ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில் : பி.வி.ராமஸ்வாமி
விலை : 85
பக்கங்கள் : 144.
ஜார்ஜ்
ஆர்வெல் (இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளெய்ர்), 17 ஆகஸ்ட் 1945-ல் வெளியிட்ட நூல் அனிமல்
ஃபார்ம் (விலங்குப் பண்ணை).
ஒரு பண்ணையில் வசிக்கும் விலங்குகள் அதன் எஜமானரையும் அவருடைய
ஆட்களையும் விரட்டியடித்துவிட்டு அந்தப் பண்ணையைக் கைப்பற்றிவிடுகின்றன. இரண்டு
காலில் நடப்பவை எல்லாமே (மனிதர்கள்) நம் எதிரிகள் என்று அறிவிக்கின்றன. மிகப்
பெரிய புரட்சியைச் செய்த பிறகு அந்தப் பண்ணையில் என்ன நடக்கிறது என்பதை நாவல்
விவரிக்கிறது.
படிப்பவர் அனைவருமே இது யாரைப் பற்றியது, எதைப் பற்றியது என்று
சட்டென்று உணர்ந்துகொண்டுவிடுவார்கள். கம்யூனிஸ ரஷ்யா உலகப் பாட்டாளி மக்களுக்கும்
ஒடுக்கப்பட்டோருக்கும் ஓர் ஆதர்சமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, ஜோசஃப் ஸ்டாலின் உருவாக்கிய
போலீஸ் ராஜ்ஜியமும் அவர் இழைத்த படுகொலைகளும் உலகையே உலுக்கின.
ஆர்வெல்லின் விலங்குப் பண்ணையில் யார் ஸ்டாலின், யார் லெனின், யார் ட்ராட்ஸ்கி, கம்யூனிஸ்ட் அதிகார
வர்க்கம் எப்படி சர்வாதிகாரத்தன்மை கொண்டு இயங்கும் என்பதையெல்லாம் நீங்கள்
காணமுடியும். யார் பதவியில் இருந்தாலும் சரி, பாட்டாளிகள் மீண்டும்
மீண்டும் வஞ்சிக்கப்படுவார்கள் என்பதுதான் நியதியோ என்ற வருத்தமும் ஏற்படும்.
எழுதப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்றும்கூட ஸ்டாலினின்
ரஷ்யா பற்றிய அரசியல் வரலாறுபோல இன்றும் புதுமையாகக் காட்சியளிக்கிறது இந்தப்
புத்தகம்.
புத்தகத்திலிருந்து....
ஜூன் மாதம். விலங்குகளுக்கான தீவனப் புல்
அறுவடைக்குத் தயாரான சமயம். ஜூன் மூன்றாவது வாரத்தில் நாடு முழுவதும் கோடைக்காலக் கோலாகலத்தில் இருந்த ஒரு சனிக்கிழமை யன்று ஜோன்ஸ், வில்லிங்டனில் உள்ள ரெட் புல் என்னும் புகழ் பெற்ற மது விடுதிக்குப் போய்க் குடிக்க ஆரம்பித்தவர், மறு நாள் ஞாயிறு மதியம்வரை பண்ணைக்குத் திரும்பவில்லை.
பண்ணையாட்களோ அதிகாலையிலேயே மாடுகளைப் பாலுக்காகக் கறந்துவிட்டு மிருகங்களுக்குத் தீனி வைக்கவேண்டுமே என்ற கவலையே இல்லாமல், முயல் வேட்டைக்குப் போய்விட்டார்கள். வீடு திரும்பிய ஜோன்ஸோ, நேராகத் தன்னுடைய சோஃபாவுக்குப்போய் ஒரு செய்தித்தாளால் முகத்தை மூடிக்கொண்டு தூங்கிவிட்டார். இப்படியாக மாலை நேரமும் வந்துவிட்டது.
நாள் முழுவதும் பட்டினியில் கிடந்த விலங்குகளுக்கு இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. ஒரு
பசு, தன் கொம்புகளால் தானியக் கிடங்கின் கதவுகளை முட்டித் திறந்தது. உடனே எல்லா விலங்குகளும் உள்ளே நுழைந்து, தொட்டிகளில் இருந்ததீனி வகைகளைத் தாமே எடுத்து உண்ண ஆரம்பித்தன. அந்தச் சமயத்தில் கண்விழித்துக்கொண்ட ஜோன்ஸ், உடனேயே நான்கு உதவியாளர்களுடன், ஆளுக்கொரு சவுக்குடன்,
அதிரடியாக தானிய கிடங்கினுள்ளே நுழைந்தார். எல்லோரும் சேர்ந்து கண்மண் தெரியாமல் நாலாபுறமும் சவுக்கால் வீறி விளாசிவிட்டார்கள்.
கடும் பசியில் தவித்துக்கொண்டிருந்த விலங்குகளுக்கு
இந்தச் செயல் இனிமேலும் பொறுக்க
முடியாத ஒன்றாகப்பட்டது. ஒரே நேரத்தில், ஏதோ முன்னமேயே பேசித் திட்டம்போட்டு வைத்ததுபோல, உண்மையில் அப்படி இல்லாவிட்டாலும், எல்லா விலங்குகளும் தங்களைத் தாக்கியவர்கள்மீது
குபீரென்று மோதிப் பாய்ந்தன. ஜோன்ஸும் அவருடைய வேலையாட்களும் தங்கள் உடலின் எல்லாப் பாகத்திலும்
திடீரென்று, சரமாரியாக இடியும் உதையும் பட்டார்கள். நிலைமை சுத்தமாக அவர்களின் கையை மீறிப் போய்விட்டது. விலங்குகளிடம் இப்படிப்பட்ட ஒரு செயலை முன் எப்போதும்
அவர்கள் கண்டதில்லை. நினைத்தபோதெல்லாம், கொடுத்த அடி உடைகளை வாங்கிக்கொண்டு,
எப்படி நடத்தினாலும் அடங்கிக் கிடந்த இந்தப் பிராணிகள் இப்படித் திடீரென்று பொங்கி எழுந்ததில், என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து, அதிர்ச்சியும் அச்சமும்
அடைந்தார்கள். உடனேயே, தங்களைக் காத்துக்கொள்ள, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள். ஒரே நிமிடத்தில் அந்த ஐந்து பேரும் வண்டிப்பாதையை
அடைந்து, வெளியே போகும் பிரதான சாலையை நோக்கிச்
சிட்டாகப் பறந்தார்கள். வெற்றி வேகத்தில் விலங்குகளும் அவர்களைத் துரத்தியபடித் தொடர்ந்தன.
தன்னுடைய படுக்கையறை சன்னல் வழியாக நடப்பதையெல்லாம்
பார்த்த ஜோன்ஸின் மனைவி உடனேயே அவசர அவசரமாகச் சில உடைமைகளை ஒரு கித்தான் பையில்
அள்ளிப் போட்டுக்கொண்டு இன்னொரு வழியாகப் பண்ணையை விட்டு வெளியேறினாள். மோசஸ், விட்டத்திலிருந்து தன் சிறகுகளைப் பரப்பிப் படபடத்து உரத்த சத்தம் எழுப்பிக்கொண்டே
அவளைத் தொடர்ந்து பறந்தது.
இதனிடையே, மற்ற விலங்குகள் எல்லாம்
சேர்ந்து ஜோன்ஸையும் அவருடைய ஆள்களையும் வீதிக்கு விரட்டிவிட்டுப் பண்ணையின் பெரிய வலிய கதவுகளை நன்றாகச் சாத்திவிட்டன.
இப்படியாக, நடந்தது என்னவென்று தாங்கள்
உணரும் முன்னமேயே, புரட்சி வெற்றிகரமாக நடந்தேறிவிட்டது. ஜோன்ஸ் துரத்தியடிக்கப்பட்டு, மேனார் பண்ணை, விலங்குகள் வசமானது.
முதல் சில நிமிடங்களுக்கு, விலங்குகளால் இந்தத் திடீர் அதிர்ஷ்டத்தை நம்பமுடியவில்லை. அவை செய்த முதல் காரியம், ஒன்றாக அணிவகுத்து, பண்ணையின் எல்லைப்புறம் முழுவதுமாக வேகநடை போட்டதுதான். பண்ணையின் எந்தப் பக்கத்திலும்
ஏதாவது மனித உயிர் ஒளிந்துகொண்டிருந்தால் அவர்களைப் பிடித்து விரட்டுவதற்காகச் செல்வதுபோல அவை குதித்து வேகநடை போட்டன.
இதற்குப்பின் தங்களால் முற்றிலும் வெறுக்கப்பட்ட ஜோன்ஸின் அதிகாரத்தைக் காட்டும் எந்தவொரு அடையாளமும் இல்லாதபடி ஆக்குவதற்காக, பண்ணையின் கட்டடங்களுக்கு வேகமாக வந்தன. கொட்டடியின் கோடியில் இருந்த பாதுகாப்பு
அறையின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தன.
இழுத்துப் பிடிக்கும் பட்டிகள், மூக்கணாங்கயிறுகள், வளையங்கள், நாய்ச் சங்கிலிகள், ஆடுகளையும் பன்றிகளையும் விதையறுக்க ஜோன்ஸ் பயன்படுத்திய குரூரமான வெட்டரிவாள், மற்றும் பிற கருவிகளை எடுத்துக் கிணற்றில்
வீசியெறிந்தன. குதிரைகளை வாயில் கட்டி ஒடுக்கும் தோல் வார்களும், மற்ற அடக்குமுறைச் சாதனங்களும், அவமானப்படுத்தும் மூக்குப் பைகளும், தோட்ட வெளியில் எரிந்துகொண்டிருந்த குப்பை கூளங்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டன.
சாட்டை, சவுக்குகளுக்கும் இதே கதிதான். பற்றி எரியும் சவுக்குகளைப் பார்த்து விலங்குகள்
கொண்டாட்டமாகக் குதித்துச் சத்தமிட்டுத் தம் சந்தோஷத்தை வெளிக்காட்டின.
சந்தை நாட்களில் குதிரைகளின் பிடரி மயிரிலும்
வாலிலும் ஒய்யாரமாகக் கட்டப்படும்
ரிப்பன் நாடாக்களை ஸ்நோபால் எடுத்து வந்து எரியும் நெருப்பில் போட்டது.
‘ரிப்பன் நாடாக்கள் மனிதர்கள் பயன்படுத்தும் உடைகள் போன்றவை. எந்த விலங்கும் எப்போதும்
எந்த உடையும் அணியாமல் பிறந்தமேனியாகவே இருக்கவேண்டும்’ என்றது ஸ்நோபால்.
இதைக்கேட்டதும், பாக்ஸர், வெயில் காலங்களில் தன் காதுகளைத் தொந்தரவு செய்யும் ஈக்களிடமிருந்து காத்துக் கொள்ள உபயோகிக்கும் ஒரு வைக்கோல் தொப்பியை
எடுத்துவந்து தீயில் போட்டது.
இப்படியாக மிகக் குறுகிய நேரத்தில் ஜோன்ஸை ஞாபகப்படுத்தும் அனைத்துப் பொருள்களையும்
மிருகங்கள் ஒன்றுகூடி அழித்தன.
No comments:
Post a Comment