Search This Blog

Tuesday, July 23, 2013

இலங்கை இறுதி யுத்தம்

இலங்கை இறுதி யுத்தம் நூலின் முன்னுரை :

இந்தோரிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்துகொண்டிருக்கும்போதுதான் இந்தப் புத்தகத்தை எழுதும் எண்ணம் எனக்குத் தோன்றியதுஉத்தராஞ்சல் மாநிலத்தின் மோ நகரில் உள்ள புகழ்வாய்ந்த ராணுவப் படைக் கல்லூரியில் ராணுவத்துக்கும் ஊடகங்களுக்கும் இடையேயான உறவுஎன்ற தலைப்பில் பேசிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். அந்தப் பேச்சின்போது, சமீபத்தில் இலங்கையில் நடந்துமுடிந்த போரைப் பற்றி என்னிடம் இந்திய ராணுவத்தினர் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தனர். நான் இலங்கைக்குச் சென்று, அங்கு நடந்த போரை, என்.டி.டி.வி தொலைக்காட்சிக்காகப் பின்பற்றி, செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தேன். போர் முடிந்த காரணத்தால், அப்போதுதான் இந்தியா திரும்பி வந்திருந்தேன்.

என் அனுபவங்களை இந்திய ராணுவ வீரர்களிடம் பகிர்ந்துகொண்டபோதுதான், இந்தப் போரைப் பற்றிய பல விஷயங்கள் வெளி உலகுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். இலங்கை ராணுவத்தின் வெற்றிக்கான சூத்திரம்என்ன என்று பலரும் கேட்டனர். இன்னும் பலர், விடுதலைப் புலிகள் தவறு செய்த இடம் எது என்று தெரிந்துகொள்ள விரும்பினர்.

எனவே, உலகின் மிகக் கொடூரமான ஒரு தீவிரவாதக் குழுவை எப்படி இலங்கை ராணுவம் ஒழித்துக் கட்டியது என்ற கதை எழுதப்பட்டே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

இந்தப் புத்தகம் இலங்கைப் பிரச்னையை ஆழமாக அலசும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. எப்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவும் அவரது படைத் தளபதிகளும் அரசியல்-ராணுவச் செயல்திட்டங்களை வகுத்து, இதுவரையில் வெல்லவே முடியாமல் இருந்த ஓர் அமைப்பை வெற்றிகண்டனர் என்பது பற்றியே என் கவனம் முழுவதும் இருக்கும்.

2006 முதலாகவே போரின் முன்னணியில் என்.டி.டி.வி தொலைக்காட்சி நிருபராக இருந்து வந்துள்ளேன். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பல நண்பர்கள் எனக்குப் பல தகவல்களை அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரது பெயரையும் வெளியில் சொல்ல அனுமதி தரவில்லை. எனவே இந்தப் புத்தகத்தில் பலரது பெயர்கள் வெளிவராது.

ஆனால் இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்தில் சிலரது பெயர்களை நிச்சயமாகச் சொல்லமுடியும். மூத்த பத்திரிகையாளர், இலங்கை விவகாரத்தைக் கூர்ந்து கவனிக்கும் நோக்கர் பி.கே.பாலச்சந்திரன், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோதபாய ராஜபக்ஷே, ஜெனரல் சரத் ஃபொன்சேகா, ஹை கமிஷனர் ரொமேஷ் ஜயசிங்கே, இலங்கை வெளியுறவுத் துறைச் செயலர் பலித கொஹோன, டெல்லி இலங்கைத் தூதரகத்தின் சஜ்ஜேஷ்வர குணரத்ன, தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் லக்ஷ்மண் ஹுலுகல்லே, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இலங்கை ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் துஷாரா, உபேந்திரா, தாஜ் சமுத்ராவின் ஆனந்த் பத்மனாபன், இந்தப் போரைத் தொலைக்காட்சிக்காகப் படம் பிடித்த என்னுடைய சக அலுவலர்கள் தனபால், சுகுமார் ஆகியோர்.

இந்தப் புத்தகத்தை எழுத அனுமதியும் விடுப்பும் கொடுத்த என்.டி.டி.வியின் ராதிகா ராய், பிரணாய் ராய், பர்க்கா தத், சோனியா சிங் ஆகியோருக்கு நன்றி. வீட்டில், என் மனைவி நேஹா, மகன்கள் ஹர்ஷ், உத்கர்ஷ் ஆகியோர் நான் அவ்வப்போது காணாமல் போவதையும் என் ஒழுங்கற்ற செயல்களையும் சந்தோஷமாகப் பொறுத்துக்கொண்டனர்.

இலங்கையின் பாதுகாப்புப் படையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்துக் கூறுவதில் பலர் எனக்கு உதவியளித்துள்ளனர். ஏதேனும் தவறுகள் இருந்தால் அவை முழுவதும் என் பொறுப்பே.


0

இலங்கை இறுதி யுத்தம்
நிதின் ஏகோகலே
பக்கம் 208, விலை ரூ.120

போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

No comments:

Post a Comment