பார்க்க: தி ஹிந்து செய்தி
வழக்கறிஞர் நந்திதா ஹக்சர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கமான வஞ்சக உளவாளி: பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம் என்பதை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்தது.
பர்மிய ராணுவத்தை எதிர்த்துப் போராடி வந்த இந்த இனச் சிறுபான்மையினரிடம் பல உதவிகளைப் பெற்றுவந்த இந்திய ராணுவத்தின் ஒரு வஞ்சக உளவாளி, இவர்களை ஏமாற்றி, பணம் பிடுங்கிக்கொண்டு, அந்தமான் அழைத்துச் சென்று இவர்களின் தலைவர்கள் சிலரைச் சுட்டுக்கொன்று மீதிப்பேரை சிறையில் அடைக்கச் செய்தார். பின் அவர் இந்தியாவிலிருந்து காணாமல் போய்விட்டார்.
மனித நேயப் போராளிகள் சிலர் இந்த பர்மிய சிறைக் கைதிகளை வெளியில் எடுக்கப் பல முயற்சிகளைச் செய்தனர். நந்திதா ஹக்சர் இந்த வழக்கில் ஈடுப்பட்டது இப்படியாகத்தான். தன் புத்தகத்தில் பர்மியப் போராட்டத்தை விளக்கும் அதே நேரம் இந்தக் கைதிகள் படும் இன்னல்களையும் ஹக்சர் விவரிக்கிறார். தமிழாக்கம் நடக்கும்போது அதற்கென கடைசி அத்தியாயத்தை சற்றே மாற்றித் தந்தார் ஹக்சர். அப்போதும்கூட இந்தக் கைதிகளுக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை, எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை என்று சொன்னார்.
ஆனால் இன்றைய செய்தி, இவர்கள் அனைவரும் பல ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டதாகச் சொல்கிறது. மனித நேயம் மிக்க இந்தியர்கள் அனைவரும் மகிழவேண்டிய நாள். அத்துடன் இத்தனை நாள் வஞ்சிக்கப்பட்டு சிறையில் வாடிய இவர்களுக்காக நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய நாளும்கூட.
இந்தியா இனியாவது பர்மியப் போராட்டத்தில் நீதியின் பாதையைத் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment