Search This Blog

Monday, June 24, 2013

அண்ணா ஹசாரேவும் மகாத்மா காந்தியும்

காந்தி வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடவில்லை. இந்திய மக்களின் அச்சத்துக்கு எதிராகவே போராடினார். 

இரு நூற்றாண்டுக்கால அராஜகங்களால், பஞ்சங்களால் அஞ்சி ஒடுங்கிக் கிடந்த சாமானிய இந்திய மக்கள் எந்தப் போராட்டத்துக்கும் தயாராக இருக்கவில்லை. இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிரான எல்லாப் போராட்டங்களையும் சாமானிய மக்கள் மிகச் சில நாட்களிலேயே கைவிட்டிருக்கிறார்கள். மருது பாண்டியர், பழசி ராஜா முதல் சிப்பாய்க் கலகம்வரை இதைக் காணலாம். பல போர்களில் போரிட பத்தோ, பதினைந்தோ வெள்ளைக்காரச் சிப்பாய்கள்தான் சென்றிருக்கிறார்கள். அவர்களை பார்த்ததுமே நம்மவர்கள் அஞ்சி விழுந்திருக்கிறார்கள் என்பதே வரலாற்று உண்மை.

அந்த அச்சத்தைக் களைந்ததே காந்தியின் சாதனை. அண்ணா ஹசாரேயின் போராட்டத்தின் வெற்றி என்பது அது இந்தியச் சமூகத்தில் உருவாக்கும் மனமாற்றம்தான். இந்தியாவின் மிகப் பெரிய சவாலாக இன்று இருப்பது பொதுவாழ்க்கையில் ஊழல். அந்த ஊழலுக்கு நம் சாமானிய மக்கள் அளிக்கும் அங்கீகாரம்மூலமே அது நிலைநிற்கிறது என்பதே உண்மை. அண்ணா ஹசாரே போராடுவது அந்த அங்கீகாரத்தைப் படிப்படியாக இல்லாமல் ஆக்குவதற்காகவே. அதற்கு, ஊழல் உருவாக்கும் ஒட்டுமொத்த அழிவைப்பற்றிய சித்திரத்தை நம் மக்களுக்கு அளித்தாகவேண்டும். ஊழலை ஒரு முக்கியமான பிரச்னையாக நம் நாட்டையே பேசவைக்கவேண்டும். அவர் செய்வது அதைத்தான்.
அண்ணா ஹசாரே போராடிக்கொண்டிருப்பது இந்தியாவைப் பீடித்துள்ள அவநம்பிக்கையுடன். இலட்சியவாதத்தில் நம்பிக்கை இழந்து வெறும் நடைமுறைவாதிகளாக, அப்பட்டமான சுயநலவாதிகளாக ஆகிவிட்டிருக்கும் நம் மக்களை நோக்கி அவர் பேசுகிறார். அவரது போராட்டங்கள் இன்றைய அவநம்பிக்கையை அழிக்க முடிந்தால் அவர் வென்றார் என்றே பொருள்.

கோட்பாடு பேசும் அறிவுஜீவிகளால் ஒருபோதும் மக்களின் பேரியக்கமான காந்தியப் போராட்டத்தை உருவாக்கிவிட முடியாது. புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. ஆனால் அவர்களால் அவநம்பிக்கைகளை எளிதில் உருவாக்கிவிட முடியும். இன்று அண்ணா உருவாக்கும் நம்பிக்கைக்கு நேர் எதிரான சக்திகளாக இருப்பவர்கள் நம் சவடால் அறிவுஜீவிகள். வரலாற்றுநோக்கு இல்லாத அவர்களது வெட்டித் தர்க்கங்களுக்கு எதிராக ஒரு முழுமைநோக்கில் காந்தியிலிருந்து அண்ணா ஹசாரே வரையிலான மக்கள் போராட்டங்களைப் புரிந்துகொள்ளும்படியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

0

அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் ஜெயமோகன்
கிழக்கு பதிப்பகம்
128 பக்கங்கள்
விலை ரூ.80.00

ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

No comments:

Post a Comment