Search This Blog

Wednesday, March 16, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - பாலுமகேந்திரா

நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை திரைப்படமாக்குவது குறித்த விவாதங்கள் தமிழில் அடிக்கடி நடைபெறக் காணலாம். நல்ல திரைப்படங்களைத் தந்துகொண்டிருக்கும் மொழிகளில் இத்தகைய ஒரு வழக்கம் தொடர்ச்சியாக இருந்துகொண்டுதான் இருக்கிறது.

திரைப்படங்கள் என்றல்ல, குறும்படம், நாடகம் என எதையும் இப்படி எழுதப்பட்ட புனைவுகளில் இருந்து எடுக்கும்போது, அதன் கதைத்தளம் நல்ல வலுவாக அமைந்துவிடும் சாத்தியங்கள் உண்டு. இப்படி இல்லாமல் சமசரம் என்ற பெயரில், படைப்பின் மூலத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துவிட்ட படங்களும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

தொலைக்காட்சி நாடகங்கள் என்ற பெயரில் வந்துகொண்டிருந்த நாடகங்களுக்கு மத்தியில் பாலுமகேந்திராவின் கதை நேரம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் யதார்த்தமாகவும் இருந்து தொலைக்காட்சி நாடகங்களுக்கே ஒரு மரியாதை தேடித் தந்தது. அந்த கதை நேரத்தில் பாலுமகேந்திரா எடுத்த அத்தனை நாடகங்களும், எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளே. சிறுகதைகளின் தாக்கம் சிறிதும் கெடாமல் படமாக்கப்பட்ட விந்தையைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை. சில நாடகங்கள் சிறுகதைகளையும் மிஞ்சி நின்றன. தொலைக்காட்சி நாடகங்கள்தானே என்ற எண்னம் இல்லாமல், ஒரு திரைப்படத்துக்கு உண்டான உழைப்பை அதில் நாம் பார்க்கமுடியும். காலம் கடந்து ஒரு படைப்பு நிற்க, அதன் உள்ளடக்கமும் தரமும்தான் முக்கியமே ஒழிய, அது தொலைக்காட்சி நாடகமா திரைப்படமா குறும்படமா என்ற அவசியம் இல்லை என்று பெரிய அளவில் உணர்த்தியவை பாலுமகேந்திராவின் கதை நேரம் நாடகங்களே. அதன் சில நாடகங்களில், இந்தக் கதையை திரைக்கதையாக மாற்ற இயலுமா என்று நம்மை ஆச்சரியப்படுத்தி இருப்பார் பாலுமகேந்திரா.

உலகின் உன்னதமான திரைப்படங்கள் வரிசையில் வைக்கத்தக்க படங்களான வீடு, சந்தியா ராகம் படங்களைத் தந்தவர் பாலுமகேந்திரா என்பது நாம் அறிந்த ஒன்றே.

ஒரு படைப்பிலிருந்து திரைக்கு எப்படிச் செல்வது என்பது குறித்துத் தெளிவோடு பேசுவதற்குச் சரியான ஆளுமையும் அவர்தான்.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

‘எழுத்திலிருந்து திரைக்கு...’ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா உரையாற்றுகிறார்.

குறும்படம் திரையிடலும், கலந்துரையாடலும் உண்டு.

தவறவிடக்கூடாத கூட்டம் இது.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்
நாள்: 18.03.2011 வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணி.
இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி, 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600018.

No comments:

Post a Comment