Search This Blog

Friday, June 7, 2013

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும் - குருமூர்த்தி

எஸ்.குருமூர்த்தி, அரசியல், பொருளாதாரச் சிந்தனையாளர். மார்க்சியம், மார்க்கெட் பொருளாதாரம் ஆகியவை பற்றிய அவருடைய சமீபத்திய புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கு செல்லவும். ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234.

***

மார்க்ஸியச் சிந்தனையின் ஊற்றுக்கண் என்று ஹெகலைக் கருதலாம். ஆனால் மார்க்ஸுக்கும் ஹெகலுக்கும் இடையே உள்ள தொடர்பு இத்தோடு நின்றுவிடுகிறது. மார்க்ஸ் தன் கருத்தியலின் மிச்சப் பகுதியான புரட்சிக்கு வேறு மூலங்களைத் தேடவேண்டியிருந்தது. சோஷலிசம், வளங்களின் பொதுவுடைமை, கம்யூனிசப் புரட்சிக்கான மாதிரி என அனைத்தையும் மார்க்ஸ், கிறிஸ்தவ உலகின் இடைநிலைக் காலப் புரட்சியிலிருந்து தனக்குப் பொருத்தமாக எடுத்தாண்டார். அவற்றை, ஜெர்மனியின் அனாபாப்டிஸ்டுகளின் அனுபவத்திலிருந்து அவர் எடுத்துக்கொண்டார்.

மார்க்ஸ் பிற்காலத்தில் தொகுத்த கட்டமைப்பு இல்லாமலேயே 1534-ம் வருடம் ஜெர்மனி நாட்டின் வெஸ்ட்ஃபாலியாவின் மன்ஸ்டர் நகரில் ஒரு கம்யூனிசப் புரட்சி நடந்தேறியது.

தொடக்க காலக் கம்யூனிசப் புரட்சியை கொண்டுவந்த சமயப் புரட்சியாளர்கள் ‘அனாபாப்டிஸ்டுகள்’ என்று அழைக்கப்பட்டனர். அனாபாப்டிஸ்டு என்றால் மீண்டும் ஞானஸ்நானம் செய்யப்பட்டவர் (மீண்டும் கிறிஸ்தவராகப் பிறந்தவர்) என்று பொருள். மார்க்ஸியத் தத்துவத்தின் உருவாக்கமும் புரட்சிக்கான கருத்தியலும், ஒரு கிறிஸ்தவ சமயத் தோன்றல் என்பதைப் புரிந்துகொள்ள அனாபாப்டிஸ்டுகள் எப்படி உருவானார்கள் என்று அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அனாபாப்டிஸ்டுகளின் வருகையை உள்வாங்கிக்கொள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான ‘எஸ்கட்டாலஜி’ எனும் இறுதித் தீர்ப்பு அல்லது காலத்தின் முடிவு பற்றி நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பூமியில் ஆண்டவனின் ஆட்சி நிறுவப்பட்டு உலகம் அழியப்பெறும் என்பதையே இந்த நம்பிக்கை முன் நிறுத்துகிறது. ஆண்டவனின் ஆட்சி எப்போது பூமியில் நிறுவப்படும்? உலகம் முழுவதும் கிறிஸ்தவமயமாக்கப்பட்ட பின்பு, வேறு எந்தச் சமயமும் பூமியில் இல்லாதபோது இது நடக்கும். இந்த முழுமை பெற்ற ஆட்சியும் சமுதாயமும்தான் ஹெகலுக்கு ஊக்கம் அளித்ததா? உலகின் முடிவுக்கான கிறிஸ்தவ சமயவியல் அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், அனாபாப்டிஸ்ட் புரட்சியின் பின்னணியை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

ஐரோப்பிய வரலாற்றுப் பாதை முழுவதிலும், ஓர் ஒற்றைச் சிந்தனை பல நூற்றாண்டுகளாக அரசியல், சமய அமைப்புகளை இயக்கிக்கொண்டிருக்கிறது. அது விவிலிய நம்பிக்கையான உலகத்தின் முடிவு எனப்படும் எஸ்கட்டாலஜி. கிறிஸ்தவ உலகின் பல சிந்தனையாளர்கள் பல்வேறு சமயங்களில், உலகின் முடிவு நெருங்கிவிட்டது என்று நம்பினார்கள். ஆனால் அது நடக்குமுன், சரியாகச் சொல்வதானால் அது நடக்கவேண்டுமானால், ஏசு கிறிஸ்து திரும்பவும் வந்து பூமியில் ஆண்டவனின் ஆட்சியை நிறுவி இந்த உலகை ஆயிரம் ஆயிரம் காலம் ஆட்சி செய்வார் என்று நம்பப்பட்டது. ஆனால் ஏசு நாதரின் திருவருகை மற்றும் ஆண்டவனின் ஆட்சி நிறுவப்படுதல் எல்லாம் தானாகவே இறைவனின் அருளாலே நடக்கப் பெறாது. கிறிஸ்தவர்கள் முயன்று உலகைத் தயார்ப்படுத்தவேண்டும். அதாவது பொய்யான மதங்களையெல்லாம் களைந்து ஒரே ஓர் உண்மையான மதமான கிறிஸ்தவத்தைக் கொண்டு உலகைத் தூய்மைப்படுத்தவேண்டும். ஏசு நாதரின் மறுவருகைக்கு உலகைத் தகுதியானதாக வேண்டும்.

அனாபாப்டிஸ்டுகள் என்போர் புராட்டெஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். அவர்கள் மிகவும் கட்டுப்பாடு உடையவர்கள், எளிமையானவர்கள், முழுமையான சமயப்பற்று உடையவர்கள். இறையுணர்வு, சமயப்பற்று ஆகியவை காரணமாக அனாபாப்டிஸ்டுகள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் நடந்துகொண்டிருந்த பல தவறான விஷயங்கள் அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தன. கிறிஸ்தவர்கள் ஒழுக்க நெறி இன்றி, இறைப்பற்று இல்லாமல், விவிலிய நூல்களைச் சரிவரப் பின்பற்றாமல் இருக்கிறார்கள் என்று அனாபாப்டிஸ்டுகள் நினைத்தனர். இந்தக் காரணத்தால்தான் ஏசு கிறிஸ்து தன் இறையாட்சியை நிறுவ பூமிக்கு மறுவருகை தரவில்லை என்று அவர்கள் முழுமையாக நம்பினார்கள்.

ஆகவே சூழ்நிலையைச் சரிக்கட்ட ஒரு புரட்சிகரமான அணுகுமுறை தேவை என்று அவர்கள் நினைத்தனர். கிறிஸ்துவின் வருகை விரைவில் நடக்கப்போகும் நிகழ்வு; ஆனால் அது நடவாததற்குக் காரணம் கிறிஸ்தவர்கள் ஏசுவின் மறு வருகைக்குத் தகுதியாகும் அளவுக்கு நல்லொழுக்கத்தோடு இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அரசாட்சியைப் பிடிக்க அவர்கள் முடிவு செய்தனர். 1534-ம் ஆண்டு வெஸ்ட்ஃபாலியாவில் உள்ள மன்ஸ்டர் நகரின் ஆட்சியை அனாபாப்டிஸ்டுகள் கைப்பற்றினர்.

அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் கம்யூனிஸ்டுகள் என்னவெல்லாம் செய்தார்களோ அவற்றை மிகத் துல்லியமாக அனாபாப்டிஸ்டுகள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே செய்தனர். விவிலிய நூல்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் எரித்தனர். எல்லாச் சொத்துகளும், நம்பினால் நம்புங்கள் பெண்கள் உட்பட, சமூகத்தின் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. பலதார மணம் சட்டமாக்கப்பட்டது. தன்னுடையது மட்டுமே (பெண்கள் உட்பட) என்று ஒருவர் உடைமை பாராட்டினால் அது ஏசு கிறிஸ்துவின் வருகையைத் தாமதப்படுத்தும் என்பது அனாபாப்டிஸ்டுகளின் உறுதியான நம்பிக்கையாகும். (பொருள் மற்றும் மனிதர்கள்) உடைமை பற்றிய உணர்வு இல்லாத உலகமே முழுமையான உலகம். இப்படிப்பட்ட உலகுக்குத்தான் ஏசு கிறிஸ்து திரும்பி வருவார் என்பது அவர்கள் நம்பிக்கை. எல்லாம் பொதுவுக்குச் சொந்தமாக இருக்கவேண்டும். இதனால் தனிப்பட்ட உடைமை என்று ஏதும் இருக்கக்கூடாது.

எல்லாமே எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் அனாபாப்டிஸ்டுகள் ஓராண்டு காலம் ஆட்சி செலுத்தினர். அதன்பின்னர் ராணுவத்தின் உதவியோடு லுத்தரன் சர்ச்சினால் முறியடிக்கப்பட்டனர்.

முந்தைய அனாபாப்டிஸ்டுகள், பிந்தைய கம்யூனிசம் இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. முற்றிலும் சமயமார்க்கமான அனாபாப்டிஸ்டுகள் அடைய விழைந்ததையும் அதை எந்த வகையில் செய்யவேண்டும் என்று முனைந்தார்களோ அதே குறிக்கோளையும் பொருள்முதல்வாத மார்க்சியமும் தனதாகக் கொண்டிருந்தது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அனாபாப்டிஸ்டுகளின் முன்மாதிரிகளையே மார்க்சியமும் பின்பற்றியது. கம்யூனிசக் கட்டமைப்பு, சித்தாந்தம் (கம்யூனிச ஊழியர்களுக்கான பயிற்சி உட்பட) மற்றும் கம்யூனிசத்தில் புரட்சிகரமான உட்பொருள் என எல்லாமே அனாபாப்டிஸ்டுகளிடமிருந்து தருவிக்கப்பட்டது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மனத்தில் கொள்ளவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், பொது யுகத்தின் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பா எங்கும் பெரும் குழப்பம், வன்முறை, போர்கள் என நிறைந்து இருந்தன. அங்கு கடந்த 2,000 வருடங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் இவற்றின் காரணமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 90 சதவீதக் கொலைகளுக்கு கிறிஸ்தவ உலகின் கருத்துகள், சித்தாந்தங்கள், கோட்பாடுகள் ஆகியவையும் அவற்றின் அடிப்படையில் செயல்பட்ட ஆதரவாளர்களுமே மூல காரணம். ஆக உள்ளுறை இறுக்கங்களையும் வலியையும் வெளிப்படுத்தும் சமுதாயமாக இருந்தது ஐரோப்பா. இப்படிப்பட்ட வன்முறை நிறைந்த கடந்த காலத்திலிருந்து விடுபடும் வலுக்கட்டாய முயற்சிதான் மார்க்சிய சித்தாந்தத்தை உருவாக்கியது.

மார்க்சிய சித்தாந்தம், தான் உருவான சூழலில் நிலைகொண்டிருந்த வன்முறை இழையைத் தொடர்ந்து நிகழ்த்தியது. ஆக, எப்போதும் குழப்பமும் இறுக்கமும் நிறைந்த சமுதாயத்தின் விளைபொருள்தான் கம்யூனிசம்.

கம்யூனிசத்தையும் அதன் வீழ்ச்சியையும் புரிந்துகொள்வதற்கு இந்த அறிதல் மிக முக்கியமானது.

***

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்
எஸ். குருமூர்த்தி
தமிழில்: வானமாமலை
இணையத்தில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-957-6.html
தொலைப்பேசி வழியாக வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

Thursday, June 6, 2013

வஞ்சக உளவாளி - பர்மியப் போராளிகளை இந்தியா வஞ்சித்த கதை

பர்மாவின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பலர் போராடிவந்தனர். அதில் சிலருக்கு இந்திய ராணுவம் ஆயுதங்கள் வழங்கியும் பிறவகைகளில் உதவியும் வந்தது. திடீரென ஒரு நாள் இந்திய ராணுவம், பர்மியப் போராளிகள் சிலரைச் சுட்டுக் கொன்றது. 36 பேரைக் கைது செய்து அந்தமான் சிறையில் அடைத்தது.

அந்தக் கைதிகளை விடுவிக்கும் பணியில்,  புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியும் வழக்கறிஞருமான நந்திதா ஹக்சர் இறங்கினார். அந்தப் போராட்டத்தின்போது, பர்மா பிரச்னையைப் பற்றியும் இந்திய ராணுவத்தின் சில அசிங்கமான பகுதிகளையும் அவர் அறிந்துகொண்டார். அது தொடர்பாக அவர் எழுதிய புத்தகமே Rogue Agent என்பது. அதன் தமிழாக்கம் கிழக்கு பதிப்பகம் வாயிலாக ‘வஞ்சக உளவாளி’ என்று வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்தவர் அ. குமரேசன். அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கே செல்லவும். தொலைப்பேசியில் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234.

***

ஜெனரல் ஆங் சான் 1947 ஜூலை 19 காலை 10.37 மணிக்கு ஒரு கொலையாளியின் தோட்டாவுக்கு இரையானார். ரங்கூனில் தலைமைச் செயலகம் இருந்த செங்கல் கட்டடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டிருந்தபோது இது நடந்தது. அப்போது அவருக்கு வயது 32 மட்டுமே. அவருக்கு மனைவி கின் கி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூன்று சிறு குழந்தைகள் இருந்தார்கள். அந்த ஒரே மகள்தான் ஆங் சான் சூச்சீ. அந்த தினத்தன்று, முஸ்லிம் அரசியல் தலைவரான யு ரஜாக், ஜெனரலை ஆதரித்த கரேனியத் தலைவர்களில் ஒருவரான மான் பா கய்ங், ஷான் இளவரசர் சாவோ சாம் ஹ்துன் ஆகியோர் உள்ளிட்ட 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

யு நூ பர்மாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார். 1948 முதல் 1962 வரையில் முறையானதொரு நாடாளுமன்ற ஜனநாயகம் பர்மாவில் இருந்து வந்தது. எனினும், உண்மையில் உள்நாட்டுப் போர்தான் நடந்துகொண்டிருந்தது. யு நூ தலைமையை நிராகரித்த பர்மா கம்யூனிஸ்ட் கட்சி, ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டது. 1950-களில் சீனாவின் கோமின்டாங் படையினர் மாவோவின் செம்படைத் தாக்குதலிலிருந்து தப்பி ஓடிவந்து ஷான் பகுதியில் தஞ்சம் புகுந்தனர். அது அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கியது. சிறுபான்மை இனங்களோடு நடந்துவந்த பேச்சுவார்த்தைகள் நின்றுபோயின. கரேன், மோன், கச்சின் இனத்தவர்கள் தங்களுக்குத் தனி நாடு தேவை என்ற கோரிக்கையை மறுபடியும் எழுப்பினார்கள்.

யு நூ, 1956-ல் புத்த மதத்தை பர்மாவின் அரச மதமாக அறிவித்தார். பசு மாடுகள் கொல்லப்படுவதற்குத் தடை விதித்தார். ஈத் பண்டிகையின்போது மாடு வாங்க முஸ்லிம்கள் சிறப்பு அனுமதி பெறவேண்டியதாயிற்று. பாசிச எதிர்ப்பு மக்கள் சுதந்தரக் கட்சியிலிருந்து (ஏ.எப்.பி.எப்.பி.) பர்மா கம்யூனிஸ்ட் கட்சியும் பர்மா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் விலக்கப்பட்டதற்கு அவர்தான் காரணம். அந்தக் கட்சி தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் உருவானதுதான் பர்மா முஸ்லிம் காங்கிரஸ். அதன் தலைவர் யு ரஜாக். அவர் ஒரு அறிஞர். பாலி மொழியை நன்கு அறிந்தவர். புத்த மறைநூல்களைப் படித்தறிந்தவர். 1948-ல் பர்மாவின் ஆட்சி அதிகாரத்தை பிரிட்டன் கைவிட்டதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க இருந்த ஆங் சான் அமைச்சரவையில் யு ரஜாக் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்க இருந்தார். பர்மாவின் முஸ்லிம் சமூகத்தினருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு உறுதிமொழிகள் தரப்படுவதை அவர் எதிர்த்தார். முஸ்லிம் மக்கள் தங்கள் நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் தங்களது சமூக உரிமையைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக அறிவித்தார். முஸ்லிம் - பௌத்த மக்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார்.

சில ஆண்டுகள் கடந்தபின் முஸ்லிம்கள், பர்மிய முஸ்லிம் லீக் கட்சியை உருவாக்கினர். இதர சிறுபான்மையினருக்கான தனி அமைச்சகங்கள் போல முஸ்லிம்களின் நலன்களுக்காக ஒரு சிறப்பு அரசுத் துறை வேண்டும் என்று கோரினர். 1948 அக்டோபரில் யு நூ, மண்டல தன்னாட்சி விசாரணை ஆணையத்தை 6 கரேனியர்கள், 6 மோனியர்கள், 5 ஆரக்கானியர்கள், 7 பர்மன்கள், மேலும் 4 பேர்களைக் கொண்டு அமைத்தார். எனினும், பர்மா ஒரு புத்த மத நாடு என்ற அறிவிப்பு, பல தொடர்ச்சியான கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டது. கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க கச்சின், கரேன் படைகளை யு நூ பயன்படுத்தினார். ஒன்றிணைப்புக் கொள்கையை எதிர்த்து கச்சின், மோன், கரேன் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரிந்து செல்லும் உரிமையைப் பயன்படுத்தலாம் என்று 1947-ன் அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை சோதித்துப் பார்க்க ஷான் மக்கள் விரும்பினார்கள்.

ஜெனரல் நே வின், இந்த நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். ஜெனரல் ஆங் சானின் முப்பது தோழர்களில் ஒருவரான நே வின், 1962-ல் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி ஒன்றை அரங்கேற்றினார். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் சங்கக் கட்டடம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது. புரட்சி மன்றத் தலைவராகத் தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட நே வின், இரண்டாண்டுகளுக்குப் பிறகு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தடைவிதித்தார். அரசாங்கத்தைக் கைப்பற்றி, கூட்டாட்சி அமைப்பை ஒழித்துக் கட்டினார். 1974-ல் ஜெனரல் நே வின் ஆட்சியதிகாரத்தை மக்கள் சபை அமைப்புக்கு மாற்றினார். அவர் அறிவித்த அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டுக்கு, ‘பர்மா சோசலிசக் குடியரசு ஒன்றியம்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. நே வின், பர்மாவைத் தமது பர்மா சோசலிச திட்டக் கட்சியின் (பி.எஸ்.பி.பி) ஆளுகையில், ஒரு கட்சி சர்வாதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தார். இப்படியாக சோசலிசத்துக்கான பர்மிய வழியைத் தொடங்கிவைத்தார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆரக்கானின் ரோஹிங்கா முஸ்லிம்களுக்குக் குடியுரிமைகள் மறுக்கப்பட்டன. அரசுப் பணிகளிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டார்கள். அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது என்ற பெயரால் ஜெனரல் நே வின் தனது செயல்களை நியாயப்படுத்தினார். பர்மிய மக்களில் சிலர் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தார்கள். குறிப்பாக அவர் வரலாற்றுப் புகழ் பெற்ற முப்பது தோழர்களில் ஒருவர் என்பதால், அவரது நாட்டுப் பற்றை அவர்கள் சந்தேகிக்கவில்லை.

‘ஒரே ரத்தம், ஒரே குரல், ஒரே அதிகாரம்’ என்ற முழக்கத்தின்கீழ் ஒற்றை ஆதிக்க அரசை ஜெனரல் நே வின் ஏற்படுத்த முயன்றார். அவரது ஆட்சியில் ராணுவம் தனிப்பட்ட முறையில் ஜெனரலுக்கு விசுவாசமானதாகவும் சொந்த மக்களுக்கு எதிரானதாகவும் மாற்றப்பட்டது. சுய நிர்ணய உரிமைக்கான அனைத்து இயக்கங்களையும் ஒடுக்குவதே அதன் முக்கியப் பணியானது.

ராணுவ அதிகாரிகள் தங்களது சீருடைகளைக் களைந்துவிட்டு பி.எஸ்.பி.பி-யின் படைத்துறை சாராத தலைவர்கள் ஆனார்கள். அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட திட்டமிட்ட பொருளாதார அமைப்பில், பொருளாதாரத்தை நிர்வகிக்கிற வேலையையும் ராணுவமே எடுத்துக்கொண்டது. தனக்கென சொந்தத் தொழில் நிறுவனங்கள், வங்கி, கப்பல் போக்குவரத்து, வர்த்தகக் குழுமங்கள், சேவைத்துறை ஒப்பந்ததாரர்கள், பதிப்பகம், செய்திப் பத்திரிகை ஆகியவற்றை ராணுவம் தொடங்கியது. 1962 முதல் 1988 வரையில் நே வின் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சியில் நாடு மேலும் மேலும் ஏழைமை ஆனது. 1987-ல் பர்மாவை ஒரு வளர்ச்சியடையாத நாடு என ஐ.நா. அறிவித்தது.

1987 செப்டம்பர் 5 அன்று, ஜெனரல் நே வின் பர்மாவின் பணமான 25, 35, 75 கியாட் நோட்டுகள் செல்லாது என்று எவ்வித இழப்பீடும் இன்றி அறிவித்தார். அதனால் நாட்டில் புழக்கத்தில் இருந்த 75 சதவிகிதப் பணத்துக்கு மதிப்பில்லாமல் போனது. அந்த ஒரு நடவடிக்கை, கோடிக்கணக்கான மக்களின் சேமிப்பை மொத்தமாகத் துடைத்தழித்தது. அந்த நிகழ்வுதான் ரங்கூன் மாணவர்களின் போராட்டத்தை முடுக்கிவிட்டது. அந்தப் போராட்டம் மற்ற நகரங்களுக்கும் பரவியது.

ரங்கூன் தெருக்களில் அணிவகுத்த மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். 1988 மார்ச் 13 அன்று கலவரத் தடுப்புக் காவல்துறையினர் மாணவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் மாங் போன் மாவ் என்ற மாணவர் கொல்லப்பட்டார்.

அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் கியாண்டா மயானத்தில் கூடினார்கள். ஆனால், அவரது உடல் ஏற்கெனவே எரியூட்டப்பட்டுவிட்டது தெரியவந்தது. அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இன்செய்ன் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். கடும் ஒடுக்குமுறைகளையும் மீறி போராட்டங்கள் முடிவின்றித் தொடர்ந்தன.

1988 ஆகஸ்ட் 1 அன்று அனைத்து பர்மா மாணவர் ஜனநாயக லீக் ஒரு வேண்டுகோள் விடுத்தது. அதில் 1988 ஆகஸ்ட் 8 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. 8.8.88 என்ற அந்த நாள், நாடு தழுவிய எழுச்சியின் அடையாள நாளானது. அந்த நாளில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்த அடக்குமுறையையும் அநீதியையும் எதிர்த்து நாடே கொந்தளித்து எழுந்தது. இப்போது ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் வலியுறுத்தியவர்கள் மாணவர்கள் மட்டுமல்ல; துறவிகள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட நடிகர்கள், பாடகர்கள் என அனைவரும் ரங்கூன் தெருக்களுக்கு வந்து போராடினார்கள். ஆயிரக்கணக்கான பி.எஸ்.பி.பி உறுப்பினர்களும் கட்சியிலிருந்து வெளியேறினார்கள்.

1988 செப்டம்பர் 18-ல் பர்மிய ராணுவத்தின் ஜெனரல் சா மாங் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் எடுத்துக்கொண்டதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து எஸ்.எல்.ஓ.ஆர்.சி (அரசு சட்டம் ஒழுங்கு மீட்புக் குழு) ஏற்படுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றோர்மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாணவர்கள் தடுப்பு அரண்களை அமைத்தார்கள். ஆயினும் ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள், விடுதலை அடைந்த கரேன் பகுதிகளில் அடைக்கலம் புகுந்தார்கள். மற்றவர்கள் தாய்லாந்து எல்லைக்கு ஓடினார்கள். சிலர் இந்தியாவுக்குச் சென்றார்கள். தாற்காலிகமாகத்தான் இப்படித் தஞ்சம் புகுந்து வாழவேண்டியிருக்கும் என்று பலரும் நினைத்தார்கள். தாங்கள் அரசியல் அகதிகளாக வாழப்போவதன் தொடக்கம்தான் அது என்பதை அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

ஜெனரல் ஆங் சான் தலைமைக்குத் தானே வாரிசு என்று ஜெனரல் நே வின்னால் தொடர்ந்து சொல்லிக்கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாகக் கவனத்துடன் பின்னப்பட்ட அந்த மாயத்தோற்றம், முப்பது தோழர்களில் எஞ்சியிருந்த 11 பேர்களில் 9 பேர் அவருக்குக் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து கலைந்துபோனது.

ராணுவக் கும்பலின் தலைவர் ஜெனரல் சா மாங், கட்சியின் பெயரை தேசிய ஒற்றுமைக் கட்சி (என்.யு.பி) என்று மாற்றினார். யு நூ வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

***

வஞ்சக உளவாளி: பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம்
நந்திதா ஹக்சர்
தமிழில்: அ. குமரேசன்
இணையத்தில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-534-9.html
தொலைப்பேசி வழியாக வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

Wednesday, June 5, 2013

தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க

ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் இயக்கத்தின்மூலம் இந்தியா முழுதும் அறியப்பட்டவர் அர்விந்த் கெஜ்ரிவால். இப்போது ஆம் ஆத்மி கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் என்ற சட்டம் வேண்டும் என்ற அடிப்படையை முன்வைத்துப் போராடிய கெஜ்ரிவால், அது மட்டும் போதாது, கூடவே மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்றும் சொல்கிறார்.

ஏன் ஊழல் நடக்கிறது என்பதை அழகாகப் பகுப்பாய்வு செய்து விளக்கும் கெஜ்ரிவால், இப்போது இருக்கும் அரசியல் அமைப்பினால் ஊழலை எவ்விதத்திலும் ஒழிக்க முடியாது என்பதை இந்தியாவில் நடக்கும் பல்வேறு விஷயங்களை ஆதாரமாக வைத்து விளக்குகிறார்.

ஊழலை ஒழிக்கவே முடியாதா? மக்களுக்கு நலத்திட்டங்கள் போய்ச் சேருமாறு செய்யமுடியாதா? மக்களை நிரந்தர ஏழைகளாக வைத்திருக்கும் அரசிடமிருந்து விமோசனமே கிடைக்காதா?

மாற்று வழிகள் உள்ளன என்கிறார் கெஜ்ரிவால். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்று, இந்தியாவிலேயே சில கிராமங்களில் நடைபெற்றுள்ள சில சோதனைகள் என அனைத்தையும் எடுத்துக்காட்டும் கெஜ்ரிவால், எம்மாதிரியான சட்ட மாற்றங்களைக் கொண்டு மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்தைத் தரமுடியும் என்பதை அழகாக எடுத்துக்கூறுகிறார்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியைக் கீழே தருகிறோம். புத்தகத்தை வாங்க, இங்கே செல்லவும் அல்லது டயல் ஃபார் புக்ஸ் 94459-01234 என்ற எண்ணை அழைக்கவும்.

***

2002-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள். கிராம அரசாங்க ஊழியர் சரிவர வேலை செய்யவில்லை என்றால், கிராம சபை கூடித் தீர்மானம் எடுத்து அவரது சம்பளத்தை நிறுத்திவைக்கலாம் என்ற உரிமை அதில் இருந்தது. இதனால் சில ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்பட்டன. அவற்றில் கொஞ்சம் இங்கே:

சிந்த்வாரா மாவட்டத்தின் அமர்வாடா கோட்டத்தில் சில கிராமங்களுக்குப் போயிருந்தோம். அங்கிருந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் முன்னர் பள்ளிகளுக்குச் சரியாக வரவில்லை என்று சொன்னார்கள். ஏறக்குறைய மாதத்தின் இறுதி நாளன்று வந்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு போவதுடன் சரி. சட்டத் திருத்தம் வந்தபிறகு, மக்கள் கூடிப் பேசி அவர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்தார்கள். இரண்டு மாதத்துக்குச் சம்பளம் நிறுத்தப்பட்டதும், ஆசிரியர்கள் மூன்றாம் மாதத்திலிருந்து ஒழுங்காகப் பள்ளிக்கு வந்து பாடம் நடத்த ஆரம்பித்தார்கள். எவ்வளவு எளிதான தீர்வு பாருங்கள். மக்களிடம் அதிகாரத்தைக் கொடுங்கள், முன்னேற்றங்கள் வருகின்றன.

இன்னொரு கிராமத்தில் அங்கன்வாடிப் பணியாளர் சரிவரப் பணிக்கு வரவில்லை. ஒரு நாள் பஞ்சாயத்துத் தலைவர் கிராம சபையைக் கூட்டினார். சம்பந்தப்பட்ட பணியாளரையும் அழைத்தார். மக்கள் எல்லோர் முன்னிலையிலும் அந்தப் பெண்ணைத் தலைவர் கேட்டார்,
‘சொல்லுங்க, கடந்த ஆறு மாதங்கள்ள எத்தனை நாள் வேலைக்கு வந்தீங்க?’

ஒட்டுமொத்த கிராமத்தின்முன் அவரால் பொய் சொல்ல முடியவில்லை. இரண்டு நாட்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டார்.

‘இரண்டு நாட்கள்தான் என்றால் அங்கன்வாடி மையங்களுக்காக அரசாங்கம் அனுப்புகிற பணம் என்ன ஆயிற்று?’

அந்தப் பணத்தைத் தன் சொந்தச் செலவுக்கு உபயோகப்படுத்திவிட்டதை ஒப்புக்கொண்டார் அந்தப் பெண்.

இந்த முன்னேற்றங்கள் எல்லாம் மக்களுக்கு அதிகாரம் தரும் திருத்தம் கொண்டுவந்திருக்காவிட்டால் சாத்தியமாகி இருக்காது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்த அதிகாரம் இருந்திருக்காவிட்டால் வேலைக்கு வராத அங்கன்வாடி ஊழியரை அவர்களால் என்ன செய்திருக்க முடியும்?

அவருடைய மேலதிகாரிக்குப் புகார் அனுப்பியிருக்கலாம். பெரும்பாலும் இப்படிப்பட்ட புகார்கள் கிடப்பில் போடப்பட்டுவிடும். கொஞ்சம் நல்ல அதிகாரியாக இருந்தால் விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருப்பார். விசாரணை அதிகாரி சம்பந்தப்பட்ட கிராமத்துக்குப் போயிருப்பார்.
அங்கன்வாடி ஊழியரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவரைப் பற்றி நல்ல விதமாக எழுதிக்கொடுத்திருப்பார்.

புகார்களுக்கு அர்த்தமே கிடையாது. புகார்கள் சமாளிக்கப்பட்டுவிடும். பின்னால் கிராம மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிக்கொண்டே இருப்பார்கள். யார் அதைக் காதில் போட்டுக்கொள்வார்கள்?

மக்களுக்கு அதிகாரம் இருக்கிற காரணத்தால் விசாரணைக்கே அவசியம் இருக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஊழியர், குற்றங்களை நேரடியாக ஒப்புக்கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார். குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டதும் சில இளைஞர்கள் எழுந்து அவர் வேலையிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். ஆனால் சில பெரியவர்கள் எழுந்து, அவரை வேலையிலிருந்து நீக்குவது நம் நோக்கமில்லை என்றும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதே நம் நோக்கம் என்று சொல்லியிருக்கிறார்கள். பத்து நாள் அவகாசம் கொடுத்து, அதற்குள் அவர் தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் கிராம சபை கூடி அவரை வேலையிலிருந்து நீக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

அந்தப் பெண் தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டார். அவரை நீக்கவேண்டிய அவசியம் எழவில்லை.

***

தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க
அர்விந்த் கெஜ்ரிவால்
தமிழில்: கே.ஜி.ஜவர்லால்
இணையத்தில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-750-3.html
தொலைபேசி மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

Tuesday, June 4, 2013

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும் புத்தக வெளியீடு - தினமணி



கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும், எஸ். குருமூர்த்தி எழுதிய ‘மறைந்துபோன மார்க்சியமும்  மங்கிவரும் மார்க்கெட்டும்’ புத்தகம் வெளியீடு பற்றி தினமணி வெளியிட்டிருக்கும் செய்தி.

Monday, June 3, 2013

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும் புத்தக வெளியீடு - தினத்தந்தி


எஸ். குருமூர்த்தி எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவ்ரும் மார்க்கெட்டும்’ புத்தக வெளியீட்டைப் பற்றி, 2-ஜூன்-2013ம் தேதி தினந்தந்தி இதழில் வெளியான செய்தி.

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும் புத்தக வெளியீடு - இண்டியன் எக்ஸ்பிரஸ் கவரேஜ்

http://newindianexpress.com/states/tamil_nadu/Crisis-in-West-Asia-emerging-as-economic-power-Experts/2013/06/02/article1616238.ece

While the Western economy is facing a  crisis, experts in India refuse to term it as global crisis, but prefer to describe the phase as  the rise of  Asia as an economic power.
At a function to release the translated version of World Beyond Marx and Market, a compilation of speeches of a noted economist and the all-India co-convener of Swadeshi Jagaran Manch S Gurumurthy, into Tamil, experts echoed India is not dependent on the Western economies and its growth is mostly due to its savings and major economic role played by the Indian housewife.
In his address, Gurumurthy said there is a need for experts to study the Indian economic system rather than borrowing the Western concepts and implementing them in India.
He said that family and society are key to safeguard our economy. Quoting Goldman Sachs, Gurumurthy said that India has $1.7 trillion in savings and we don’t have to depend on any country for our growth.
He said both Communism and American form of economic growth shunned the family system, which resulted in their downfall.
Earlier, Prof R Vaidyanathan of Indian Institute of Management, Bangalore, said that global economy is to witness a paradigm shift.
He said the American is more of corporatisation of democracy and there is a challenge before the world on what constitutes the spirit of democracy. “There is a need for out of the box thinking,” he said.
Attending the function, national Swabhimaan Andolan Convener Govindacharya said that there was a need to rethink on those things that constituted development of country.

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - ப.கனகசபாபதியுடன் ஓர் உரையாடல்


கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘பாரதப் பொருளாதாரம் - அன்றும் இன்றும்’ நூல் குறித்து, அதன் ஆசிரியர் ப.கனகசபாபதியுடன் பத்ரி சேஷாத்ரி நிகழ்த்திய உரையாடலின் காணொளி.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-213-3.html

புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க  - டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

வலுவான குடும்பம் வளமான இந்தியா - ப.கனகசபாபதியுடன் ஓர் உரையாடல்


கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘வலுவான குடும்பம் வளமான இந்தியா’ புத்தகம் குறித்து, நூலாசிரியர் ப.கனகசபாபதியுடன் பத்ரி சேஷாத்ரி உரையாடியதன் காணொளி.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-742-8.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் - 94459 01234

Monday, April 29, 2013

பாம்பின் கண் - உண்மை இதழின் விமர்சனம்


ஏப்ரல் 16-30, 2013 உண்மை இதழில் வெளியான விமர்சனம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-701-5.html


Thursday, April 25, 2013

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - துக்ளக் விமர்சனம்


1.5.2013 தேதியிட்ட துக்ளக் இதழில் வெளியான விமர்சனம்.

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-522-6.html

போன் மூலம் வாங்க: Dial for books - 94459 01234 | 9445 979797