Search This Blog

Wednesday, July 3, 2013

சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு

சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு
மிஷல் தனினோ எழுதிய The Lost River: On the trail of the Sarasvati என்ற ஆங்கில நூலின் அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பு 
தமிழில் வை.கிருஷ்ண மூர்த்தி
பக் : 416
விலை : ரூ 300

இந்திய சமூக, அரசியல், வரலாற்று தளத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்னை ஆரியர் - திராவிடர்  பிரச்னை. இந்தப் பிரச்னைக்கான திறவுகோல்களில் குறிப்பிடத்தகுந்தது சரஸ்வதி நதி. சரஸ்வதி நதி பாய்ந்த சிந்து சமவெளி பகுதிதான் ஆரிய திராவிட பிரச்னையின் அடிப்படைக் களம். மிஷல் தனினோ அந்த சரஸ்வதி நதியின் வரலாற்றை இந்த நூலில் பல துறை ஆவணங்களின் அடிப்படையில் தெள்ளத் தெளிவாக முன்வைத்திருக்கிறார். அதன் மூலம் ஆரிய திராவிட பிரச்னைக்கு உண்மையான விடையைத் தந்திருக்கிறார். 






முன்னுரையில் இருந்து

நமது இந்தப் புத்தகம் மிகவும் தொன்மையான இந்தியப் படைப்பான ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொன்மநதியில் இருந்து ஆரம்பிக்கிறது. மகாபாரதம் உட்படப் பிந்தைய இலக்கியங்களில், சரஸ்வதி நதி மெள்ள மறைந்து கொண்டிக்கும்ஒன்றாகவும் கடைசியில் ஸ்தூலமாகிவிடுவதாகவும், கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் அவற்றுடன் இணைந்துவிடுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, அது இன்று நாம் அறிந்திருக்கும் சரஸ்வதி தெய்வமாகிவிடுகிறது.
 ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரமாண்ட நதியானது பண்டைய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் பாய்ந்து, இப்போது வறண்டுபோயிருக்கும் நதியோடு, அதாவது சிந்து நதிக்கு இணையாக, அதற்கு சற்றே தென் திசையில் ஓடிய நதியோடு பெரும்பாலான நிபுணர்களால் எப்படி அடையாளப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்போம். 
மறைந்து போனஇந்த நதியைக் கண்டுபிடிக்க மேற்கொண்ட தேடல் முயற்சிகள், இதுவரை மக்களுக்கு முழுவதாகச் சொல்லப்படவே இல்லை. சரஸ்வதியை சமீபத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்களின் உதவியுடன்தான் மீண்டும் கண்டுபிடித்தோம்என்ற எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. இது தவறு. மாறாக, 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிரிட்டிஷ் நிலவியல் ஆய்வாளர்களும் அன்றைய பிரிட்டிஷ் அரசின் சிவில், ராணுவ அதிகாரிகளும் (சிவில், ராணுவ அதிகாரிகளாக இருந்த பிரிட்டிஷ் நிலவியல் ஆய்வாளர்களும்) இந்தப் பகுதியில், அதாவது இன்றைய ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும், பாகிஸ்தானில் உள்ள கோலிஸ்தான் பாலைவனத்திலும் ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் சரஸ்வதி ஆற்றின் படுகையை மட்டுமல்லாமல் அதன் இரு கரைகளிலும் ஏராளமான, சிதிலம் அடைந்துள்ள குடியிருப்புகளையும் கண்டுபிடித்தனர்.
இன்று வறண்டு, ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும் இந்தப்பகுதி ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்திருக்கும் என்பதன் மவுன சாட்சிகள் அவை. உண்மையில், 1850-களிலேயே அந்த தொன்ம நதியின் வழித்தடம் இந்தியவியலாளர்களுக்குச் சந்தேகமறத் தெரிந்திருந்தது.இந்தக் குடியிருப்புகள் ஹரப்பா அல்லது சிந்து சமவெளி நாகரிகக் காலத்தைச் சேர்ந்தவை என்பது பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, அந்தக் கலாசாரத்தின் பல அம்சங்கள், அங்குள்ள நகரங்கள் அழிந்த பின்பும்கூடத் தொடர்கின்றன என்பதையும், சில நகரங்கள் ஆச்சரியப்படும்வகையில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன.
இந்த இடத்தில், டிராய் நகரத்தை ஹைன்ரிக் ஷ்லிமன் (ஏஞுடிணணூடிஞிட குஞிடடூடிஞுட்ச்ணண) மறு கண்டுபிடிப்பு செய்ததுபோலவும் ஹோமரின் இலியட்டுடன் அதைப் பொருத்திப் பார்ப்பதைப்போலவும் சரஸ்வதி நதியைப் பற்றியும் ஓர் எளிய கதையையே எதிர்பார்த்திருப்போம். ஏனென்றால், சரஸ்வதி நதிக்கரையில் இருந்த ஏராளமான இடங்கள் பற்றி பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடவும்பட்டிருக்கின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக ஆரியப் படையெடுப்பு அல்லது ஆரிய இடப்பெயர்வு என்ற கோட்பாட்டுக்குள் சரஸ்வதி நதி சிக்கிக்கொண்டுவிட்டது. இதன் விளைவாக ஒரு சில அறிஞர்கள் வேத கால சரஸ்வதி நதி வேறோர் இடத்தில் பாய்ந்தது என்றோ அப்படி ஒரு நதி இல்லவே இல்லை என்றோ வாதிடத் தொடங்கிவிட்டனர்.
இம்மாதிரியான வேறுபட்ட அபிப்பிராயங்களை இந்த நூலில் பார்ப்போம். அவை ஒவ்வொன்றிலிருந்தும் கற்றுக்கொள்வோம். அதேநேரம் நிலவியல்தட்ப வெப்பவியல், தொல்லியல் ஆகிய பல்வேறு துறைகளிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் செய்திகளை எடைபோட்டு, அவற்றிடையே காணப்படும் வேறுபாடுகளைக் களைந்து, என் சொந்தக் கருத்துகளை முன்வைக்கிறேன்.
இந்தியாவைப் பொறுத்தவரை அகழ்வாராய்ச்சிகளிலிருந்து கிடைத்த விஷயங்களையும் புராதன இலக்கியங்களில் சொல்லப்பட்ட செய்திகளையும் ஒருங்கிணைப்பது முடியாத செயலாக இருக்கிறது. அகழ்வாராய்ச்சியாளர்கள் அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதை மோசமான செயலாகக் கருதி அதில் ஈடுபடுவதில்லை. இலக்கிய அறிஞர்கள் இலக்கியங்களில் இருந்து உருவாக்கும் சித்திரத்துடன் அகழ்வாய்வுத் தரவுகளைப் பொருத்திப் பார்க்க முயற்சி செய்வதே இல்லை. சரஸ்வதி நதியைப் பொறுத்தவரையில், இந்த இரண்டு துறைகளுக்கு இடையில் ஆச்சரியப்படும்வகையிலான எதிரொலிகளை உங்களுக்குக் காட்டப்போகிறேன். இதுவரை செய்திருப்பவற்றைவிட கூடுதல் ஒத்திசைவுகளைப் பார்க்கப் போகிறோம்.

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபின், வாசகர்கள் எடுக்கும் முடிவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; ஆனால், சிந்து நதியும் அதன் கிளைகளும் மட்டுமல்லாமல், பெரும்பாலான அகழ்வாராய்ச்சியாளர்கள் சொல்வதுபோல், பின்னாளில் மறைந்துபோன இன்னொரு நதியான சரஸ்வதி நதியும் பாய்ந்து வளர்த்த இந்தியக் கலாசாரத்தின் தொடக்கத்தையும் வளர்ச்சியையும் பற்றி அவர்கள் கூடுதலாகத் தெரிந்துகொண்டதாக உணர்வார்களேயானால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.
- மிஷல் தனினோ

No comments:

Post a Comment