Search This Blog

Friday, February 15, 2013

குமரிக்கண்டமா, சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்

இந்தியா என்பது ஒற்றை தேசமா இல்லை பல தேசிய இனங்களின் கூட்டா என்ற கேள்வி ஒரு பக்கம் பலராலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஓர் அரசியல் கேள்வி. இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க இந்தக் கேள்விக்கான பதில் முக்கியம். பல மொழிகள் பேசப்பட்டாலும் கலாசாரம் பெரும்பாலும் ஒன்றே என்று சிலர் பதில் சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு சிறு பிராந்தியப் பகுதியிலும்கூட கலாசாரக் கூறுகளில் எக்கச்சக்கமான வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். மதம் என்று எடுத்துக்கொண்டாலும் சிறுசிறு வித்தியாசங்களின் தொடங்கி மாபெரும் வேற்றுமைகள் உள்ளன. நான்கு வர்ணங்கள், லட்சம் சாதிகள், வர்ணத்துக்கு வெளியிலான தீண்டத்தகாத சாதிகள், தோல் நிறத்தில் வேறுபாடு, உருவ அமைப்பில் வேறுபாடு என்று கருத்துரீதியாகவும் உடற்கூறுரீதியாகவும் இந்தியாவில் எக்கச்சக்க வேற்றுமைகள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று சிலர்; ஒற்றுமையே கிடையாது - எல்லாம் வேறு வேறு என்று சிலர்.

வரலாறு, மானுடவியல், சமூகவியல், மொழியியல் துறை நிபுணர்கள் இந்தியாவின் இந்தப் பல்வேறு வண்ணங்களை ஆராய்ந்தபடி இருக்கிறார்கள். இவர்களால் ஒருசில பெரும் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, கேள்விக்குள்ளாக்கப்பட்டு வந்தபடி உள்ளது.

இந்தியாவின் இரு பெரும் இனங்கள் ஆரியர்களும் திராவிடர்களும்; இதில் ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக பரத கண்டத்துக்குள் நுழைந்து, இங்கு வசித்துவந்த திராவிடர்களுடன் போரிட்டு, அவர்களைத் தெற்கு நோக்கித் துரத்திவிட்டனர் என்பது ஒரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, ஆரியர்கள் வெளுப்புத் தோல் கொண்டவர்கள், உயரம் அதிகமானவர்கள், இந்தோ-ஆரிய குடும்ப மொழியான சமஸ்கிருதம் பேசியவர்கள், குதிரைகளை வைத்திருந்தவர்கள். திராவிடர்கள் குள்ளமானவர்கள், கருத்த நிறத்தவர், தமிழ் அல்லது புரோட்டோ-தமிழ் மொழி பேசியவர்கள்.

தமிழர்கள் (திராவிடர்கள்) என்று எடுத்துக்கொண்டால், கடலில் மூழ்கிப்போன குமரிக் கண்டம் என்று தென்புலத்திலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் வருகைக்குமுன் இந்தியா முழுமையிலும் வசித்தவர்கள் என்பது தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஒருசிலரது கருத்து.

சிந்துவெளி நாகரிகத்தின் முத்திரை எழுத்துகள் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பிறகு, சிந்துவெளிப் பகுதி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதாக சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இல்லை இல்லை, சிந்து சரசுவதி நதி நாகரிகம் என்பது முழுமையாக ஆரிய நாகரிகம்; இந்த ஆரியர்கள் இந்தியாவுக்குப் படையெடுத்தெல்லாம் வரவில்லை; அவர்கள் சரசுவதி நதிக்கரையில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள்; சரசுவதி நாகரிகம்தான் வேத நாகரிகம்; அவர்கள்தான் லோத்தால், தோலாவிரா போன்ற நகரங்களை (பின்னர் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவையும்) கட்டினார்கள்; வேத உபநிடதங்களையும் எழுதினார்கள்; சரசுவதி வற்றிப்போனதால் சிந்துவையும் கங்கையையும் நோக்கி நகர்ந்தார்கள் என்கிறார்கள் சிலர்.

இன்று ஆரியர்களைப் பற்றியும் நமக்குத் தெளிவான தகவல்கள் இல்லை; திராவிடர்களைப் பற்றியும் தெளிவான தகவல்கள் இல்லை. ஆனாலும் இவை குறித்த தகவல்கள் நம்முடைய பாடப்புத்தகங்களில் சர்வ சாதாரணமாக, முற்று முழுதான உண்மைகளைப் போல உலா வருகின்றன.

இவற்றுக்கிடையில், பா. பிரபாகரன் வலுவான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார். முதலில் தமிழர்களின் தோற்றம் குறித்து தற்போது பரவலாக இருக்கும் கோட்பாடுகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு ஆராய்கிறார். அவை ஏன் தவறானவை என்று தன் கருத்துகளை ஆணித்தரமாக வைக்கிறார்.

குமரிக்கண்டம் என்ற ஒன்று கன்னியாகுமரிக்குத் தெற்கே இருக்கச் சாத்தியமே இல்லை என்று விளக்கியதற்குப் பிறகு, இன்றைய தமிழர்களின் தோற்றுவாய் மத்திய தரைப் பகுதியான (இன்றைய ஈராக்) சுமேரியம்தான் என்கிறார். அதற்கு வலு சேர்க்கும் வகையில் சுமேரிய நாகரிகம் பற்றி விரிவாக விளக்குகிறார். சுமேரியர்கள் சுட்ட களிமண்ணில் எழுதிவைத்துவிட்டுச் சென்ற பல விஷயங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இன்று படிக்கமுடியும்; பொருள் புரிந்துகொள்ள முடியும். அனைத்தும் இணையத்தில் ஒரு தொகுப்பாகக் கிடைக்கின்றன. அவற்றை ஆராய்வதோடு தமிழ் இலக்கியங்களில், முக்கியமாக இறையனார் அகப்பொருள் உரையில் சொல்லியுள்ள விஷயங்கள், சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளவை, சமஸ்கிருத புராணங்களில் சொல்லப்பட்டுள்ளவை ஆகியவற்றோடு ஒப்புநோக்கி, இந்த முடிவுக்கு வருகிறார் பிரபாகரன்.

சுமேரிய சுடுமண் ஓடுகளில் மெலூஹா, தில்முன் என்று இரு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தூரத்தில் உள்ள இந்த நாடுகள் (பகுதிகள்) சுமேரியத்துடன் வர்த்தகத்தின் ஈடுபட்டிருந்தன. மெலூஹாதான் சிந்து சரசுவதி நாகரிகம் என்று கிட்டத்தட்ட அனைவருமே சொல்கின்றனர். Immortals of Meluha என்னும் தொடர் வெகுஜனக் கதை வெளியாகி இந்தியாவில் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. தில்முன் என்பது பஹ்ரைன் அல்லது அதற்கு அருகில் உள்ள பகுதி என்பதாகச் சிலர் சொல்கின்றனர். ஆனால் பிரபாகரனின் கருத்து, தில்முன் என்பது தமிழகம்தான் என்பது. அதற்கான ஆதாரங்களை பிரபாகரன் முன்வைக்கிறார்.

பிரபாகரனின் கருத்தின்படி, திராவிடர்கள், ஆரியர்கள் என இருவருமே சுமேரியத்திலிருந்து இந்தியா வந்தவர்கள். திராவிடர்கள் நீர்வழியாகக் கப்பல்களில் வந்து இன்றைய கேரளக் கடற்கரையில் இறங்கினர்; ஆரியர்கள் தரை வழியாகப் பல கலப்புகளைச் சந்தித்தபடி வடமேற்கு எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர்.

பிரபாகரன் முன்வைக்கும் கோட்பாட்டை நீங்கள் உங்கள் அரசியல் சமூகக் கருத்துகளுக்கு ஏற்ப ஆதரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அவருடைய சுவாரசியமான எழுத்தை நிராகரிக்க முடியாது. சுமேரிய நாகரிகம், கிரீட் தீவில் நிலவிய மினோயன் நாகரிகம், தமிழகக் கதையாடல்கள், சிந்துவெளி நாகரிகம், இந்த எல்லா இடங்களிலும் நிலவிய நம்பிக்கைகள், கடவுள்கள், வழக்கங்கள் ஆகியவற்றை மிக சுவாரசியமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பிரபாகரன். அவற்றிலிருந்து அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் எப்படி இருந்திருக்கலாம் என்ற தன் ஊகத்தையும் அழகாக முன்வைக்கிறார். நிறைய படங்கள் கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.

தொழில்முறை வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்லர் பிரபாகரன். கப்பல் போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். லாஜிஸ்டிக்ஸ்: ஓர் எளிய அறிமுகம் என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகத்துக்காக எழுதியவர். தமிழர்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை முதலில் இவர் செம்மொழி மாநாட்டில் சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை சிறிது சிறிதாக வளர்ந்து இன்று ஒரு புத்தகமாக மாறியுள்ளது.

புத்தகத்தை வாங்க

விலை ரூ. 125

2 comments:

  1. கலிங்க மண்ணன் கார வேலன் 13 நூற்றாண்டுகளாக இருந்த திரமில சங்காத்தை(சேரன்,சோழன்,பாண்டியன் கூட்டிணைப்பை) உடைத்தேன் என்கிறார் அதாவது அவர் காலத்தில் மற்ற அரசர்கள் இருப்பினும் இதையே முதன்மையாக கூறுகிறார். அவ்வளவு பழமையானவர்கள் தமிழ் மூவேந்தர்கள்.சிலர் 113 என்று மாற்றி விடயத்தை கூறியுள்ளனர் , பிறகு ஒரிசா பாலு மேலும் பலர் சேர்ந்து கல்வெட்டு விடய்த்தை ஏன் மாற்றினீர்கள் என கேள்வி எழுப்பி 13 நூற்றாண்டு என வெளியுட்டுள்ளனர். காரவேலன் கி.மு 165 +1300 =1465 வருடத்திற்கு முன்பே தமிழ் மூவேந்தர்கள் வாழ்ந்துள்ளனர் என தெரிகிறது.
    கபிலர் தன் பாடலில் இருங்கோவேள் மண்ணன் தன் வேண்டுகோளை ஏற்காததால் சாடுகிறார் ,உன் முன்னோர்கள் 49 தலைமுறையாக துவரை (துவாரகை)ஆண்டு வந்தனர் ,ஆனால் அக்காலத்தில் வாழ்ந்த அரசன் கழாத்தலை என்ற புலவனை இழுவுபடுத்தியதன் காரணமாகவே இருபெரு நகரங்கள் (துவாகை ,வேட்துவாரகை)அழிவை சந்தித்தன என்கிறார். மாமூலனார் காலம் மூலம் கபிலர் காலம் கி.மு 3ம் நூற்றாண்டு ஆக 49 ×28=1372 ,265+1372= 1637 ,கி.மு 17 ஆம் நூற்றாண்டு விடயத்தை கூறுகிறார் .வரலாற்று ஆசிரியர்கள் துவாரகை கி.மு 1700அழிவை சந்தித்தன என்கின்றனர்.இவை கபிலர் பாடலுக்கு சரியாக ஒத்துப்போகின்றன. கண்ணியாகுமரிக்கு 40 மைல் தல்லி 1000சதுர கி.மீட்டரில் தீவு இர்க்குனு அவங்க குழு கண்டுபிடுச்சிருக்கு ,சென்னைக்கு அப்பால் 16கி.மீட்டர் தூரத்தில் 2 கி.மீட்டருக்கு சுவர் தமிழர்கள்ல் கட்ட்ப்பட்டுள்ளது என ஒரிசா பாலு தன் கண்டுபிடிப்பை கூறுகிறார். கடல்ல தேடாம நிலத்துல நீங்கலா முடிவுகுகு வந்துடீங்க.

    ReplyDelete
  2. கண்ணியாகுமரிக்கு அப்பால் 40 மைல் தாண்டி 1000 சதுர கிலோ மீட்டரில் தீவு மற்றும் சென்னைக்கு அப்பால் 16கிலோமீட்டரில் சுவர் 2 கிலோமீட்டருக்கு இவை இரண்டும் ஒரிசா பாலு கடல் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்பவை

    ReplyDelete