Search This Blog

Monday, July 8, 2013

அணையாத ஜோதி பாசு

ஜோதிபாசு ராஜதானிக் கல்லூரியில் படிக்கும்போது முதன்முறையாக சுதந்திரப் போராட்டத்தின் புரட்சிகர தாக்கம் அவர்மீது படரத் தொடங்கியது. முதலாவது சம்பவம், 1930 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தது. அது அவர் உள்ளத்தில் பெரும் வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. காந்தி போன்ற ஒரு பிரபலமான தலைவர், நாட்டு விடுதலைக்காக உண்ணாவிரதம் இருப்பது, அவர் மனதை வருத்தியது. அந்த பாதிப்பை அவரே கூறுகிறார்.

‘எனது இதயம் கனத்துவிட்டது. நான் பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை. அப்பாவும் அதை ஆட்சேபிக்கவில்லை. நான் அவருடன் அவருடைய மருத்துவமனைக்குச் சென்றேன்.’

இதே ஆண்டில் அவர் முதன் முறையாக ஆங்கிலேய காவல் துறையின் தாக்குதலுக்கும் ஆளாகநேரிட்டது. பிரபல காங்கிரஸ் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நினைவுச் சின்னம் இருக்கும் இடத்தில் (இன்று அதன் பெயர் ஷகித் மினார்) உரையாற்றப்போவதாக தகவல் வந்தது. எனவே ஜோதிபாசுவும் அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவரும் கதராடை உடுத்தி, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்தது. ஆங்கிலேய ஆயுதப்படையினர், சாதாரண காவலர்கள் மற்றும் சார்ஜெண்டுகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மக்களை, விரட்டிவிரட்டி அடித்தனர். ஜோதிபாசுவையும் அவரது உறவினரையும் சார்ஜெண்டுகள் விரட்ட வந்தபோது அவர்கள் ஓட மறுத்து மெதுவாக நடக்க ஆரம்பித்தனர். ஆத்திரம் அடைந்த சார்ஜெண்டுகள் தங்கள் கையில் கொண்டிருந்த பிரம்புகளைக் கொண்டு இவ்விருவரையும் மாறிமாறி அடித்தனர்.

0

பதவிக்காக பலர் ஏங்கித் திரியும் காலத்தில், பதவி வேண்டாம், போதும் என்று கூறிய ஜோதிபாசுவிடம், ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியாளர் மாளவிகா பட்டாச்சார்யா கேட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் அவரின் மேன்மையைப் பறைசாற்றும்:

கேள்வி: இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகள் தாங்களாகவே பதவி விலகிவிட்டதாக தெரியவில்லை?

பதில்: நான் ஒருபோதும் பதவிக்காக அலைந்ததில்லை. எனது கட்சி, நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவேண்டுமென்று கூறியதால்தான் நான் அதை ஏற்றேன். என்னால் இயன்றளவு அதைத் திறமையாகச் செய்ய பாடுபட்டேன். நாம் பலவற்றை சாதித்திருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். சில எதிர்மறையான அம்சங்களும் உள்ளன. நாம் அவற்றைச் சரி செய்யவேண்டும்.
கேள்வி: பதவி விலக வேண்டுமென்ற உங்கள் முடிவு மிக சரிதானதா?
பதில்: அது என்னுடைய நோயினால் ஆகும். ஒரு வருடத்திற்கு முன்பே என் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவிக்கும்படி கட்சியிடம் நான் கூறியிருந்தேன். ஆனால் நான் தொடர வேண்டுமென்று அவர்கள் கருதினார்கள். நான் என் சக தோழர்களின் விருப்பத்தை மதித்து என் பொறுப்பில் தொடர்ந்தேன்.

கேள்வி: ஆனால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோதும் நீங்கள் தொடர முடிந்ததே.

பதில்: இல்லை. இனியும் அதைச் செய்ய முடியாதென நான் உணர்கிறேன். நான் அலுவலகத்திற்கு சிறிது நேரமே செல்கிறேன். 8 கோடி மக்கள் வாழும் மாநிலத்தின் முதலமைச்சர், அலுவலகத்திற்கு சிறிது நேரம் மட்டுமே செல்வது சரியாகாது. மக்களுக்கு நான் நியாயம் செய்யவில்லை என உணர்கிறேன்.

கேள்வி: உங்களுக்கு அரசியல் என்பதன் பொருள் என்ன?

பதில்: அரசியல் என்பது எனக்கு மக்கள். மக்களுக்குச் சேவை செய்வது என்பதைத் தவிர வேறு நலன் எங்களுக்கில்லை என கம்யூனிஸ்ட்களாக நாங்கள் கூறுவோம். என் மரணம் வரை என்னால் முடிந்தளவு பாடுபடுவேன். மக்களுக்காக அதைத் தொடர்ந்து செய்வேன். எனது மூளை செயல்படும் வரை அதைச் செய்து கொண்டிருக்க முடியும்.

==

அணையாத ஜோதிபாசு
என். ராமகிருஷ்ணன்
136 பக்கம், விலை ரூ.70

No comments:

Post a Comment