Search This Blog

Wednesday, June 12, 2013

தலாய் லாமா : ஆன்மிகமும் அரசியலும்

தலாய் லாமா தேர்வு செய்யப்படுவதில்லை, கண்டுபிடிக்கப்படுகிறார்.
இந்தத் தேடல் தியானத்தில் தொடங்குகிறது. திபெத்தில் உள்ள ஒரு புனித ஏரியின் பெயர் லாமோ லாட்சோ. இந்த ஏரியை பால்டன் லாமோ என்னும் தேவதை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. தலாய் லாமாவைத் கண்டெடுக்கும் முன்பு, இந்த ஆற்றங்கரையில் அமர்ந்து ரீஜெண்ட்கள் தியானம் செய்வது வழக்கம். தியானம் செய்பவரின் கனவில், தேவதை தோன்றுவார். அடுத்த தலாய் லாமாவை அடையாளம் காட்டுவார்.

இன்ன இடத்தில் அவர் வசிக்கிறார் என்று தேவதை கை காட்டுவதில்லை. மாறாக, சில குறிப்புகளைத் தேவதை அளிப்பார். சங்கேத வடிவில் அவை அமைந்திருக்கும். உதாரணத்துக்கு, ஏரிக்கு அருகில் ஒரு பள்ளம் தோன்றி அதற்கு மேலே மேகங்கள் பல வடிவங்களில் தோன்றும். இந்த வடிவங்கள் அனைத்தும் குறிப்புகள். அடுத்த தலாய் லாமா யார் என்பதற்கான விடை இதில் அடங்கியிருக்கும். இந்தக் குறிப்புகளைச் சரியான முறையில் உள்வாங்கிக்கொண்டால், விளக்கங்கள் கிடைக்கத் தொடங்கும்.

ஒவ்வொரு தலாய் லாமாவும் ஒவ்வொரு விதமாக அடையாளம் காட்டப்படுவார். பீடத்தில் இருக்கும் தலாய் லாமா இறந்துவிட்டால்,  அவரை எரிக்கும் புகை எந்தத் திசையில் செல்கிறது என்பதை குறித்து வைத்துக்கொள்வார்கள். குறிப்பிட்ட திசையில்  உள்ள பகுதிகளை ஆராய்வார்கள். அங்கே உள்ள குழந்தைகளை உன்னிப்பாகப் பார்வையிடுவார்கள். சோதனைகள் செய்வார்கள். பிறகு, முடிவெடுப்பார்கள்.

முன்னரே பார்த்தபடி, டென்சின் கியாட்சோ பிறந்தபோதே, சில அடையாளங்கள் பளிச்சென்று வெளியில் தெரிந்துவிட்டன. தந்தை குணமானது, மழை பொழிந்தது ஆகிய இரு சம்பவங்கள் போக மூன்றாவதாக இன்னொரு அதிசயமும் நடந்தது. மறைந்த பதின்மூன்றாம் தலாய் லாமாவின் பூத உடல் தங்க சிம்மாசனத்தில் உடகாரும் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இரவு நேரம் திடீரென்று அவர் தலை தெற்கில் இருந்து கிழக்கே திரும்பியது. சரி செய்தனர். மீண்டும், தலை கிழக்கில் திரும்பியபோது புரிந்துவிட்டது.  கிழக்கு திசையை நாம் கவனிக்கவேண்டும்.

டென்சிங் கியாட்சோவின் ஊர் இருந்தது மிகச் சரியாக, கிழக்கில்.  பதினான்காம் தலாய் லாமாவைத் தேர்வு செய்ய திபெத் தேசிய பாராளுமன்றம் ரீஜெண்ட் ஒருவரை நியமித்து பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தது. அவர்தான் புதிய தலாய் லாமாவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். சரி, யார் இந்த ரீஜெண்ட்கள்?

0

டென்சிங் கியாட்சோ லாமா பயன்படுத்திய பொருள்களை மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்திருந்தான். போலியான பொருள்கள் மேஜை மீதே கிடந்தன. சிறிது நேரத்தில், டென்சிங் மேஜையை நெருங்கினான்.

‘இவை எனக்கு வேண்டாம்!’

போலியான பொருள்களை மேஜையில் இருந்து கீழே தள்ளிவிட்டான்.

ரின்போசேவுக்கு நம்பிக்கை பிறந்தது.  இவன்தான். இல்லை, இல்லை, இவர்தான்.

அப்போது, டென்சிங் கியாட்சோ, ‘சேரா லாமா, சேரா லாமா’ என்று தன்னை மறந்து உச்சரிக்க ஆரம்பித்தான்.

இது, உள்ளூர் மடத்தில் இருந்து வந்து குழுவில் இணைந்துகொண்டவரின் பெயர். ரின்போசே இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இன்னும் ஓரே ஒரு சோதனைதான் பாக்கி. சிறுவனின் உடலில் உள்ள அங்கத் தழும்புகளையும், மச்சங்களையும் உறுதி செய்து விட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

பரிசோதனை செய்தார். எதிர்பார்த்தபடி, கியாட்சோவுக்கு இரு பெரிய காதுகள், தோள்பட்டையில் இரண்டு சிறிய வீக்கங்கள் இருந்தன. புருவங்கள் இறுதியில் வளைந்திருந்தன, கால்களில் புலிக்கு இருப்பது போன்ற வரிகள் காணப்பட்டன. உள்ளங்கைகளில் சங்கு போன்ற வரிகள் இருந்தன.

ரெட்டிங் ரின்போசே முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

‘வந்த காரியம் நிறைவேறி விட்டது. இந்தச் சிறுவன் எல்லாப் பரிசோதனைகளிலும் வென்று விட்டான். இவன்தான் அடுத்த தலாய் லாமா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’

0

ஜனனி ரமேஷ் எழுதிய தலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும் என்னும் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் மேலே உள்ளன.  திபெத் தன்னாட்சி உரிமைப் போராட்டத்தின் வரலாறும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 

ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

No comments:

Post a Comment