எப்படி ஒரு வணிக நிறுவனம் இந்தியா என்ற மாபெரும் நாட்டைப் பிடித்தது என்பது. என்னதான் வலிமை குறைந்துபோனது என்றாலும் முகலாய அரசர்களின்கீழ் பெரும் படைகள் இருந்தன. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்த பல அரசர்களின்கீழும் பெரும் படைகள் இருந்தன. முகலாய அரசர்களிடமே பீரங்கிகள் இருந்தன. திப்பு உள்பட, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசர்களிடமும் துப்பாக்கிப் படைகளும் பீரங்கிகளும் இருந்தன.
ஆனாலும் கிழக்கிந்தியக் கம்பெனியால் இந்தியாவின் பெரும் பகுதியை எளிதில் சுருட்டிச் சாப்பிட முடிந்தது.
இது ஒரு குழப்பம்.
மற்றொன்று, கம்பெனி இந்தியாவுக்கு வந்தது வியாபாரம் செய்யத்தானே? அதை கிட்டத்தட்ட நூறாண்டுகளாக ஒழுங்காகச் செய்துவந்தவர்கள் ஏன் திடீரென நாடு பிடிக்க ஆரம்பித்தார்கள்? நாடு பிடிக்கத் தொடங்கியதும் வியாபாரத்துக்கு என்ன ஆனது? வியாபாரம் இன்னும் நன்றாக நடந்ததா? (என்றால் இல்லை என்பதுதான் பதில்!)
எந்த நிமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி நாட்டைக் கைப்பற்ற ஆரம்பித்ததோ அந்த நிமிடத்திலிருந்தே அதன் அழிவு ஆரம்பித்தது. அதே நேரம் இந்தியா சந்தித்த அழிவோ பேரழிவாக இருந்தது.
இது இரண்டாவது குழப்பம்.
அடுத்து, பிரிட்டனில் என்னதான் நடந்துகொண்டிருந்தது? எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நாட்டைக் கைப்பற்றவேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றமோ அரசியோ/அரசரோ திட்டமிடவில்லை. ஆனால் அது நடக்க ஆரம்பித்ததும், அவர்கள் எப்படி ரியாக்ட் செய்தார்கள்? பிரிட்டிஷ் அறிவுஜீவிகள் இதனை எதிர்த்தார்களா? பொதுமக்கள் இதனை ஆதரித்தார்களா அல்லது எதிர்த்தார்களா? ஏதேனும் விவாதம் நடந்ததா? பத்திரிகைகள் என்ன சொன்னார்கள்?
இந்தியாவிலிருந்து செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு பிரிட்டனுக்கு வந்தது என்றால் யாருக்குப் போனது? பிரிட்டன் முடியாட்சிக்கா, நாடாளுமன்றத்துக்கா, மக்களுக்கா, அல்லது கம்பெனியின் பங்குதாரர்களுக்கா?
நிச்சயமாக பிரிட்டிஷ் மக்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் பயன் அடைந்திருக்கின்றனர். அதில் இந்தியர்களின் ரத்தம் தோய்ந்துள்ளது. ஆரம்பகட்டத்தில் கம்பெனியின் செயல்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து எதிர்ப்பு இருந்தாலும், அதிலிருந்து அரசுக்கு நேரடியாகக் கிடைக்கும் பணம் முக்கியத் தேவையாக இருந்ததால், அறவுணர்வுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதுபற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளன.
கார்ப்பரேட் ஊழல் என்பதன் அடிப்படையை கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்பாடுகளில் காணலாம். ஆனாலும், பெரும்பாலான பிரிட்டிஷ் அறிவுஜீவிகள், ஊழல் என்பதே இந்தியாவில்தான் உருவானது என்பதுபோலவும் இந்தியர்கள் அனைவருமே வெறுக்கத்தக்க ஊழல்வாதிகள் என்பதுபோலவும் பேசியுள்ளனர்.
நிக் ராபின்ஸ் ஆங்கிலத்தில் எழுதியிருந்த இந்தப் புத்தகத்தை சென்ற புத்தகக் கண்காட்சியில் ஒரியண்ட் பிளாக்ஸ்வானில் வாங்கிப் படித்தேன். அதன்பின் எழுத்தாளரையும் பதிப்பாளரையும் தேடிப் பிடித்து இந்தப் புத்தகத்தை மொழிமாற்றும் உரிமையைப் பெற்றோம். ராமன் ராஜா மொழிமாற்றம் செய்துள்ளார். (சீனா விலகும் திரை, திருப்புமுனை, பாகிஸ்தான் போகும் ரயில் ஆகியவற்றுக்கு அடுத்து...)
கொஞ்சம் கனமான புத்தகம். பிரிட்டிஷ் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. பொருளாதாரம் சார்ந்து எழுதப்பட்டது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களைச் சொல்வதால் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமாகிறது.