ஒரு நாட்டின் குடி
மக்களுக்கு வீடு மாறுகிற சூழ்நிலை ஏற்படுவதுண்டு. நாடே மாறுகிற சூழ்நிலை வருமா? இந்தியாவில் 1947 இல்
அந்தச் சூழ்நிலை வந்தது.
இந்தியாவின் அரசியல்
ரீதியான பகுப்பு படு மோசமான சமூக நாசத்தை ஏற்படுத்தியது. ஒரு பெருத்த ஜனக் கூட்டம்
மிகக் குறுகிய கால அவகாசத்தில் தங்கள் வீடுகளையும் நாடுகளையும் மாற்றிக் கொள்ள
நேர்ந்தது. இது போல இதற்கு முன்னும் நிகழ்ந்ததில்லை, இன்னும் நிகழவும் இல்லை.
பகுப்புக்குப் பின்
பாகிஸ்தான்(கள்) இந்தியாவின் வெட்டுண்ட சிறகுகள் ஆயின. இந்தச் சிறகுகளுக்கும்
இந்தியாவுக்கும் இடையே சில மாதங்களுக்குள் சுமார் ஒன்றேகால் கோடிப் பேர் சடு குடு
ஆட வேண்டியிருந்தது. இவர்களில் பெரும்பாலோர் சரித்திரப் புகழ் வாய்ந்த பஞ்சாப்
மாநிலத்தின் எல்லைக் கோட்டைக் கடக்க வேண்டியிருந்தது. இஸ்லாமியர்கள் மேற்கு
நோக்கியும் இந்துக்களும் சீக்கியர்களும் கிழக்கு நோக்கியும் இடம் பெயர்ந்தார்கள். அவர்களின்
இடப் பெயர்ச்சிக்கு கொலை சில சமயம் காரணமாகவும், சில சமயம் விளைவாகவும் இருந்தது.
மரணங்கள் கொலைகளால் மட்டும் நிகழவில்லை. பட்டினியாலும், பாழான உணவாலும், தொற்று
நோய்களாலும் கூட நிகழ்ந்தன.
0
அக்டோபர் 1984 இல் அப்போதைய
பாரதப் பிரதமர் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் சீக்கிய மதத்தைச் சேர்ந்த அவரது
பாதுகாவலர்கள் இருவரால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் பல
பகுதிகளில் சீக்கியர்கள் பழி தீர்க்கும் நோக்கத்துடன் வன்மையாகத்
தாக்கப்பட்டார்கள். பல வீடுகள் தரைமட்டமாயின. ஆயிரக் கணக்கானோர் இறந்தார்கள்.
டில்லியின் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மண்ணெண்ணை ஊற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அவை
கொடூரமான மரணங்கள். அவர்கள் இருந்த இடத்தில் கறுப்புத் திட்டுக்களை மட்டுமே காண
முடிந்தது. இந்திரா காந்தி அவர்களின் மறைவைத் தொடர்ந்து பொறுப்பேற்றுக் கொண்ட அவர்
மகன் ராஜிவ் காந்தியின் அரசாங்கம் இதையெல்லாம் தடுத்து நிறுத்த முயன்றதாகத்
தெரியவில்லை. ஆனால் பொதுமக்களில் பலர் குழுக்களாகச் சேர்ந்து நிவாரணம் தர
முன்வந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், இடமும், பாதுகாப்பும்
கொடுத்தார்கள். இது போல குழுக்களாகச் சேர்ந்து உதவி செய்ய முன்வந்த நூற்றுக்கணக்கானவர்களில் நானும் இருந்தேன்.
0
பிரிவினையை மக்கள் எந்த
விதத்தில் நினைவுகூர்கிறார்கள் என்பதை கவனமாகப் பார்க்க வேண்டியது அவசியம்.
அதுதான் பிரிவினையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பம். அதற்காக மக்கள் சொல்வதை
எப்படிப் பார்ப்பது என்றும் அதில் பொதிந்திருக்கும் உண்மைகளை எப்படி
அகழ்ந்தெடுப்பது என்றும் செய்முறை விளக்கம் அளிக்கப் போவதில்லை. அதைப்
படிக்கிறவர்களுக்கே விட்டுவிடுகிறேன். ஜேம்ஸ் யங் சொல்கிறார் : ’பாதிக்கப்பட்டவர்களின்
வாய்வழிச் செய்திகள் என்னதான் புனையப்பட்டவையாக இருந்தாலும் அவை உண்மைக்குப்
புறம்பானவை அல்ல. உண்மையின் ஒரு பகுதியாகத்தான் அவைகளைக் கொள்ள வேண்டும். புனைவுத்
தன்மை உண்மைகளின் ஏற்பின்மை அல்ல. அவற்றைப் புரிந்து கொள்வதிலும், முன்வைப்பதிலும்
இருக்கும் தவிர்க்க முடியாத மாறுபாடுகளே அவை. தகவல்கள் ஆளுக்கு ஆள், மொழிக்கு
மொழி, பண்பாட்டுக்குப் பண்பாடு பெயரும் காரணத்தால் ஏற்படுபவை இந்த மாறுபாடுகள்.’
இந்தப் புத்தகத்தின் மூலம்
நான் என்ன செய்திருப்பதாக நம்புகிறேன் என்பதை இதை விடத் தெளிவாக, திறம்பட என்னால்
சொல்ல முடியாது.
0
மௌனத்தின் அலறல்
ஊர்வச்சி புட்டாலியா / தமிழில் : கே.ஜி. ஜவர்லால்
கிழக்கு பதிப்பகம்
பக்கம் 352. விலை ரூ.250
0
ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797
No comments:
Post a Comment