Search This Blog

Friday, August 23, 2013

கிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு

கிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு
நிக் ராபின்ஸ்
தமிழில்: ராமன் ராஜா
பக் : 392
விலை : 220



இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க

புத்தகத்திலிருந்து...

வருடம், 2000. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தோன்றிய 400வது ஆண்டு விழா. அதே வருடம்தான் நான் பணி செய்வதற்காக லண்டன் நகர் வந்து சேர்ந்தேன். கம்பெனியின் 275 வருட வாழ்க்கை முழுவதும் இங்கேதான் அதன் தலைமையகம் இருந்தது. இன்றுபோலவே அன்றும், சர்வ தேசப் பொருளாதார மார்க்கெட்டில் லண்டன் ஒரு முக்கியமான மையம்.
புதிய ஆயிரமாண்டு பிறந்தபோது மார்க்கெட்டே ஒரு மிதப்பில்தான் இருந்தது. இப்போது யோசித்துப் பார்த்தால், 1999ன் கடைசி நாள் அன்று டாட் காம் குமிழியின் உன்மத்தம் ஏற்கெனவே உச்சகட்டத்தை அடைந்திருந்தது. இந்த சூதாட்ட மேகம் உடைத்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்தபோது, 1929க்குப் பிறகு கேள்விப்படாத அளவுக்கு மாபெரும் தில்லுமுல்லுகள் நடந்திருப்பது தெரியவந்தது. முதலீடு செய்யும்போது சமூகப் பொறுப்புணர்வுடன் செய்யவேண்டும் என்று சொல்லும் கட்சியில் நானும் சேரத் தொடங்கினேன்.
பங்கு விலைகள் சரிய ஆரம்பித்தன. முழுதாக மூன்று வருடம் இறங்கியபிறகு, விலைகள் சரி பாதிக்கு வந்து நின்றன. கொஞ்ச காலத்துக்கு, பங்குச் சந்தையில் ஓரளவு பணிவு தென்பட்டது. என்ரான், வேர்ல்ட்காம், டைகோ போன்ற ஒரு சில கெட்ட ஆப்பிள்கள்தான் நாற்றமடிக்கின்றனவா, அல்லது பழக் கடையே அழுகிப் போய்விட்டதா என்பதுதான் உலகம் முழுவதும் பேச்சு! கார்ப்பரேட் முதலாளித்துவமே கேள்விக்குறியாகப் போனது.
பங்குச் சந்தை கணினித் திரையைப் பார்க்கச் சகிக்கவில்லை; தொடர்ந்து விலை இறக்கம். ஒரே சிவப்பு மயம்! இதிலிருந்து கொஞ்சம் விலகி இருக்கலாமே என்று காலார நடக்க ஆரம்பித்தேன். வரலாற்றுப் புகழ் பெற்ற ஸ்கொயர் மைல், ராயல் எக்ஸ்சேஞ்ச், இங்கிலாந்து வங்கி என்று பார்த்துக்கொண்டே நடந்தேன். எக்ஸ்சேஞ்ச் சந்துக்கு வந்தேன். இங்கே உள்ள காப்பிக் கடைகளில்தான் பங்குத் தரகர்கள் கூடுவது வழக்கம். சூடான கிசுகிசுக்களோடு பங்குகளும் சேர்ந்து கை மாறும்.
ஒரு நாள் கிழக்குப் பக்கமாக இன்னும் கொஞ்ச தூரம் நடந்தேன். லெடன்ஹால் தெருவுக்குப் போய், கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமை அலுவலகம் இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு வேலைக்குத் திரும்பலாம் என்று எண்ணம்.
லெடன்ஹால் தெருவும் லைம் தெருவும் சந்திக்கும் மூலையில் திரும்பியபோது ஓர் ஆச்சரியம்: இந்த இடத்தில்தான் கிழக்கிந்தியக் கம்பெனி இருநூறு வருடத்துக்கு மேலாக நின்றிருந்தது. இப்போது அங்கே ஒன்றுமே இல்லை. ஓர் அறிவிப்போ, பலகையோ, கல்வெட்டோ எதுவுமே காணோம்! உலகத்தின் மிகச் சக்தி வாய்ந்த கார்ப்பரேஷன் இங்கே ஒரு காலத்தில் கொலுவிருந்த அடையாளமே இல்லை.
இந்த நாட்டின் கலாசாரமோ, தன் பாரம்பரியத்தைப் பேண விரும்புவது. இருந்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கம்பெனியை லண்டனின் அடையாளத்திலிருந்தே ஏன் துடைத்து எறிந்துவிட்டார்கள்? புதிர் தாங்கவில்லை எனக்கு.
இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் முயற்சிதான் இந்தப் புத்தகம். அதைவிட முக்கியமாக, இருபத்தோராம் நூற்றாண்டின் உலகமயமான பொருளாதாரத்துக்குக் கம்பெனி விட்டுவிட்டுப் போயிருக்கும் சீதனம் என்ன? இந்தக் கேள்வியையும் மறுபடி ஆராயவேண்டியுள்ளது.
ஞான ஒளிக் காலம்என்று புகழ் பெற்ற நாள்களில் ஆரம்பித்து, கம்பெனியின் கடந்த காலத்துக்குள் ஆழமாக முங்கினேன். அப்போதுதான் ஒன்று புரிந்தது: இது ஏதோ கடந்த கால நினைவு மட்டுமல்ல; இந்த நிறுவனத்தின் பழக்கவழக்கங்கள் இன்றைக்கு நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானதுபோல் இருந்தன. பங்குதாரர்கள் பலர் சேர்ந்து ஒரு நிறுவனத்தின் உடைமையாளர்களாக இருக்கும் கார்ப்பரேட் அமைப்புக்கே முன்னோடி கிழக்கிந்தியக் கம்பெனிதான். நவீன பிசினஸ் நிர்வாகத்தின் அடித்தளத்தை அமைத்துக்கொடுத்ததும் கம்பெனிதான்.
கம்பெனிக்கும் அதன் அதிகாரிகளுக்கும் ஒரே குறிதான்: லாபம்! சொந்த லாபம், கம்பெனிக்கு லாபம். இது, அவர்கள் ஆசியச் சந்தையை ஆட்டிப் படைப்பதில் போய் முடிந்தது. அது மட்டுமின்றி இந்தியாவின் பெரும் பகுதிகளையும் அவர்கள் ஆட்சி செய்தார்கள்; லாபம் சம்பாதித்தார்கள். ஆனால் கம்பெனி அதிகாரிகள் நடத்திய தில்லுமுல்லுகள், பங்குச்சந்தையில் அவர்கள் செய்த லீலைகள், மனித உரிமைகளை அவர்கள் நசுக்கிய விதம் எல்லாவற்றையும் பார்த்து அன்று உலகமே திகைத்தது.

அதையெல்லாம் படிக்கப் படிக்க, இன்றைய ராட்சச கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இருக்கும் ஒற்றுமை மலைக்க வைத்தது. கிழக்கிந்தியக் கம்பெனி, மார்க்கெட் வலிமையில் வால் மார்ட்; ஊழலில் என்ரான்; மானுடப் பேரழிவில் யூனியன் கார்பைட்.


Thursday, August 22, 2013

மறக்க முடியாத மனிதர்கள்

மறக்க முடியாத மனிதர்கள்
வண்ணநிலவன்
விலை : 150/-
பக் : 152




இணையத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க

இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் வண்ணநிலவன் தன் வாழ்வில் சந்தித்த தன் மீது செல்வாக்கு செலுத்திய ஆளுமைகள் பற்றிப் பகிர்ந்துகொண்டிருக்கும் தொகுப்பு இது.

வல்லிக்கண்ணன், ‘விக்ரமாதித்யன்’ என்ற நம்பிராஜன், வண்ணதாசன், ஜே.பி. என்ற பா. ஜெயப்பிரகாசம், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், திருலோக சீதாராம், நா. வானமாமலை, வெ. கிருஷ்ணமூர்த்தி,  தி.க.சி என்ற தி.க. சிவசங்கரன், ஜி.எம்.எல். பிரகாஷ், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், ‘அம்பை’ (சி.எஸ். லெட்சுமி), அசோகமித்திரன், ‘ தீபம்’ நா. பார்த்தசாரதி,  க.நா.சு.,  தி. ஜானகிராமன், சோ ஆகியோர் பற்றிய தன்னுடைய அனுபவங்களை, நினைவுகளை இந்த நூலில் உணர்வுபூர்வமான நடையில் விவரித்திருக்கிறார்.

புத்தகத்திலிருந்து

நாகர்கோவில் போனால் உமாபதியைப் பார்க்கலாம், அவருக்கு எப்படியும் சுந்தர ராமசாமியைத் தெரிந்திருக்கும், சுந்தர ராமசாமியைப் பார்த்துவிட்டு இரவே ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று நினைத்து, ஒரு நாள் காலை நாகர்கோவிலுக்குப் பஸ் ஏறினேன். பதினொன்றரை மணி சுமாருக்கெல்லாம் நாகர்கோவில் போய்ச் சேர்ந்துவிட்டேன்.
நாகர்கோவில் மணிக்கூண்டுக்கு அருகே வடக்கே சில கட்டடங்கள் தள்ளி சுதர்ஸன் டெக்ஸ்டைல்ஸ் இருக்கிறது. மணிக்கூண்டுக்கு தெற்கே சிறு சந்தினுள் உமாபதி வேலை பார்த்த சென்ட்ரல் பேங்க் இருந்தது. ராமசாமியை நேரில் சென்று பார்க்க கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது. உமாபதியுடன் ஏற்கெனவே சிறு தொடர்பு ஏற்பட்டிருந்ததால் கொஞ்சம் தயக்கமில்லாமல் அவரைச் சந்திக்க முடிந்தது. உமாபதி, உடனேயே அலுவலகத்தில் சொல்லிவிட்டு வெளியே வந்தார். ராமசாமி வீட்டிலிருந்தார். வீட்டுக்குப் போனோம்.
இப்போதும் அவருடைய வீட்டின் முன் பகுதியில் அந்த விசாலமான ரெட்டைத் திண்ணைகளும், திண்ணைகளைத் தாண்டிச் சென்றால் இதமான இருட்டும் குளிர்ச்சியும் மிக்க அந்த ஹாலும் அப்படியேதான் இருக்கின்றன. நாகர்கோவில் ஊர் பூராவுமே செம்மண் தரையாலானது. ராமசாமியின் வீட்டைச்சுற்றி இரண்டு அம்பாஸிடர்கள் ஒன்றாகச் செல்லுகிற அளவுக்கு இடமுண்டு. வீட்டின் பின்புறம் மிக நீண்ட தோட்டம். வீட்டின் முன்னே மொட்டை மாடிச் சுவர்மீது ஒரு கிருஷ்ணன் பொம்மை நிற்கும். மாடியில் விருந்தினர்கள் தங்குவதற்கான, வசதியான இரண்டு அறைகளைக் கொண்ட தங்குமிடம். வீட்டினுள்ளே ஹாலின் கீழ்ப்புறம் திண்ணையிலிருந்து நீளும் மிக நீளமான இரட்டை அறைகள். அறைச்சுவர்கள் முழுக்க பீரோக்களில் புஸ்தகங்கள். ஹாலின் மேற்குப்புற அறையில்தான் குழந்தைகள் இருந்தனர். அந்த அறையிலிருந்து எப்போதும் சிரிப்பும் குதூகலச் சத்தங்களும் கேட்டுக்கொண்டே இருக்கும். நான் ராமசாமியைப் பார்க்கிறபோது, அகாலத்தில் மறைந்துவிட்ட அவரது மூத்த பெண் சௌந்திராவுக்குப் பன்னிரெண்டு வயதிருக்கலாம். அடுத்தவள் தைலா. மூன்றாவது கண்ணன் (இப்போது காலச்சுவடு ஆசிரியர்.), நான்காவது கடைக்குட்டியான தங்கு, வீட்டு மாடியிலிருக்கிற கிருஷ்ணன் பொம்மை மாதிரியே வளைய வந்துகொண்டிருப்பாள். பிள்ளைகள் எல்லோருமே அப்பாவையும் அம்மாவையும் போல் ரொம்பப் பிரியமாக இருப்பார்கள்.
மதிய உணவெல்லாம் முடிந்து ராமசாமியுடன் கடையின் உள்ளே உள்ள சிறு அறையில் பேசிக்கொண்டிருந்தேன். சாயந்திரம் நாலு மணி சுமாருக்குப் புறப்பட்டேன்.
இப்பம் ஊர்லே போயி என்ன பண்ணப் போறீரு?.... இருந்துட்டுப் போலாமே’  என்றார்.
இல்ல... அப்படியே கிளம்பி வந்துட்டேன்...
அதனால என்ன?’
அவருக்கு என்னை விடுவதற்கு இஷ்டமில்லை.
ஊர்ல ஒண்ணும் அவசர ஜோலி ஒண்ணும் இல்லியே?’
அதெல்லாம் இல்ல...
பின்ன என்னவே?....’
அந்தச் சிறு உள் அறையில் நாங்கள் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருந்த மேஜைமீது கண்ணாடிக்குக் கீழே விவேகானந்தரின் படமிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். கடைக்குப் பின்புறம் ஹோட்டல். அந்த அறையில் உட்கார்ந்திருந்தால் ஹோட்டலுக்கு வருகிறவர்கள் போகிறவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
அன்று இரவு பத்துப் பதினோரு மணிவரை ராமசாமியுடன் உமாபதியும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். இடையே வடிவீஸ்வரத்தில் இருந்து வந்த ராமசாமியின் நெருங்கிய ஸ்நேகிதர்களில் ஒருவரான பத்மநாபனும் வந்திருந்தார். சமையல்கார ஐயர் ஒரு பிரியமான மனிதர். அந்த வீட்டு ஆட்களிலேயே ஒருவராகிவிட்டவர். அவரும் சாப்பிடும்போது பேச்சில் கலந்துகொள்வார். ராமசாமியின் மனைவியும் அருகிலேயே இருப்பார். பேச்சினிடையே நான் சாயந்திரம் ஊருக்குக் கிளம்பியதுபற்றிப் பேச்சு வந்தது. கமலா... ஆளைப் புடிச்சு வச்சிருக்கேனாக்கும்...’  என்று ராமசாமி வாஞ்சையும் கிண்டலும் கலந்து சொன்னார். முப்பது வருடங்களாகிவிட்டன. அப்போது ஒன்பது மணிக்கெல்லாம் ராமவர்மாபுரம் அறவே அடங்கிவிடும். நானும் உமாபதியும் சாப்பாட்டுக்குப் பிறகு சிறிது நேரம் திண்ணையில் காற்றாட உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பிறகு புறப்பட்டோம். உமாபதியின் வீடு சிறிது தூரத்தில் சற்றுப் பள்ளமான பகுதியில் இருந்தது. உமாபதியின் மனைவி ஊருக்குச் சென்றிருந்தார். ஆளரவமே இல்லாத தெருக்களில் உமாபதியும் நானும் நடந்துபோனது மனத்துக்கு ரம்யமாக இருந்தது.
காலையில் போய்விட்டு இரவு திரும்பிவிடலாம் என்று போனவன் ஏறத்தாழ பத்து நாள்களுக்கு மேல் இருந்தேன். உமாபதி தன் வேட்டி சட்டைகளைத் தந்தார். ராமசாமி தன் கடையிலிருந்து புதுச்சட்டை வேட்டி தர விரும்பினார். அதேசமயம், எடுத்ததுக்கெல்லாம் சங்கோஜப் படுகிறவனாகவும் இருக்கிறானே என்ற தயக்கமும் அவருக்கு இருந்தது. அதனால் என்னை வற்புறுத்தவில்லை. என் போக்கிலேயே விட்டுவிட்டார். 





Wednesday, August 21, 2013

தன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க

தன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க
அர்விந்த கெஜ்ரிவால்
பக் : 120
விலை : 80/-



இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க

புத்தகத்திலிருந்து...


வருமான வரித்துறையில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 1990களின் இறுதியில் அந்தத் துறை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அப்போது பல நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துகொண்டிருந்தது தெரியவந்து, அவர்கள் கையும் களவுமாகச் சிக்கினார்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டு, எந்த வேண்டுகோளும் கோரிக்கைகளும் முன் வைக்காமல் கட்ட வேண்டிய வரி பாக்கி மொத்தத்தையும் கட்டினார்கள். இது வேறு எந்த நாட்டில் நடந்திருந்தாலும் அந்த நிறுவனங்களின் முதன்மை நிர்வாகிகள் சிறைக்கு அனுப்பப்பட்டிருப்பார்கள்.
பிடிபட்ட நிறுவனம் ஒன்றின் தலைவர், வெளிநாட்டுக்காரர், வருமான வரித் துறையின் குழுவினருக்கு மிரட்டல் விடுத்தார்.
இந்தியா ஏழை நாடு. உங்களுக்கு உதவுவதற்காக உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறோம். எங்களுக்கு இந்த மாதிரி தொந்தரவுகள் கொடுத்தால் நாங்கள் போய்விடுவோம். எங்களுடைய பலம் எப்படிப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாது. எங்களுக்குச் சாதகமான சட்டத்தை உங்கள் நாடாளுமன்றமே நிறைவேற்றுகிற மாதிரி எங்களால் செய்ய முடியும். உங்களை எல்லாம் பணியிட மாற்றம் செய்து வேறு இடங்களுக்குக்கூட எங்களால் அனுப்ப முடியும்.
இது நடந்து சில நாட்களில் எங்கள் குழுவில் இடம் பெற்றிருந்த மூத்த அதிகாரி ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போதும் நான் அவர் சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் இருந்ததாக நினைக்கவில்லை. வருமான வரித் துறையின் ஆய்வில் எரிச்சல் அடைந்ததால் அவர் அப்படிப் பேசினார் என்றுதான் நினைத்தேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நடந்தேறியிருக்கும் நிகழ்ச்சிகள் அவர் சொன்னவற்றை நம்ப வைக்கின்றன. இப்போது நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்: வெளிநாட்டுச் சக்திகள் நம் நாடாளுமன்றத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனவா?’
ஓர் உதாரணம் சொல்கிறேன்.
2008ல் மத்திய அரசுக்குத் தன் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கவேண்டிய அவசியம் வந்தது. எம்.பி.க்களுடன் பேரம் நடப்பதாக வதந்திகள் வந்தன. சில தொலைக்காட்சி சானல்கள் அப்படிப்பட்ட பேரங்கள் நடப்பதைக் காட்டவும் செய்தன. அது நாட்டையே ஆணி வேர் வரை அசைத்தது. எம்.பி.க்கள் இப்படி விலை போக ஆரம்பித்தால் நம்முடைய வாக்குகளுக்கு என்ன மரியாதை?
நாளைக்கே அவர்களை அமெரிக்காவோ, பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த நாடோ விலைக்கு வாங்கலாம். யார் கண்டது, அப்படி ஏற்கெனவே நடந்தும்கூட இருக்கலாம். நாமெல்லாம் ஒரு சுதந்தர நாட்டின் குடிமக்கள்தானா? நம் நாடாளுமன்றம் நம் மக்களின் நன்மைக்குத்தான் சட்டதிட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறதா? இந்த எண்ணம் ஏற்பட்டு எனக்கு நடுக்கம் உண்டாயிற்று.
அணுசக்தி அழிவு இழப்பீட்டுச் சட்டம் 2010 பற்றிச் செய்தித்தாள்களில் படித்தபோது என் அச்சம் அர்த்தமற்றதல்ல என்று தோன்றியது. ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் அணு மின் நிலையம் தொடங்கி, அதில் விபத்து நிகழ்ந்தால், நிறுவனம் வழங்கும் இழப்பீட்டுத் தொகை அதிகபட்சம் ரூ. 1,500 கோடியாக இருந்தால் போதுமானது என்கிறது இந்தச் சட்டம் (6(2)(ச்)). உலகில் எப்போதெல்லாம் அணு விபத்துக்கள் நேரிட்டனவோ அப்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் இறந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை ரூ. 220 கோடி நஷ்ட ஈடு தரப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல என்ற கருத்து நிலவுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது ரூ. 1,500 கோடி என்பது குறைவுதான். ஓர் அணு விபத்து என்பது எத்தனை போபால் விபத்துகளுக்குச் சமம்? மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்மீது வழக்கு பதிவு செய்யப்படாது என்று இந்தச் சட்டம் சொல்கிறது. 

Wednesday, August 7, 2013

அமெரிக்க உளவாளி


அமெரிக்க உளவாளி
அ.முத்துலிங்கம்
பக் : 288
விலை : 285/-




இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க

2009ம் ஆண்டு நடுப்பகுதியில் சில நண்பர்களின் தூண்டுதலில் அ. முத்துலிங்கம் தனக்கான இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். அவ்வப்போது மனதில் தோன்றியதை நாட்குறிப்புகள் போலப் பதிந்துவந்திருக்கிறார். கட்டுரைகள், சிறுகதைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்ட அவை பத்திரிகைகளிலும் இணையத்திலும் வெளியாகியுள்ளன. அந்தப் படைப்புகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.

சுவாரசியமான நடை, பரந்து விரிந்த அனுபவக் களங்கள், அபாரமான எழுத்தாளுமை எனப் பல  சிறப்பம்சங்கள் கொண்ட  அ. முத்துலிங்கத்தின் முக்கியமான தொகுப்பு.

புத்தகத்திலிருந்து....

விருந்துக்கு என்னையும் அழைத்துப் போகும்படி நண்பனிடம் கேட்டேன். அவன் மறுத்துவிட்டான். அப்பொழுது நான் வாசிங்டனில் சில நாள்களை விடுமுறையில் கழிப்பதற்காகப் போய் தங்கியிருந்தேன். என்னுடைய முகம் அப்படி விழுந்துபோகும் என்று நண்பன் எதிர்பார்க்கவில்லை. சரி சரி அவர்களிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்என்றான். எனக்கு உடனேயே கூச்சம் வந்தது. ஐஸ்கிரீம் வண்டியைத் துரத்திச் சென்ற சிறுவனிடம் ஐஸ்கிரீம்காரர் முடிந்துவிட்டதுஎன்று சொன்னது போல எனக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. அந்த ஏமாற்றத்தை மறைப்பது ஆகப் பெரிய சவாலாகவும் ஆனது.
எனக்கு ஒருவிதத்திலும் சம்பந்தம் இல்லாத விருந்து அது. என்னுடைய நண்பருடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியிருந்தது. மூன்று வருடமாகக் காதலித்தவளுக்கு இப்பொழுதுதான் காதலன் ஒரு மோதிரத்தைக் கொடுத்து காதலை உறுதிப்படுத்தியிருந்தான். அடுத்து திருமணம்தான். இந்தக் காதலர்களுக்கு வாழ்த்து சொல்கிற மாதிரி அந்தப் பெண்ணின் அலுவலகத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விருந்துக்குத்தான் நான் போகவேண்டுமென்று விரும்பினேன். காரணம் நண்பர் போகிறபோக்கில் சொன்ன ஒரு தகவல்தான். அந்தக் காதலன் வேலை செய்வது சி.ஐ.ஏ ( Central Intelligence Agency) நிறுவனத்தில். அதாவது அமெரிக்காவின் மைய உளவுத்துறையில். என்னுடைய ஆர்வம் அதுதான். நான் என் வாழ்க்கையில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தது கிடையாது.   இனிமேல் சந்திப்பேன் என்பதும் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.
உளவுத்துறை பற்றி நான் அறிந்தது எல்லாம் புத்தகத்தில் படித்ததுதான். மீதியை அமெரிக்க சினிமாவில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். சினிமாவில் நான் பார்த்த துப்பறிவாளர்கள் எல்லாம் மனத்தில் திகில் எழுப்பக்கூடியவர்கள். அவர்கள் சாகசங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். சிறுவயதில் படித்தது சங்கர்லால். அவர் சத்தம் எழுப்பாத மெல்லிய ரப்பர் சூக்களை அணிந்தபடி நாலு மாடிக் கட்டடங்களில் அனாயாசமாகப் பாய்ந்து ஏறிவிடுவார். அடுத்து படித்து வியந்தது வந்தியத்தேவன். இவன் தைரியசாலி. வாய் திறந்தான் என்றால் புதுப்புது பொய்களை அந்தக் கணமே உண்டாக்கிவிடுவான். ஆனால் அவன் புத்திசாலியல்ல; மூடத்தனம் கூடியவன். அவன் கண்டுபிடித்தது எல்லாம் தற்செயலாகத்தான் நடந்தது. ஆகவே நவீன துப்பறிவாளன் என்ன செய்வான், எப்படி திட்டமிடுவான், எப்படி செயல்வடிவம் கொடுப்பான் என்பதையெல்லாம் நேருக்கு நேர் நான் அறியத் துடித்தது இயற்கையானது.
பின்னேரம் அலுவலகத்திலிருந்து திரும்பிய நண்பர் சரி, பிரச்னை இல்லைஎன்றார். அப்படித்தான் ஒரு சனிக்கிழமை மாலை நடந்த விருந்துக்கு என்னை அழைத்துப்போனார். போகும் வழியில் காரில் நண்பரிடம் அந்த சி.ஐ.ஏ அதிகாரிக்குப் பக்கத்தில் எனக்கு ஓர் ஆசனம் பிடித்துத் தரும்படிக் கேட்டுக்கொண்டேன். அந்த உளவாளியிடமிருந்து அத்தனை விசயங்களையும் ஆகக் குறைந்த நேரத்தில் உறிஞ்சிவிடவேண்டும் என்பது என் திட்டம். நண்பரும் ரோட்டைப் பார்த்தபடி சரி என்று தலையாட்டினார். ஆனால் விருந்து நடந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது எனக்கு பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அங்கே ஆசனங்களே இல்லை, அது ஒரு கொக்ரெய்ல் விருந்து என்று சொன்னார்கள். நீண்ட நீண்ட கிளாஸ்களில் பானங்களை நிறைத்துக்கொண்டு கிரகங்கள் சுற்றுவதுபோல சுற்றிக்கொண்டிருந்தார்கள். பரிசாரகனிடம் எனக்கு வேண்டிய பானத்தைக் கூறினேன். அவன் கீழே அகன்று, மேலே வாய் ஒடுங்கிய கிளாஸ் ஒன்றில் பானத்தை ஊற்றி அதே அளவு ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு அதற்குமேலே ஒரு மென்சிவப்பு குடையை விரித்து வைத்து என்னிடம் நீட்டினான்.

நண்பன் நான் கேட்டதை மறக்கவில்லை. முதல் வேலையாக என்னை அழைத்துப்போய் தன்னுடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணை அறிமுகப்படுத்தினான். முற்றிலும் மென்சிவப்பு வர்ணத்தில் அவள் இருந்தாள். அவளாகவே தான் மணமுடிக்கப் போகும் சி.ஐ.ஏ அதிகாரியிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு மறைந்துபோனாள். முப்பது வயது மதிக்கத்தக்க உயரமான ஆள். சதுரமான முகம், சதுரமான உடம்பு. என்னுடைய கைகளைக் குலுக்கியபோது முறிந்து விழுந்துவிடும்போல இருந்தது. ஒரு ஜேம்ஸ் பொண்டின் உருவத்தை மனத்திலே சித்தரித்து வைத்திருந்த எனக்கு அவருடைய உடலமைப்பும், முக வெட்டும், சொண்டுக்குள் மறைந்திருந்த சிரிப்பும் அப்படியே பொருந்திப் போனது. ஆனால் அதற்குப் பிறகு நடந்ததுதான் நான் எதிர்பாராதது.

Tuesday, August 6, 2013

திராவிட இயக்க வரலாறு

திராவிட இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்)
ஆர்.முத்துக்குமார்
பாகம் - 1
பக்: 424
விலை : 210/-



முதல் பாகம்: இணையத்தில் வாங்க



பாகம் -2
பக் : 424
விலை: 200/-
இரண்டாம் பாகம் : இணையத்தில் வாங்க

புத்தகத்திலிருந்து:

29 செப்டெம்பர் 1945. திருச்சி புத்தூர் மைதானத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழக மாநாடு கூடியது. அந்த மாநாட்டில் திராவிடர் கழகத்துக்கான லட்சியங்கள் வரையறுக்கப்பட்டன. விதிமுறைகள் வகுக்கப்பட்டன. கழகத்தின் பெயர் திராவிடர் கழகம் என்பது தொடங்கி பல்வேறு விஷயங்கள் தீர்மானம் செய்யப்பட்டன.
திராவிடர் கழகத்தின் லட்சியங்கள்
திராவிடநாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை, வியாபாரம் ஆகியவற்றில் பூரண சுதந்தரமும் ஆதிக்கமும் பெறவேண்டும்.
திராவிட நாடும் திராவிட நாட்டு மக்களும் திராவிட நாட்டவரல்லாத அந்நியர்களின் எந்தவிதமான சுரண்டல்களில் இருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் காப்பாற்றப்படவேண்டும்.
திராவிட நாட்டில் உள்ள மக்கள் யாவரும் சாதி, வகுப்பு, அவை சம்பந்தமான உயர்வு, தாழ்வு இல்லாமல் சமுதாயத்திலும் சட்டத்திலும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் பெற்றுச் சமவாழ்வு வாழச் செய்யவேண்டும்.
திராவிட நாட்டு மக்களுக்குச் சமயம், சமயாசாரம், பழக்கவழக்கம் என்பனவற்றின் பேரால் இருந்துவரும் பேத உணர்ச்சி, மூட நம்பிக்கை, ஆகியவைகள் மறையச் செய்து, அவர்களைத் தாராள நோக்கமும் நல்ல அறிவு வளர்ச்சியும் பெற்ற ஒன்றுபட்ட சமுதாய மக்களாகச் செய்யவேண்டும்.
இவை வெற்றிபெறுகிறவரை சாதி, சமய, வகுப்புபேதம் ஆகியவை உள்ள மக்களுக்கு நம்மிடம் (கழகத்தாரிடம்) முழு நம்பிக்கையும் நல்லெண்ணமும் ஏற்பட்டு, மேற்கண்ட முயற்சிகளுக்கு நம்மோடு களங்கமற்று ஒத்துழைக்கவேண்டிய அவசியத்துக்காக, அவைகளுக்குத் தக்கபடி முக்கியமான துறைகளில் எல்லாம் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.
எல்லாவற்றையும்விட முக்கியமாக, திராவிடரின் விடுதலைக்காகப் போரிடவும் சகலவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கவும் இசையும் ஒரு மாகாண திராவிட விடுதலைப் படை (Dravidian Freedom Force) அமைக்கவேண்டும் என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறதுஎன்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தளபதிஅண்ணா, திராவிட நாடு ஏன் தனிநாடாகப் பிரியவேண்டும்?’ என்பதை விளக்கினார். ஆம். பெரியாருக்குத் தளபதியாக, திராவிட இயக்கத்துக்குத் தளபதியாக மாறியிருந்தார் அண்ணா.

Friday, August 2, 2013

கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா
முகில்
விலை : 125/-
பக் : 160



இந்தப்புத்தகத்தைஇணையத்தில் வாங்க
போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

புத்தகத்திலிருந்து...

தங்களைச் சந்திக்க விரும்புகிறேன். சொந்த விஷயம். அனுமதி தேவை.
சீஸருக்கு ரகசியமாக கிளியோபாட்ராவிடமிருந்து தகவல் வந்து சேர்ந்தது. எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்என்று சீஸர் பதில் அனுப்பினார். கிளியோபாட்ரா, பெரும்பாடுபட்டு ஒரே ஒரு சிறிய படகை ஏற்பாடு செய்திருந்தாள். படகில் ஏறினாள். உடன், நம்பகமான சில பணியாளர்கள் மட்டும். அதில் ஒருவன், அப்போலோடோரஸ் (Apollodorus). கிளியோபாட்ராவின் குறிப்பறிந்து பணி செய்யும் நம்பகமான ஆள். ஆஜானுபாகுவான வீரன்.
சூரியன் மறைவதற்கு முன்பாகவே அலெக்ஸாண்ட்ரியாவை நெருங்கி விட்டார்கள். கடலிலேயே காத்திருந்து, இரவானதும் கரையை அடைந்தார்கள். கொஞ்ச தூரம் நடை. அரண்மனை வளாகத்தை நெருங்கியதும், அப்போலோடோரஸ் தன் தோளில் சுமந்துகொண்டிருந்த பெரிய கம்பளத்தைத் தரையில் விரித்தான்.
சீஸர் தங்கியிருந்த மாளிகையை அப்போலோடோரஸ் அடைந்தான். வெளியில் ரோம் வீரர்கள்தான் காவலுக்கிருந்தார்கள். எனவே பிரச்னையில்லை. இரு கைகளால் கம்பளத்தை ஏந்தியபடி, மாளிகையின் நுழைவாயிலை நெருங்கினாள்.
என்னது இது?’  காவலர்கள் வழிமறித்துக் கேட்டார்கள்.
எகிப்தின் அரசி அனுப்பியுள்ள பரிசுப் பொருள். சீஸரிடம் ஒப்படைக்க வேண்டும்.
காவலர்கள் கொஞ்சம் யோசித்தார்கள். பின் அனுமதி கொடுத்தார்கள். சீஸர் இருந்த அறையில் கம்பளத்துடன் போய் நின்ற அப்போலோடோரஸ், ‘எகிப்தின் அரசி கிளியோபாட்ரா தங்களிடம் இதைத் தனியே ஒப்படைக்கச் சொன்னார்’  என்றான்
ஏற்கெனவே கிளியோபாட்ராவிடம் இருந்து செய்தி வந்திருந்ததால், அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிந்துகொண்ட சீஸர், தன் அறையில் இருந்த பிறரை வெளியே போகச் சொன்னார். அவர்கள் கொஞ்சம் தயக்கத்துடன் வெளியேறினார்கள். சீஸருக்கு எதுவும் ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்ற பயம். கதவு சாத்தப்பட்டது. பின் அப்போலோடோரஸிடம், ‘இறக்கி வைத்துவிட்டுப் போகலாம்என்றார்.
கம்பளத்தைக் கவனமாகத் தரையில் இறக்கிய அப்போலோடோரஸ், ‘தங்களிடம் இதைப் பிரித்துக் காண்பிக்கும்படி எனக்கு உத்தரவுஎன்றான்.
நானே பார்த்துக் கொள்கிறேன்என்ற சீஸர், தன் உடைவாளை உருவினார், கம்பளத்தின் கட்டைப் பிரிக்க. அப்போலோடோரஸ் பதறினார், ‘பார்த்துப் பத்திரமாக. விலைமதிப்பில்லாத இந்தக் கம்பளத்துக்கு எந்தவிதச் சேதாரமும் வந்துவிடக் கூடாது.
கம்பளத்துக்கா அல்லது அதனுள்ளிருக்கும் பொருளுக்கா?’ என்றபடி கட்டியிருந்த கயிறை வாளால் வெட்டி, கம்பளத்தின் ஒருமுனையைப் பிடித்து மேல்நோக்கி இழுத்தார். உருண்டு விரிந்த கம்பளத்துக்குள் இருந்து வெளிப்பட்டாள் கிளியோபாட்ரா.
எல்லாப் புகழும் பெருமையும் கிளியோபாட்ராவுக்கே! சர்வ வல்லமை கொண்ட கடவுள் ஐஸிஸின் மகளுக்கு வணக்கங்கள்! ஹோரஸ், ரா* கடவுள்களின் வழிவந்த, எகிப்து ராஜ்ஜியத்தின் தன்னிகரற்ற அரசி வாழ்க!
அப்போலோடோரஸ் கிளியோபாட்ராவை வாழ்த்தி, பணிந்து நின்றான். சீஸரின் விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன. குப்புறக் கிடந்த கிளியோபாட்ரா, மெள்ளப் புரண்டு படுத்தாள். மென்மையாகத் தன் கைகளைத் தரையில் ஊன்றி, மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். இடுப்பில் சின்னதாக வலி. சின்னதாக முகம் சுருக்கி கையால் நீவிக் கொண்டாள்.
நீள்வட்ட முகம். நீள, நீலக் கண்கள். வளமான புருவம். வளைவில் மிளிரும் நாசி. வில்வடிவ மேலுதடு. விளைந்த கனியாகக் கன்னங்கள். இளமை மிதக்கும் பார்வை. செதுக்கிய கரங்கள். சிற்றிடை வளைவுகள். செழுமை கொண்ட அங்கங்கள். மினுமினுக்கும் சருமம். மிதமிஞ்சிய அழகு.
இவ்வளவு அழகானவளா இவள்!
பல காலமாகப் போர், அரசியல், சூழ்ச்சி, வஞ்சகம், வன்முறை என்றே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த ஜூலியஸ் சீஸரின் ஐம்பத்தியிரண்டு வயது மனம், அந்த நொடியில் இளமைக்குத் திரும்பியது.

கைகொடுக்க மாட்டீர்களா?’  அந்த இருபத்தியொரு வயது இனிமையான குரல் கேட்டு சீஸர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். கிளியோபாட்ரா தன் கரம் ஒன்றை நீட்டிக் கொண்டிருந்தாள். சட்டெனத் தன் கைகொடுத்துத் தூக்கி நிறுத்தினார். அந்த முதல் ஸ்பரிசத்தில் அவருக்குள் பதிய ஆரம்பித்திருந்த முதுமையின் சுவடுகள் காணாமல் போயிருந்தன. காதலனாகியிருந்தார்.

Thursday, August 1, 2013

அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்


அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
என்.சொக்கன்
விலை: 100/-
பக் : 152




இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234


புத்தகத்திலிருந்து...

இந்தியச் சுதந்தரப் போராட்டத்தின் அதிவேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியாமல் திணறிக்கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு மௌட் குழுவினரின் அறிக்கையைப் படிக்கும்போது காதில் தேன் வந்து பாய்ந்தது. உடனடியாக அந்தமானில் ஒரு தண்டனைக் குடியிருப்பு அமைக்கவேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார்கள். இந்தப் பொறுப்பு டாக்டர் ஜேம்ஸ் பேட்டிஸன் வால்கர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
1858 மார்ச் 4. கொல்கத்தாவிலிருந்து டாக்டர் வால்கர் தலைமையில் ஐம்பது காவலர்கள், இருநூறு கைதிகள், இரண்டு மருத்துவர்களோடு ஒரு கப்பல் புறப்பட்டது. ஆறு நாள் கழித்து அந்தமான் ப்ளெய்ர் துறைமுகத்தில் சென்று இறங்கியது.
டாக்டர் வால்கர் அந்தமான் தண்டனைக் குடியிருப்புகளின் முதல் சூப்பிரன்டண்ட். 1789ல் ஆர்க்கிபால்ட் ப்ளெய்ர் தொடங்கி வைத்துப் பாதியில் கைவிட்ட அந்தமான் கனவை நிஜமாக்கியவர் அவர்தான்.
வால்கர் குழுவினரின் கப்பல் அந்தமான் சென்று சேர்ந்தபோது அவர்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் காத்திருந்தன. ப்ளெய்ர் குழுவினர் கிளம்பிச் சென்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. முன்பு அவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்த நிலப் பகுதிகளையெல்லாம் மீண்டும் செடிகொடிகள், புதர்கள், மரங்கள் ஆக்கிரமித்திருந்தன. அவற்றையெல்லாம் அழித்துவிட்டுப் புதிய குடியிருப்புகளை அமைப்பது சவாலாக இருந்தது.
மேலும், முன்பு ப்ளெய்ர் குழுவினர் தங்கியிருந்த இடத்தில் இப்போது கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்தது. ஆகவே சற்றுத் தொலைவிலிருந்த ராஸ்என்ற இன்னொரு தீவைத் தேர்ந்தெடுத்து அங்கே குடியிருப்புகள் அமைக்கும் வேலைகளைத் தொடங்கினார் டாக்டர் வால்கர்.
கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டடங்கள் அமையத் தொடங்கியவுடன் வால்கர் இந்தியாவுக்குத் தகவல் அனுப்பினார். இங்கே இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. இருநூறு கைதிகளை வைத்துக்கொண்டு இத்தனையையும் சமாளிப்பது சிரமம். இந்தத் தீவில் காலநிலை சரியில்லை. கைதிகளுக்குத் திடீர் திடீரென்று ஏதாவது வியாதி வருகிறது. வேலை செய்யமுடியாமல் சுருண்டு படுத்துவிடுகிறார்கள். படுத்தவர்கள் எழுந்திருப்பதில்லை. போதாக்குறைக்குக் காடுகளில் உள்ள பூச்சி புழுக்கள் ரத்தம் உறிஞ்சும் அட்டைகளின் தொல்லை. அவ்வப்போது பழங்குடியினரின் தாக்குதல்.
டாக்டர் வால்டர்! புலம்பியது போதும். இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?
வேலை செய்வதற்கு இன்னும் நிறையக் கைதிகள் வேண்டும்!
அவ்வளவுதானே? இந்தியாவில் கைதிகளுக்கா குறைச்சல்? உடனடியாக அனுப்பிவைக்கிறோம்!
நல்லது. நோஞ்சான் கைதிகளையெல்லாம் கழித்துக்கட்டிவிட்டு நல்ல பயில்வான்களாகப் பார்த்து அனுப்பிவையுங்கள் என்றார் வால்கர்.
இங்கே வருகிறவர்கள் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு நிறைய வேலை செய்கிறவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் நம்முடைய குடியிருப்புகளை விரைவாகத் தயார் செய்யலாம். சென்றமுறை நிகழ்ந்ததுபோல் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்
இதன்படி இந்தியச் சிறைகளில் இருந்த பெரும் குற்றவாளிகள், நல்ல பலசாலிகள், உடல் தகுதி கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். மூன்றே மாதங்களில் அங்கே குடியேற்றப்பட்டவர்களுடைய எண்ணிக்கை எழுநூறைத் தாண்டிவிட்டது.
இப்படி வந்தவர்களில் சிலர் கொலை, கொள்ளைக் குற்றவாளிகள், முரட்டுப் பேர்வழிகள். மற்றவர்கள் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள்.
ஆனால் அந்தக் காலத்தில் அரசியல் கைதிகளுக்கென்று அந்தமானில் சிறப்பு மரியாதை கிடையாது. எல்லோர் தலையிலும் கடுமையான வேலைகள் சுமத்தப்பட்டன. மரங்களை வெட்டி வீழ்த்திக் காடுகளைச் சமதளமாக்கவேண்டும். அங்கே குடியிருப்புகளை அமைக்கவேண்டும். வெய்யில், குளிர், மழை என்றெல்லாம் பேசக்கூடாது. வேலை, வேலை, வேலை, வேறு சிந்தனையே இல்லாமல் உழைக்கவேண்டும்.

****
அந்தமானில் குடியிருப்புப் பகுதிகளெல்லாம் ஓரளவு தயாராகிவிட்டன. ஆகவே புதிய கைதிகளுக்குக் காட்டை அழிக்கிற கடுமையான வேலைகளெல்லாம் பெரும்பாலும் இல்லை. முதலில் கொஞ்ச நாள் அவர்களைக் காவலர்களுடைய கண்காணிப்பில் அடைத்துவைப்பார்கள். அங்கே வம்பு எதுவும் செய்யாமல் ஒழுங்காக இருந்தால் சுதந்தரமாக வெளியே வாழ்வதற்கான அனுமதி கிடைத்துவிடும்.
சுதந்தர டிக்கெட் வாங்கியவர்கள் அந்த ஊர் மண்ணுக்கு ஒத்துப்போகக்கூடிய பயிர்களை வைத்து விவசாயம் செய்யலாம். சாலைகள் அமைப்பது, தென்னை மரங்களைப் பாதுகாப்பது, தேங்காய் பறிப்பது, அதிலிருந்து நார், எண்ணெய் எடுப்பது, மரங்களை வெட்டிப் பலகைகள் செய்வது, தொழிற்சாலை வேலைகள் போன்றவற்றில் ஈடுபடலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய குடும்பத்தினரைக்கூட இங்கே அழைத்துவந்து செட்டிலாகிக்கொள்ளலாம்.
இதென்ன? கேட்பதற்கு ஜெயில்மாதிரியே இல்லையே!
ஆங்கிலேயர்களுக்கும் அதே குழப்பம்தான். அந்தமானை முன்னேற்றுகிறோம் பேர்வழி என்று நாம் சிறைத்தண்டனையை வெளிநாட்டு பிக்னிக் மாதிரி மாற்றிவிட்டோமோ என்று குழம்பினார்கள்.
அந்தமானுக்கு நாடு கடத்தப்படுவதென்பது இனிமேலும் ஒரு தண்டனை அல்ல. லேசான அசௌகர்யம். அவ்வளவுதான்.
இது ரொம்பப் பெரிய ஆபத்து என்று ல்யாலும் லீத்ப்ரிட்ஜும் அடித்துச் சொன்னார்கள். அந்தமானுக்குத் துரத்தப்படுவது அப்படியொன்றும் பெரிய பிரச்னை இல்லை என்று தப்புச் செய்கிறவர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டால் அவ்வளவுதான். அவர்கள் பெரிய குற்றங்களைச் செய்யத் தயங்கமாட்டார்கள். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும். ஆகவே நாம் உடனடியாக அந்தமானை ஒரு கொடிய உருவமாக மாற்றியமைக்கவேண்டும். அந்தமானுக்குத் துரத்தப்படுவது தூக்குத் தண்டனையைவிடப் பெரிய அவஸ்தை என்று தப்புச் செய்கிறவர்கள் நினைக்கவேண்டும். அதற்கு என்ன வழி?
அந்தமானில் நிஜமான சிறைச்சாலை என்று எதுவுமே இல்லை. அதை முதலில் கவனிக்கவேண்டும். இந்தியாவிலிருந்து வருகிறவர்களைக் கொஞ்சக்காலத்துக்காவது நாலு சுவர்களுக்குள் அடைத்து வைத்துத் தனிமைப்படுத்தவேண்டும். அவர்களுக்குக் கஷ்டமான வேலைகளைக் கொடுக்கவேண்டும். அதைச் செய்யாவிட்டால் கடுமையான தண்டனை அளிக்கவேண்டும்.
ல்யால்  லீத்ப்ரிட்ஜ் கமிட்டியின் பரிந்துரைகளை பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அந்தமானில் ஒரு புதிய சிறைச்சாலை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தது.
1893ம் வருடம் சுமார் ஐந்தரை லட்ச ரூபாய் செலவில் அந்தமான் சிறைச்சாலையை அமைப்பதற்கான உத்தரவு வெளியானது. ஆனால் அந்தத் திட்டம் செயல்வடிவம் பெறுவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் பிடித்தன. 1896ம் வருடம்தான் சிறைச்சாலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஏற்கெனவே அங்கே சிறைப்பட்டிருந்த கைதிகளே இந்த வேலைகளில் ஈடுபட்டார்கள்.