Search This Blog

Tuesday, July 16, 2013

பன்முக அறிவு : உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்

பன்முக அறிவு : உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்
ஜி.இராஜேந்திரன்
பக் : 96
விலை: 65 





ஒவ்வொரு மனிதனுக்கும் எட்டுவிதமான அறிவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன? ஒவ்வொரு குழந்தையிடமும் என்னவிதமான அறிவு அதிகமாக இருக்கிறது, அதை எப்படி வளர்த்தெடுக்கலாம் என்பதை ஆசிரியர் இந்த நூலில் நுட்பமாக விவரித்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையை சூப்பர்ஸ்டார் ஆக்குங்கள்.


புத்தகத்திலிருந்து

ஹோவார்டு கார்டனர் என்ற கல்வியியல் பேராசிரியர் ஏழு வகையான அறிவுகள் உண்டென்று குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் இந்தத் துறையில் ஆய்வு செய்த இவருடைய சீடர்கள் மேலும் சில அறிவுகளும் இருப்பதாக வரையறை செய்துள்ளனர். அவை:
மொழியறிவு (Linguistic)
கணித அறிவு (Logical-mathematical)
இடம் மற்றும் காட்சியறிவு (Spatial)
இசையறிவு (Musical)
உடலறிவு (Bodily-kinesthetic)
குழு அறிவு (Intrapersonal)
சுய அறிவு (Interpersonal)
இயற்கையறிவு (Naturalistic)
ஆன்மிக அறிவு (Spiritual)
இந்த அறிவுகள் தனிப்பட்ட தீவுகள் போலன்றி ஒன்றுடன் ஒன்று கலந்தே காணப்படுகின்றன. குழு அறிவுள்ள ஒருவருக்கு மொழியறிவு இயல்பாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். பிறருடன் அதிகம் கலக்க விரும்பாமல் தனிமையில் இனிமை காணும் சுய அறிவு பெற்ற பெரும்பான்மையோருக்கு ஆன்மிக அறிவு இருப்பதற்கு வாய்ப்புண்டு.
*********
என் நண்பன் இந்தியப் பாதுகாப்புப் படையில் வேலை செய்கிறான். பஞ்சாபில் இருக்கிறான். மனைவி ஆசிரியை. பையன் ஷியாம் இரண்டாம் வகுப்பில் படிக்கிறான். கோடை விடுமுறையில் குடும்பத்தை பஞ்சாபுக்கு அழைத்துச் சென்றான். இரண்டு மாதம் தங்கிவிட்டு வரும்போது குழந்தை அழகாக ஹிந்தி பேசக் கற்றுக்கொண்டிருந்தான்.
நண்பனிடம் பேசியதிலிருந்து புரிந்துகொண்டவை:
நண்பன் வேலைக்குச் செல்லும்போது மனைவியும் குழந்தையும் வீட்டுக்குள் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பார்கள். அதுவும் தமிழ்ச் சானல்களைத்தான் பார்ப்பார்கள். சனி ஞாயிறு அவர்களுடைய நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். பெரும்பான்மையானோர் தமிழர்கள். அவர்களுடன் தமிழில்தான் பேசுவார்கள்.
அப்படியானால் அந்தக் குழந்தை எப்படி ஹிந்தி பேசக் கற்றுக்கொண்டது? பூங்காவில் பிற குழந்தைகளுடன் விளையாடச் செல்லும்போது. அங்கும் விளையாடும் நேரம்தான் அதிகமாக இருக்கும். பேசும் நேரம் மிகவும் குறைவாகவே இருக்கும். அப்படியிருந்தும் ஒரு புதுமொழியைக் குழந்தை  விரைந்து கற்கிறது. ஒருபோதும் கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பச் சொல்லி மொழியைக் கற்றுக்கொள்ளவில்லை. பஞ்சாபிலுள்ள குழந்தை பேசும்போது அதைக் கேட்கும்  தமிழ்நாட்டுக் குழந்தையின் சிந்தனை அந்தப் பேச்சுக்குப் பொருத்தமாக இருப்பதால் உடனே புரிந்துகொள்ள முடிகிறது.
*********
பெரும்பான்மையான வீடுகளில் மாலை நேரத்தில் இந்தக் காட்சியைக் காணலாம்.
பெரியவர்கள்    தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகளோ ஓடியாடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். தொடரின் நடுவே விளம்பர இடைவேளை வந்துவிட்டால் இந்தக் காட்சி மாறும்.
பெரியவர்கள் சிறு சிறு வேலைகளைக் கவனிக்க எழுந்து செல்வார்கள். குழந்தைகள் விளையாட்டை நிறுத்திவிட்டு விளம்பரத்தைக் கவனிக்க வருவார்கள்.
விளம்பரங்களைக் குழந்தைகள் பெரிதும் விரும்புவது ஏன்?
சட்டென மாறும் காட்சிகள், துள்ளல் இசை, குறுகிய நேரத்துக்குள் சொல்லப்படும் புதுமையான கருத்து, அழகான காட்சியமைப்பு... இவை குழந்தைகளைக் கவருகின்றன. 
ஒரு காட்சி நீண்ட நேரம் ஓடினால் குழந்தைகளுக்குச் சலிப்பு வந்துவிடுகிறது. அப்படியானால் பாடம் என்பது எப்படி இருக்கவேண்டும்... எப்படிச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்பது புரிகிறதா?
*********
ஒரு சிறு குழந்தை முதன் முறையாக நாய் குரைப்பதைக் கவனிக்கிறது. அதற்கு ஒரே ஆச்சரியம். நேராக அம்மாவிடம் செல்கிறது.
அம்மா, பௌ பௌஎன்று தெருவை நோக்கிக் கையை நீட்டியபடி, அகல விரிந்த கண்களோடு சொல்கிறது. அதைக் கேட்ட அம்மாவோ ஆமாம், அந்த நாய் எப்போதுமே அப்படித்தான். யாரைப் பார்த்தாலும் குரைக்கும்என்றபடித் தன் வேலையில் மூழ்கிவிடுவார்.
குழந்தைக்குச் சற்று குழப்பம். நான் பௌ பௌஎன்று சொல்கிறேன். அம்மா ஏன் நாய் என்றொரு புது வார்த்தையைச் சொல்கிறாள்? என்று யோசித்தபடி அண்ணனிடம் சென்று அண்ணா, பௌ பௌஎன்று சொல்கிறது. அண்ணனும் நான் நேற்று வரும்போது அந்த நாய் என்னைப் பார்த்தும் பௌ பௌஎன்று குரைத்ததுஎன்கிறான்.
பௌ பௌஎன்பது அதன் பெயர் அல்ல. நாய் என்பதுதான் அதன் உண்மையான பெயர் என்று இப்போது குழந்தை உறுதிப்படுத்துகிறது. குழந்தையின் சொல்வளத்தில் ஒரு புதிய சொல் சேருகிறது.
இவ்விரு செயல்பாடுகளையும் நுணுக்கமாக அலசினால் கீழ்வரும் படிநிலைகள் மறைந்திருப்பதைக் காணலாம்.
ஃ    அனுபவம் ஏற்படுகிறது; ஆர்வம் பிறக்கிறது.
ஃ    புதிய சூழலில் பயன்படுத்திப் பார்க்க முயற்சிக்கிறது.
ஃ    சிக்கல்கள், சிரமங்கள் ஏற்படுகின்றன.
ஃ    பல்வேறு வழிகளை/தீர்வுகளை யோசித்து பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கிறது.
ஃ    அதை நடைமுறைப்படுத்திப் பார்க்கிறது.
ஃ    வெற்றி பெற்றால் மீண்டும் ஓரிரு புதிய சூழலில் நடைமுறைப்படுத்தி உறுதிப்படுத்துகிறது.
ஃ    தோற்றுப்போனால் வேறு வழியை/ தீர்வைத் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்திப் பார்க்கிறது.
ஃ    அது குழந்தையின் அறிவாக மாறுகிறது.

இந்தப் படிநிலைகள் வெளிப்படையாகத் தெரியாது. இருப்பினும் மனத்தளவில் ஏறக்குறைய இவை அனைத்தும் நடந்திருக்கும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களாகிய நாமும் இந்த முறையில்தான் அறிவு பெறுகிறோம்.

No comments:

Post a Comment