Search This Blog

Friday, June 28, 2013

முகலாயர்கள்

‘டெல்லி சென்ற எனது மகன் திரும்பவில்லை அரசரே.  இப்ராஹிம் லோடி அவனைச் சிறைப்படுத்திவிட்டான். அதுபோக லோடி வம்சத்தினருக்கு விசுவாசமாக இருந்த இருபத்து மூன்று முக்கிய மந்திரிகளை இப்ராஹிம் லோடி கொன்றுவிட்டான். ஆகவே தங்களது மேலான உதவியை நாடி வந்துள்ளேன். தாங்கள் இந்துஸ்தான் மீது படையெடுத்து வந்து, இப்ராஹிம் லோடிக்கு முடிவுகட்ட வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல, அவனால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினரின் விருப்பம்.’

பணிவோடு தௌலத் கான் லோடி சொன்ன வார்த்தைகள், பாபரின் கோபத்தைப் போக்கியிருந்தன. யோசிக்க ஆரம்பித்திருந்தார் அவர்.  அப்போதைக்கு ‘சரி. உதவுகிறேன்’ என்று தௌலத் கானிடம் சொல்லியனுப்பினார் பாபர்.

அடுத்த சில நாள்களிலேயே ரானா சங்காவின் தூதுவர் காபுலுக்கு வந்தார். கொண்டுவந்த செய்தி இதுதான். ‘தாங்கள் இந்துஸ்தான் மீது படையெடுக்க வேண்டும். அந்த இப்ராஹிம் லோடியை ஒழிக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். ராஜபுத்திரர்களின் சார்பாக நான் உங்களை அழைக்கிறேன்.’

0

‘உன் சகோதரர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காதே, அவர்கள் உனக்கு உண்மையாக இருக்கும்வரை.’ பாபர் சொல்லிவிட்டுச் சென்ற இந்தக் கடைசி வார்த்தைகள்தான் ஹுமாயூனுக்கு வினையாக அமைந்தன.

ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்த நல்ல நாளில் இருபத்து மூன்று வயது ஹுமாயூன் முகலாயப் பேரரசராக ஆக்ராவில் பதவியில் அமர்ந்தார் (டிசம்பர் 1530). பரந்து விரிந்த பேரரசு. பாபரது மரணம் ஆப்கன்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. டெல்லியைக் கைப்பற்ற காய்கள் நகர்த்த ஆரம்பித்திருந்தார்கள். இன்னொரு புறம் அவ்வளவு பெரிய பேரரசைக் கட்டியாளும் அளவுக்கு நிதி இல்லாத நிலை.

ஹுமாயூனுக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்னைகளே விஸ்வரூபமெடுத்து நின்றன. புதிய பகுதிகளைப் பிடித்து பேரரசை விரிவாக்குவதா? நிதி நெருக்கடியைச் சமாளித்து நிர்வாகத்தைச் சீரமைப்பதா? தலைதூக்கும் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டு இருப்பதைக் காப்பாற்றிக் கொள்வதா?

எல்லாவற்றையும் நானே என் தோளில் சுமப்பதால்தானே மூச்சு திணறுகிறது. எங்கே என் சகோதரர்கள்? வாருங்கள். இளையவன் கம்ரான். இங்கே வா. காபூலையும் காந்தஹாரையும் நீ கவனித்துக் கொள்.  சகோதரன் மிர்ஸா ஹிண்டால், அல்வாரையும் மேவாத்தையும் நீ நிர்வகி. சம்பலை நீ எடுத்துக் கொள் மிர்ஸா அஸ்காரி, யாரது? மிர்ஸா சுலைமானா? உடன்பிறக்காவிட்டாலும் நீயும் என்ற சகோதரன்தானே. பாதக்ஷனின் அரசாங்கத்தை நீ பார்த்துக் கொள். அனைவருக்கும் மகிழ்ச்சிதானே?

0

புத்தகங்களைவிட சிறுவன் அக்பருக்கு புறாக்களையும் பூக்களையும் பார்ப்பது பிடித்திருந்தது. ஹுமாயூன் புத்தகப் பிரியர். ஆனால் காபூலில் வளர்ந்த அக்பருக்குக் கல்வி கசக்கத்தான் செய்தது. கல்வி கற்றுக் கொடுப்பதற்கு என நியமிக்கப்பட்ட தனி ஆசிரியர், அக்பரை எழுத, படிக்க வைப்பதற்குள் திணறிப் போனார்.

குதிரையேறி வேகமாகச் செல்வது, காடு, மேடெல்லாம் சுற்றித் திரிந்து இயற்கையை ரசிப்பது, விதவிதமாக வேட்டையாடுவது, வாளெடுத்து நண்பர்களுடன் போர் புரிவது - இவை மட்டுமே அக்பருக்குப் பிடித்திருந்தன. எழுத்துகள் அல்ல. தன் பெயரை எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக் கொள்வதில்கூட அக்பர் ஆர்வம் காட்டவில்லை.

ஹுமாயூனின் இறப்புக்குப் பிறகு கலகம் எதுவும் ஏற்படாதபடி கவனித்துக் கொண்டார் தளபதி பைரம் கான். அடுத்து அக்பரை அரியணையில் அமர்த்த வேண்டும். சிறுவன்தான். வேறு வழியில்லை. அக்பர் அரியணையில் இருக்கட்டும், ஆட்சிப் பொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். முடிவெடுத்திருந்தார் பைரம் கான்.

டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தார் அக்பர். பஞ்சாபில் கலானௌர் என்ற இடத்தில் அவரைச் சந்தித்தார் பைரம் கான். தந்தை இறப்புக்கு முறைப்படி துக்கம் அனுஷ்டித்த அக்பர், பின்பு அரியணை ஏறத் தயாரானார்.

0

முகலாயர்கள்
முகில்
கிழக்கு பதிப்பகம்
496 பக்கம், விலை ரூ 325


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

Thursday, June 27, 2013

சீனா : ஒரு நேரடி ரிப்போர்ட்

குலுங்கித் தள்ளாடித் தவித்தது விமானம். சாப்பாடு கொண்டு வந்த தள்ளுவண்டியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சமாளித்தார்கள் விமானப் பணிப்பெண்கள். எல்லோர் முகத்திலும் களைப்பு அப்பியிருந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் - 2002 மார்ச்சில் - கிழக்கு சீனா விமானப் போக்குவரத்துக் கழகம், டெல்லி-பெய்ஜிங் வழியில் விமானச் சேவையை ஆரம்பித்திருந்தது. அதற்கு முன்னால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நேரடியாக விமானம் கிடையாது. எதியோப்பியாவிலிருந்து பெய்ஜிங் செல்லும் ஒரே ஒரு விமானம் மட்டும், போனால் போகிறது என்று டெல்லியில் கொஞ்ச நேரம் நிற்கும். இல்லாவிட்டால் சிங்கப்பூர் அல்லது தாய்லாந்து வழியாகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடவேண்டியதுதான்.

அதற்காக, இந்த இரு நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கு அப்படியொன்றும் மக்கள் வரிசையில் நின்றார்கள் என்றும் சொல்ல முடியாது. டெல்லி சாந்திபத் சாலையில் உள்ள சீனத் தூதரகத்தில் நான் விசா வாங்கப் போனபோது அங்கே ஈ, காக்காய் கிடையாது. மயான அமைதி. அக்கம்பக்கத்தில் இருக்கும் எல்லாத் தூதரகங்களிலும் திருப்பதி வரிசை போல் விசாவுக்காகக் காத்திருந்து வெயிலில் வேர்த்திருந்தது கூட்டம். சீனத்து விசாவைத்தான் சீந்துவாரில்லை.

பெய்ஜிங் ஒளிபரப்புக் கழகத்திலிருந்து எனக்கு வந்திருந்த பணி நியமனத்தைக் காட்டினேன். அடுத்த ஒரு வருடத்துக்காவது நான் அங்கேதான் வேலை செய்யப் போகிறேன். அந்தப் பணி உத்தரவே பூச்சி பூச்சியாக சீன மொழியில் எழுதப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் சிவப்பு ரப்பர் ஸ்டாம்ப் வேறு அடித்து வைத்திருந்தது. தூதரகப் பெண்மணி அதில் தன் பங்குக்கு சாப் சாப்பென்று இன்னும் நாலு சிவப்பு சீல் குத்தினாள். என்ன வேகமாக மெஷின் மாதிரி ஸ்டாம்ப் அடிக்கிறாள்!

ஒரு வாரத்தில் விசா கிடைத்துவிட்டது. சீக்கிரமே ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கு விமானம் ஏறினேன். உணவுத் தட்டு ஏந்தி வந்த பணிப்பெண்ணின் மெனுவில் இரண்டே இரண்டு ஐட்டம்தான் இருந்தன: பன்றிக்கறி-சோறு அல்லது பன்றிக்கறி-நூடுல்ஸ். அவளது சீனத்து உச்சரிப்புக்கு ‘றனா’ வேறு வரவில்லை. ‘நூடுல்ஸ் மட்டும் போதும்’ என்றேன். எனக்குப் பசியே இருக்கவில்லை.

0

நான் சீனாவில் தங்கியிருந்த வருடங்களில்தான் அவர்கள் உலகிலேயே மிகப் பெரிய அணையையும் உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாதையையும் கட்டப்போகிறார்கள். உலகத்தின் பிரம்மாண்டமான விமான நிலையமும் மியூசியமும் வரப்போகின்றன. அதிவேக ரயில். கொள்ளை கொள்ளையாக அந்நியச் செலாவணி. நாலு கால் பாய்ச்சலில் ஓடும் சீனாவின் வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டு, பக்கத்து நாடான இந்தியாவில் பல பேருக்கு வயிறு எரியப்போகிறது!

ஆனால் பிரச்னைகளும் வராமல் இருக்காது. சர்வாதிகார அரசியல் ஒரு பக்கம், தாராளமான பொருளாதாரம் மறு பக்கம். இரண்டுக்கும் நடுவில் கீழே விழுந்துவிடாமல் கயிற்றின்மேல் நடப்பதைச் செய்துகாட்டவேண்டும் சீனா. எத்தனை நாளைக்குத்தான் விழாமல் நடக்கமுடியுமோ, தெரியவில்லை. இங்கே புதிய சுதந்தரங்களும் பழைய அடக்குமுறைகளும் பக்கத்துப் பக்கத்து வீட்டில் வசிக்கின்றன. குழப்பம் ஒருபுறம், கட்டுப்பாடு மறுபுறம். நவீனமும் பழைமையும் சந்திக்கும் இந்த மாபெரும் முரணைச் சமாளிப்பதற்கு எந்தத் தெளிவான வழிமுறையும் யாரிடமும் கிடையாது.

0

விமானம் கீழே இறங்கும்போது எனக்கு எப்போதுமே ஒரு மாதிரி படபடப்பாக இருக்கும். அன்றும், விமானத்தைத் தூக்கிப்போட்டுக் குதித்தபடி தரை இறங்கினார் பைலட். ஒலிபெருக்கியில் ‘விமானம் முழுவதுமாக நிற்கும்வரை யாரும் இருக்கையைவிட்டு எழுந்திருக்க வேண்டாம்’ என்று அவசர வேண்டுகோள் வந்தது. அப்போதுதான், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எவ்வளவு கலாசார ஒற்றுமை என்று பார்க்க முதல் வாய்ப்பு கிடைத்தது.

எழுந்திருக்காதீர்கள் என்று அறிவிப்பு வந்த அடுத்த கணமே அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றவர்கள் இந்தியர்களும் சீனர்களும் மட்டும்தான். வெள்ளைக்காரப் பயணிகள் அமைதியாக இருக்கையில் அமர்ந்துகொண்டு எங்களை அற்பப் புழுக்கள் போல் பார்த்துக் கொண்டிருந்தனர். விமானப் பணிப்பெண்கள் செய்வதறியாது கையைப் பிசைய, செல்போன்கள் பீப் பீப் என்று இயக்கப்பட, மேலிருந்து விஷ் விஷ் என்று இறக்கப்படும் சூட்கேஸ்கள் தலையில் இடிக்காமல் ஒவ்வொருவரும் குனிந்து குனிந்து தப்பிக்க, ஒலிபெருக்கியில், பதிவு செய்யப்பட்ட ஒரு குரல் அறிவித்தது:

‘பெய்ஜிங் சர்வதேச விமான நிலையம் உங்களை வரவேற்கிறது!’

0

சீனா - விலகும் திரை

பல்லவி அய்யர் / தமிழில் ராமன்ராஜா
கிழக்கு பதிப்பகம்
360 பக்கம் / விலை ரூ 300


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

Wednesday, June 26, 2013

ஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு

ஒரு  நாடு எப்படி இருக்க வேண்டும்?  நமக்குத் தெரிந்த நாடு இந்தியாதான். எனவே, நம்மைப் பொறுத்தவரை, நாடு என்றால், இந்தியாமாதிரி இருக்க வேண்டும்.

காஷ்மிர் முதல் கன்னியாகுமரிவரை விரிந்த நிலப் பரப்பு. அதில் இமாலயம் முதல் பரங்கி மலை  வரை வகை வகையாய் மலைகள்:  கங்கை, தக்காண சமவெளிகள்; கங்கை, காவேரி, மகாநதி, பி
ரம்மபுத்ரா, கோதாவரி, கிருஷ்ணா, வைகை  நதிகள்: கேரளம், கோவா, பாண்டிச்சேரி போல் கடற்கரைப் பிரதேசங்கள்.

இந்த இலக்கணப்படி பார்த்தால்  ஜப்பான் ஒரு நாடே இல்லை .6852 தீவுகள் சேர்ந்த ஒரு இணைப்பு.

0

ஜப்பான் ஆசியக் கண்டத்தில் பசிபிக் பெருங்கடலில் இருக்கிறது. சீனா, தென் கொரியா, வட கொரியா, ரஷ்யா ஆகியவை அண்டை நாடுகள். சீனாவிடமிருந்து சீனக் கடலும், தென் கொரியா, வட கொரியா, ரஷ்ய நாடுகளிடமிருந்து ஜப்பான் கடலும் ஜப்பானைப் பிரிக்கின்றன.

இயற்கை ஜப்பானைப் படைக்கும்போது நெஞ்சில் ஈரமே இல்லாமல் உருவாக்கியிருக்கிறது. உலகின் பத்து சதவிகித எரிமலைகள் ஜப்பானில்தான் இருக்கின்றன - 107 எரிமலைகள்.  அக்னி தன் சக்தியை இப்படிக் காட்டினால், இன்னொரு பஞ்சபூதமான பூமி தரும் பரிசாக ஒவ்வொரு வருடமும்   1500 நில நடுக்கங்கள். உலகத்தின் பூகம்பத் தொழிற்சாலை என்று ஜப்பானைப் பலர் அழைப்பது இதனால்தான். கடல் சும்மா இருக்குமா? தன் பங்குக்குத் தாராளமாகச் சூறாவளிக் காற்று, ராட்சச  அலைகள், பனிப் புயல்கள் ஆகியவற்றை அழையா விருந்தாளிகளாக அனுப்பி வைக்கிறது.

இயற்கையின் ஓர வஞ்சனை இத்தோடு முடியவில்லை. தொழில் உற்பத்திக்குத் தேவையான இயற்கை வளங்கள் ஜப்பானில் கிடையாது.  இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம். இறக்குமதிதான் நாட்டின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிர் மூச்சு.

0

இரண்டாம் உலகப் போர். 1939 முதல் 1945 வரை நடந்த  இந்த உலக மகா யுத்தம் பல நாடுகளின் எல்லைக் கோடுகளையும் சில நாடுகளின் தலைவிதியையும் மாற்றி எழுதியது. நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட  பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ் ஓர் அணியில். எதிர் அணியில் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்.    

இந்தப் போரை உலக மகா யுத்தமாக மாற்றியதில் ஜப்பானுக்குப் பெரும் பங்கு உண்டு. ஜெர்மனியும்  இத்தாலியும் ஃப்ரான்ஸ், பிரிட்டனோடு நடத்திக் கொண்டிருந்த போரை அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. 1941. ஜப்பான் அமெரிக்காவின் ஹவாயிலிருக்கும் பேர்ள் துறைமுகம், அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த பிலிப்பைன்ஸ் நாடு ஆகியவைமீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா ஜப்பான்மீது போர் அறிவித்தது. பிற நேச  நாடுகளும் ஜப்பான்மீது போர் அறிவித்தன.

ஆகஸ்ட் 1945. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய  நகரங்கள்மீது  அமெரிக்கா அணுகுண்டுகள் வீசியது. 1,11, 000 பேர் பலியானார்கள், ஒரு லட்சம் பேருக்கு மேல் படுகாயம் அடைந்தார்கள்.  அமெரிக்காவுக்கு எதிராகப் போர் நடத்துவது முடியாத காரியம் என்று புரிந்துகொண்ட ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

போருக்கு ஜப்பான் கொடுத்த விலை மிக அதிகம். மூன்று கோடிக்கும் அதிகமான மக்களின் மரணம். நாட்டில் இருந்த அத்தனை ராணுவத் தடவாளத் தொழிற்சாலைகளையும் அமெரிக்கா தரை மட்டமாக்கியது. சுமார் 40 சதவிகிதத் தொழிற்சாலைகளும்  முக்கிய நகரங்களும் சிதிலமாயின. ஜப்பான் நாடும் பொருளாதாரமும்  அதல பாதாளத்தில் விழுந்தன. இந்தப் படுகுழியிலிருந்து ஜப்பான் எழுந்து வந்தது. 1960 முதல் 1990 வரை உலகப் பொருளாதார வரிசையில் முன்னணியில் நின்றது. இந்த முப்பது வருட அமோக வளர்ச்சி ஜப்பான் அதிசயம்  (Japan Miracle) என்று அழைக்கப்படுகிறது.  

0

ஜப்பான்
எஸ்.எல்.வி. மூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
196 பக்கம்
விலை ரூ 130


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

Tuesday, June 25, 2013

மௌனத்தின் அலறல் : பிரிவினையும் பெண்களும்

ஒரு நாட்டின் குடி மக்களுக்கு வீடு மாறுகிற சூழ்நிலை ஏற்படுவதுண்டு. நாடே மாறுகிற சூழ்நிலை வருமா? இந்தியாவில் 1947 இல் அந்தச் சூழ்நிலை வந்தது.
இந்தியாவின் அரசியல் ரீதியான பகுப்பு படு மோசமான சமூக நாசத்தை ஏற்படுத்தியது. ஒரு பெருத்த ஜனக் கூட்டம் மிகக் குறுகிய கால அவகாசத்தில் தங்கள் வீடுகளையும் நாடுகளையும் மாற்றிக் கொள்ள நேர்ந்தது. இது போல இதற்கு முன்னும் நிகழ்ந்ததில்லை, இன்னும் நிகழவும் இல்லை.

பகுப்புக்குப் பின் பாகிஸ்தான்(கள்) இந்தியாவின் வெட்டுண்ட சிறகுகள் ஆயின. இந்தச் சிறகுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே சில மாதங்களுக்குள் சுமார் ஒன்றேகால் கோடிப் பேர் சடு குடு ஆட வேண்டியிருந்தது. இவர்களில் பெரும்பாலோர் சரித்திரப் புகழ் வாய்ந்த பஞ்சாப் மாநிலத்தின் எல்லைக் கோட்டைக் கடக்க வேண்டியிருந்தது. இஸ்லாமியர்கள் மேற்கு நோக்கியும் இந்துக்களும் சீக்கியர்களும் கிழக்கு நோக்கியும் இடம் பெயர்ந்தார்கள். அவர்களின் இடப் பெயர்ச்சிக்கு கொலை சில சமயம் காரணமாகவும், சில சமயம் விளைவாகவும் இருந்தது. மரணங்கள் கொலைகளால் மட்டும் நிகழவில்லை. பட்டினியாலும், பாழான உணவாலும், தொற்று நோய்களாலும் கூட நிகழ்ந்தன.
0
அக்டோபர் 1984 இல் அப்போதைய பாரதப் பிரதமர் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் சீக்கிய மதத்தைச் சேர்ந்த அவரது பாதுகாவலர்கள் இருவரால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் சீக்கியர்கள் பழி தீர்க்கும் நோக்கத்துடன் வன்மையாகத் தாக்கப்பட்டார்கள். பல வீடுகள் தரைமட்டமாயின. ஆயிரக் கணக்கானோர் இறந்தார்கள். டில்லியின் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மண்ணெண்ணை ஊற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அவை கொடூரமான மரணங்கள். அவர்கள் இருந்த இடத்தில் கறுப்புத் திட்டுக்களை மட்டுமே காண முடிந்தது. இந்திரா காந்தி அவர்களின் மறைவைத் தொடர்ந்து பொறுப்பேற்றுக் கொண்ட அவர் மகன் ராஜிவ் காந்தியின் அரசாங்கம் இதையெல்லாம் தடுத்து நிறுத்த முயன்றதாகத் தெரியவில்லை. ஆனால் பொதுமக்களில் பலர் குழுக்களாகச் சேர்ந்து நிவாரணம் தர முன்வந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், இடமும், பாதுகாப்பும் கொடுத்தார்கள். இது போல குழுக்களாகச் சேர்ந்து உதவி செய்ய முன்வந்த நூற்றுக்கணக்கானவர்களில் நானும் இருந்தேன்.
0
பிரிவினையை மக்கள் எந்த விதத்தில் நினைவுகூர்கிறார்கள் என்பதை கவனமாகப் பார்க்க வேண்டியது அவசியம். அதுதான் பிரிவினையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பம். அதற்காக மக்கள் சொல்வதை எப்படிப் பார்ப்பது என்றும் அதில் பொதிந்திருக்கும் உண்மைகளை எப்படி அகழ்ந்தெடுப்பது என்றும் செய்முறை விளக்கம் அளிக்கப் போவதில்லை. அதைப் படிக்கிறவர்களுக்கே விட்டுவிடுகிறேன். ஜேம்ஸ் யங் சொல்கிறார் : ’பாதிக்கப்பட்டவர்களின் வாய்வழிச் செய்திகள் என்னதான் புனையப்பட்டவையாக இருந்தாலும் அவை உண்மைக்குப் புறம்பானவை அல்ல. உண்மையின் ஒரு பகுதியாகத்தான் அவைகளைக் கொள்ள வேண்டும். புனைவுத் தன்மை உண்மைகளின் ஏற்பின்மை அல்ல. அவற்றைப் புரிந்து கொள்வதிலும், முன்வைப்பதிலும் இருக்கும் தவிர்க்க முடியாத மாறுபாடுகளே அவை. தகவல்கள் ஆளுக்கு ஆள், மொழிக்கு மொழி, பண்பாட்டுக்குப் பண்பாடு பெயரும் காரணத்தால் ஏற்படுபவை இந்த மாறுபாடுகள்.’
இந்தப் புத்தகத்தின் மூலம் நான் என்ன செய்திருப்பதாக நம்புகிறேன் என்பதை இதை விடத் தெளிவாக, திறம்பட என்னால் சொல்ல முடியாது.
0
மௌனத்தின் அலறல்
ஊர்வச்சி புட்டாலியா / தமிழில் : கே.ஜி. ஜவர்லால்
கிழக்கு பதிப்பகம்
பக்கம் 352. விலை ரூ.250
0
ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

Monday, June 24, 2013

பாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - தினமணி விமர்சனம்


பாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம் புத்தகத்தின் விமர்சனம் தினமணி இதழில் (24-ஜூன்-2013) வெளியானது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-701-5.html

அண்ணா ஹசாரேவும் மகாத்மா காந்தியும்

காந்தி வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடவில்லை. இந்திய மக்களின் அச்சத்துக்கு எதிராகவே போராடினார். 

இரு நூற்றாண்டுக்கால அராஜகங்களால், பஞ்சங்களால் அஞ்சி ஒடுங்கிக் கிடந்த சாமானிய இந்திய மக்கள் எந்தப் போராட்டத்துக்கும் தயாராக இருக்கவில்லை. இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிரான எல்லாப் போராட்டங்களையும் சாமானிய மக்கள் மிகச் சில நாட்களிலேயே கைவிட்டிருக்கிறார்கள். மருது பாண்டியர், பழசி ராஜா முதல் சிப்பாய்க் கலகம்வரை இதைக் காணலாம். பல போர்களில் போரிட பத்தோ, பதினைந்தோ வெள்ளைக்காரச் சிப்பாய்கள்தான் சென்றிருக்கிறார்கள். அவர்களை பார்த்ததுமே நம்மவர்கள் அஞ்சி விழுந்திருக்கிறார்கள் என்பதே வரலாற்று உண்மை.

அந்த அச்சத்தைக் களைந்ததே காந்தியின் சாதனை. அண்ணா ஹசாரேயின் போராட்டத்தின் வெற்றி என்பது அது இந்தியச் சமூகத்தில் உருவாக்கும் மனமாற்றம்தான். இந்தியாவின் மிகப் பெரிய சவாலாக இன்று இருப்பது பொதுவாழ்க்கையில் ஊழல். அந்த ஊழலுக்கு நம் சாமானிய மக்கள் அளிக்கும் அங்கீகாரம்மூலமே அது நிலைநிற்கிறது என்பதே உண்மை. அண்ணா ஹசாரே போராடுவது அந்த அங்கீகாரத்தைப் படிப்படியாக இல்லாமல் ஆக்குவதற்காகவே. அதற்கு, ஊழல் உருவாக்கும் ஒட்டுமொத்த அழிவைப்பற்றிய சித்திரத்தை நம் மக்களுக்கு அளித்தாகவேண்டும். ஊழலை ஒரு முக்கியமான பிரச்னையாக நம் நாட்டையே பேசவைக்கவேண்டும். அவர் செய்வது அதைத்தான்.
அண்ணா ஹசாரே போராடிக்கொண்டிருப்பது இந்தியாவைப் பீடித்துள்ள அவநம்பிக்கையுடன். இலட்சியவாதத்தில் நம்பிக்கை இழந்து வெறும் நடைமுறைவாதிகளாக, அப்பட்டமான சுயநலவாதிகளாக ஆகிவிட்டிருக்கும் நம் மக்களை நோக்கி அவர் பேசுகிறார். அவரது போராட்டங்கள் இன்றைய அவநம்பிக்கையை அழிக்க முடிந்தால் அவர் வென்றார் என்றே பொருள்.

கோட்பாடு பேசும் அறிவுஜீவிகளால் ஒருபோதும் மக்களின் பேரியக்கமான காந்தியப் போராட்டத்தை உருவாக்கிவிட முடியாது. புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. ஆனால் அவர்களால் அவநம்பிக்கைகளை எளிதில் உருவாக்கிவிட முடியும். இன்று அண்ணா உருவாக்கும் நம்பிக்கைக்கு நேர் எதிரான சக்திகளாக இருப்பவர்கள் நம் சவடால் அறிவுஜீவிகள். வரலாற்றுநோக்கு இல்லாத அவர்களது வெட்டித் தர்க்கங்களுக்கு எதிராக ஒரு முழுமைநோக்கில் காந்தியிலிருந்து அண்ணா ஹசாரே வரையிலான மக்கள் போராட்டங்களைப் புரிந்துகொள்ளும்படியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

0

அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் ஜெயமோகன்
கிழக்கு பதிப்பகம்
128 பக்கங்கள்
விலை ரூ.80.00

ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

Sunday, June 23, 2013

விலங்குப் பண்ணை


ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில் : பி.வி.ராமஸ்வாமி
விலை : 85
பக்கங்கள் : 144.



ஜார்ஜ் ஆர்வெல் (இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளெய்ர்), 17 ஆகஸ்ட் 1945-ல் வெளியிட்ட நூல் அனிமல் ஃபார்ம் (விலங்குப் பண்ணை).
ஒரு பண்ணையில் வசிக்கும் விலங்குகள் அதன் எஜமானரையும் அவருடைய ஆட்களையும் விரட்டியடித்துவிட்டு அந்தப் பண்ணையைக் கைப்பற்றிவிடுகின்றன. இரண்டு காலில் நடப்பவை எல்லாமே (மனிதர்கள்) நம் எதிரிகள் என்று அறிவிக்கின்றன. மிகப் பெரிய புரட்சியைச் செய்த பிறகு அந்தப் பண்ணையில் என்ன நடக்கிறது என்பதை நாவல் விவரிக்கிறது.

படிப்பவர் அனைவருமே இது யாரைப் பற்றியது, எதைப் பற்றியது என்று சட்டென்று உணர்ந்துகொண்டுவிடுவார்கள். கம்யூனிஸ ரஷ்யா உலகப் பாட்டாளி மக்களுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் ஓர் ஆதர்சமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, ஜோசஃப் ஸ்டாலின் உருவாக்கிய போலீஸ் ராஜ்ஜியமும் அவர் இழைத்த படுகொலைகளும் உலகையே உலுக்கின.

ஆர்வெல்லின் விலங்குப் பண்ணையில் யார் ஸ்டாலின், யார் லெனின், யார் ட்ராட்ஸ்கி, கம்யூனிஸ்ட் அதிகார வர்க்கம் எப்படி சர்வாதிகாரத்தன்மை கொண்டு இயங்கும் என்பதையெல்லாம் நீங்கள் காணமுடியும். யார் பதவியில் இருந்தாலும் சரி, பாட்டாளிகள் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுவார்கள் என்பதுதான் நியதியோ என்ற வருத்தமும் ஏற்படும். எழுதப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்றும்கூட ஸ்டாலினின் ரஷ்யா பற்றிய அரசியல் வரலாறுபோல இன்றும் புதுமையாகக் காட்சியளிக்கிறது இந்தப் புத்தகம்.

புத்தகத்திலிருந்து....

ஜூன் மாதம். விலங்குகளுக்கான தீவனப் புல் அறுவடைக்குத் தயாரான சமயம். ஜூன் மூன்றாவது வாத்தில் நாடு முழுவதும் கோடைக்காலக் கோலாகலத்தில் இருந்த ஒரு சனிக்கிழமை யன்று ஜோன்ஸ், வில்லிங்டனில் உள்ள ரெட் புல் என்னும் புகழ் பெற்ற மது விடுதிக்குப் போய்க் குடிக்க ஆம்பித்தவர், மறு நாள் ஞாயிறு மதியம்வரை பண்ணைக்குத் திரும்பவில்லை. பண்ணையாட்களோ அதிகாலையிலேயே மாடுகளைப் பாலுக்காகக் கறந்துவிட்டு மிருகங்களுக்குத் தீனி வைக்கவேண்டுமே என்ற கவலையே இல்லாமல், முயல் வேட்டைக்குப் போய்விட்டார்கள். வீடு திரும்பிய ஜோன்ஸோ, நேராகத் தன்னுடைய சோஃபாவுக்குப்போய் ஒரு செய்தித்தாளால் முகத்தை மூடிக்கொண்டு தூங்கிவிட்டார். இப்படியாக மாலை நேமும் வந்துவிட்டது.

நாள் முழுவதும் பட்டினியில் கிடந்த விலங்குகளுக்கு இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. ஒரு பசு, தன் கொம்புகளால் தானியக் கிடங்கின் கதவுகளை முட்டித் திறந்தது. உடனே எல்லா விலங்குகளும் உள்ளே நுழைந்து, தொட்டிகளில் இருந்ததீனி வகைகளைத் தாமே எடுத்து உண்ண ஆம்பித்தன. அந்தச் சமயத்தில் கண்விழித்துக்கொண்ட ஜோன்ஸ், உடனேயே நான்கு உதவியாளர்களுடன், ஆளுக்கொரு சவுக்குடன், அதிடியாக தானிய கிடங்கினுள்ளே நுழைந்தார். எல்லோரும் சேர்ந்து கண்மண் தெரியாமல் நாலாபுறமும் சவுக்கால் வீறி விளாசிவிட்டார்கள்.

கடும் பசியில் தவித்துக்கொண்டிருந்த விலங்குகளுக்கு இந்தச் செயல் இனிமேலும் பொறுக்க முடியாத ஒன்றாகப்பட்டது. ஒரே நேத்தில், ஏதோ முன்னமேயே பேசித் திட்டம்போட்டு வைத்ததுபோல, உண்மையில் அப்படி இல்லாவிட்டாலும், எல்லா விலங்குகளும் தங்களைத் தாக்கியவர்கள்மீது குபீரென்று மோதிப் பாய்ந்தன. ஜோன்ஸும் அவருடைய வேலையாட்களும் தங்கள் உடலின் எல்லாப் பாகத்திலும் திடீரென்று, மாரியாக இடியும் உதையும் பட்டார்கள். நிலைமை சுத்தமாக அவர்களின் கையை மீறிப் போய்விட்டது. விலங்குகளிடம் இப்படிப்பட்ட ஒரு செயலை முன் எப்போதும் அவர்கள் கண்டதில்லை. நினைத்தபோதெல்லாம், கொடுத்த அடி உடைகளை வாங்கிக்கொண்டு, எப்படி நடத்தினாலும் அடங்கிக் கிடந்த இந்தப் பிராணிகள் இப்படித் திடீரென்று பொங்கி எழுந்ததில், என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து, அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தார்கள். உடனேயே, தங்களைக் காத்துக்கொள்ள, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள். ஒரே நிமிடத்தில் அந்த ஐந்து பேரும் வண்டிப்பாதையை அடைந்து, வெளியே போகும் பிதான சாலையை நோக்கிச் சிட்டாகப் பறந்தார்கள். வெற்றி வேகத்தில் விலங்குகளும் அவர்களைத் துத்தியபடித் தொடர்ந்தன.

தன்னுடைய படுக்கையறை சன்னல் வழியாக நடப்பதையெல்லாம் பார்த்த ஜோன்ஸின் மனைவி உடனேயே அவசஅவசமாகச் சில உடைமைகளை ஒரு கித்தான் பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு இன்னொரு வழியாகப் பண்ணையை விட்டு வெளியேறினாள். மோசஸ், விட்டத்திலிருந்து தன் சிறகுகளைப் பப்பிப் படபடத்து உத்த சத்தம் எழுப்பிக்கொண்டே அவளைத் தொடர்ந்து பறந்தது.

இதனிடையே, மற்ற விலங்குகள் எல்லாம் சேர்ந்து ஜோன்ஸையும் அவருடைய ஆள்களையும் வீதிக்கு விட்டிவிட்டுப் பண்ணையின் பெரிய வலிய கதவுகளை நன்றாகச் சாத்திவிட்டன.
இப்படியாக, நடந்தது என்னவென்று தாங்கள் உணரும் முன்னமேயே, புட்சி வெற்றிகமாக நடந்தேறிவிட்டது. ஜோன்ஸ் துத்தியடிக்கப்பட்டு, மேனார் பண்ணை, விலங்குகள் வசமானது.

முதல் சில நிமிடங்களுக்கு, விலங்குகளால் இந்தத் திடீர் அதிர்ஷ்டத்தை நம்பமுடியவில்லை. அவை செய்த முதல் காரியம், ஒன்றாக அணிவகுத்து, பண்ணையின் எல்லைப்புறம் முழுவதுமாக வேகநடை போட்டதுதான். பண்ணையின் எந்தப் பக்கத்திலும் ஏதாவது மனித உயிர் ஒளிந்துகொண்டிருந்தால் அவர்களைப் பிடித்து விட்டுவதற்காகச் செல்வதுபோல அவை குதித்து வேகநடை போட்டன. இதற்குப்பின் தங்களால் முற்றிலும் வெறுக்கப்பட்ட ஜோன்ஸின் அதிகாத்தைக் காட்டும் எந்தவொரு அடையாளமும் இல்லாதபடி ஆக்குவதற்காக, பண்ணையின் கட்டடங்களுக்கு வேகமாக வந்தன. கொட்டடியின் கோடியில் இருந்த பாதுகாப்பு அறையின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தன.

இழுத்துப் பிடிக்கும் பட்டிகள், மூக்கணாங்கயிறுகள், வளையங்கள், நாய்ச் சங்கிலிகள், ஆடுகளையும் பன்றிகளையும் விதையறுக்க ஜோன்ஸ் பயன்படுத்திய குரூமான வெட்டரிவாள், மற்றும் பிற கருவிகளை எடுத்துக் கிணற்றில் வீசியெறிந்தன. குதிரைகளை வாயில் கட்டி ஒடுக்கும் தோல் வார்களும், மற்ற அடக்குமுறைச் சாதனங்களும், அவமானப்படுத்தும் மூக்குப் பைகளும், தோட்ட வெளியில் எரிந்துகொண்டிருந்த குப்பை கூளங்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டன. சாட்டை, சவுக்குகளுக்கும் இதே கதிதான். பற்றி எரியும் சவுக்குகளைப் பார்த்து விலங்குகள் கொண்டாட்டமாகக் குதித்துச் சத்தமிட்டுத் தம் சந்தோஷத்தை வெளிக்காட்டின.

சந்தை நாட்களில் குதிரைகளின் பிடரி மயிரிலும் வாலிலும் ஒய்யாமாகக் கட்டப்படும் ரிப்பன் நாடாக்களை ஸ்நோபால் எடுத்து வந்து எரியும் நெருப்பில் போட்டது.
ரிப்பன் நாடாக்கள் மனிதர்கள் பயன்படுத்தும் உடைகள் போன்றவை. எந்த விலங்கும் எப்போதும் எந்த உடையும் அணியாமல் பிறந்தமேனியாகவே இருக்கவேண்டும்என்றது ஸ்நோபால்.

இதைக்கேட்டதும், பாக்ஸர், வெயில் காலங்களில் தன் காதுகளைத் தொந்தவு செய்யும் ஈக்களிடமிருந்து காத்துக் கொள்ள உபயோகிக்கும் ஒரு வைக்கோல் தொப்பியை எடுத்துவந்து தீயில் போட்டது.

இப்படியாக மிகக் குறுகிய நேத்தில் ஜோன்ஸை ஞாபகப்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் மிருகங்கள் ஒன்றுகூடி அழித்தன.

Friday, June 21, 2013

நாளைய இந்தியா



ஆசிரியர் : அத்தானு தே
தமிழில் : செ.கிருஷ்ணமூர்த்தி
பக் : 200
விலை : 150


இந்தியாவை முன்னேற்ற நம்மால் முடியும்
ஏழைமையிலிருந்து விடுபடுவதற்கும்,  பொருளாதார வளர்ச்சியைக் கடந்து முன்னேற்றம் அடைவதற்கும் இந்தியாவுக்குக்  குறைந்தது ஒரு தலைமுறை அதிவேகப் பொருளாதார வளர்ச்சி தேவை. இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம். ஆனால்  அதுமட்டுமே  முன்நிபந்தனையல்ல. 
பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமற்றதும் அல்ல;  தானாக அமைந்திடுவதும் அல்ல. இதை நாம் எப்போதும் மனத்தில் கொள்ளவேண்டும். முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் திட்டங்களின் பலனாக அமைபவை.  இந்தத் திட்டங்கள் எவ்வாறு அமைகின்றன என்பதைத் தீர்மானிப்பது மக்களாகிய நாம்தான். இதைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதன் மூலமே திட்டங்களை உருவாக்குபவர்களுக்கு நம்முடைய விருப்பத்தை உணர்த்த முடியும். அந்தத் திட்டங்களின் பலன்களும் விளைவுகளும் எப்படி அமையப் போகின்றன என்பதற்கும் நாமே பொறுப்பு. 
நாட்டின் முன்னேற்றத்துக்கான பொறுப்பு நம்வசமே உள்ளது என்ற அளவில் நாம் பாக்கியம் செய்தவர்கள். மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான திறனும், சாமர்த்தியமும், முனைப்பும் நம்மிடம்  உள்ளன. நாம் கல்வியறிவு பெற்றவர்கள். மாற்றத்தை உருவாக்குவதற்கான நேரத்தையும் உழைப்பையும் நம்மால் ஒதுக்க முடியும்.
ஒரு மாறுபட்ட எதிர்காலத்தைக் கற்பனைச் செய்யக்கூடிய ஆற்றல் நமக்கு உண்டு. அந்த மேன்மையுடைய எதிர்காலத்துக்காகத் திட்டம் தீட்டுவதற்கும், உழைப்பதற்குமான வசதியும் நமக்கு உண்டு. அத்துடன், இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றுவதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டிய தனிப்பொறுப்பும் நமக்கு உண்டு.
நீங்களோ, நானோ, பெரும்பாலான இந்தியர்களைப் போல் தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே போராடும் நிலையில் இல்லை. அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த அக்கறை? இந்தியா முன்னேறத் தவறியதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றியும் முன்னேற்றம்  பற்றியும் நாம் ஆழமான அக்கறையைச் செலுத்தவேண்டும். ஏனென்றால் அது பலகோடி சக மனிதர்களைத் துயரத்தில் இருந்து  மீட்பதற்கான முதல் படி. நாம் பிறருக்கென உழைக்கும் கோட்பாடு இல்லாதவர்களாக இருக்கலாம். இருப்பினும், சுயநலத்துக்காகவும், நடைமுறைக் காரணங்களுக்காகவும் நாம் செயல்பட்டாக வேண்டும். பொருளாதார கோபுரத்தின் உச்சியில் இருக்கும் நம்முடைய நிலை உறுதியற்றது. ஏனெனில் அந்தக் கோபுரத்தின் அடித்தளம் பலவீனமானது. நம்முடைய விதியும், நம்பிக்கையிழந்த ஏழை மக்களின் தலைவிதியும் பிரிக்க இயலாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே,  நாம் கட்டாயம் அக்கறை கொண்டாக வேண்டும்.
முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் அக்கறை கொள்ளாமல் போவது இந்தியா முழுமையாகச் சிதைந்து போகும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியா இந்தப் பூமிப்பரப்பில் இருந்து மறைந்துவிடக்கூடிய நிலையை நாம் அனுமதிக்கக் கூடாது. பல உன்னதமான விஷயங்களை உலகுக்குக் கொடுத்த நாடு இந்தியா. அதன் பொருட்டாவது இந்தியா நீடித்திருக்க வேண்டும். நம்முடைய நாடு செழுமையும் முன்னேற்றமும்  அடைவது நமக்கு மிக அவசியம்.
- அத்தானு தே முன்னுரையில்


Tuesday, June 18, 2013


நீயா நானா? (இந்திய - சீன வல்லரசுப் போட்டி)

ஆசிரியர் : ராகவ் பஹல்மொழிபெயர்ப்பு : சரவணன், மகாதேவன்


பக் : 384; விலை: 200/-


21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்கு இந்தியாவும் சீனாவும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. இந்த இரண்டு தேசங்களின் வரலாறை ஆதியில் இருந்து இன்றைய காலகட்டம்வரை மிக விரிவாக, துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் ராகவ் பஹல்.சீனாவின் பலங்கள் என்னென்ன... பலவீனங்கள் என்னென்ன? இந்தியாவின் பலங்கள் என்னென்ன... பலங்கள் என்னென்ன? கல்வி, மருத்துவம், அரசியல், மின்சாரம், ரயில்வே, சமூகக் கட்டமைப்பு என ஒவ்வொரு துறையாக அக்குவேறு ஆணி வேறாக அலசியிருக்கிறார். 
புத்தகத்திலிருந்து...
 நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் ஜிம் ஓ நீல் 2001-ல் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் பிரிக் நாடுகள் (BRIC countries) என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தினார். அதாவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா இந்த நான்கு நாடுகளை ஓர் அணியாக அவர் குறிப்பிட்டிருந்தார். ...


·          இந்த நான்கு நாடுகளின் கூட்டணி 2025 வாக்கில் ஜி-6 நாடுகளின் பொருளாதாரத்தில் பாதியை எட்டிவிடும்.

·          இன்னும் 40 வருடங்களில் ஜி-6 நாடுகளை மிஞ்சிவிடும்...

·          வெறும் சாதாரண கொள்கைகள் மூலமே இதைச் சாதித்துவிடும். அதிரடியாக எதுவும் செய்யத் தேவையே இல்லை.

·          அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய கார் சந்தையாக அமெரிக்காவின் இடத்தை சீனா பிடித்துவிடும்.

·          பிரிக் நாடுகளில் இந்தியாவுக்குப் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. 2025 வாக்கில் இந்தியாவின் தற்போதைய ஜி.டி.பி. 50 மடங்கு அதிகரித்து 25 டிரில்லியன் டாலர் அளவைத் தொட்டுவிடும்.

 பிரிக் நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி சுவாரசியமாக இருப்பதற்கு காரணங்கள் உண்டு. 17,18ம் நூற்றாண்டுகளில் சீனாவும் இந்தியாவும் வல்லரசுகளாக இருந்தன. பொருளாதார வரலாற்று நிபுணர் ஆங்கஸ் மேடிசனின் ஆய்வின்படி, 1600-ல் சீனா, இந்தியாவின் ஜி.டி.பி. உலக ஜி.டி.பி.யில் பாதி அளவுக்கு இருந்தது. (சீனா 28%, இந்தியா23%). ஆனால், அடுத்த 200 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளின் குடியேற்ற ஆட்சியால் இரு நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது. கடந்த சில பத்தாண்டுகளாக இரு நாடுகளும் திமிறி எழ ஆரம்பித்துள்ளன. 1770-ல் பள்ளத்தில் இறங்கிய அந்த அலை மேல் நோக்கி உயர ஆரம்பித்துள்ளது.


 இந்தப் புத்தகத்தைவாங்க

Monday, June 17, 2013

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

ஆசிரியர்: கமலா வி முகுந்தா
தமிழில் : ராஜேந்திரன் 
பக் : 328; விலை: 250
ஆசிரியர் தொழிலில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவமும் உளவியல் துறையில் நிபுணத்துவமும் பெற்ற கமலா வி முகுந்தா, குழந்தைகள் கற்றுக் கொள்வதில் இருக்கும் பல்வேறு நுட்பங்களை எளிய நடையில் விவரித்திருக்கிறார். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல ஆசிரியராக விரும்பினால், உங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை நரகமாகக் கருதாமல் சொர்க்கமாக மதித்து உற்சாகமாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்பினால் இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் நல்ல வழி காட்டும்.
முன்னுரையில் இருந்து
இந்தப் புத்தகம் உண்மையில் ஆசிரியர்களுக்கானதுதான். ஆனால், குழந்தைகளின் கல்வி தொடர்பாக இயங்கும் அனைவருக்கும் இது நிச்சயம் பயன்படும். ஒரு ஆசிரியர் என்றவகையில் என் மாணவர்களின் கற்றுக்கொள்ளும் திறன், உணர்வு நிலை இவைபற்றி நிறைய அறிந்துகொள்ள விரும்புவேன்.
ஒரு மாணவருக்கு ஒரு குறிப்பிட்ட பாடம் மிகவும் சிக்கலாக இருக்கும். இன்னொருவருக்கு ஒரு பாடத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். இன்னொருவர் தனது திறமைக்கு ஏற்ப செயல்படாமல் இருப்பார். வேறொருவரோ  எதிலும் கவனத்தைக் குவிக்க முடியாமல் தவிப்பார். சில நேரங்களில் நாம் இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு வழியைக் கண்டுபிடித்து மேற்கொண்டு நம் பணிகளில் ஈடுபட ஆரம்பிப்போம். ஆனால், பெரும்பாலும் அந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயேதான் இருக்கும்.
அன்றாடப் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு உருவாகும் கேள்விகள் மிகவும் ஆழமானவையாகவும் அடிப்படையானவையாகவும் இருக்கும். இவற்றுக்கான பதில் பெரும்பாலும் தெரிந்திருக்காது.  ஆனால், எல்லாரையும் போலவே ஆசிரியர்களும் தங்களுக்கு சரியான பதில் கிடைத்தாக வேண்டும் என்று விரும்புவார்கள். நாம் வாசித்தவை, நம் அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் கற்றுக் கொடுப்பது, குழந்தை வளர்ப்பு, உற்சாகமூட்டுதல், புத்திக்கூர்மை, ஒழுங்கு, உணர்ச்சி நிலை தொடர்பான நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறோம்;தீர்மானங்களை எடுக்கிறோம். அவற்றின் அடிப்படையில் செயல்பட ஆரம்பிக்கிறோம்.
ஆசிரியரின் நம்பிக்கைளும் தீர்மானங்களும் மிகவும் வலுவானவை. நாம் சொல்வதற்கு அப்படியே அனைவரும் கீழ்படியவேண்டும் என்பதையே எப்போதும் எதிர்பார்க்கிறோம். இது சரியல்ல. பல ஆசிரியர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை வார்த்தைகளாகச் சொல்லியிருக்கவே மாட்டார்கள். எனினும் அதை இறுகப் பற்றியபடியிருப்பார்கள். நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்கு எளிதில் புரியவரும். 
·                     அனைவரும் ஒரே மாதிரியான புத்திக்கூர்மையுடன் இருப்பதில்லை.
·                     கற்றல் என்பது வேடிக்கை நிறைந்ததாக இருக்கவேண்டும்.
·                     வகுப்பறையில் பன்முகத்தன்மை என்பது ஒரு பிரச்னையான விஷயம்.
·                     குழந்தைகளைத் தன்னிச்சையாக சிந்திக்கும் வகையில் வளர்த்தெடுக்கவேண்டும்.
·                     பெரியவர்களைப் போல் குழந்தைகள் சிந்திக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
·                     யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொண்டுவிட முடியும்.
·                     யதார்த்த உலகில் வாழ குழந்தைகள் கற்றுக்கொண்டாகவேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் தமக்கான வேகத்தில் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்லது.
மேலே தரப்பட்டிருக்கும் ஒவ்வொரு வாக்கியத்திலிருந்தும் பல்வேறு தீர்மானங்கள் முளைத்து எழுகின்றன. நம் நம்பிக்கைகள் உண்மையாக இருந்தால் நம் செயல் சரியாக இருக்கும் என்று ஒருவர் சொல்லலாம். ஆனால், கல்வி, கற்றல் தொடர்பாகப் பார்க்கும்போது, உண்மையான வாக்கியங்கள் என்று பெரிதாக எதையும் சொல்லிவிட முடியாது. எந்த ஒரு விஷயத்தையும் இறுகப் பிடித்துக் கொள்வது ஆசிரியர்களான நமக்கு நல்லதல்ல.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)

உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ராமச்சந்திர குஹாவின் India After Gandhi ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு.

இந்திய வரலாறு : காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)





இந்தியா ஒரே அமைப்பாக இருக்க முடியுமா? துண்டாடப்படுமா?
விசாலமான தேசம், 524 மில்லியன் மக்கள், பிரதானமாக வழக்கிலுள்ள பதினைந்து மொழிகள், மாறுபடும் மனங்கள், பல இனங்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது இப்படி ஒரு தேசம் உருவாகக் கூட முடியுமா என்ற மலைப்பே ஏற்படும்.
மாபெரும் இமய மலை, வெயிலால் சுட்டெரிக்கப்பட்டு, ஆக்ரோஷமான மழையால் அடித்து நொறுக்கப்பட்ட விரிந்து பரந்த இந்திய – கங்கைச் சமவெளி, வெள்ளம் புரளும் கிழக்கின் பசுமை நிறைந்த டெல்டா, மாபெரும் நகரங்களான கல்கத்தா, பம்மாய், சென்னை போன்றவற்றை உள்ளடக்கிய இந்த நாட்டை நினைத்துப் பார்ப்பதே கடினமாக உள்ளது. இருந்தபோதிலும் இந்த நாட்டில் நிலைக்கக்கூடிய ஏதோ ஒரு கட்டுமானம் காணப்படுகிறது. அதை இந்திய உணர்வு என்று மட்டுமே விளக்கமுடியும்.
ஆசியாவின் தலைவிதியே இதன் வாழ்வில்தான் இருக்கிறது என்று நாம் நம்புவது மிகையல்ல.


- பிரிட்டிஷ் பத்திரிகையாளர் டான் டெய்லர் (1969ல்)

நடுநிலையுடன் எழுதப்பட்ட விரிவான, சுவாரஸ்யமான புத்தகம்
- Spectator


புத்தகங்கள், தனிப்பட்ட கடிதங்கள், பத்திரிகைச் செய்திகள், பிரசுரங்கள், அரசாங்க ஆவணங்கள் என்று அலபாமா முதல் அலகாபாத் வரை கொல்கத்தா முதல் கலிஃபோர்னியா வரை பரவிப் படர்ந்திருக்கும் தகவல்களைத் தேடித் தேடிச் சேகரித்து இந்த சுவாரஸ்யமான புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் குஹா.
- Daily Telegraph


வரலாற்றுச் செய்திகள் நிறைந்த பெரும் படைப்பு என்றாலும் ஒரு துப்பறியும் நாவலைப் போல் வாசித்துவிட முடியும்.
Time out Mumbai

இந்தியாவைப் பற்றி பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால், இதைவிடச் சிறந்த புத்தகம் இருந்துவிட முடியாது.
- Sunday Telegraph.

இந்தியாவின் ஜனநாயக வெற்றியைக் கொண்டாடும் அதே நேரம் இந்தியாவின் தோல்விகளையும் சறுக்கல்களையும் சுட்டிக்காட்டவும் இந்தப் புத்தகம் தவறவில்லை.
 Sunday Times.

இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு.
ஆசிரியர் : ராமச்சந்திர குஹா
மொழிபெயர்ப்பு : ஆர்.பி. சாரதி.
பாகம் 1 : பக்கங்கள் 640
விலை: 350
பாகம் 2 :
பக்கங்கள் : 640
விலை: 385


ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234