Search This Blog

Friday, May 20, 2011

31 பர்மியப் போராளிகள் விடுதலை

பார்க்க: தி ஹிந்து செய்தி

வழக்கறிஞர் நந்திதா ஹக்சர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கமான வஞ்சக உளவாளி: பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம் என்பதை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

பர்மிய ராணுவத்தை எதிர்த்துப் போராடி வந்த இந்த இனச் சிறுபான்மையினரிடம் பல உதவிகளைப் பெற்றுவந்த இந்திய ராணுவத்தின் ஒரு வஞ்சக உளவாளி, இவர்களை ஏமாற்றி, பணம் பிடுங்கிக்கொண்டு, அந்தமான் அழைத்துச் சென்று இவர்களின் தலைவர்கள் சிலரைச் சுட்டுக்கொன்று மீதிப்பேரை சிறையில் அடைக்கச் செய்தார். பின் அவர் இந்தியாவிலிருந்து காணாமல் போய்விட்டார்.

மனித நேயப் போராளிகள் சிலர் இந்த பர்மிய சிறைக் கைதிகளை வெளியில் எடுக்கப் பல முயற்சிகளைச் செய்தனர். நந்திதா ஹக்சர் இந்த வழக்கில் ஈடுப்பட்டது இப்படியாகத்தான். தன் புத்தகத்தில் பர்மியப் போராட்டத்தை விளக்கும் அதே நேரம் இந்தக் கைதிகள் படும் இன்னல்களையும் ஹக்சர் விவரிக்கிறார். தமிழாக்கம் நடக்கும்போது அதற்கென கடைசி அத்தியாயத்தை சற்றே மாற்றித் தந்தார் ஹக்சர். அப்போதும்கூட இந்தக் கைதிகளுக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை, எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை என்று சொன்னார்.

ஆனால் இன்றைய செய்தி, இவர்கள் அனைவரும் பல ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டதாகச் சொல்கிறது. மனித நேயம் மிக்க இந்தியர்கள் அனைவரும் மகிழவேண்டிய நாள். அத்துடன் இத்தனை நாள் வஞ்சிக்கப்பட்டு சிறையில் வாடிய இவர்களுக்காக நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய நாளும்கூட.

இந்தியா இனியாவது பர்மியப் போராட்டத்தில் நீதியின் பாதையைத் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியம்.

Monday, May 16, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்

14 மே 2011 அன்று கிழக்கு மொட்டைமாடியில் பி.சந்திரசேகரன் ‘அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பேசியதன் வீடியோ:




ஒலிப்பதிவு மட்டும் போதும் என்றால் இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: சூரிய கிரகணம்

இது பழைய நிகழ்வு ஒன்றின் Slidecast. பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் + ஆடியோ. ராமதுரை 2009-ல் நிகழ்த்தியது.



Friday, May 6, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள்

14 மே 2011, சனிக்கிழமை அன்று, சென்னை, ஆழ்வார்பேட்டை, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் மாலை 6.30 மணிக்கு பி.சந்திரசேகரன் ‘அம்பேத்கர் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஆதரித்தவரா?’ என்ற தலைப்பில் பேச உள்ளார்.

அம்பேத்கர் ஒரு வழக்கறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் முக்கியப் பங்கு வகித்தவராக ஆவதற்குமுன்பே ஒரு பொருளாதார நிபுணராக இருந்தவர். இன்று அவர் ஒரு தலித் தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறார். ஆனால் பலரும் அவரை (தலித் சமூகத்தில் பிறந்த) பொருளாதார நிபுணர் என்று அவரைப் பார்ப்பதில்லை. அவரது பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிப் பேசும் சிலர்கூட அவர் முதலாளித்துவத்துக்கு எதிரானவர் என்றும் சோசலிசம் பக்கம் சாய்ந்தவர் என்றுமே குறிப்பிடுகிறார்கள். அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் சோசலிச அரசியலுக்கு எதிராக இருக்கும் காரணத்தால், மைய நீரோட்டவாதிகள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை; தலித்துகளோ அவற்றைத் தவறாகத் திரித்துவிடுகிறார்கள்.

பொருளாதாரச் சீர்திருத்தம் வேகமாக நடைபெற்றுவரும் இந்தியாவில் அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகளை நாம் மீண்டும் படிப்பது அவசியமாகிறது. முக்கியமாக கட்டற்ற சந்தைக் கொள்கை, மையக்குவிப்பில்லாத வளர்ச்சிக்கான திட்டமிடுதல், சமூகம் எதிர்கொள்ளும் அறிவுசார் பிரச்னைகள், நாடுகளுக்கு இடையேயான நிதி தொடர்பான பிரச்னைகள் ஆகியவை கவனம் பெறத்தக்கவை.

இது தொடர்பான பல கருத்துகளை மையமாகக் கொண்டு பி. சந்திரசேகரன் சென்ற மாதம், லுட்விக் ஃபான் மீசஸ் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆஸ்திரியன் நிபுணர்கள் மாநாடு 2011-ல் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை, அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய தவறான கருத்துகள் பலவற்றையும் தகர்க்கிறது.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சந்திரசேகரன் இந்தக் கருத்துகளை விரித்துப் பேச இருக்கிறார். பேச்சு தமிழில் இருக்கும்.

சந்திரசேகரன் விழுப்புரம் அருகில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஏ, எம்.ஏ பட்டங்களைப் பெற்றவர். 2005-ல், மோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சமூக அறிவியலுக்கான தேசியக் கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். இவர் எழுதிய ‘வளரும் நாடுகளிலும் இந்தியாவிலும் உலகமயமாதலின் தாக்கம்’ என்ற கட்டுரை 2004-ம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான மொஃபாட் பரிசுக்காக (The 2004 Moffatt Prize in Economics (USA)) பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்றாக இருந்தது. 2006-ம் ஆண்டில் அதிகம் படிக்கப்பட்ட 10 பொருளாதாரக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்று டாக்டர் மொஃபாட்டால் குறிப்பிடப்பட்டது.

தேசிய, சர்வதேச மாநாடுகள் பலவற்றில் பங்குபெற்றுள்ள இவர், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அம்பேத்கர், ஹயெக், லுட்விக் ஃபான் மீசஸ், அம்பிராஜன் ஆகியோரின் எழுத்துகளின் தாக்கம் இவரிடம் உள்ளது. http://hayekorder.blogspot.com/ என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார்.

-- பத்ரி சேஷாத்ரி

Tuesday, May 3, 2011

கிழக்கு மொட்டைமாடி: 2ஜி, சிபிஐ ஆகியவை பற்றி கே. ரகோத்தமன்

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சிபிஐயிலிருந்து ஓய்வுபெற்ற திரு. கே. ரகோத்தமன் பங்கேற்றுப் பேசினார். ராஜிவ் காந்தி கொலை வழக்கு என்ற பிரபலமான புத்தகத்தை எழுதிப் புகழ் பெற்றவர் இவர். இந்தப் பேச்சின்போது சிபிஐ உருவான வரலாறு, இந்திரா காந்தியைக் கைது செய்தபோது நடந்தது என்ன, 2ஜி வழக்கில் இப்போது சிபிஐ செய்வது என்ன போன்ற பல விவரங்களை அவர் தொட்டுச் சென்றார். கேள்வி - பதில் பகுதியுடன் கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் நீண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் 2 மணி நேரங்கள் வீடியோவாகவும் கடைசி அரை மணி நேரம் ஆடியோவாகவும் கீழே கிடைக்கின்றன.