Search This Blog

Saturday, July 6, 2013

வானமே எல்லை

வானமே எல்லை
கேப்டன் கோபிநாத் (சுய சரிதை)
தமிழில் : மகாதேவன்
விலை : 225
பக்கங்கள் : 432


கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை ஓர் ஆச்சரியப் புத்தகம். ஒருவராலும் முடியாததைச் சாதித்துக் காட்டவேண்டும் என்னும் அவருடைய வாழ்க்கை லட்சியத்தின் ஒரு சிறு பகுதிதான் ஒரு ரூபாய்க்கு விமானக் கட்டணம்.
சாமானியக் கற்பனைக்கு எட்டாத பல சாகசங்களை கோபிநாத் அநாயாசமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவர் ஈடுபடாத துறைகளே இல்லை. இந்திய ராணுவ அதிகாரியாக பங்களாதேஷ் விடுதலைப் போரில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இந்திய சீன எல்லையில் தனியே காவல்பணி புரிந்திருக்கிறார். விவசாயம் செய்திருக்கிறார். பால் பண்ணை, பட்டுப் பூச்சி வளர்ப்பு, மோட்டார் பைக் ஏஜென்ஸி, உடுப்பி ஹோட்டல், பங்குச் சந்தை என்று நீள்கிறது பட்டியல். அரசியலும் உண்டு. தேவே கவுடாவை எதிர்த்து பிஜேபி சார்பில் போட்டியிட்டிருக்கிறார். தோல்வியும் அடைந்திருக்கிறார்.
கவனிக்கவேண்டியது என்னவென்றால், அவர் தன் வெற்றிகளை மட்டுமல்ல, தோல்விகளையும் திரட்டித் தொகுத்தபடியேதான் முன்னேறியிருக்கிறார். சாகசங்களை ரசிக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், தடைகளைத் தகர்க்கவும் துணிந்துவிட்டால் எதுவுமே ஒரு பிரச்னை அல்ல என்பதைத்தான் அவருடைய சாதனைகள் நமக்கு உணர்த்துகின்றன.
பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு ராஜ்ஜியத்தைப் படைக்கத் தூண்டும் அனைவரும் படிக்கவேண்டிய பல பாடங்கள் இதில் உள்ளன. எனவேதான் கல்லூரிகளில் இந்நூலைப் பாட நூலாக்கவேண்டும்!என்கிறார் அப்துல் கலாம்.





புத்தகத்திலிருந்து
உண்மையில் கிழக்கு பாகிஸ்தானில் அப்போது நடந்தது ஓர் உள்நாட்டுப் போர்தான். பாகிஸ்தான் ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையால் ஏராளமான அப்பாவிகள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து குவிந்தனர். சுமார் ஒரு கோடிபேர் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் குடியேறினர். இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தை அகற்றுவதற்கு முக்தி பாஹினி அமைப்புக்கு தேவையான ராணுவப் பயிற்சியைத் தந்துவந்தது. அகதிகளாக வந்தவர்கள் திரும்பவும் தங்கள் நாடான கிழக்கு பாகிஸ்தானில் (பிரிவினைக்கு முன்பாக கிழக்கு வங்காளமாக இருந்தது) போய் அமைதியாக வாழ வழி செய்யும் நோக்கத்தில் அதைச் செய்தது.
பாகிஸ்தானியர்கள் மிகத் தீவிரமாகப் போரிட்டார்கள். அந்த கிராமத்தில் இருந்த தலைமையகத்தைக் கைப்பற்ற இரண்டு பகல்களும் இரண்டு இரவுகளும் எங்களுக்குத் தேவைப்பட்டன. அந்த இடத்தைக் கைப்பற்றியதும் நம் படை வெகு சுலபமாக முன்னேறியது.
வழியில் இருந்த எல்லா கிராமங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. அங்கிருந்தவர்கள் எல்லாம் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்திருந்தனர். ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தான் ராணுவம் அங்கு தங்கியிருந்தது. அது ஒருவகையில் பார்த்தால் ஆக்கிரமிப்பு அல்ல. ஆனால், அங்கு இருந்த மக்களையும் முக்தி பாஹினி அமைப்பினரையும் கடும் வன்முறைக்கு உட்படுத்திவந்ததால் அதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் அந்த கிராமங்களில் இருந்த பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினர். அப்படி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுபவர்கள் கர்ப்பம் தரிக்காமல் தடுக்க பாகிஸ்தான் ராணுவமே அதன் வீரர்களுக்கு ஏராளமாக ஆணுறைகள் வழங்கிய கொடூரமும் நடந்தது. நாங்கள் போனபோது அங்கு கண்ணில் தென்பட்ட பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. தங்களைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் பார்த்து மிரண்டுபோயிருந்தனர். மாதக்கணக்கில் அவர்கள் கொடூரமாகச் சிதைக்கப்பட்டிருந்தனர்.
நாங்கள் அந்தப் பெண்களைக் காப்பாற்றி நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைத்தோம். 
அக்டோபர் மாதவாக்கில் பங்களாதேஷுக்குள் நுழைந்தோம். நிறையத் தாக்குதல்களில் ஈடுபட்டோம். எனினும் பிரதான போர் என்னவோ இரண்டு வாரங்கள் மட்டுமே நீடித்தது. மனேக்ஷா, பாகிஸ்தான் வீரர்களுடன் ரேடியோவில் பேசினார். பாகிஸ்தான் ராணுவ சகோதரர்களேஉங்களைச் சுற்றி வளைத்துவிட்டோம். உங்களுக்குத் தப்பிக்க வழியே கிடையாது. ஆயுதங்களைக் கீழே போட்டுவிடுங்கள். உங்களை நாங்கள் தாக்க மாட்டோம். உங்களுக்குக் கடைசியாக ஒரே ஒரு சந்தர்ப்பம் தருகிறோம். சரணடையுங்கள், சரணடையுங்கள் சரணடையுங்கள் என்று உங்களை நான் வற்புறுத்துகிறேன்.
அவருடைய வார்த்தைகள் பாகிஸ்தான் ராணுவத்தின் முதுகுத் தண்டைச் சில்லிட வைத்திருக்கும். அதைக் கேட்ட எங்களுக்கு பெரும் உற்சாகமாக இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் எல்லா பக்கங்களிலும் வளைக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய மன தைரியம் முற்றாகக் குறைந்துபோயிருந்தது. நாங்கள் மட்டும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் நவீன வரலாற்றிலேயே மிக மோசமான ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியிருக்கும். சரண்டையும் படலம் வந்தது.  திரைப்படத்தில் இடம்பெறும் காட்சி போல் இருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தானின் ராணுவ கமாண்டர், தன் படைகளுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் சரண்டைய வைக்கப்பட்டார். அவர்கள் வசம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. சரணடைந்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்த போர்க் கைதிகள் முகாம்களுக்கு அனுப்பினோம். உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய சரண்டைவு நிகழ்ச்சி அது. சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தார்கள்.
பங்களாதேஷ் என்று பெயர் மாற்றம் பெற்ற அந்த நாட்டில் இருந்து அதன் பிறகு நாங்கள் வெளியேறினோம். என்னுடைய படைப் பிரிவு சிக்கிமுக்குப் போனது. தினஜ்பூர், ரங்பூர் வழியாக சிக்கிம் வரையிலான பாதையில் மக்கள் எங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இந்திரா காந்தி வாழ்கஇந்திய ராணுவம் வாழ்கமனேக்ஷா வாழ்கஎன்று மக்கள் தெருக்களில் இறங்கி உற்சாகத்துடன் கோஷங்கள் போட்டார்கள். நகரங்கள், ஊர்கள், ஏன் சிறு கிராமங்களில் கூட சுதந்திரத்தை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். விவசாயிகள், சாதாரண மக்கள், கல்லூரிப் பெண்கள், குழந்தைகள் என எல்லாரும் மாலை மரியாதையுடன் எங்களை வரவேற்றனர். நட்பின் அடையாளமாக எங்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். 

No comments:

Post a Comment