Search This Blog

Tuesday, February 19, 2013

பிரபல கொலைவழக்குகள் புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி

பிரபல கொலை வழக்குகள்
ஆசிரியர்: SP. சொக்கலிங்கம்

நூலாசிரியரைப் பற்றி: சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் தனிகவனம் செலுத்தி வருகிறார். ‘மெட்ராஸ் லா ஜர்னல்’ எனும் சட்ட இதழில் அறிவுசார் சொத்துரிமை குறித்து கட்டுரை எழுதி வருகிறார். தொழில், வர்த்தகம் சம்பந்தப்பட்ட கூட்டங்களில் விரிவுரையாற்றி வருகிறார்.





உள்ளே...

    முன்னுரை
1. ஆஷ் கொலை வழக்கு
2. சிங்கம்பட்டி கொலை வழக்கு
3. பாவ்லா கொலை வழக்கு
4. பகூர் கொலை வழக்கு
5. லட்சுமி காந்தன் கொலை வழக்கு
6. ஆளவந்தான் கொலை வழக்கு
7. நானாவதி கொலை வழக்கு
8. எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு
9. விஷ ஊசி வழக்கு
10. மர்ம சந்நியாசி

முன்னுரை

சென்ற நூற்றாண்டில் தொடங்கி இன்றுவரை, பல பிரபலமான வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்திருக்கின்றன. இப்படிக் கூடவா நடந்திருக்கும் என்று ஆவலைத் தூண்டும் விதத்தில் பல வழக்குகளின் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. சம்பவங்களால் புகழ்பெற்ற வழக்குகள் பல உண்டு.  பிரபலமானவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் வழக்குகள் பிரபலமானதும் உண்டு.

காலப்போக்கில் பிரபலம் என்று கருதப்பட்ட பல வழக்குகள், மக்களின் நினைவைவிட்டே அகன்றுவிட்டன. இன்றைய தலைமுறையினர் அந்த வழக்குகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் அந்த வழக்குகளில் இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி தெரிந்திருக்கும் வாய்ப்புகள் அரிது. அதை ஈடு செய்யும் பொருட்டே இந்தப் புத்தகம்.

பிரபலமான வழக்குகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்தில் வெவ்வேறு வகையான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் இந்திய அரசர்களின்மீது சுமத்திய வழக்குகள்; ஆங்கிலேயர்களை எதிர்த்த விடுதலைப் போராளிகள்மீது போடப்பட்ட சதி வழக்குகள்; ராஜ்ஜியத்தையும், ஜமீனையும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள நினைத்த சகோதரர்களுக்கு இடையே உண்டான பகைமை, அதன் காரணமாக, நூதனமுறையில் நடைபெற்ற கொலை வழக்கு; மோகத்தால் விளைந்த கொலை, அதனால் ராஜ்ஜியத்தைத் துறக்க நேர்ந்த அரசரது வழக்கு; கல்லூரிக்குப் படிக்கச் சென்ற ராஜகுமாரர்கள் கல்லூரியின் தலைமை ஆசிரியரையே கொன்றதாக அவர்கள்மீது சுமத்தப்பட்ட வழக்கு; இந்தியா சுதந்தரமடைந்த பிறகு, பிரபலங்கள் ஈடுபட்ட அரசியல் தொடர்புடைய கொலை முயற்சி வழக்குகள், சினிமா பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள்; பேராசையினால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்ட கொள்ளைகள், கொலைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள்;  மனைவியைக் கவர்ந்ததால் கணவன் ஆத்திரமடைந்து கள்ளக் காதலனைக் கொன்ற வழக்கு, அந்த வழக்கின்போது கணவனுக்கு மக்களிடமிருந்த அனுதாபம் மற்றும் ஆதரவு, மேலும், குற்றவாளித் தரப்பிலும், பாதிக்கப்பட்டவரின் தரப்பிலும் நிகழ்ந்த அரசியல் தலையீடுகள்; ஒரு பெரிய ஜமீனில் ஏற்பட்ட ஆள் மாறாட்ட வழக்கு எனப் பல சுவாரஸ்யமான வழக்குகளைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் நான் ‘தமிழ்பேப்பர்’ என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளாக எழுதிவந்தேன். அந்தக் கட்டுரையின் தொகுப்பே இந்தப் புத்தகம்.

பிரபலமான வழக்குகள் இவ்வளவுதானா என்றால், இல்லை. இன்னும் நிறைய இருக்கின்றன. வரும் நாள்களில் அவற்றைப் பற்றியும் எழுதி, அவையும் புத்தக வடிவில் வரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். ஏனைய வழக்குகளில் வழக்குச் சமாச்சாரங்கள் மட்டுமின்றி அன்றைய சமூகம், அன்றைய ஆட்சியாளர்கள், மக்களின் வாழ்வியல், சரித்திர நிகழ்வுகள் என வழக்குக்குத் தொடர்புடைய விவரங்களையும் தந்துள்ளேன். படிப்பவர்கள் அந்தக் காலத்தின் நிகழ்வுகளைத் தொடர்புபடுத்திக் கொள்வதற்கு ஏதுவாக வழக்குகளைக் (மர்ம சந்நியாசி வழக்கு நீங்கலாக) காலவரிசைப்படி கொடுத்துள்ளேன்.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 10 வழக்குகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பான்மை, கொலை வழக்குகள். மற்றவை  கொலை முயற்சி வழக்கு, தேசத் துரோக வழக்கு போன்றவை. இந்தத் தொகுப்பில் உள்ள ஒரே சிவில் வழக்கு மற்றும் நீண்ட பக்கங்களைக் கொண்ட வழக்கு, மர்ம சந்நியாசி வழக்கு. காலவரிசையில் முன்னதாக நடந்திருப்பினும் இந்த வழக்கை கடைசியில் கொடுத்திருக்கிறேன். ஒரு பிரமாண்டமான வழக்கை எப்படி நடத்தவேண்டும் அல்லது எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு நல்ல உதாரணம், மர்ம சந்நியாசி வழக்கு. மர்ம சந்நியாசியில் பிரமிக்க வைக்கக்கூடிய பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

படித்து மகிழுங்கள். தவறைச் சுட்டிக்காட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன். உற்சாகம் தாருங்கள். இன்னும் பல படைப்புகளைத் தர முனைகிறேன்.


- SP. சொக்கலிங்கம்


1. ஆஷ் கொலை வழக்கு
மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி, அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில், ஆங்கிலேய துரை ஆஷ் மற்றும் அவருடைய மனைவி இருந்தனர். ஊர் மக்கள், ஆஷ் துரையைக் காண வந்திருந்தனர். அந்த ஊரில், ஏன் அந்த ஜில்லாவிலே ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அதற்கு துரை மனது வைத்தால்தான் முடியும்.

ஆஷ் துரை வந்த ரயிலின் பெட்டியை, போட் மெயில் ரயிலோடு இணைக்க வேண்டும். துரையும், அவரது மனைவியும் கொடைக்கானலில் இருந்த தங்களுடைய நான்கு குழந்தைகளையும் பார்க்கச் செல்வதற்காக இந்த ஏற்பாடு.

போட் மெயில் வருவதற்குப் பத்து நிமிடங்கள் இருந்த நிலையில், இரண்டு வாலிபர்கள், துரை இருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தனர். ஒருவன் நன்றாக எடுப்பான தோற்றத்துடன் காணப்பட்டான். தன்னுடைய நீண்ட தலை முடியைச் சீவி, கொண்டை போட்டிருந்தான். மற்றொருவன் வேஷ்டி, சட்டை உடுத்தியிருந்தான். துரை தன்னுடைய மனைவி மேரியுடன் ஆர்வமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். மேரியும் துரையும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். ரயில் பெட்டிக்குள் இருவர் நுழைவதை துரை கவனிக்கவில்லை. வந்தவர்களில் ஒருவன், துரையின் அருகில் வந்து நின்றான். பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட, பிரவுனிங் என்ற தானியங்கித் துப்பாக்கியை எடுத்தான். துரையின் நெஞ்சில் சுட்டான். துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டு, அமைதியாக இருந்த ரயில் நிலையம் அதிர்ந்தது. துரை அவர் அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே சரிந்தார். அவருடைய மனைவி அதிர்ச்சியில் உறைந்தார்.

துரையைச் சுட்டவன், பிளாட்பாரத்தில் இறங்கி ஓடினான். ரயில் நிலையத்திலிருந்த மக்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஓடியவன் நேராக பிளாட்பாரத்திலிருந்த கழிவறையின் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டான். துப்பாக்கிச் சூடு நடத்தியவனுடன் வந்த மற்றவன், பிளாட்பாரத்தின் இன்னொரு பக்கம் ஒடி மறைந்தான். கழிவறையினுள் மறைந்த அந்த வாலிபன், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

துரையை, அவருடைய சிப்பந்திகள் திருநெல்வேலி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே துரையின் உயிர் பிரிந்தது. துரை கொலை செய்யப்பட்டுவிட்டார்.

ஆஷ் துரையின் கொலை, மதராஸ் மாகாணம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பரப்பாகப் பேசப்பட்டது. இறந்தவர் சாதாரண ஆள் இல்லை. அவர், திருநெல்வேலி ஜில்லாவின் கலெக்டர். மேலும், ஆங்கிலேயர். அவரைச் சுட்டவன் ஓர் இந்தியன். கொலை நடந்த தேதி ஜூன் 17, 1911. இன்னும் 5 நாள்களில், இங்கிலாந்தின் 5வது ஜார்ஜ் மன்னராக முடிசூடிக்கொள்ள இருந்தார்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் புரட்சிகரமான செயல்கள் பல, நாட்டில் நடந்து கொண்டிருந்தன. ஆனால், அனைத்துப் புரட்சிகர சம்பவங்களும், வட நாட்டில் அதுவும் குறிப்பாக வங்காளத்தில்தான் நடைபெற்றன. யாரும் தமிழகத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. யார் இதைச் செய்திருப்பார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? விசாரணையில் இறங்கியது, ஆங்கிலேய காவல் துறை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன், ஓர் இளைஞன். அவனுக்குச் சுமார் 25 வயது இருக்கும். அவனுடைய சட்டைப்பையில் காவல் துறை எதிர்பார்த்தது கிடைத்தது. அது ஒரு துண்டுக் காகிதம். அதில்,

‘ஆங்கிலேய மிலேச்சர்கள் நம் நாட்டை பிடித்ததோடல்லாமல், நம்முடைய சனாத்தன தர்மத்தை இழிவுபடுத்தி அதை அழிக்க முற்படுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் மிலேச்சர்களை விரட்டிவிட்டு , சுதந்தரம் பெற்று, சனாத்தன தர்மத்தை நிலைநிறுத்த போராடிக்கொண்டிருக்கிறான். ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்த சிங், அர்ஜூனன் வாழ்ந்த இந்தப் பாரதத்தில் பசு மாமிசத்தை உண்ணும்,  5வது ஜார்ஜ் என்ற மிலேச்சனுக்கு மணிமகுடம் சூட்டுவதா?  ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் இந்தியாவில் அடியெடுத்து வைத்தவுடனேயே, அவனைக் கொல்ல 3000 மதராசிகள் உறுதி மொழி எடுத்திருக்கின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான், அக்குழுவின் கடைநிலைத் தொண்டனாக இந்தக் காரியத்தை இன்று செய்தேன். பாரதத்தில் உள்ள அனைவரும் இப்படிச் செய்வதைத்தான் தங்களுடைய கடமையாக நினைக்க வேண்டும்’

என்று குறிப்பிட்டிருந்தது.

காவல் துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று விரைவிலேயே கண்டுபிடித்து விட்டனர். வாஞ்சிநாத ஐயர்.

வாஞ்சிநாதனின் வீட்டில் காவல் துறை சோதனை நடத்தியது. அதில் அவர்களுக்குச் சில கடிதங்கள் கிடைத்தன. கடிதங்களில் கண்ட விவரங்களின் மூலம், ஆஷ் துரையைக் கொல்ல ரகசியக்குழு ஒன்று கூட்டுசதி செய்திருப்பது தெரியவந்தது. அக்கடிதங்களில் ஆறுமுகப்பிள்ளையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல் துறை, ஆறுமுகப்பிள்ளையின் வீட்டை  இரவோடு இரவாக முற்றுகையிட்டது. ஆறுமுகப்பிள்ளை கைது செய்யப்பட்டார். அவர் வீட்டிலும் சில கடிதங்கள் கிடைத்தன. காவல் துறை அவரை மேலும் விசாரித்ததில், சோமசுந்தரப்பிள்ளை என்ற இன்னொருவரைக் காட்டிக் கொடுத்தார். காவல் துறை சோமசுந்தரத்தைச் சுற்றி வளைத்தது. சோமசுந்தரமும் கைது செய்யப்பட்டார். ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் அரசுத் தரப்புச் சாட்சிகளாக (approver) மாறினர்.

ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, காவல் துறை, தென்னிந்தியா முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தியது. பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பின்வருமாறு,

1)             நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கிய குற்றவாளி)  தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். பத்திரிகையாளர். சூர்யோதையம் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். ஆங்கிலேய அரசாங்கம் அப்பத்திரிகையைத் தடை செய்தது. அதன் பின்னர் பல பத்திரிகைகளைத் தொடங்கினார். ஆனால், ஆங்கிலேய அரசாங்கம் அவருடைய அனைத்துப் பத்திரிகைகளையும் முடக்கியது. ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுடையவர். அரவிந்த கோஷைப் பின்பற்றியவர்.  (அரவிந்த கோஷ், வங்காளத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலேயர்களை ஆயுதம் கொண்டு விரட்டமுடியும் என்று நம்பியவர். அலிப்பூர் குண்டு வெடிப்பில், குற்றம் சாட்டப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு, அரசியலை விட்டு விலகி, ஆன்மிகத்தில் ஈடுபட்டார். புதுச்சேரியில் குடிபுகுந்தார்.)

2)             சங்கரகிருஷ்ண ஐயர் (வாஞ்சிநாதனின் மைத்துனர்)  விவசாயம் செய்துவந்தார்.

3)             மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை  காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.

4)             முத்துகுமாரசாமி பிள்ளை  பானை வியாபாரம் செய்துவந்தார்.

5)             சுப்பையா பிள்ளை  வக்கீல் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தவர்.

6)             ஜகனாதா அய்யங்கார்  சமையல் செய்யும் உத்தியோகம்

7)             ஹரிஹர  ஐயர்  வியாபாரி

8)             பாபு பிள்ளை  விவசாயி

9)             தேசிகாச்சாரி  வியாபாரி

10)           வேம்பு ஐயர்  சமையல் செய்யும் உத்தியோகம்

11)           சாவடி அருணாச்சல பிள்ளை  விவசாயம்

12)           அழகப்பா பிள்ளை  விவசாயம்

13)           வந்தே மாதரம் சுப்பிரமணிய ஐயர்  பள்ளிக்கூட வாத்தியார்

14)           பிச்சுமணி ஐயர்   சமையல் செய்யும் உத்தியோகம்

கைது செய்யப்பட்டவர்களில் பலர், இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்குட்பட்டவர்கள். அவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட இருவர், தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள்,

1)   தர்மராஜா  ஐயர்  விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

2)    வெங்கடேச ஐயர்  கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கிலேய அரசு, ஆஷ் கொலை வழக்கு மற்றும் தேசத் துரோக நடவடிக்கைகளில், மேலும் சிலருக்குப் பங்கு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தது. அவர்கள்...

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-787-9.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் - 94459 01234 | 9445 979797

1 comment:

  1. எல்லோருமே ஐயரும் பிள்ளை வாளுமா இருக்காங்களே?

    ReplyDelete