Search This Blog

Friday, June 14, 2013

பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை

உளவுத் துறையான ராவில் கால் நூற்றாண்டு காலம் உயர்பொறுப்பு வகித்து, ஓய்வுபெற்ற அதிகாரி பி. ராமனின் இந்தப் புத்தகம், பயங்கரவாதத்தின் வேர்களை தேடிச் செல்வதோடு பாதுகாப்பான இந்தியா உருவாவதற்கான வழிமுறைகளையும் சொல்லித்தருகிறது.

0

இன்றைய உலகில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரிய அச்சுறுத்தலாகப் பயங்கரவாதம் உள்ளது. கைகளால் பயன்படுத்தப்படக் கூடிய ஒற்றைப் பரிமாண அபாய ஆயுதங்களில் தொடங்கி, சட்ட விரோத வெடி பொருட்கள், மனித வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள், நாசத்தைத் தூண்டும் கருவிகளாக செல்போன்கள், விமானக் கடத்தல், இணையதளம் வாயிலான தாக்குதல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இன்று உருவெடுத்துள்ளது.

இன்றைய பயங்கரவாதம், நேற்றைய பயங்கரவாதத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்திலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இன்றைய நிலையில், ஒடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தோ பொருளாதார, சமூகரீதியில் நலிவடைந்த குடும்பங்களிலிருந்தோ பயங்கரவாதிகள் உருவாவதில்லை. சமூக அந்தஸ்து உள்ள, வசதியான குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலும் தோன்றுகின்றனர். அவர்கள் நல்ல கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய தலைவர்கள் இப்போது அவர்களைத் தமது விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கையாள முடியாது.

பயங்கரவாதிகளில் பலர் மருத்துவர்களாகவோ பொறியியல் வல்லுனர்களாகவோ தகவல் தொழில்நுட்ப நிபுணர்களாகவோ உள்ளனர். பெருவாரியான மக்களைப் படுகாயப்படுத்துவது சரியா தவறா என்று மூளையைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதேநேரம் தாக்குதல்களை நன்கு திட்டமிட்டு, கச்சிதமாக அரங்கேற்றுகின்றனர். நவீனத் தொழில்நுட்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். எனினும், அதற்கு அவர்கள் அடிமையாக இருப்பதில்லை. நாளுக்கு நாள் அவர்கள் செயல்படும் விதம் மாறிக்கொண்டே இருக்கிறது.

0

அவர்களுடைய மனப்பான்மை, சிந்தனை முறை, திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துவதற்கு அவர்களிடம் உள்ள வசதிகள் ஆகியவை குறித்து நாம் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். விழிப்பு உணர்வுடன் இருப்பது என்றால் தயாராக இருப்பது என்று பொருள். அவர்களைப் பற்றிய விழிப்பு உணர்வை எவ்வாறு உருவாக்குவது? அவர்களை மக்கள் முன்னாலும் ஆட்சியாளர்கள் முன்னாலும் கொண்டு போய் நிறுத்துவது எப்படி? முட்டாள்தனமாக அவர்களுடைய சமூகத்தைத் தீய சக்தியாகச் சித்திரிக்காமல் அவர்களைத் திறம்படக் கையாள்வது எப்படி? இவையே இன்று நம் முன்னால் உள்ள மிகப் பெரிய கேள்விகள்.

இன்று அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களின் சில முக்கிய பரிமாணங்கள் குறித்து ஆராய்வதும் அதன் மூலம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுமே இந்த நூலின் பிரதான நோக்கங்கள். இதற்காக, நான் எனது முந்தைய நூல்களிலிருந்தும் சர்வதேச மாநாடுகளில் நான் ஆற்றிய உரைகளிலிருந்தும் சில பகுதிகளை எடுத்து இங்கே தந்துள்ளேன். 

அவையனைத்தும் காலவாரியாகப் புதுப்பிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. சில புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் முழு விளக்கம் கொண்டதாக அமைக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன். எனவே, வாசகர்கள் சில விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள, நூலை முன்னும் பின்னும் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. 

0


ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

No comments:

Post a Comment