப்படிப் போடப்பட்டது என்பது குறித்த விரிவான ஆவணமான இந்த நூல், இன்றைய வர்த்தக உலகத்துக்கு முற்றிலும் மாறானதொரு உலகத்தின் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது. வெறும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், தேசத்தின் நலனுக்காக, சளைக்காத மனத்துடன் சாகசங்களில் ஈடுபட்டவர்களால் அந்த உலகம் நிரம்பியிருந்தது.
அவர்களுடைய இலக்குகள் உயர்வாக, தொலைநோக்குப் பார்வைகொண்டவையாக இருந்தன. புலிகள் சகஜமாக உலவும் மத்தியபிரதேசத்து சந்தா மாவட்ட வனாந்திரத்துக்குள்  சர் தோராப்ஜி டாடாவும் குழுவினரும் மாட்டுவண்டியில் இரும்புத் தாதுப் படுகையைத் தேடி மேற்கொண்ட பயணத்தை இந்தப் புத்தகம் நினைவுகூர்கிறது. 
1920-களில் டாடாவின் ஹைட்ரோ எலக்ட்ரிக் கம்பெனி மின்சாரம் தயாரித்தபோது அதை வாங்க யாரும் முன்வரவில்லை. ஜவுளி ஆலைகளில் அப்போது பயன்பாட்டில் இருந்த பழைய வெந்நீர் கொதிகலன்களை விலை கொடுத்து வாங்கிக்கொள்வதாக டாடாவினர் உத்தரவாதம் தந்த பிறகே அவர்கள் மின்சாரத்தை வாங்க முன்வந்தனராம். மின்சாரப் பற்றாக்குறை மிகுந்திருக்கும் இன்றைய இந்தியாவால் இதை நினைத்துப் பார்க்கவேமுடியாதுதான்.
விமானப் பயணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே என்று இருந்த ஒரு காலகட்டத்தில் ஜே.ஆர்.டி. மக்களுக்கான விமானப் போக்குவரத்தை ஆரம்பித்தார். இந்தியாவை அது ஒன்றிணைக்கும் என்ற தொலைநோக்குப் பார்வை அவருக்கு 1932-லேயே இருந்தது. பிறகு 1948-ல் ஆசிய நாடுகளுக்கு இடையிலான முதல் விமான நிறுவனமான ஏர் இந்தியா இண்டர்நேஷனலை ஆரம்பித்தார்.
சோடா சாம்பல் தயாரிப்பு சூத்திரத்தை வெகு சொற்ப அயல்நாட்டு நிறுவனங்கள் தங்கள் வசம் ரகசியமாக வைத்திருந்தன. அந்தச் சூத்திரத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒரு சாதனையைப் படைத்தது. அதைத் தொடர்ந்து வந்த பல வருடப் பஞ்சத்தையும் நிறுவனம் மூடப்பட்டுவிடும் என்ற வதந்தி மேகங்களையும் அந்தச் சாதனை சிதறடித்தது. தர்பாரி சேத்தின் தலைமையில் இயங்கிய அந்த நிறுவனம், இயன்ற இடங்களில் எல்லாம் கடலில் இருந்து நீரை எடுத்துக்கொண்டு, மூடுவிழா குறித்துப் பேசிய தீர்க்கதரிசிகளின் முகத்தில் கரியைப் பூசியது.
***
  ‘நாங்கள் சுயநலமே இல்லாதவர்கள் என்றோ பிறரைவிட அதிகப் பெருந்தன்மைகொண்டவர்கள் என்றோ பரோபகாரிகள் என்றோ சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், நாங்கள் ஒரு நேர்மையான வியாபாரக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட ஆரம்பித்தோம். பங்குதாரர்களின் நலனை எங்களுடைய சொந்த நலன்போல் கருதினோம். பணியாளர்களின் ஆரோக்கியம், நலன் ஆகியவற்றை எங்களுடைய வெற்றிக்கான அஸ்திவாரமாகக் கருதினோம்என்று ஜம்சேட்ஜி 1895-ல் தெரிவித்தார்.
1924-ல் பணியாளர்களுக்கு சம்பளம் கூடக் கொடுக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. சர் தோரப்ஜி டாடா ஒரு கோடி ரூபாய் (இன்றைய மதிப்பில் சுமார் 90 கோடி) மதிப்பிலான  தன் சொந்தச் சொத்தை வைத்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து கடன் வாங்கி டாடாவின் மானத்தைக் காப்பாற்றினார்.
 ***

ஒருமுறை டாடா குழுமத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் வரியை மிச்சம் பிடிக்கச் சில முயற்சிகள் எடுத்தார். விஷயம் ஜே.ஆர்.டி.யின் காதுகளை எட்டியது. அது சட்ட விரோதமான செயல் அல்ல என்று வரி ஆலோசனை நிபுணர் தினேஷ் வியாஸ் ஜே.ஆர்.டி.யிடம் சொல்லியிருக்கிறார். சட்ட விரோதம் இல்லை என்பது சரிதான். ஆனால், அது நியாயமாஎன்று ஜே.ஆர்.டி. கேட்டிருக்கிறார். தனது பல வருட அனுபவத்தில் அப்படி ஒரு கேள்வியை யாரும் கேட்டதே இல்லை என்று தினேஷ் சொன்னார். வரி கட்டாமல் தவிர்ப்பது சட்டபூர்வமாக இருக்கலாம். ஆனால், தார்மிகரீதியில் அது சரியான செயல் அல்ல என்று டென்னிங் பிரபு சொன்னதை மிகவும் துல்லியமாகக் கடைப்பிடித்தார் ஜே.ஆர்.டி.என்று தினேஷ் வியாஸ் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
***
உருவாகிவரும் வர்த்தக உலகில் டாடாவினரே கலங்கரை விளக்காக ஒளிவீசித் திகழ்கிறார்கள். வேறு சில ஒளி விளக்குகளும் உருவாகி வருகின்றன. வருங்காலத்தில் இந்தியாவை செல்வமும் வளமும் கொழிக்கும் புதிய பூமியாக மாற்ற இதுபோல் பல்வேறு ஒளி விளக்குகள் தோன்றி வழிநடத்தவேண்டும்.
- ஆர்.எம்.லாலா