Search This Blog

Thursday, July 11, 2013

அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அம்பேத்கர் நூலிலிருந்து ஒரு பகுதி. புத்தகத்தை எழுதியிருப்பவர் ஆர். முத்துக்குமார்.

0

அக்டோபர் 14, 1956. பௌத்த மதத்தில் சேர்வதற்காக அம்பேத்கர் குறித்து வைத்திருந்த தேதி. பௌத்த மதத் துறவிகளான நாகர்கள் வசித்த பகுதி நாகபுரி. ஆகவே, மதமாற்ற விழாவை அங்கே வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் அம்பேத்கர்.

அப்போது  அருகில் இருந்தவர்களிடம் பேசிய அவர், ‘மதமாற்றத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பல்வேறு கோணங்களில் சிந்தித்து வந்துள்ளேன். அதனால்தான் மதமாற்றத்தைத் தொடர்ந்து ஒத்திவைத்தேன். ஆனால் இனியும் தள்ளிப்போட விரும்பவில்லை. என்னுடைய உடல் மிகவும் பலவீனமடைந்துவிட்டது. ஆகவே, பௌத்தத்தைத் தழுவப் போகிறேன். என்னுடன் இணைந்து பௌத்தத்துக்கு வருபவர்கள் வரலாம். வராதவர்கள் இந்து மதத்திலேயே நீடிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது’ என்றார்.

அம்பேத்கரின் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதிலும் இருந்து தீண்டப்படாத சாதியினர் நாகபுரியை நோக்கி திரளத் தொடங்கினர். ரயில் மார்க்கமாக வர முடிந்தவர்கள் அதைப் பயன்படுத்தினர். பேருந்துகள் மக்களைத் திணித்துக்கொண்டு நாகபுரியை அடைந்தன. வசதி இல்லாதவர்கள் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி  என்ற கோஷத்தை உச்சரித்துக்கொண்டே நாகபுரியை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

பதினான்கு ஏக்கர் கொண்ட நிலப்பரப்பு மதமாற்ற விழாவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. வெள்ளை நிற மேடை உருவாக்கப்பட்டது. அதில் சாஞ்சி
ஸ்தூபியைப் போன்ற கம்பம் ஒன்று நடப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்கள்
தனித்தனியே கலந்துகொள்ள தனித்தனி பந்தல்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
மூவண்ணக் கொடிகள் அந்தப் பகுதிகளில் பறந்துகொண்டிருந்தன. நீலம்,
சிவப்பு, பச்சை என்ற மூன்று வண்ணங்களைக் கொண்ட பௌத்தக் கொடிகள்.

அப்போது செய்தியாளர் ஒருவர் அம்பேத்கரிடம் கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தார். வழக்கமான கேள்விதான். நீங்கள் ஏன் பௌத்தத்தைத் தழுவுகிறீர்கள்? அவ்வளவுதான். முகத்தில் கோபம் கொப்பளிக்கப் பதிலளிக்கத் தொடங்கினார்.

‘நான் இந்து மதத்தை விட்டுவிட்டு பௌத்தத்தை ஏன் தழுவுகிறேன் என்று நீங்களே உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். உங்களுடைய மூதாதையர்களிடம் இதைக் கேளுங்கள். என்னுடைய வகுப்பு மக்கள் தீண்டப்படாத சாதியினராக இருந்துகொண்டு இடஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெறுவதோடு நின்றுவிட வேண்டும் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அப்படியானால் இடஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டு தீண்டப்படாதவர்களாக இருப்பதற்கு பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா? நாங்கள் முழுமையான மனிதர்களாக ஆவதற்கு முயற்சி செய்கிறோம். இப்போது நான் பௌத்த மதத்தைத் தழுவுவதன்மூலம் இந்த நாட்டுக்கு பெரும் நன்மையை நல்குவதாகவே நினைக்கிறேன். ஏனெனில் பௌத்தம் பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருக்கிறது. என்னுடைய மதமாற்றத்தால் இந்த நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்பட நான் அனுமதிக்க மாட்டேன். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்’ என்று பதிலளித்தார்.

அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பௌத்த மதத்தைத் தழுவுவார்கள். இந்தியா ஒரு பௌத்த நாடாக மாறிவிடும்.
இறுதியாக பார்ப்பனர்கள் பௌத்தத்தில் இணைவார்கள். என்னைப் பின்பற்றுபவர்கள் அறியாமையில் உள்ளவர்கள் என்பது உண்மை. எனது  நூல்கள், மத போதனைகள் மூலம் பௌத்தக் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுப்பேன். எங்களுக்கு உணவைவிட மானமே முக்கியம். இருப்பினும் எங்கள் பொருளாதார நிலையை உயர்த்த தீவிரமாக முயற்சி செய்வோம் என்றார் அம்பேத்கர்.

==

அம்பேத்கர்
ஆர். முத்துக்குமார்
200 பக்கம், விலை ரூ.145

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க

போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

No comments:

Post a Comment