Search This Blog

Tuesday, July 9, 2013

1857 சிப்பாய் புரட்சி

1857ம் வருடம் மே மாதம் 5ம் தேதி. அம்பாலா பிரதேசத்தின் லெஃப்டினெண்ட் கர்னலான மார்ட்டினோ  ஹிந்துஸ்தானத்தின் அப்போதைய நிலையை அப்படியே விவரித்து தன் உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதினான். ஆங்கிலேயர்கள் யாருமே உணராத ஒரு நிழல் அபாயத்தை முன்கூட்டியே யூகித்தவன் அவன் மட்டும்தான்.

இதற்கு அஸ்திவாரமிட்ட சில சம்பவங்கள் 1857 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பாகவே நடந்திருந்தபோதும் ஒரு பெரும் புரட்சிக்கான அடிநாதம் அதிலிருப்பதை பிரிட்டிஷார் உணரத் தவறிவிட்டார்கள். எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தினார்கள். எதிர்பட்டபோது மிரண்டு போனார்கள்!
பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்தது அந்தப் புரட்சி!

0

வியாபாரத்துக்காக ஹிந்துஸ்தானில் காலடி எடுத்த வைத்த கிழக்கிந்தியக் கம்பெனி, 1757 - ல் நடந்த பிளாசிப் போரின் மூலம்தான் இந்தியாவில் திடமாகக் காலூன்றியது.  அதை சாதித்தவன் ராபர்ட் கிளைவ். இதோ இப்போது 1857 ம் வருடம் பிறந்துவிட்டது. எனவே வெள்ளைக்காரர்கள் இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கப்படுவது நிச்சயம்!

எங்கிருந்து புறப்பட்டது? யார் கிளப்பிவிட்டது? எதுவும் தெரியாது! காட்டுத் தீயை விட வேகமாகப் பரவியது இந்த வதந்தி. யாரோ ஒரு தெய்வீக முனிவர் சொன்ன தீர்க்க தரிசனம் என்றார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஓலைச் சுவடியில் எழுதப்பட்டுள்ளது என்றார்கள். இது, அடிமைப்பட்டு நசுங்கிக் கிடக்கும் மக்களின் மனத்தில் நம்பிக்கையை விதைப்பதற்காகத் திட்டமிட்டு மூட்டப்பட்டதா இல்லை ஏதாவது ஒரு கிளி ஜோசியக்காரனின் நெல்மணி வார்த்தைகளா என்று யாருக்கும் விளங்கவில்லை.

ஒன்றுமட்டும் நிஜம். இந்த வதந்தி உண்மையாகி விடவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தார்கள். ‘இது மட்டும் நடந்துவிட்டால்’ என்கிற நினைப்பே சுகமாக இருந்தது! சந்தோஷம் ததும்பியது! கூடவே, ‘இப்படி நடப்பது சாத்தியமா என்ன?’ என்கிற அவ நம்பிக்கையும் அவர்களுக்குள் ஊசலாடியது.

ஆனாலும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஏதோ சில மர்ம நடவடிக்கைகள் அங்கும் இங்குமாக நடைபெறுவது மட்டும் ஒரு சிலருக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியது.

0

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தேசமும் ஒரே சமயத்தில் ஒன்று திரண்டு எழவேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள்.

அதுவரை இந்தியா ஒன்றுபட்டு ஆங்கிலேயர்களை எதிர்த்ததேயில்லை. தனித் தனி சமஸ்தானங்கள், தனித்தனி பாளையங்கள், தனித் தனி ஆட்சியாளர்கள்தான் ஆங்காங்கே பொங்கியெழுந்து போரிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவோ, உதவிகளோ கிடைக்காத காரணத்தாலேயே வெகு சுலபமாக அடக்கப்பட்டிருந்தார்கள். இப்போது அப்படியில்லை! குறித்தபடி எல்லாம் நடந்தால் குமுறி வெடிக்கப்போகும் தீப்பிழம்பில் ஆங்கிலேய ஆட்சி பொசுங்கிப் போய்விடுவது நிச்சயம் என்றே புரட்சியாளர்கள் கருதினார்கள்.

ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே வங்காளத்தில் தன்னிச்சையாகப் புரட்சியைத் தொடங்கிவிட்டான் ஒரு சுதேசி வீரன். அவன், மங்கள் பாண்டே!

==

1857 : சிப்பாய் புரட்சி
உமா சம்பத்
240 பக்கம், விலை ரூ.125

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

No comments:

Post a Comment